இயேசு கிறிஸ்து மனித வடிவில் வந்ததால் அவர் வெறும் மனிதர் என்று நம்புவோர் பலருண்டு. இன்னும் இஸ்ரயேல் நாட்டில் பெரும்பான்மையான மக்கள் இயேசுவை ஒரு சாதாரண தச்சர் என்றே நினைக்கிறார்கள். அவர் அறம் சார்ந்த கருத்துக்களை சொன்னதால் அவரை ஒரு சமூகப் போராளி என்று அழைப்போரும் இவ்வுலகில் உண்டு. அவர் தன் இளமைக் காலத்தில் இந்தியாவுக்கு வந்து ஒரு சித்தராக வாழ்ந்து மறைந்தார் என்றும் சிலர் நம்புகிறார்கள். அவர் கடவுளின் தூதர்களில் ஒருவர் என்றும் பலர் கூறுகின்றனர். ஆனால், அவர் மனித வடிவில் அவதரித்த கடவுள் என்று வேதம் கூறுகிறது (1திமோ. 3:16). அதாவது, 100% மனிதனாக இருந்த அவர் 100% இறைவனுக்கு சமமாகவும் இருந்தார்.
இயேசு கிறிஸ்து அனைத்துக்கும் மேலாக அமர்ந்திருக்கும் கடவுளின் முழு தன்மையையும் உடைய, கடவுளுக்கு சமமான, கடவுளின் வார்த்தையானவர். அவர் எல்லாம் வல்ல கடவுளுக்கும், மனிதனுக்கும் இடையே இணைப்பாளராக 2000 ஆண்டுகளுக்குமுன் இஸ்ரயேல் என்னும் நாட்டில், மரியாள் என்பவருக்கு மகனாக மனித வடிவில் அவதரித்தார். இயேசுவின் தாய் ஆண் ஈடுபாடின்றி, பரமாத்மாவின் தூய ஆவியால் கர்ப்பமாகி, அந்த அற்புதக் குழந்தையைப் பெற்றார் (மத். 1:18). ஒரு சாதாரண மனிதன் இப்படி பிறக்கமுடியுமா?
கிறிஸ்து இவ்வுலகில் வாழ்ந்த நாட்கள் முழுவதும் மனிதனாய் வாழ்ந்தாலும், பாவமின்றி அதாவது குற்றமற்றவராய் வாழ்ந்தார் (யோவா. 8:46). இயேசுவை கைதுசெய்து, விசாரித்த ஆட்சித் தலைவர் பிலாத்து, இயேசு குற்றமற்றவர் என்று மூன்று முறை சொன்னார் (லூக். 23:4,14,22). இயேசு குற்றமற்றவர் என்று பிலாத்துவின் மனைவி தன் கனவில் கடவுளால் எச்சரிக்கப்பட்டு, இயேசுவுக்கு தீங்கிழைக்கக்கூடாது என்று பிலாத்துவை அறிவுறுத்தினார் (மத். 27:19). அவரைக் காட்டிக் கொடுத்த யூதாஸ்கூட இயேசு குற்றமற்றவர் என்று கூறினார் (மத். 27:3,4). இயேசு பாவமற்றவரென்று அவரைப் பின்தொடர்ந்த திருத் தூதர்கள் அறிவித்தனர் (தி.ப. 4:30, 2கொரி. 5:21, 1பேது. 2:22). இதுவரை வாழ்ந்தோரில் அல்லது வாழ்ந்துகொண்டிருப்போரில் யாராவது தன்னைப் பாவமற்றவரென்று கூறமுடியுமா? புகழ்பெற்ற தத்துவ அறிஞர்களோ, மதத்தலைவர்களோ, சீர்திருத்தவாதிகளோ, சமுதாயச் சிற்பிகளோ யாராவது தங்களைப் பாவமற்றவரென்று கூறமுடியுமா? “ஒரு குற்றம்கூட செய்யாத ஒரே ஒரு தெய்வம் இயேசு மட்டும்தான்” என்னும் பாடலடங்கிய “எவரும் விரும்பும் ஓர் இனிய தெய்வம்” என்னும் ஒலித்தட்டை வாங்கிக் கேளுங்கள். (மேற்கண்ட ஒலித்தட்டு வேண்டுமானால் எங்களுடன் தொடர்பு கொள்ளுங்கள்).
