4. இயேசுவை யாராவது தொழுததாக வேதத்தில் ஆதாரமுண்டா ?

  “நான்தான் கடவுள்; என்னைத்தான் நீங்கள் வணங்கவேண்டும்” என்று இயேசு நேரடியாக கூறியதாக வேதபுத்தகத்தில் எங்குமே எழுதப்படவில்லை. அதனால் அவர் கடவுளுக்கு சமமானவரல்ல என்று கூறமுடியாது. “நான் கன்னியின் வயிற்றில் பிறந்தேன்” என்று இயேசு தன் வாயால் சொல்லாததால் அவர் கன்னியின் வயிற்றில் பிறக்கவில்லை என்று கூறமுடியுமா? இயேசு தன்னைக் கடவுளுக்கு இணையானவர் என்று மறைமுகமாகக் கூறியிருக்கிறார் என்பதை ஆய்வு செய்தால் கண்டுபிடிக்கமுடிகிறது.

தந்தையாம் இறைவனே இயேசு கிறிஸ்துவை நோக்கி, “இறைவனே, என்றும் உள்ளது உமது அரியணை. உம் ஆட்சியின் செங்கோல் வளையாத செங்கோல்” (எபி. 1:8) என்றார்.

ஒருமுறை இயேசு யூதர்களிடம் பேசும்போது, “நானும், தந்தையும் ஒன்றாய் இருக்கிறோம்” (யோவா. 10:30) என்றார். அவர் ஒரு சாதாரண இறைத்தூதராக இருந்திருந்தால் இப்படி கூறியிருக்கமாட்டார். இந்த வசனத்தை நாம் பார்க்கும்போது, இயேசு தன்னை கடவுளுக்கு சமப்படுத்திப் பேசியதாக காணப்படாததுபோல் தெரியலாம். ஆனால், இயேசு இப்படி பேசியவுடனேயே யூதர்களுடைய பிரதிபலிப்பைக் கவனியுங்கள். இயேசு அப்படி கூறிய உடனேயே அவர்மேல் எறிய யூதர்கள் மீண்டும் கற்களை எடுத்தனர். இயேசு அவர்களைப் பார்த்து, “தந்தையின் சொற்படி பல நற்செயல்களை உங்கள்முன் செய்து காட்டியிருக்கிறேன். அவற்றுள் எச்செயலுக்காக என்மேல் கல்லெறிய பார்க்கிறீர்கள்?” என்று கேட்டார். யூதர்கள் மறுமொழியாக “நற்செயல்களுக்காக அல்ல. இறைவனைப் பழித்துரைத்ததற்காகவே உன்மேல் கல்லெறிகிறோம். ஏனெனில், மனிதனாகிய நீ உன்னையே கடவுளாக்கிக் கொள்கிறாய்” (யோவா. 10:31-33) என்றார்கள். இயேசு அந்த இடத்தில் தன்னை கடவுளுக்கு சமப்படுத்திச் சொல்லவில்லை என்றால், “நான் அந்த அர்த்தத்தில் சொல்லவில்லை என்று கூறி யூதர்களிடம் அவர் மன்னிப்பு கேட்டிருப்பாரே! நமது பார்வையில், “நானும் தந்தையும் ஒன்றாய் இருக்கிறோம்” என்னும் அறிக்கை இயேசுவின் தெய்வீகத்தை வெளிப்படுத்தாததுபோல் இருந்தாலும், இயேசு எந்த அர்த்தத்தில் அப்படி கூறினார் என்று யூதர்கள் புரிந்து கொண்டதால்தான் அவர்மீது கல்லெறிய முயன்றனர். ‘கடவுள் ஒருவரே’ என்று நம்பும் யூதர்களுடைய பார்வையில் இயேசு கடவுளைப் பழித்துரைத்ததுபோல் இருந்தது. அதனால்தான் அவர்களுக்கென்றுக் கொடுக்கப்பட்ட, “ஆண்டவரின் திருப்பெயரை இகழ்பவர் கொலை செய்யப்படுவார்; சபையார் கல்லாலெறிவர். அன்னியரோ, நாட்டினரோ, யாரெனினும் திருப்பெயரை இகழ்கிறவர் கொல்லப்படுவார் (லேவி. 24:16) என்ற சட்டப்படி அவரைக் கல்லெறிந்து கொல்லத் தீர்மானித்தார்கள். (வாசிக்கவும் இ.ச. 13:1-18).
