விக்கிரக வணக்கம் கடவுளுக்கு அருவருப்பானது. கடவுள், சிலை வழிபாட்டைப் பற்றி என்ன கூறுகிறார் என்று கவனியுங்கள்.
மேலே விண்வெளியில், கீழே மண்ணுலகில், பூமிக்கடியே நீர்த்திரளில் உள்ள யாதொன்றின் சிலையையோ, ஓவியத்தையோ நீ உருவாக்க வேண்டாம். நீ அவைகளை வழிபடவோ அவற்றிற்குப் பணிவிடை புரியவோ வேண்டாம். ஏனெனில், உன் கடவுளும் ஆண்டவருமாகிய நான் இதை சகித்துக் கொள்ளமாட்டேன். என்னைப் புறக்கணிக்கும் மூதாதையரின் பாவங்களைப் பிள்ளைகள் மேல், மூன்றாம், நான்காம் தலைமுறை மட்டும் தண்டித்துத் தீர்ப்பேன். மாறாக என்மீது அன்புகூர்ந்து என் விதிமுறைகளைக் கடைபிடிப்போருக்கு ஆயிரம் தலைமுறைக்கும் பேரன்பு காட்டுவேன். (வி.ப. 20:4-6). நீங்கள் உங்களுக்கென சிலைகளையும், படிமங்களையும், கல்தூண்களையும் உருவாக்கிக் கொள்ள வேண்டாம். வணங்குவதற்கு என கற்சிலைகளை நாட்டில் நாட்ட வேண்டாம். ஏனெனில், நானே உங்கள் கடவுளாகிய ஆண்டவர் (லேவி.26:1). கடவுள் தன் புகழை சிலைகளுக்கு விட்டுக் கொடுக்க மாட்டார் (ஏசா.42:8). வேதத்தின் பல இடங்களிலும் கடவுள் சிலைவழிபாட்டை கண்டித்துப் பேசியிருக்கிறார். கீழ்காணும் வசனங்ளை வாசியுங்கள். இ.ச. 5:8, இ.ச. 4.32, தி.பா. 115:4-8, 97:7, 135:15-18, 1கொரி. 10:14, 2கொரி. 6:16, 1யோவா. 5:21. வசனங்களை வாசிக்கிறவர்களாக மட்டுமல்ல, அவற்றை கைக்கொள்கிறவர்களாயும் இருப்போம் (யாக். 1:21,22).