இதில் வியப்பு என்ன? சாத்தான் கூட ஒளியைச் சார்ந்த தூதனாக நடிக்கிறானே?(1கொரி.11:14). சாத்தானால்கூட அற்புதம் செய்ய முடியும் என்று பைபிள் கூறுகிறது. கீழ்காணும் வேதவசனங்களை கவனமாக வாசியுங்கள்.
அவை அரும் அடையாளங்கள் புரியும் பேய்களின் ஆவிகள் (தி.வெ.16:14). போலி மேசியாக்களும்,போலி இறைவாக்கினர்களும் தோன்றி முடியுமானால் தேர்ந்துகொள்ளப்பட்டவர்களையே நெறிதவறச்செய்ய பெரும் அடையாளங்களையும் அருஞ்செயல்களையும் செய்வார்கள். இதை முன்னதாகவே நான் உங்களுக்கு சொல்லிவிட்டேன் (மத். 24:24,25) என்று இயேசு கூறினார். மேற்கண்ட வசனங்களிலிருந்து பிசாசுகள் கூட அற்புதங்கள் செய்ய முடியுமென்று தெளிவாக அறிகிறோம்.
ஒரு சம்பவத்தை கவனியுங்கள். ஒருநாள் நாங்கள் இறைவேண்டல் செய்யுமிடத்துக்குச் சென்று கொண்டிருக்கும்போது, குறிசொல்லும் ஆவியை தம்முள் கொண்ட அடிமைப்பெண் ஒருவர் எங்களுக்கு எதிரே வந்தார். அவர் குறிசொல்லி, அதனால் தம்மை அடிமையாக வைத்திருப்பவர்களுக்கு மிகுதியான வருவாய் கிடைக்கச்செய்து வந்தார். அவர் பவுலையும் எங்களையும் பின்தொடர்ந்து வந்து, “இவர்கள் உன்னத கடவுளின் பணியாளர்கள், மீட்பின் வழியை உங்களுக்கு அறிவிக்கிறவர்கள்” என்று உரக்க கூறினார். பல நாட்களாக அவர் இவ்வாறு செய்து வந்தார். பவுல் எரிச்சல் கொண்டு அவர் பக்கம் திரும்பி, “நீ இவரைவிட்டு போகுமாறு இயேசு கிறிஸ்துவின் பெயரால் உனக்குக் கட்டளை இடுகிறேன்” என்று அந்த ஆவியிடம் கூறினார். அந்நேரமே அது அவரைவிட்டு சென்றுவிட்டது (தி.பணி. 16:16-18).
குறிசொல்லும் ஆவியை விரட்டியவுடன் போய்விட்டது. தெய்வத்தின் ஆவியைத் துரத்தமுடியுமா? குறி சொல்வதை தொழிலாகக் கொண்டிருப்பவர்கள் ஒரு தீயஆவியால் பீடிக்கப்பட்டு இருக்கிறார்கள். இதிலிருந்து அது உண்மையாகவே தெய்வ ஆவியல்ல என்பது தெளிவாகிறது. அது தீயஆவியாக இருந்தாலும், அந்த ஆவி கூறுவதில் சில உண்மையாக இருப்பதால், மக்களும் நம்பி ஏமாந்து விடுகிறார்கள். ஆனால், வானத்தின் கீழே, பூமியின் மேலே எல்லா அதிகாரங்களும் இயேசுவுக்கு கொடுக்கப்பட்டு இருந்தபடியால் இன்றும் இயேசுவின் நாமத்தில் துரத்தும்போது, எவ்வளவு பெரிய பிசாசும் அகல்கிறது.