ஒருமுறை இயேசு மத அறிஞர்களிடம் பேசும்போது, “உங்கள் தந்தை ஆபிரகாம் நான் வரும் காலத்தைக் காண ஆசைப்பட்டார். அதனைக் கண்டபோது மகிழ்ச்சியும் கொண்டார்” என்றார். யூதர்கள் அவரை நோக்கி, “உனக்கு இன்னும் 50 வயதுகூட ஆகவில்லை! நீ ஆபிரகாமைக் கண்டிருக்கிறாயா?” என்று கேட்டார்கள். இயேசு அவர்களிடம், “ஆபிரகாம் பிறப்பதற்கு முன்பே நானிருக்கிறேன் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்” என்றார். இதைக் கேட்ட அவர்கள் அவர்மேல் கல்லெறியக் கற்களை எடுத்தார்கள் (யோவா. 8:56-59). அவர்களுடைய பார்வையில் இயேசு கிறிஸ்து கூறியது இறைவனைப் பழித்துரைத்தது போலிருந்ததால், அவரைக் கல்லெறிந்து கொல்ல முயன்றனர்.
யூதர்கள் கடவுளைத் தங்கள் தந்தை (யோவா. 8:41) என்றும், தங்களை கடவுளின் பிள்ளைகள் (இ.ச. 14:1) என்றும் நம்பினர். ஆனால், இயேசு தன்னை ‘கடவுளின் மகன்’ என்று அறிமுகப்படுத்தியபோது யூதர்கள் அவர்மீது கல்லெறிய முற்பட்டது ஏன்? அவர்கள் ‘கடவுளின் மகன்’ என்ற நிலை கடவுளுக்கு சமமானது என்று நினைத்தனர். தந்தையாம் கடவுள், “என் அன்பார்ந்த மைந்தர் இவரே” என்று இயேசுவைப் பற்றிச் சான்று கொடுக்கிறார் (மத். 3:17, 15:7). பிலாத்துவிடம் யூதர்கள் பேசும்போது, “எங்களுக்கு ஒரு சட்டமுண்டு. அச்சட்டத்தின்படி இவன் சாகவேண்டும். ஏனெனில், இவன் தன்னையே ‘இறைமகன்’ என உரிமை கொண்டாடுகிறான்” (யோவா. 19:7) என்றனர். ஆக, ‘இறைமகன்’ என்று கூறி, இயேசு தன்னை கடவுளுக்கு இணையாக்கிப் பேசியதால்தான் அவருக்கு மரணதண்டனை கொடுத்தார்கள் என்பதே உண்மை.
இயேசு ஒருமுறை சீடர்களிடம், “நீங்கள், நான் யார் எனச் சொல்கிறீர்கள்? என்று கேட்டார். சீமோன் பேதுரு மறுமொழியாக, “நீர் மெசியா, வாழும் கடவுளின் மகன்” என்று உரைத்தார். அதற்கு இயேசு, “யோனாவின் மகனான சீமோனே, நீ பேறு பெற்றவன். ஏனெனில் எந்த மனிதரும் இதை உனக்கு வெளிப்படுத்தவில்லை; மாறாக விண்ணகத்திலுள்ள என் தந்தையே வெளிப்படுத்தியுள்ளார் (மத். 16:15-17) என்று கூறினார்.

