045. நான் எனது தெய்வத்தை வணங்குகிறேன். அதில் சந்தோஷமாய் இருக்கிறேன். அது போதாதா ?

     கடவுள் அனைவருக்கும் பொதுவானவர். மனிதனை இன, மொழி, ஜாதி அடிப்படையில் பிரிக்கமாட்டார். இன்று இந்து அறநிலையத் துறைக்குட்பட்ட எல்லா அரசாங்க கோயில்களிலும், இந்துக்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவர் என்ற பலகை வைக்கப்பட்டிருக்கிறதே! இந்த பலகையைப் பார்த்தால் கடவுள் மதவெறி பிடித்தவர் போலல்லவா அறிவிக்கிறார்கள்! உண்மையான இறைவன், அனைத்து மதத்து மக்களுக்கும் பொதுவான காருண்யேஸ்வரன், இந்துமக்களை மட்டும்தான் ஏற்றுக்கொள்வாரா? உண்மையாகவே இறைவன் இப்படி கேவலமான, வெறித்தனமான சட்டத்தை மனிதர்களுக்கு கொடுத்திருப்பாரா? இதுதான் நீங்கள் பின்பற்றும் ஆன்மீகமானால் நீங்கள் போகும் வழி சரியானதா? சிந்தித்து பாருங்கள். மேற்கண்ட சம்பவங்களை மேற்கோள்காட்டி, இந்து சகோதரர்கள் ஆயிரக்கணக்கானவர்களிடம் நான் பேசி இருக்கிறேன். எல்லாரும் இது அநியாயம்தான் என்று தங்கள் ஆதங்கங்களை என்னிடம் பதிவு செய்திருக்கிறார்கள்.

     இந்து அறநிலையத் துறையின் சட்டப்படி, ரிக்வேதம், யஜுர்வேதம், சாமவேதம், அதர்வவேதம், மகாபாரதம், இராமாயணம், ஷாமிளா கிரந்தம், பகவத்கீதை, சிவபுராணம், சைவசித்தாந்தம், சிவஞானபோதம், நாலாயிர திவ்யபிரபந்தம், தாண்டீய மகாபிராமணம், பாகவதம், திருமந்திரம், பவிஷ்ய புராணம் என்ற எல்லா மதநூல்களையும் மனப்பாடமாக கற்றாலும், ஒரு பிராமணர் அல்லாதவர் அர்ச்சகராக மாறமுடியாது. இந்த சமுதாய ஏற்றத்தாழ்வு கொள்கையை நிஜமாகவே கடவுள் சொல்லியிருப்பாரா? அல்லது ஜாதிவெறிபிடித்த மதவாதிகளால் தந்திரமாக புகுத்தப்பட்டிருக்குமா? யோசித்துப் பாருங்கள். இந்துக்களது வாழ்வியல் வடிவத்தை நிர்ணயிக்கும் மனுஸ்மிருதி என்னும் புத்தகத்தில் எழுதப்பட்டதை அவர்கள் அறிந்தோ அறியாமலோ பின்பற்றிக் கொண்டிருக்கிறார்கள். ‘மநு’ என்னும் ஒரு பிராமணன் எழுதி வைத்த இப்புத்தகம்தான் இந்தியாவிலுள்ள எல்லா சமுதாயப் பிரிவினைகளுக்கும் காரணமென்பதை இப்போதுதான் இந்துக்கள் உணர ஆரம்பித்திருக்கிறார்கள். “பிரம்மாவுடைய முகத்திலிருந்து தோன்றியவர்கள் பிராமணர்கள் என்றும், அவருடைய தோள்பட்டையிலிருந்து தோன்றியவர்கள் சத்ரியர்கள் என்றும், அவருடைய தொடையிலிருந்து தோன்றியவர்கள் வைஷ்யவர்கள் என்றும், அவருடைய பாதத்திலிருந்து தோன்றியவர்கள் சூத்திரர்கள் என்றும் மக்களை நான்கு வர்ணங்களாக கடவுளே பிரித்திருக்கிறார்” என்னும் பொய்யை எழுதி மக்களை நம்பவைத்து விட்டார்கள் ஆதிக்கவர்க்கத்தினர். சூத்திரன் மற்ற ஜாதி மக்களுக்கு அடிமை வேலை செய்யவேண்டும் என்று மனுதர்மம் கூறுகிறது.

