2004-ஆம் வருடம் இந்தியா சுனாமியால் பாதிக்கப்பட்டபோது வெளிநாடுகளிலிருந்து வந்த நிவாரணநிதியை நாம் ஏற்றுக் கொள்ளவில்லையா? அல்லது ஜப்பானில் சுனாமி வந்து கோடிக் கணக்கில் பணநஷ்டம் வந்தபோது, இந்தியா அனுப்பிக் கொடுத்த நிவாரண நிதியை அவர்கள் ஏற்றுக்கொள்ளவில்லையா? எந்த நாட்டிலிருந்து நாம் பணம் வாங்கினால் என்ன? அந்த பணத்தை வைத்து நாம் இந்த மண்ணில் என்ன நலத்திட்டங்களை செயல்படுத்தினோம் என்றுதான் பார்க்கவேண்டும். வேறு எந்த நாட்டிலிருந்தும் கடன் வாங்க தேவையில்லாத அளவுக்கு இந்தியா இன்னும் ஒரு தன்னிறைவுள்ள நாடாக மாறவில்லை. உலகிலேயே மிகப்பெரிய பணக்காரர்களுடைய வரிசையில் இந்தியர்கள் இருந்தாலும், மூன்று வேளை உணவில்லாமல் துன்பப்படும் ஏழைகளும் இங்கு கோடிக்கணக்கில் இருக்கிறார்களே! வெளிநாட்டிலிருந்து மறைப்பணி செய்ய வந்தவர்கள் தங்கள் நிலபுலன்கள், உடமைகள் எல்லாவற்றையும் விற்று, அந்த பணத்தை இந்தியாவுக்கு கொண்டுவந்து, நம் அநாதைகள், நோயாளிகளுக்கு புகலிடமளிக்க ஆஸ்ரமங்கள், மருத்துவமனைகளை கட்டிச் சேவை செய்தனர். அமெரிக்கவிலுள்ள கிறிஸ்தவப் பணக்காரர்கள், பிச்சைக்கார இந்தியர்களை வறுமையிலிருந்து மீட்க, தங்கள் அமெரிக்க சொத்துக்களை விற்று, நம் நாட்டுக்கு அனுப்பி சேவை செய்வதை குற்றம் என்று கூறுகிறீர்களா? நாடு முழுவதும் கிறிஸ்தவர்களால் உருவாக்கப்பட்டு நடத்தப்படும் இலவச அநாதை விடுதிகள் மருத்துவமனைகள், பள்ளிகள், சேவை மையங்கள் எத்தனை என்று நீங்கள் கணக்கு பார்ப்பது நல்லது. இந்தியாவுக்குள் இருக்கும் ஜாதிவெறியால் ஒரு ஜாதிக்காரன் வேறு ஜாதிக்காரனிடம் சண்டை போட்டு வெட்டி சாய்க்கிறான். இப்படி ஒரே நாட்டுக்குள் பிரிந்து கிடக்கும்போது, எங்கோ ராஜவாழ்க்கை வாழ்ந்து கொண்டிருந்த அமெரிக்கர்கள் நம்மை தங்கள் சொந்த இரத்தமாக நினைத்து சேவை செய்வதை தவறு என்று கூறுகிறீர்களா?
வறுமையில் வாடும் இந்தியனுக்கு எந்த நாட்டுக்காரன் உதவி செய்தால் என்ன? ஒரு காலகட்டத்தில் ‘இந்தியாவில் மேல்ஜாதி மக்கள் மட்டும்தான் கல்வி கற்கவேண்டும் தாழ்த்தப்பட்டவர்கள் கல்வி கற்கக்கூடாது’ என்னும் கொடுமையான சட்டமிருந்தது. பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிசெய்ய அரசாங்கம் கூட உதவிக்கரம் நீட்டாமல் புறக்கணித்த காலகட்டத்தில், தாயுள்ளத்தோடு உதவியவர்கள் வெளிநாட்டிலிருந்து வந்த திருத்தொண்டர்கள்தான். பெண்குழந்தை பிறந்தவுடன் அதை கொன்றுவிடும் பழக்கம் இந்தியாவில் இருந்தது. அப்படிப்பட்ட கொடுமைக் கலாச்சாரத்திலிருந்து ஆயிரக்கணக்கான சிறுமிகளை மீட்டு மறுவாழ்வு கொடுத்த வெளிநாட்டு அருட்பணியாளர்களுடைய அயராத உழைப்புகளை அசட்டை செய்யமுடியுமா? கணவன் இறந்தவுடன் அவரை எரிக்கும் அதே சிதையில் உயிரோடிருக்கும் மனைவியையும் எரிக்கும் கொடூர பழக்கம் (உடன்கட்டை ஏறல்) இந்தியாவில் இருந்தது. அதற்கு இந்துமதத் தலைவர்களும் அறிஞர்களும் துணைபோனார்கள். இந்நிலையில் வெளிநாட்டிலிருந்து இந்தியாவுக்கு வந்த வில்லியம் கேரி போன்ற அருட்பணியாளர் தங்கள் பணத்தைச் செலவுசெய்து, இந்த மூடபழக்கத்திற்கு எதிர்த்துநின்று, அரும்பாடுபட்டு முறியடித்தனர். குழந்தைகளுக்கு கல்யாணம் செய்து வைக்கும் மூடபழக்கம் இந்தியாவில் சர்வசாதாரணமாய் வழக்கில் இருந்தபோது, அதை தவறென்று முதலில் எதிர்த்தவர்கள் வெளிநாட்டினர்தான். கிறிஸ்தவத்தை புரிந்து கொண்டு, அன்றும் இன்றும் கோடிக்கணக்கான மக்கள் கிறிஸ்துவின் கொள்கையை பின்பற்றுகிறார்கள். இந்தியாவில் இருக்கும் மதவாத கோடீஸ்வரர்களுக்கு இல்லாத ஒரு தயாளகுணமும், அன்பும், மனதுருக்கமும் வெள்ளைக்காரர்களிடம் இருப்பதை பாராட்டவேண்டிய நீங்கள் குறைகூறுகிறீர்களா? உங்கள் வீட்டிலுள்ள அனுபவமுள்ள முதியவர்களிடம் கேட்டுப் பாருங்கள். நான் சொல்வதில் நியாயம் இருக்கிறது என்பது உங்களுக்கு புரியும்.