இயேசுவை விசாரித்த தலைமைக் குரு, “போற்றுதற்குரிய கடவுளின் மகனாகிய மெசியா நீதானோ?” என்று அவரைக் கேட்டார். அதற்கு இயேசு, “நானே அவர்; மேலும் மானிட மகன் வல்லவராம் கடவுளின் வலப்புறத்தில் வீற்றிருப்பதையும் வான மேகங்கள் சூழ வருவதையும் காண்பீர்கள்” என்றார். தலைமைக் குருவோ தம் அங்கியைக் கிழித்துக் கொண்டு, “இன்னும் நமக்குச் சான்றுகள் தேவையா? இவன் கடவுளைப் பழித்துரைத்ததைக் கேட்டீர்களே; உங்களுக்கு என்ன தோன்றுகிறது?” என்று கேட்க, அவர்கள் அனைவரும், “இவன் சாக வேண்டியவன்” என்று தீர்மானித்தார்கள் (மாற். 14:61-64).
“அவர் (இயேசு) ஓய்வுநாள் சட்டத்தை மீறியதோடு இல்லாமல், கடவுளைத் தம் சொந்த தந்தை என்று கூறித் தம்மையே கடவுளுக்கு சமமாக்கியதால், யூதர்கள் அவரைக் கொல்ல இன்னும் மிகுந்த முயற்சி செய்தார்கள்” (யோவா. 5:18) என்று திருத்தூதர் யோவான் கூறுகிறார். இயேசு, தன்னை கடவுளுக்கு சமமாக்கியிருக்காவிட்டால் இயேசுவோடு பல்லாண்டுகள் வாழ்ந்த அவருடைய நேரடிச் சீடர் யோவான் இப்படி எழுதியிருக்கமாட்டார். ஒருமுறை பிலிப்பு, இயேசுவிடம், “ஆண்டவரே, தந்தையை எங்களுக்குக் காட்டும்; அதுவே போதும்” என்றார். இயேசு அவரிடம் கூறியது; “பிலிப்பே, இவ்வளவு காலம் நான் உங்களோடு இருந்தும் நீ என்னை அறிந்துகொள்ளவில்லையா? என்னைக் காண்பது தந்தையைக் காண்பது ஆகும். அப்படியிருக்க, “தந்தையை எங்களுக்குக் காட்டும்” என்று நீ எப்படிக் கேட்கலாம்? (யோவா. 14:8,9).

கடவுள்தான் உலகைப் படைத்தார். தொடக்கத்தில் கடவுள் விண்ணுலகையும், மண்ணுலகையும் படைத்தார் (தொ.நூ. 1:1) என்று வேதம் கூறுகிறது.நான் உலகை உருவாக்கி, அதன்மேல் மனிதரைப் படைத்தேன்; என் கைகளே வானத்தை விரித்தன; அதன் படைத்திரளுக்கு ஆணையிட்டதும் நானே” (எசா. 45:12, 18, 42:5, 44:24, எரே. 10:12) என்று கடவுள் சொல்கிறார். ஆனால் கடவுள், இயேசு கிறிஸ்துவின்மூலமே உலகைப் படைத்தார் என்று வேதம் கூறுகிறது. “அனைத்தும் அவரால் (இயேசு) உண்டாயின; உண்டானது எதுவும் அவராலன்றி உண்டாகவில்லை” (யோவா. 1:3) என்று திருத்தூதர் யோவான் கூறுகிறார். விண்ணிலுள்ளவை, மண்ணிலுள்ளவை, கண்ணுக்குப் புலனாகுபவை, கண்ணுக்குப் புலனாகாதவை, அரியணையில் அமர்வோர், தலைமை தாங்குவோர், ஆட்சியாளர், அதிகாரம் கொண்டோர் ஆகிய அனைவரும் அவரால் படைக்கப்பட்டனர். அனைத்தும் அவர் வழியாய் அவருக்காகப் படைக்கப்பட்டன (கொலோ. 1:16), இவ்விறுதி நாட்களில் தம் மகன் (இயேசு) வழியாக நம்மிடம் பேசியுள்ளார்; இவரை எல்லாவற்றுக்கும் உரிமையாளராக்கினார்; இவர் வழியாக உலகங்களைப் படைத்தார் (எபி. 1:2) என்று திருத்தூதர் பவுல் கூறுகிறார். இதன்மூலம் இயேசு கிறிஸ்து கடவுளுக்கு இணையானவர் என்று அறிகிறோம்.