     இதை வாசிக்கும் இந்துசகோதரரே, உங்களை என் சொந்த ‘சகோதரன்’ என்று அழைக்க இயேசு கூறினார். அதாவது, என்னை நான் நேசிப்பது போல உங்களையும் நேசிக்க கூறினார் (லூக்.10:27). தற்போதைய இந்துமத போதகத்தில் இப்படி ஒரு கொள்கையை காட்டமுடியுமா? கிறிஸ்து தன்னிடம் வரும் எவரையும் ஏற்றுக் கொள்கிறார் (யோவா.6:37) என்று வேதம் தெளிவாக்குகிறது. மனிதர்களுக்குள், யூதர்களென்றும் கிரேக்கர்களென்றும் வேறுபாடு இல்லை ஆணுக்கொரு நீதி, பெண்ணுக்கொரு நீதி என்னும் பாகுபாடில்லை; அடிமை, உரிமைக் குடிமகன் என்னும் உணர்வுகள் கடவுளின் சாம்ராஜ்யத்தில் இல்லை. மேல்ஜாதி-கீழ்ஜாதி, இந்தியர்- வெளிநாட்டுக்காரர், தமிழன்-மலையாளி, ஆரியன்-திராவிடன் என்னும் எந்த ஏற்றத்தாழ்வுகளும் பரமாத்மாவுக்கு முன் செல்லுபடியாகாது. இறைவன் இந்த எல்லா பிரிவினைகளையும் கடந்தவர்.

     ஆரியன் தன்னை நேசிப்பதுபோல பிறரையும் நேசித்தால், திராவிடர்கள் இந்த மண்ணில் பிராமணர்களால் ஒடுக்கப்பட்டிருக்க மாட்டார்கள். கிறிஸ்துவை ஏற்றுக்கொண்ட பிராமணருக்கும், தலித்துகளுக்கும் எந்த வித்தியாசமுமில்லை. ‘ஒருதாய் மக்கள் நாமென்போம் ஒன்றே எங்கள் குலமென்போம் தலைவன் ஒருவன் தானென்போம் சமசரம் எங்கள் வாழ்வென்போம்’ என்ற பாடலை இயற்றியவர்களும் பாடியவர்களும் மறைந்து போகலாம். ஆனால், அந்த வரிகள் இன்னும் என் நெஞ்சைவிட்டு மறையாமல் பதிவாகி இருக்கின்றன. நாம் எல்லோரும் ஒருதாய் மக்களென்னும் உணர்வை மனுதர்ம கோட்பாட்டால் உருவாக்கமுடியுமா? ஒன்றே குலமென்று பாடுவோம் ஓருவனே தேவனென்று போற்றுவோம், என்ற பாடலை இயற்றியவரும் பாடியவரும் அதற்காக சம்பளம் வாங்கிச் சென்று விட்டார்கள். ஆனால், அந்த வாசகத்தைச் செயல்வடிவத்திற்கு கொண்டுவருவது எப்படி என்று என்றைக்காவது யோசித்தீர்களா?

