வரதட்சணையைக் கேட்டு துன்புறுத்துகிறவர்கள் யாராக இருந்தாலும் அவர்களிடம் கிறிஸ்துவின் ஆவி இல்லை என்றே கூறுவேன். சிலைவழிபாட்டைத் தவறு என்று நம்பும் அநேகர், கந்துவட்டிக்கு வாங்கியாவது வரதட்சணை தரக்கட்டாயப்படுத்துவது விக்கிரக ஆராதனைக்கு சமமாக இருக்கிறதென்று உணராமல் இருக்கிறார்கள். வீட்டுக்கு வந்த மருமகளை அடிமையைப்போல நடத்துகிறார்கள். ‘நகையணியமாட்டோம் அதற்குப் பதிலாக பணமாக தாருங்கள்’ என்று ‘நாகரீகப்பிச்சை’ எடுக்கும் பெந்தெகோஸ்தே பரிசேயர்களும் உண்டு. லட்சக்கணக்கில் வரதட்சணையைப் பிடுங்கி விட்டு கர்த்தர் ஆசீர்வதித்தார்| என்று பெருமிதமாக சாட்சி சொல்லும் கொலைகாரக் கிறிஸ்தவர்களும் உண்டு. பொருளாசைக்காரன் பரலோகத்திற்குள் நுழையமாட்டான் (1கொரி. 6:10) என்று இப்படிப்பட்டவர்களை கடவுள் எச்சரிக்கிறார். வரதட்சணை கேட்டு பெண்வீட்டாரை கொடுமைப்படுத்துவது கிறிஸ்தவப் பண்பாடு அல்ல. ‘வரதட்சணை வாங்க ஆசை கொள்ளாதே மனமே’ என்ற பாடல் அடங்கிய எவரும் விரும்பும் ஓர் இனிய தெய்வம் என்னும் ஒலித்தட்டை நீங்களும் கேட்டு, மாப்பிள்ளை வீட்டாருக்கும் பரிசாக வாங்கி கொடுங்கள். (மேற்கண்ட ஒலித்தட்டு வேண்டுமானால் எங்களுடன் தொடர்பு கொள்ளுங்கள்).
“என்னை நோக்கி,ஆண்டவரே, ஆண்டவரே எனச் சொல்பவரெல்லாம் விண்ணரசுக்குள் செல்வதில்லை. மாறாக, விண்ணுலகிலுள்ள என் தந்தையின் திருவுளத்தின்படி செயல்படுபவரே செல்வர். அந்நாளில் பலர் என்னை நோக்கி, “ஆண்டவரே, ஆண்டவரே, உம் பெயரால் நாங்கள் இறைவாக்கு உரைக்கவில்லையா? உம் பெயரால் பேய்களை ஓட்டவில்லையா? உம் பெயரால் வல்ல செயல்கள் பல செய்யவில்லையா?” என்பர். அதற்கு நான் அவர்களிடம், “உங்களை எனக்குத் தெரியவே தெரியாது. நெறிகேடாகச் செயல்படுவோரே, என்னைவிட்டு அகன்று போங்கள்” என வெளிப்படையாக அறிவிப்பேன்” (மத்.7:21-23) என்று இயேசு கிறிஸ்தவர்களை எச்சரிக்கிறார்.
நீங்கள் முதலில் கிறிஸ்தவர்களைத் திருத்திவிட்டு எங்களிடம் வாருங்கள்.