கடவுளுக்கு மட்டும்தான் பாவிகளுடைய பாவங்களை மன்னிக்கும் அதிகாரம் உண்டு என்பதே திருமறை நமக்கு கற்றுக் கொடுக்கும் பாடம் (தி.பா. 103:3, 2சாமு. 12:13, தி.பா. 130:4, தானி. 9:9). ஆனால், கிறிஸ்துவுக்கு அந்த அதிகாரம் இருந்ததென்று அவரே கூறிய ஒரு சந்தர்ப்பத்தைப் பார்ப்போம். ஒருமுறை இயேசுவின் வல்லமையால் குணம் பெற்றுச் செல்ல முடக்குவாதமுள்ள ஒருவரை கட்டிலோடு தூக்கிக்கொண்டு வந்தார்கள். இயேசு ஒரு வீட்டினுள் இருந்தார். திரளான மக்கள் கூட்டம் அவரை சூழ்ந்திருந்ததால் அவரருகில் இவரைக் கொண்டு போகமுடியாமல், வீட்டுக் கூரையின் மேலேறி ஓடுகளைப் பிரித்து நோயாளியை இறக்கினார்கள். அவர்களுடைய நம்பிக்கையைக் கண்ட இயேசு அந்த ஆளைப்பார்த்து, உம் பாவங்கள் மன்னிக்கப்பட்டன என்றார். இதனை கேட்ட மறைநூல் அறிஞரும், பரிசேயரும், கடவுளைப் பழித்துரைக்கும் இவன் யார்? கடவுள் மட்டுமன்றி பாவங்களை மன்னிக்க யாரால் இயலும்? என்று எண்ணிக்கொண்டனர். அவர்களின் எண்ணங்களை உய்த்துணர்ந்த இயேசு அவர்களைப் பார்த்து, “உங்கள் உள்ளங்களில் நீங்கள் எண்ணுகிறதென்ன? ‘உம் பாவங்கள் உமக்கு மன்னிக்கப்பட்டன’ என்பதா, ‘எழுந்து நடக்கவும்’ என்பதா, எது எளிது? மண்ணுலகில் பாவங்களை மன்னிக்க மானிட மகனுக்கு அதிகாரம் உண்டு என்பதை நீங்கள் அறிந்து கொள்ளவேண்டும் என்றார். பின்பு அவர் முடக்குவாதமுற்றவரை நோக்கி, “நான் உமக்குச் சொல்கிறேன் நீர் வீட்டுக்கு போம்!” என்றார். உடனே அவர் அவர்கள் முன்பாக எழுந்து தாம் படுத்திருந்த கட்டிலைத் தூக்கிகொண்டு, கடவுளைப் போற்றிப் புகழ்ந்தவாறே தமது வீட்டுக்குப் போனார் (லூக். 5:20-25, 7:48,49).

இறைமகன் இயேசுவுக்கு மக்களுடைய பாவங்களை மன்னிக்கும் அதிகாரமும் இருந்தது என்று திருத்தூதர்கள் சான்று பகர்ந்தனர். “இஸ்ராயேல் மக்களுக்கு மனமாற்றத்தையும், பாவமன்னிப்பையும் அளிப்பதற்காக கடவுள் அவரைத் தலைவராகவும் மீட்பராகவும் தமது வலப்பக்கத்திற்கு உயர்த்தினார்” (தி.ப. 5:31) என்ற திருத்தூதர் பேதுரு கூறுகிறார்.

கடவுளுக்குத்தான் எல்லா அதிகாரமும், வலிமையும் உண்டு. கடவுளால் இயலாதது ஒன்றுமில்லை (லூக். 1:37) என்று வேதம் கூறுகிறது. ஆனால், கடவுளுடைய சகல அதிகாரத்தையும் இயேசு கிறிஸ்துவுக்கு கடவுள் கொடுத்திருந்தார். இதை விளக்கிக் காட்ட, “விண்ணுலகிலும் மண்ணுலகிலும் அனைத்து அதிகாரமும் எனக்கு அருளப்பட்டிருக்கிறது” (மத். 28:18); “தந்தை மகன்மேல் (இயேசு) அன்புகூர்ந்து அனைத்தையும் அவர் கையில் ஒப்படைத்துள்ளார்” (யோவா. 3:35); “என் தந்தை (கடவுள்) எல்லாவற்றையும் என்னிடத்தில் ஒப்படைத்திருக்கிறார்” (மத். 11:27) என்று அறிக்கையிட்டார். இதிலிருந்து இயேசு கிறிஸ்து கடவுளுக்கு இணையானவர் என்று அறிகிறோம்.

கடவுள்தான் எங்கும் நிறைந்திருக்கிறார் என்று வேதம் கூறுகிறது. என் கண்ணில் படாதபடி எவராவது பதுங்கிடங்களில் ஒளிந்துகொள்ள முடியுமா? விண்ணிலும் மண்ணிலும் நிறைந்திருப்பது நான் அல்லவா? என்கிறார் ஆண்டவர் (எரே. 23:24); ஆண்டவருடைய கண்கள் எங்கும் நோக்கும்; நல்லாரையும் பார்க்கும், பொல்லாரையும் பார்க்கும் (நீதி. 15:3) என்று வேதம் கூறுகிறது. ஆனால், இயேசு, தானும் எங்கும் நிறைந்தவரென்று தெளிவாகக் கூறுகிறார். “இரண்டு, மூன்று பேர் என் பெயரின் பொருட்டு எங்கே ஒன்றாகக் கூடியிருக்கின்றார்களோ, அங்கே அவர்களிடையே நான் இருக்கின்றேன் என உறுதியாக உங்களுக்கு சொல்கிறேன்” (மத். 18:20). “நான் உங்களுக்கு கட்டளையிட்ட யாவையும் அவர்களும் கடைபிடிக்கும்படி கற்பியுங்கள். இதோ, உலக முடிவுவரை எந்நாளும் நான் உங்களுடன் இருக்கின்றேன் என்றார்” (மத். 28:20).