     இந்த பாரதமண்ணில் ஒரு வேளை சாப்பாடு இல்லாமல் எத்தனை மக்கள் வறுமையில் வாடுகிறார்கள்? இந்த அவல நிலையில் கோடிக்கணக்கான பணத்தை செலவுசெய்து தங்கத்தில் சிலைகள், விமானங்கள், தேர்கள் செய்து பணத்தை விரயம் செய்கிறார்களே! இதை நியாயமென்று நீங்கள் கூறமுடியுமா? ஆந்திராவிலுள்ள ஒரு கோயிலின் கதவை ஒரு டன் எடையுள்ள தங்கத்தில் செய்திருக்கிறார்கள். ஆனால், அதே மாநில மக்கள் பலர் வேலைவாய்ப்பு இல்லாமல், பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டு, பசி பட்டினியால் மடிந்து கொண்டிருக்கிறார்கள். கோயிலின் சிலைக்கு கோடிக்கணக்கான பணச்செலவில் வைரக்கீரிடம் செய்து வைக்கிறார்கள். தயவுசெய்து மதவெறி இல்லாமல், நடுநிலை சிந்தையோடு பொதுநல உணர்வோடு யோசியுங்கள்.மனிதநேயத்தோடு சிந்தியுங்கள். உலகத்திலேயே மிகப்பெரிய பணக்காரர்கள் இருக்கும் இந்தியாவில்தான் உலகிலேயே மோசமான நிலைமையில் இருக்கும் பிச்சைக்காரர்களும் இருக்கிறார்கள். இவ்வளவு பெரிய பொருளாதார ஏற்றத்தாழ்வுக்கு காரணம் என்னவென்று சற்று நிதானமாய் யோசியுங்கள்.

     1947-ல் ஆங்கிலேயருடைய கையிலிருந்து நாம் அரசியல் விடுதலை அடைந்து விட்டோம். ஆனால், வறுமை, தீவிரவாதம், வழிப்பறிக்கொள்ளை, கற்பழிப்புகள் என்னும் சமூக அவலங்களிலிருந்து விடுதலையடைந்து விட்டோமா? ஜாதி, இன, மொழிப் போர்களிலிருந்து விடுதலை அடைந்துவிட்டோமா? இந்திய கிராமங்களில் ஒருவர் கிறிஸ்துவின் அன்புக்கொள்கையை கடைபிடிக்க ஆரம்பித்துவிட்டால், அவரை ஈவு இரக்கமின்றி ஊரைவிட்டே விலக்கி வைத்துவிடுகிறார்கள். அவருடைய வீட்டில் ஓரு திருமணவிருந்து ஏற்பாடு செய்தால் அந்த ஊரார் ஒருவருமே அதில் கலந்து கொள்ளமாட்டார்கள். அவருடைய வீட்டில் யாராவது இறந்துவிட்டால், ஊரார் யாருமே அந்த இறுதிச்சடங்கில் கலந்து கொள்ளமாட்டார்கள். ஊர் பொதுக்கிணற்றில் தண்ணீர் எடுக்கக்கூடாது என்று தடைவிதிக்கிறார்கள்.

     அவர் ஒரு வாடகைவீட்டில் குடியிருந்தால் அவருடைய வீட்டு உரிமையாளரிடம் வற்புறுத்தி அவரை வீட்டை விட்டே துரத்தி விடுகிறார்கள். ஊரிலுள்ள கடைகளில் பொருட்களை வாங்கமுயன்றால் அவருக்கு மட்டும் கொடுக்கமாட்டார்கள். இந்த மிருகத்தனமான பண்பாட்டை நியாயமென்று நீங்கள் கூறமுடியுமா? ஒருவன் கிறிஸ்துவின் அன்புக்கொள்கையை பின்பற்றுவது தேசதுரோகமா? அதற்கு இந்த மண்ணில் உரிமையில்லையா? நாட்டு நலனை கருத்தில் கொண்டவர்கள் கிறிஸ்துவின் கொள்கையை தடை செய்யமாட்டார்கள். இந்தியாவிலுள்ள எத்தனையோ கிறிஸ்தவ ஆலயங்களை இந்துக்கள் தீவைத்து கொளுத்தியிருக்கிறார்கள்! எத்தனையோ கன்னியாஸ்திரிகள் கற்பழிக்கப்பட்டிருக்கிறார்கள்! எத்தனையோ கிறிஸ்தவ மக்களுடைய வீடுகளை தீக்கிரையாக்கி இருக்கிறார்கள்! எத்தனை கிறிஸ்தவர்கள், அவர்கள் கிறிஸ்துவை பின்பற்றுகிற ஒரே காரணத்துக்காக தங்கள் சொந்த குடும்பத்தாரே அவர்களை வீட்டைவிட்டு துரத்தி இருக்கிறார்கள். அவர்களுக்கு சட்டப்படி கிடைக்க வேண்டிய குடும்ப சொத்தைக்கூட தாங்கள் அபகரித்து பங்கிட்டு கொள்கிறார்கள்.

