019. கிறிஸ்தவர்கள் நோயோடிருக்கிறார்களே !

     இயேசுவின் நாமத்தில் ஆயிரக்கணக்கானோர் குணம் அடைந்துள்ளனர். ஆனால், பல கிறிஸ்தவர்களுக்கு இது ஒரு புரியாத புதிராகவே உள்ளது. ஒரு கப்பல் பயணச்சீட்டு வாங்கிவிட்டால் பயண நாட்கள் முழுவதும் உணவு கப்பலிலேயே கிடைக்கும் என்ற தகவல் தெரியாமல் வயதான ஒரு தாயார் 5 நாளைய பயணத்தின் போதும் பட்டினியாய் இருந்தார்களானால் எப்படியிருக்கும்? தன் கையிலிருக்கும் பயண உரிமைச்சீட்டைக் காண்பித்து, நன்றாக நிம்மதியாக உணவுண்டு பயணிக்க வேண்டியவர் பட்டினி கிடந்ததன் காரணம் தனது அறியாமையல்லவா! “அறிவின்மையால் என் மக்கள் அழிகிறார்கள்” (ஓசே.4:6) என்று ஆண்டவர் கூறுகிறார். இயேசு கிறிஸ்துவின் பிள்ளைகளென்று அறியப்படும் பலருக்கு இயேசுவினால் என்னென்ன நன்மைகள் உண்டென்று தெரியாமல் இருப்பது மிகவும் வருந்தத்தக்கது.

     தெய்வீக குணமாக்கலைப் பற்றி பல உறுதிமொழிகளை வேதத்தில் ஆண்டவர் கூறியிருக்கிறார். ஆனால், அவற்றை உணர்வின்றி வாசித்து தங்களுக்கென்று எதையும் எடுத்துக்கொள்ளாமல் இருந்தால் அதற்கு கர்த்தர் பொறுப்பாக முடியுமா? கையிலே நெய்யை வைத்துக் கொண்டு வெண்ணைக்கு அலைபவர்கள் இன்னும் இருக்கிறார்கள். கடவுளுடைய வார்த்தையின் முக்கியத்துவத்தை உணர்ந்த தாவீது எனும் பக்தர், “உமக்கெதிராய் நான் பாவம் செய்யாதவாறு உமது வாக்கை என் இதயத்தில் இருத்தியுள்ளேன்” (தி.பா. 119:11) என்று கூறுகிறார். தெய்வம் மனிதனிடம் என்ன எதிர்பார்க்கிறார் என்பதனை மனிதன் தெரிந்து கொள்ளாமல் மனிதன் எப்படி அவருடைய விருப்பப்படி வாழமுடியும்? சில கிறிஸ்தவர்கள் வேத வசனத்திற்கு முக்கியத்துவம் கொடுப்பதைவிட தங்கள் மரபுக்கொள்கைக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். இதனால், இறைவன் அளித்த வாக்குறுதியைப் பெறமுடியவில்லை. சில கிறிஸ்தவர்கள், இயேசுவால் குணமளிக்கமுடியும் என்ற நம்பிக்கையே இல்லாமல் இருக்கிறார்கள். ஒரு சபையின் ஊழியர் வேதவசனத்தை தவறாக புரிந்து கொள்ளும் போது அனைத்து விசுவாசிகளும் பாதிக்கப்படுகிறார்கள்.

     மற்றொரு காரியத்தை நான் குறிப்பிட விரும்புகிறேன். நாம் சோதிக்கப்படும்போதுதான் சோதிக்கப்படுகிற பிறருக்கு உதவிசெய்யும் ஒரு மனப்பக்குவம் உண்டாகிறது (எபி. 2:18). எப்போதாவது நாம் நோயால் பாதிக்கப்படும்போதுதான், நோயில் வாடும் மற்றவர்களுக்கு நியாயத்தீர்ப்பு சொல்லாமல், அவர்களுக்காக தாயுள்ளத்தோடு இறைவனிடம் மன்றாடும் பெரிய மனம் உண்டாகிறது. பிரச்சனைகளே இல்லாவிட்டாலும் பல கிறிஸ்தவர்கள் கர்த்தரை மறந்துவிடுகிறார்கள். தன் பிள்ளைகள் தன்னை சுற்றிச் சுற்றியே வாழ வேண்டுமென்ற ஆசையால்தான், கர்த்தர் அவர்களை சோதனைகளுக்கு விட்டுக் கொடுக்கிறார். ஆனால், அவர் கண்ணிமைக்கும் நேரம் நம்மைக் கைவிட்டாலும் அடுத்த நிமிடமே நம்மைத் தாங்குவார், அந்த நோயிலிருந்து நமக்கு விடுதலை தருவார்.
அநேக கிறிஸ்தவர்கள் எப்போதும் எதிர்மறையாகவே பேசிக்கொண்டிருப்பார்கள். அவர்களுக்குள் பிசாசு புகுந்து வாழ்வைக் கெடுப்பது மிகவும் எளிது. “உங்களுள் யாரேனும் நோயுற்றிருந்தால், திருச்சபையின் மூப்பர்களை அழைத்து வாருங்கள். அவர்கள் ஆண்டவரது பெயரால் அவர்மீது எண்ணெய்பூசி இறைவனிடம் வேண்டுவார்கள். நம்பிக்கையோடு இறைவனிடம் வேண்டும்போது நோயுற்றவர் குணமாவார். ஆண்டவர் அவரை எழுப்பி விடுவார். அவர் பாவம் செய்திருந்தால் மன்னிப்புப் பெறுவார். ஆகவே ஒருவருக்கொருவர் பாவங்களை அறிக்கை செய்து கொள்ளுங்கள். ஒருவர் மற்றவருக்காக இறைவனிடம் வேண்டுங்கள். அப்பொழுது குணமடைவீர்கள். நேர்மையாளருடைய வல்லமை மிக்க மன்றாட்டு பயன் விளைவிக்கும் (யாக்.5:14-16).
நோயாளி தனியாக அமர்ந்து பிரார்த்தனை செய்வதைவிட, அவர் பங்கெடுக்கும் சபையின் மூப்பர்களை அழைத்து தனக்காக இறைவனிடம் மன்றாட வேண்டி, அவர்களும் பிரார்த்தனை செய்தால், வைத்தீஸ்வரன் இயேசு விரைவில் குணமளிப்பார். ஒவ்வொரு விசுவாசியும் பிறவிசுவாசிகளையும் சார்ந்துதான் வாழவேண்டுமென்னும் கொள்கையை கடவுள் இங்கே வலியுறுத்துகிறார். நாம் தனியாக நிற்பது ஆபத்தானது. சிலவேளை நோயாளி பிறரிடம் செய்த தவறுக்கு மன்னிப்பு கேட்காமலோ, அல்லது பிறர் தனக்கு செய்த தவறுகளுக்காக அவர்களை மன்னிக்காமலோ இருந்தால்கூட குணமாவது கடினமாகலாம். எனவே, இயேசுவால் குணம்பெற விரும்புகிறவர்கள் பிறரை மன்னிக்கவேண்டும். வறட்டு பெருமையில்லாமல் மன்னிப்பு கேட்கவும் வேண்டும். ஆண்டவரைப் புரிந்து கொண்டு ஆரோக்கியமாக வாழ்வோம் !

கிறிஸ்தவர்களிடையே ஆயிரக்கணக்கான சபைப்பிரிவுகள் இருக்கின்றன.