இயேசு கிறிஸ்து கடவுளுக்கு சமமாகவே இருக்கிறார் என்பதற்கான விளக்கங்களைக் கீழே தருகிறேன். இயேசு கிறிஸ்துவுக்கு ‘கடவுளின் வாக்கு’ (தி.வெ. 19:13) என்றொரு பெயரும் உண்டு. தொடக்கத்தில் வாக்கு இருந்தது. அவ்வாக்கு கடவுளோடு இருந்தது. அவ்வாக்கு கடவுளாயும் இருந்தது. வாக்கு (இயேசு) என்னும் அவரே தொடக்கத்தில் கடவுளோடு இருந்தார். வாக்கு மனிதர் ஆனார்; நம்மிடையே குடிகொண்டார். அவரது மாட்சியை நாங்கள் கண்டோம். அருளும், உண்மையும் நிறைந்து விளங்கிய அவர், தந்தையின் ஒரே மகன் என்னும் நிலையில் இம்மாட்சியைப் பெற்றிருந்தார் (யோவா. 1:1-3,14) என்று திருத்தூதர் யோவான் வெளிப்படுத்துகிறார். ஒருவருக்கு எவ்வளவு மதிப்பு உண்டோ அவ்வளவு மதிப்பு அவருடைய வார்த்தைக்கும் உண்டு என்பது மறுக்கமுடியாத உண்மை. ஒருவரது வார்த்தை தவறாக இருந்தால், அவரும் தவறானவர் என்று நாம் புரிந்துகொள்கிறோம். அதுபோல கடவுளுக்கு எவ்வளவு மதிப்பு உண்டோ, அவ்வளவு மதிப்பும், மகிமையும் கடவுளுடைய வார்த்தைக்கும் உண்டு என்பதை நாம் புரிந்துகொள்கிறோம். அதாவது, கடவுளுக்கு நாம் கொடுக்கும் மரியாதையை கடவுளின் வார்த்தையாகிய இயேசுவுக்கும் கொடுக்கவேண்டுமென்று அறிகிறோம்.

கடவுள்தான் தொடக்கமும் முடிவும் இல்லாதவர். கடவுள் இருக்கிறவாராகவே இருக்கிறவர் (வி.ப. 3:14). தொடக்கமும் நானே; முடிவும் நானே; என்னையன்றி வேறு கடவுள் இல்லை (எசா. 44:6) என்று கடவுள் கூறுகிறார். அழிவில்லாத, கண்ணுக்குப் புலப்படாத, எக்காலத்துக்கும் அரசராயிருக்கின்ற ஒரே கடவுளுக்கு என்றென்றும் மாண்பும் மாட்சியும் உரித்தாகுக! ஆமென் (1திமொ. 1:17) என்று திருத்தூதர் பவுல் கூறுகிறார். ஆனால், இயேசு கிறிஸ்து ஆதியிலிருந்தே கடவுளோடிருந்தார் என்றும் வேதத்திலிருந்து நாம் அறிகிறோம். “அகரமும் னகரமும் நானே” என்கிறார் கடவுளாகிய ஆண்டவர். “இருந்தவரும் இருக்கின்றவரும் வரவிருக்கின்றவரும் எல்லாம் வல்லவரும் அவரே” (தி.வெ. 1:8) என்று திருத்தூதர் யோவான் கூறுகிறார். “அஞ்சாதே! முதலும் முடிவும் நானே. வாழ்பவரும் நானே. இறந்தேன்; ஆயினும் இதோ என்றென்றும் வாழ்கின்றேன். சாவின் மீதும் பாதாளத்தின் மீதும் எனக்கு அதிகாரம் உண்டு” (தி.வெ. 1:17,18) “இதோ! நான் விரைவில் வருகிறேன். அவரவர் செயலுக்கு ஏற்ப அவரவருக்கு நான் அளிக்கவிருக்கின்ற கைம்மாறு என்னிடம் உள்ளது. அகரமும் னகரமும், முதலும் இறுதியும், தொடக்கமும் முடிவும் நானே (தி.வெ. 22:12,13) என்று இயேசு கிறிஸ்து கூறுகிறார். கடவுளாகிய ஆண்டவரே, எல்லாம் வல்லவரே, இருக்கின்றவரும் இருந்தவரும், வருகிறவருமான உமக்கு நன்றி செலுத்துகின்றோம்; ஏனெனில் நீர் உமது பெரும் வல்லமையை வெளிப்படுத்தி ஆட்சி செலுத்தலானீர் (தி.வெ. 11:17) என்று பரலோகத்தில் 24 மூப்பர்களும் பாடியதாக வேதம் பதிவு செய்கிறது. கடவுளுக்கு மட்டுமே தகுதியான பட்டப் பெயர்களை கிறிஸ்து தனக்கென்றும் பயன்படுத்துகிறார். இதிலிருந்து இயேசு கிறிஸ்து கடவுளுக்கு நிகரானவர் என்று அறிகிறோம்.
இயேசு ஒருமுறை தன் தந்தையை நோக்கிப் பிரார்த்தனை செய்யும்போது, “தந்தையே உலகம் தோன்றும் முன்பே நீர் என்னை மாட்சிப்படுத்தியுள்ளீர். இப்போது உம் திருமுன் அதே மாட்சியை எனக்குத் தந்தருளும்” (யோவா. 17:5) என்றார். இதன் மூலம் உலகம் தோன்றுவதற்கு முன்பே இயேசு கடவுளோடு, கடவுளுக்கு சம மாட்சியோடு இருந்தார் என்று தெளிவாகத் தெரிந்துகொள்கிறோம்.