     பாகிஸ்தானிலுள்ள இந்துக்களை அங்குள்ள இஸ்லாமியர்கள் கொடுமைப்படுத்துகிறார்களென்று இந்திய இந்துக்கள் கொதித்து குமுறுகிறார்களே! இந்திய கிறிஸ்தவர்களை இங்குள்ள இந்துக்கள் கொடுமைப்படுத்துகிறார்களே! இது நியாயமா? இந்த கொடுமைவாதத்தை தட்டிக்கேட்க உங்களுக்கு முதுகெலும்பிருக்கிறதா? அல்லது, இதெல்லாம் நியாயம்தான் என்று அநியாயத்துடன் கைகோர்த்து நிற்கப் போகிறீர்களா?

     ‘தமிழன் வந்தாரை வாழவைப்பவன். எவரையும் ஏற்றுக் கொள்பவன்’ என்றெல்லாம் பேச ஆரம்பித்துவிட்டால் தொண்டை கிழிய கத்துவோம். ஆனால், நடைமுறை வாழ்க்கையில் மிருகத்தைவிட கேவலமாகத்தானே வாழ்கிறோம். ஒரிசாவிலுள்ள ஆதிவாசி மக்கள் தொழுநோயாளிகள், சமுதாயத்தால் புறக்கணிக்கப்பட்ட மக்களிடையே சமுதாய சேவை செய்யும் எண்ணத்தோடு, ஆஸ்திரேலியாவிலிருந்து கிரஹாம் ஸ்டேன்ஸ் மற்றும் அவருடைய குடும்பத்தார் நம்மண்ணுக்கு வந்தனர். இரவும் பகலும் நமக்காக சேவைசெய்த அவர்களுக்கு நம் மண்ணின் தர்மப்படி என்ன செய்தோம் என்று உங்களுக்குத்தான் தெரியுமே! அவரையும் அவருடைய இரண்டு மகன்களையும் ஒரு வண்டிக்குள் வைத்து உயிரோடு கொளுத்தினார்கள் இந்துதர்மத்தார். இந்தியாவிலுள்ள நலிந்தோருக்கு உதவிசெய்து அவர்களுடைய வாழ்வில் ஒளியேற்றி, முன்னேற்ற வந்த அந்த புனித குடும்பத்துக்கு நாம் கொடுத்த பரிசு எவ்வளவு கொடுமையானது என்பதை யோசித்துப் பாருங்கள். சனாதன தர்மம் என்று கூறிவரும் மதவெறியர்களுக்கு கண்மூடித்தனமாக நாம் ஆதரவளிக்கக் கூடாது என்பதை தயவுசெய்து புரிந்து கொள்ளுங்கள். தன் சொந்தகுடும்பத்தை தீயில் எரித்து சாம்பலாக்கிய கொடுமைவாதிகளை அந்த அம்மா நீதிமன்றத்தில் மன்னித்தார்களே. அதுதான் தர்மம். “பரித்ராணாய சாதூநாம், விநாசாயச துஷ்கிருதாம், தர்ம சம்ஸ்தாபனார்த்தாய சம்பவாமி யுகே யுகே” என்று கீதையில் வாசிக்கிறோம். “சாதுக்களை (நல்லவர்களை) பரிபாலனம் (ஆதரவு) செய்வதற்காகவும், துன்மார்க்கர்களை அழிப்பதற்காகவும் தர்மத்தை நிலைநாட்டும்படி ஒவ்வொறு யுகங்களிலும் கடவுள் அவதரிப்பார் என்பதுதான் இதன் பொருள்.