ஆதியில் சகல ஆராதனையையும் இறைவன் பெற்றுக் கொண்டிருந்தபோது அவரை ஆராதிக்கும் தூதர்களில் முக்கியமாக இருந்த லூசிபர் என்பவன் அந்த ஆராதனைகளை அபகரிக்க விரும்பினான். அந்நிமிடமே உன்னத நிலைமையிலிருந்து விழுந்து சாத்தானாக மாறினான். அன்றுமுதல் தன்னை வணங்கும் மக்களுடைய எண்ணிக்கையை உயர்த்துவதிலேயே சாத்தான் குறியாயிருக்கிறான். அதில் அவன் வெற்றியடைய சிலைவழிபாடு செய்யும் இந்தியர்கள் அவனுக்கு பேருதவியாயிருக்கிறார்கள். அப்பாவி மக்களின் மனக்கண்களைக் குருடாக்கி ஆங்காங்கே தெய்வங்கள் என்ற பெயரில் அவர்களுடைய ஆராதனையை உறிஞ்சுகிறான். ஆனால், இன்று கோடிக்கணக்கான மக்கள் அவற்றை அடையாளம் கண்டு, அவற்றுடைய கோரப்பிடியிலிருந்து, இயேசுவின் வல்லமையால் விடுதலையாகிக் கொண்டிருக்கிறார்கள். பூசாரிகள், மந்திரவாதிகள், தர்மகர்த்தாக்கள் பலரும் இயேசுவால் மீட்கப் படுகிறார்கள். மதவெறியர்களுக்கு இந்த இரகசியம் தெரியாது.
ஒரு கிறிஸ்தவ ஊழியர் ஓர் இந்து பெண்மணியின் தலையில் கைவைத்து ஜெபித்தார். உடனே அப்பெண்மணிக்குள்ளிருந்த பேய், “நான் நாகவல்லி என் புற்றுக்கு இவள் பாலூற்றுவதை நிறுத்திவிட்டாள். எனவே, இவள் உயிரை எடுக்கவந்தேன்” என்று உரக்கக் கத்தியது. இவர் பத்திரகாளி, நீலி, நாகவல்லி, சுடலைமாடன், இசக்கி என்ற பெயர்களில் ஆராதனை செய்து வந்த காரணம் என்ன? இவை ஒருசில அற்புதங்களை செய்து இவர்களை ஏமாற்றி இருக்கலாம். இவர்கள் வழிபட்டது உண்மையான தெய்வமாக இருந்தால் தன்னை வழிபட்ட பக்தர்களின் உயிர்களை குடிக்க முற்படுமா? யோசியுங்கள். பேய்களால் கூட அற்புதங்களை செய்யமுடியும் என்பதற்கு இன்னுமொரு எடுத்துக்காட்டை கீழே தருகிறேன்.
மோசேயும் ஆரோனும் பார்வோனிடம் சென்று ஆண்டவர் இட்ட கட்டளைக்கு இணங்கச் செயல்பட்டனர். ஆரோன் தமது கோலை பார்வோன் மற்றும் அவனுடைய அலுவலர் முன்னிலையில் விட்டெறிந்ததும் அது பாம்பாக மாறியது. பார்வோன் தன் ஞானிகளையும் சூனியக்காரரையும் வரவழைத்தான். எகிப்திய மந்திரவாதிகளாகிய அவர்கள் ஒவ்வொருவனும் தன் கோலை கீழேயிட அவை பாம்புகளாக மாறின. ஆனால், ஆரோனின் கோல் அவர்கள் கோல்களை விழுங்கிப் போட்டது (வி.ப. 7:10-12). மேற்கண்ட சம்பவத்தினின்று பிசாசுக்கும் அற்புதங்கள் செய்யும் சக்தியுண்டு என்றும், கடவுளின் சக்தி அதைவிட பெரியது என்றும் அறிகிறோம். ஆனால், பிசாசு அற்புதங்களை செய்தாலும் கடைசியில் தன்னை நம்பி வாழும் ஒவ்வொருவரையும் நரகத்துக்கே கொண்டு செல்வான். யோசித்து விழிப்புணர்வடைவோம்.
இவராலேயன்றி (இயேசு) வேறு எவராலும் மீட்பில்லை. ஏனென்றால், நாம் மீட்புப் பெறுமாறு வானத்தின்கீழ், மனிதரிடையே இவரது பெயரன்றி வேறெந்த பெயரும் கொடுக்கப்படவில்லை (தி.பணி.4:12)
எங்கள் தெய்வங்கள் எங்களைப் பரலோகம் கொண்டு சேர்க்க முடியாதா ?