இறுதி நியாயத்தீர்ப்பு செய்யும் அதிகாரம் கடவுளுக்கு மட்டும்தான் இருக்கமுடியும் (எசா. 33:22, தி.பா. 50:6, 96:10,13). ஆனால், இயேசுவே கடைசி நாளில் நியாயத்தீர்ப்புச் செய்வாரென்று அவரே கூறுகிறார். “தந்தை யாருக்கும் தீர்ப்பளிப்பதில்லை. தமக்கு எல்லாரும் மதிப்பு கொடுப்பதுபோல, மகனுக்கும் மதிப்புக் கொடுக்கவேண்டுமென, தீர்ப்பளிக்கும் அதிகாரம் முழுவதையும் அவர் மகனுக்கு (இயேசு) அளித்துள்ளார்; மகனை மதியாதவர் அவரை அனுப்பிய தந்தையையும் மதிப்பதில்லை (யோவா. 5:22-23). அவர் மானிட மகனாய் இருப்பதால் தீர்ப்பு வழங்கும் அதிகாரத்தையும் தந்தை அவருக்கு (இயேசு) அளித்துள்ளார் (யோவா. 5:27). “தந்தை, தாம் உயிரின் ஊற்றாய் இருப்பதுபோல, மகனும் உயிரின் ஊற்றாய் இருக்குமாறுச் செய்துள்ளார்” (யோவா. 5:26) என்று கிறிஸ்து கூறுகிறார்.

“வானதூதர் அனைவரும் புடை சூழ மானிட மகன் மாட்சியுடன் வரும்போது தம் மாட்சிமிகு அரியணையில் வீற்றிருப்பார். எல்லா மக்களினத்தாரும் அவர் முன்னிலையில் ஒன்று கூட்டப்படுவர். ஓர் ஆயர் செம்மறியாடுகளையும் வெள்ளாடுகளையும் வெவ்வேறாகப் பிரித்துச் செம்மறியாடுகளை வலப்பக்கத்திலும், வெள்ளாடுகளை இடப்பக்கத்திலும் நிறுத்துவதுபோல் அம்மக்களை அவர் வெவ்வேறாகப் பிரித்து நிறுத்துவார் (மத். 25:31-33) என்று கிறிஸ்துவே குறிப்பிடுகிறார். வாழ்வோருக்கும் இறந்தோருக்கும் நீதிபதியாக கடவுளால் குறிக்கப்பட்டவர் இயேசுதாம் என்று மக்களுக்கு பறைசாற்றவும், சான்று பகரவும் அவர் எங்களுக்குக் கட்டளையிட்டார் (தி.ப. 10:42) என்று திருத்தூதர் பேதுரு கூறுகிறார். மேற்கண்ட வசனங்களின்படி, இறுதித் தீர்ப்பு ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் அதிகாரத்திலுள்ளது என்றும், தந்தையாம் கடவுளை நாம் எவ்வளவு மதிக்கிறோமோ, அவ்வளவு மதிப்பை அவரது திருமகனுக்கும் கொடுக்கவேண்டும் என்று கடவுள் எதிர்பார்க்கிறார் என்றும் அறிகிறோம்.