     இதை வாசிப்பதற்கு நன்றாகத்தான் இருக்கிறது. ஆனால், துஷ்டர்களை அழிப்பதுதான் தர்மமென்று கீதை கூறுவதுபோல இயேசு கூறவில்லை. பாவிகளை (தன் அன்பினால்) இரட்சிக்கவே கிறிஸ்து இயேசு உலகிற்கு வந்தார் (1திமொ. 1:15) என்று வேதம் கூறுகிறது. இந்த கருணாமூர்த்தியின் நோக்கத்தில் எவ்வளவு அன்பு இருக்கிறது! பாவிகளை அழிக்க முற்படுவோமானால், இவ்வுலகில் ஒருவரும் உயிரோடிருக்க முடியாது. ஏனெனில், எல்லாரும் பாவத்தில் பிறந்து வளர்ந்த பாவிகள்தான் (உரோ.3:23) என்று வேதம் கோடிடுகிறது. நம்முடைய பார்வையில் நாம் நல்லவர் போலிருந்தாலும், அந்த மஹேஸ்வரனுக்குத்தானே தெரியும் நாம் யாரென்பது!

     இன்று கிராம கோயில்களில் மதுபானம் அருந்தினால்தான் பூசாரிக்கு சாமி வரும் என்னும் தரந்தாழ்ந்த நிலைக்கு சென்று விட்டார்களே! இதை நியாயமென்று ஒத்துக்கொள்கிறீர்களா? கிறிஸ்துவின் கொள்கைகளுக்குள் மிகவும் முக்கியமான அன்பு, சகிப்புத்தன்மை கிறிஸ்தவர்களுக்குள் இருந்ததால்தான் கிறிஸ்தவ தேவாலயங்கள் இந்துக்களால் தகர்க்கப்பட்டாலும், கிறிஸ்தவர்கள் இந்துக்கோயில்களை ஒன்றும் செய்யவில்லை. காவிவேட்டி கட்டிவிட்டால் அவர் கடவுளின் தொண்டனென்று எல்லோராலும் கருதப்படுகிறார். இந்நம்பிக்கை பொதுவாக எல்லா இந்துமக்களிடத்திலும் இருப்பதால்தான் இன்று காவி உடையணிந்து சமுதாயத்தை ஏமாற்றுவோரின் கூட்டம் அதிகரித்துவிட்டது. ஒரு கிறிஸ்தவ நம்பிக்கையாளர் இன்ன நிற ஆடைதான் அணியவேண்டும் என்றோ, அல்லது ஒரு குறிப்பிட நிற ஆடையணிந்தவர்கள் பக்திமான்கள் என்றோ வேதத்தில் எங்கும் குறிப்பிடப்படவில்லை. சுத்தமான ஆன்மீகமென்பது வெளிப்புறத் தோற்ற மாற்றமல்ல அது உள்மனமாற்றம் என்பது எல்லா ஆன்மீக சிந்தனையாளருக்கும் தெரியும்.

