033. ஞாயிற்றுக்கிழமை மட்டும்தானே ஊழியம் செய்ய வேண்டும். மற்ற நாட்களிலும் போய் ஏன் மக்களை தொந்தரவு செய்கிறீர்கள் ?

     கிறிஸ்தவர்கள் செய்யும் அருட்பணியை ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டும்தான் செய்யவேண்டுமென்று வேதத்தில் எங்குமே எழுதப்படவில்லை. ஞாயிறு, திங்கள், செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி, சனி என்ற நாட்களின் பெயர்கள் எதுவுமே பைபிளில் எழுதப்படவில்லை. “இறைவார்த்தையை அறிவி வாய்ப்பு கிடைத்தாலும், கிடைக்கா விட்டாலும் இதை செய்வதில் நீ கருத்தாயிரு. கண்டித்துப்பேசு கடிந்துக்கொள் அறிவுரை கூறு மிகுந்த பொறுமையோடு கற்றுக்கொடு” (2திமொ. 4:2) என்று பவுல் அறிவுறுத்துகிறார். நேரம் வாய்த்தாலும் வாய்க்காவிட்டாலும் நற்செய்தி அறிவிக்கவேண்டும் என்கிறார்.

     நற்செய்தி பணியாளருக்கு சாகும்வரை விடுப்பு இல்லை. இயேசு கிறிஸ்து நாள்தோறும் மக்களுக்கு போதித்தார் என்று மத். 26:55 கூறுகிறது. இயேசுவின் திருத்தூதர்களும் அனுதினமும் வீடுகளிலும், கோயிலிலும் தொடர்ந்து கற்பித்தார்கள் (தி.பணி. 5:42). உங்கள் வீட்டில் ஒரு நபருக்கு திங்கள்கிழமை பேய்பிடித்து விட்டால் அதை துரத்துவதற்கு ஒரு கிறிஸ்தவ ஊழியர் ஞாயிற்றுக்கிழமைதான் வரவேண்டும் என்று காத்திருப்பீர்களா? உங்கள் குழந்தை எமகண்ட நேரத்தில் ஒரு பாதாள சாக்கடையில் விழுந்துவிட்டால், நல்ல நேரம் வரும்வரை காத்திருப்பீர்களா? யோசித்துப்பாருங்கள். ஒரு நாட்டின் ஒரு அரசியல் கட்சியினரது ஆட்சியால் அநியாயங்கள் அரங்கேற்றப்படும்போது, அதை எதிர்க்கட்சியினர் எந்த கிழமையில் தட்டிக்கேட்டால் என்ன? அனுதினமும் செய்திகளை தொலைக்காட்சி நிலையத்தினரும், வானொலி நிலையத்தினரும் உங்கள் வீட்டு தொலைக்காட்சியிலும், வானொலியிலும் பரப்புவதை தவறு என்று கூறப்போகிறீர்களா? ஞாயிற்றுக்கிழமை அரசு விடுமுறையானதால், கிடைக்கும் ஓய்வுநேரத்தில் தங்கள் நம்பிக்கையை, தங்களை வாழவைத்த கொள்கையை, கேட்கவிரும்பும் மக்களுக்கு மட்டும் சொல்லிக்கொடுக்கிறார்கள். மற்றபடி ஞாயிற்றுக்கிழமைதான் ஊழியம் செய்ய வேண்டுமென்று வேதத்தில் எங்குமே எழுதப்படவில்லை.

இந்துமத தீவிரவாதிகள் ஒரிசாவில் பாதிரியாரை அவரது பிள்ளைகளோடு எரித்தாலும், அவருடைய மனைவி கொலைகாரர்களை பழிவாங்கவில்லையே ?