அமெரிக்க ஜனாதிபதி தமிழக முதல்வருக்கு ஒரு கடிதம் எழுதினால், உண்மையாகவே அவர் தன் கைப்பட எழுதுவாரா? அவர் அதை வாயால் கூறும்போது, அவரது அலுவலக செயலாளர் விரைவாகக் குறித்து வைத்து அவரது கம்பியூட்டரில் அச்சிட்டு ஜனாதிபதியின் கையெழுத்து வாங்கி அனுப்புவார். அதுபோல கடவுள் தன் பக்தர்களை வைத்துத்தான் வேதத்தை எழுதினார். வேதாகமம் ஏறத்தாழ 40 இறைவாக்கினர்களால், 1600 ஆண்டுகளாக எழுதப்பட்டிருக்கிறது.
மறைநூல் அனைத்தும் கடவுளின் தூண்டுதல் பெற்றுள்ளது. அது கற்பிப்பதற்கும், கண்டிப்பதற்கும், சீராக்குவதற்கும், நேர்மையாக வாழப்பயிற்றுவிப்பதற்கும் பயனுள்ளது. இவ்வாறு, கடவுளின் மனிதர் தேர்ச்சிபெற்று நற்செயல் அனைத்தையும் செய்யத் தகுதிபெறுகிறார் (2திமொ. 3:16,17) என்று பவுல் என்னும் திருப்பணியாளர், தன் நண்பர் திமொத்தேயுவுக்கு எழுதினார்.
ஆண்டவரின் ஆவி என்மூலம் பேசினார். அவரது வார்த்தை என் நாவில் ஒலித்தது (2சாமு. 23:2) என்று சாமுவேல் என்னும் இறைவாக்கினர் கூறினார். ஆக, வேதாகமத்தை இறைவனுடைய ஏவுதலோடு அவருடைய பரிசுத்த பிள்ளைகள் எழுதினார்கள் என்று தெளிவாக நாம் அறிகிறோம். பைபிளை கடவுள்தான் எழுதினார் என்பதை சந்தேகப்பட தேவையில்லை. நம்பிக்கையில்லாமல் எவரும் கடவுளுக்கு உகந்தவராய் வாழமுடியாது (எபி. 11:6). நம்பிக்கை கொண்டவன் பதட்டமடையமாட்டான் (ஏசா. 28:16). நீங்கள் ஒரு பேருந்திலேறி உட்கார்ந்தபின் பேருந்து ஓட்டுநரை நம்பாமலிருந்தால் உங்களால் நிம்மதியாக பயணம் செய்ய முடியுமா? அதுபோல கடவுளின் தூண்டுதலால்தான் வேதம் எழுதப்பட்டது என்று நம்பாமல் இறைவனை அறியமுடியாது. இந்த பைபிளின் மூலம் இன்று கோடிக்கணக்கானவர்கள் நல்வாழ்வு பெற்றுக் கொண்டிருக்கின்றனர். கட்டுப்படுத்த முடியாத பாவவாழ்க்கை வாழ்ந்து கொண்டிருந்த கணக்கற்ற குற்றவாளிகள் மனம் மாறி தூய்மையோடு வாழ கிறிஸ்து உதவி செய்வதை நாம் கண்கூடாக காண்கிறோம். மருத்துவரால் கைவிடப்பட்ட நோயாளிகளைக் கூட இயேசு குணப்படுத்தியிருக்கிறார்.