     நம் மரணத்திற்கு பின் ஒரு வாழ்க்கை உண்டு. அதைப் பற்றி உங்களுக்கு ஏதாவது தெரியுமா? என்று ஆயிரக்கணக்கான இந்து சகோதரர்களிடத்தில் கேட்டேன். எல்லாருமே தெரியாது என்றுதான் பதில் சொல்கிறார்கள். ஆனால், கிறிஸ்தவ வேதத்தை வாசித்துப் பாருங்கள். அதிலே, மனிதனை கடவுள் எப்படி படைத்தார்? அவன் எப்படி வாழவேண்டும்? அதன்படி வாழ்ந்தால் என்ன நன்மைகள்? வாழாவிட்டால் என்ன தண்டனை? என்பவை பற்றித்தெளிவாக எழுதப்பட்டுள்ளது. ஆனால், இந்துமதம், ஒருவன் இந்த ஜென்மத்தில் குற்றம் செய்தால் அடுத்த ஜென்மத்தில் பூச்சியாகவோ, பறவையாகவோ, மிருகமாகவோ பிறப்பான் என்று நம்புகிறது. எனவே இந்த ஜென்மத்தில் பாவம் செய்பவன், பாவம் செய்ய அஞ்சமாட்டான். இது ஒரு பெரிய தண்டனையாகத் தோன்றாததால், தவறு செய்பவர்கள் திரும்பத் திரும்ப செய்வார்கள். மாறாக இந்த வாழ்க்கையில் நாம் பரிசுத்தமாக வாழாவிட்டால், நமது மரணத்திற்குபின் முடிவில்லா நரகவாழ்க்கை அனுபவிக்க வேண்டும் என்னும் கொள்கையை கிறிஸ்தவம் கூறுவதால், இக்கொள்கை தவறுகள் செய்பவர்களை அஞ்சவைக்கிறது.

     இயேசு ஒரு ஆச்சாரமான யூத இனத்தில் பிறந்தாலும், அவர் அந்நாளைய ஜாதி, மத, இன, மொழிவெறி பிடித்த, மக்களுக்கு நேர் எதிராய் வாழ்ந்தவர். தீண்டத்தகாதவர்கள் என்று அக்காலத்தில் கருதப்பட்ட சமாரியர் என்னும் இனத்துப்பெண் ஒருத்தி ஒரு கிணற்றில் தண்ணீர் இறைத்துக் கொண்டிருந்தாள். யூதர்கள் அவர்களுடன் பழகமாட்டார்கள். ஆனால், அவ்வழியாகச் சென்ற சமத்துவத் தந்தை இயேசு தன்னைப் போல் பிறரையும் நேசிக்க வேண்டும் என்னும் உணர்வோடு அப்பெண்ணிடம், தாகத்திற்கு தண்ணீர் தருவாயா என்று பணிவோடு கேட்டார். இயேசுவின் மனத்தாழ்மையைக் கண்ட சமாரியர்கள் ஆச்சரியப்பட்டார்கள். அதன்பின் இயேசு அவ்வூரில் இரண்டு நாட்கள் தங்கியிருந்து அம்மக்களோடு பழகி, உண்டு, மகிழ்ந்து அம்மக்களிடையே சமத்துவ சிந்தையையும், சமுதாய எழுச்சியையும், ஆன்மீக அறிவையும் தூண்டி அற்புதங்கள் பல செய்து அவ்வூரை விட்டுச்சென்றார் (யோவா. 4:1-42). ஒரு படிப்பறிவற்ற இந்து, கிறிஸ்தவராக மாறிய சிலநாட்களில் வேதத்திலுள்ள சில வசனங்களை மனப்பாடமாகச் சொல்கிறான். ஆனால், பல தலைமுறையாக இந்துவாயிருக்கும் மதப்பற்றுள்ள ஒரு பட்டதாரிக்கு இந்துமத வேதங்களிலிருந்து ஒரு வசனம் கூடத் தெரிய வில்லையே!

நாங்கள் உங்களைப் போல வீடுவீடாக வருவதில்லை. ஆனால், எங்கள் கோயில்கள் தானாக நிரம்பி வழிகின்றன. நீங்களோ வீடுதோறும் சென்று ஆட்களை தொந்தரவு செய்துதானே உங்கள் சபையை நிரப்புகிறீர்கள் !