ஒருமுறை இயேசு அழைக்கப்பட்டிருந்த ஒரு திருமண விருந்தில் திராட்சைப் பழரசம் தீர்ந்தவுடன், அம்மக்களின் அவமானத் துயர் துடைக்க, வெறும் தண்ணீரைத் தன் தெய்வீக வலிமையால் சுவையுள்ள திராட்சைப் பழரசமாக மாற்றிக் குறைவை நிறைவாக்கினார் (யோவா. 2:1-11). இயேசு, தரையின்மீது நடப்பதைப்போல கடலின்மீது நடந்தார் (மத். 14:25). அவர் பூட்டப்பட்ட வீட்டை ஊடுருவி உள்ளே வந்து தன் சீடர்களை தைரியப்படுத்தினார் (யோவா. 20:19); தொழு நோயாளிகளைத் தொட்டு, மருந்தில்லாமல் குணப்படுத்தினார் (மத். 8:2-4, மாற். 1:40-42); தன்னிடம் நம்பிக்கையோடு வந்த எப்படிப்பட்ட நோயாளிகளையும் அவர் குணப்படுத்தினார் (மத். 4:23,24, 12:10-13); மரித்த சடலங்களை உயிரோடு எழுப்பினார் (மத். 9:24,25, யோவா. 11:1-45); குருடர்களுக்குப் பார்வை கொடுத்தார் (மத். 9:27-30, யோவா. 9:1-7). ஐந்து அப்பங்களையும், இரண்டு மீன்களையும் வைத்து தன் அதிசய சக்தியால் ஐந்தாயிரத்திற்கும் அதிகமான மக்களுக்கு பசியாற்றினார் (மத். 14:15-21). பேயினால் ஆக்கிரமிக்கப்பட்டவர்களை விடுவித்தார் (மாற். 1:23-28). ஒரு சாதாரண மனிதன் இப்படி அற்புதங்களை செய்யமுடியுமா?
இவ்வுலகில் பிறக்கும் எவரும் ஒரு நாள் இறந்துபோகிறார்கள். இறக்கிறவர்கள் பொதுவாக உயிரோடு எழுவதில்லை. ஆனால், இயேசு கிறிஸ்து இவ்வுலக மக்கள் செய்த பாவங்களுக்கு தண்டனையாக, தானே மரண தண்டனையை ஏற்றுக்கொண்டு உயிர் நீத்து, மூன்றாம் நாளில் உயிரோடு எழுந்தார் (லூக். 24:1-6). அவர் நல்லவர் என்பதை நிரூபிக்க நமக்காக இறந்தார். அவர் வல்லவர் என்று நிரூபிக்க உயிரோடு எழுந்தார். ஒரு சாதாரண மனிதன் இறந்தபின் தானாக உயிரோடு எழும்பமுடியுமா?
இயேசு தன்னைப் பகைத்தவர்களைப் பார்த்து, “நீங்கள் கீழிருந்து (பூமியிலிருந்து) வந்தவர்கள்; நான் மேலிருந்து (பரலோகத்திலிருந்து) வந்தவன்; நீங்கள் இவ்வுலகைச் சார்ந்தவர்கள்; ஆனால், நான் இவ்வுலகைச் சார்ந்தவனல்ல; நான் தந்தையிடமிருந்து உலகிற்கு வந்தேன்; இப்போது உலகை விட்டுத் தந்தையிடம் செல்கிறேன்” என்றார் (யோவா. 8:23, 16:28). ஒரு சாதாரண மனிதன் இப்படி கூறமுடியுமா?
இயேசு பாவம்தவிர மற்றெதையும் செய்து முடிக்கும் வலிமை உடையவர். ‘கடவுள் மனித உருவில் வரமுடியுமா?’ என்று நாம் கடவுளிடம் கேள்வி கேட்கமுடியாது. ஆண்டவருடைய மனதை அறிபவர் யார்? அவருக்கு அறிவுரை கூறுபவர் யார்? (1கொரி. 2:16, உரோ. 11:34) என்று வேதம் நம்மைப் பார்த்துக் கேள்வி கேட்கிறது. கடவுள் மனித வடிவத்தில் அவதாரமாகப் பிறக்கமுடியாது என்று கூற நாம் கடவுளைப் படைத்தவர்களா? தெய்வம் இப்படித்தான் இருக்கவேண்டும் என்று நிர்ணயிக்க நாம் கடவுளின் பெற்றோரா?
சர்வேஸ்வரன் தனக்கு விருப்பமானவைகளைத் தன் சித்தப்படிச் செய்கிறார் (தி.பா. 115:3).
இன்று நாம் தேதி குறிப்பிடும்போது கி.பி. 2017 என்று கூறுகிறோமே. கி.பி-யின் முழுவடிவம் கிறிஸ்துவுக்குப்பின் என்று நம்மில் பலர் அதன் அர்த்தத்தை உணராமலேயே எழுதுகிறோம். இயேசு ஒரு சாதாரண மனிதனானால் சரித்திரம் ‘கிறிஸ்துவுக்குமுன்’ (கி.மு.) என்றும் ‘கிறிஸ்துவுக்குபின்’ (கி.பி.) என்றும் இரண்டு பாகங்களாக பிரிந்திருக்காதே!