 இயேசு ஒரு குழந்தையாக இருந்தபோது, அவரை ஒரு தெய்வீக மனிதர் என்று அறிந்து கீழ்த்திசையிலுள்ள மூன்று ஞானிகள் அவரைப் பார்த்து வணங்கப் போனார்கள் (மத்.2:1-2). அந்த குழந்தை இருந்த வீட்டிற்குள் அவர்கள் போய், குழந்தையை அதன் தாய் மரியா வைத்திருப்பதைக் கண்டு நெடுஞ்சாங்கிடையாக விழுந்து குழந்தையை வணங்கினார்கள் (மத். 2:11).இயேசுவை மக்கள் வணங்கியபோது அதை அவர் ஏற்க மறுக்கவில்லை. அதற்கு சில உதாரணங்களைத் தருகிறேன்.

     அப்பொழுது தொழுநோயாளர் ஒருவர் வந்து அவரைப் பணிந்து, “ஐயா, நீர் விரும்பினால் எனது நோயை நீக்க உம்மால் முடியும்” என்றார் (மத். 8:2).”

     அவர்களுடன் இவ்வாறு இயேசு பேசிக்கொண்டிருந்த பொழுது, தொழுகைக்கூடத் தலைவர் ஒருவர் அவரிடம் வந்து பணிந்து, “என் மகள் இப்பொழுதுதான் இறந்தாள். ஆயினும் நீர் வந்து அவள் மீது உம் கையை வையும். அவள் உடனே உயிர் பெறுவாள்” என்றார் (மத். 9:18).

     படகிலிருந்தோர் இயேசுவைப் பணிந்து, “உண்மையாகவே நீர் இறைமகன்” என்றனர் (மத்.14:33). அவளோ வந்து அவரைப் பணிந்து, “ஆண்டவரே, எனக்கு உதவிபுரியும்” என்றாள் (மத். 15:25). திடீரென்று இயேசு அவர்களை எதிர்கொண்டு வந்து வாழ்த்தினார். அவர்கள் அவரை அணுகி, அவர் காலடிகளை பற்றிப் பணிந்து கொண்டனர் (மத்.28:9,17).

     அவர்கள் அவரை வணங்கிவிட்டு பெரு மகிழ்ச்சியோடு எருசலேம் திரும்பச் சென்றார்கள் (லூக்.24:52).

     அவர், “ஆண்டவரே நம்பிக்கை கொள்கிறேன்” என்று கூறி அவரை வணங்கினார் (யோவா. 9:38).

     நீ வேறொரு தெய்வத்தை வழிபடலாகாது, ஏனெனில் “வேற்று தெய்வ வழிபாட்டை சகிக்காதவர்” என்பதே ஆண்டவர் பெயர். ஆம், அவர் வேற்று தெய்வ வழிபாட்டைச் சகிக்காத இறைவன் (வி.ப. 34:14) என்பதை தெரிந்திருந்த இயேசு, மேற்கண்ட அனைவரும் அவரை வணங்கும்போது அவர்களைத் தடுக்கவில்லை.

     திருத்தூதர் பவுல் கொரிந்து சபையை வாழ்த்தும்போது, “இயேசு கிறிஸ்துவோடு இணைக்கப்பெற்று, தூயோராக்கப்பட்டு இறைமக்களாக இருக்க அழைக்கப்பட்டுள்ள உங்களுக்கும், எல்லா இடங்களிலும் நம் ஆண்டவர் இயேசுவைத் தொழுது கொள்ளும் யாவருக்கும், நம் தந்தையாம் கடவுளிடமிருந்தும், ஆண்டவர் இயேசுவிடமிருந்தும், அருளும் அமைதியும் உரித்தாகுக” (1கொரி.1:2) என்றார். என் மாட்சியை நான் எவருக்கும் விட்டுக்கொடேன் (எசா. 48:11, 42:8) என்று கூறிய தந்தையாம் தெய்வம், “கடவுளின் தூதர் அனைவரும் அவரை (இயேசுவை) வழிபடுவார்களாக” (எபி. 1:6) என்றும் கூறினார்.

