உங்கள் வாதம் ஏற்றுக்கொள்ளப்படத் தகுந்ததுதான். ஆனால், ‘ஒரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட முதலாவது நோயாளி முற்றிலும் குணமடையும்முன் இரண்டாவது நோயாளியை அனுமதிக்கக்கூடாது’ என்று கூறமுடியுமா? ‘முதல் நோயாளி பூரண குணமடைந்தபின்தான் அடுத்த நோயாளி அனுமதிக்கப்பட முடியும்’ என்று சட்டம் வைத்தால், ஒவ்வொரு நோயாளிக்கும் ஒவ்வொரு மருத்துவர் தேவை. கிறிஸ்தவர்களுக்கு சொன்னதையே சொல்ல இறைவன் கட்டளையிடவில்லை. “உலகெங்கும் சென்று நற்செய்தியைப் பறைசாற்றுங்கள்” (மத். 28:19) என்று சர்வலோகநாதன் அன்புக் கட்டளையிட்டிருக்கிறாரே. அவரது உத்தரவின்படி உலகெங்குமுள்ள சந்துகள், பொந்துகள் எல்லா இடங்களிலும் இந்த அன்புச்செய்தி பரப்பப்படுகிறது.
100% சிலை வழிபாட்டினராயிருந்த இந்தியாவில் இன்று ஏறத்தாழ 25 கோடி மக்கள் இயேசுவின் ஜீவகாருண்யக் கொள்கையை கடைபிடித்து வாழ அர்ப்பணித்துள்ளனர். இயேசுவின் இரத்தம் ஜாதி, மதம், இனம், மொழி, நாடு என்னும் பேதங்கள் இல்லாமல் எல்லாருக்காகவும் சிந்தப்பட்டது (1யோவா. 2:2). கிறிஸ்தவர்களை சீர்படுத்தி வாழவைக்க ‘போதகர்கள்’ என்னும் அதிகாரிகள் சபையில் உண்டு. ஆனால், அதே நேரத்தில் இயேசுவை அறியாத மக்களுக்கு இயேசுவை அறிவிக்கும் பொறுப்பை நற்செய்தி பணியாளர்களிடம் கொடுத்திருக்கிறார் (எபே. 2:14). மனம்திரும்புவதும் பாவமன்னிப்பும் எருசலேம் முதல் உலகின் எல்லைவரை பறைசாற்றப்பட வேண்டும் (லூக். 24:27) என்று வேதம் கூறுகிறது. ‘யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்’ என்னும் பொன்மொழிக்கேற்ப நாங்கள் பெற்ற நல்வாழ்வை பிறருக்கு அறிமுகப்படுத்துவதில் தவறென்ன இருக்கிறது?