     ஸ்தேவான் என்னும் இறைத்தூதர் இயேசுவின்மேல் வைத்திருந்த அன்பாலும், நம்பிக்கையாலும், தன் உயிரையே ஒரு பொருட்டென்று நினைக்காமல் வாழ்ந்தார். மதவெறியுடைய யூதர்கள் அவரைக் கல்லால் எறிந்து கொன்றார்கள். ஆனால், அவர் இறப்பதற்கு சற்றுமுன், தன்னை கல்லால் எறிந்தவர்களை மனதார மன்னித்தார், அவர்களை கடவுளும் மன்னிக்க வேண்டி, “கர்த்தராகிய இயேசுவே, என் ஆவியை ஏற்றுக்கொள்ளும்” என்று ஸ்தேவான் தொழுது கொண்டார். பின்பு முழந்தாள் படியிட்டு உரத்த குரலில், ஆண்டவரே இந்த பாவத்தை இவர்கள் மேல் சுமத்தாதேயும்” என்று கூறி உயிர்விட்டார் (தி.பணி. 7:59,60). இங்கே ஸ்தேவான் இயேசுவைத் தொழுது கொண்டார் என்று தெளிவாக அறிகிறோம். இயேசு உயிரோடு எழுந்து விண்ணேற்படைந்த பின்பு அவருடைய சீடர் அனனியா இயேசுவை நோக்கி பிரார்த்தனை செய்தார். இயேசு அனனியாவிடம் பேசினார் (தி.பணி. 9:10-17).

     இயேசு ஆராதனைக்குத் தகுதியானவர் என்னும் உண்மையை தானியேல் இறைவாக்கினர் கண்ட தரிசனத்தின் மூலம் தெரிந்து கொள்ளலாம். இரவில் நான் கண்ட காட்சியாவது வானத்தின் மேகங்களின் மீது மானிட மகனைப் போன்ற ஒருவர் (மகன்) தோன்றினார். இதோ! தொன்மை வாய்ந்தவர் (தந்தை) திருமுன் அவர் கொண்டு வரப்பட்டார். ஆட்சியுரிமையும் மாட்சியும் அரசும் அவருக்குகொடுக்கப்பட்டன. எல்லா இனத்தாரும் நாட்டினரும் மொழியினரும் அவரை (மகனை) வழிபட வேண்டும். அவரது ஆட்சியுரிமை என்றும் உள்ளதாகும். அதற்கு முடிவே இராது. அவரது அரசு அழிந்து போகாது (தானி. 7:13-14).

விண்ணுலகிலுள்ள எல்லா உயிர்களும் இயேசுவைத் தொழுகிறார்கள். அப்பொழுது அந்த நான்கு உயிர்களும், 24 மூப்பர்களும் ஆட்டுக்குட்டி (இயேசு) முன் வீழ்ந்தார்கள் (தி.வெ. 5:8). ‘கொல்லப்பட்ட ஆட்டுக்குட்டி (இயேசு) வல்லமையும்,செல்வமும், ஞானமும், ஆற்றலும், மாண்பும், பெருமையும், புகழ்ச்சியும் பெறத் தகுதி பெற்றவர்’ என்று அவர்கள் உரத்த குரலில் பாடிக் கொண்டிருந்தார்கள் (தி.வெ. 5:12). 

     மேற்கண்ட வசனங்களிலிருந்து இயேசு தொழுகைக்குரியவர் என்று அறிகிறோம். ‘தொழுது’,‘வணங்கி’, ‘பணிந்து’ என்ற தமிழ் வார்த்தைகள் எங்கெல்லாம் வருகின்றனவோ அங்கெல்லாம் கிரேக்கத்தில் ‘proskuneo’ என்ற மூல வார்த்தை பயன்படுத்தப்பட்டுள்ளது. இயேசு சாத்தானிடம், “உன் கடவுளாகிய ஆண்டவரை வணங்கி, அவர் ஒருவருக்கே பணிசெய் என்றும் மறைநூலில் எழுதியுள்ளது (மத்.4:10) என்று கூறும் வசனத்திலும் ‘proskuneo’ என்ற வார்த்தையே பயன்படுத்தப்பட்டுள்ளது.

இயேசு தெய்வமானால் அவரை எப்படி கொன்றுவிட முடியும் ?