053. எனக்கு கிறிஸ்துவைப்பற்றி சிந்திக்க நேரமில்லை. படிக்க வேண்டும்

எனக்கு கிறிஸ்துவைப்பற்றி சிந்திக்க நேரமில்லை. படிக்க வேண்டும்
ஒரு தாய் எவ்வளவுதான் சுறுசுறுப்பாக இருந்தாலும் தன் குழந்தைக்குப் பால் கொடுக்க அவள் மறப்பதில்லை. ஒரு அலுவலர் எவ்வளவுதான் அவசரமாக அலுவலகத்திற்கு போக வேண்டியதாக இருந்தாலும் பல் துலக்காமல் போவதில்லை. நீங்கள் எவ்வளவுதான் படிக்க முயற்சி செய்தாலும் உங்களை ஜெயிக்கவைப்பது கடவுள்தான். படிக்க நினைத்தும் படிப்பதற்குத் தேவையான பொருளாதாரம் இல்லாததால் படிப்பை பாதியில் விட்டவர் பலருண்டு. படித்து முடித்தபின் வேலையின்றி திண்டாடிக் கொண்டிருப்போர் பலருண்டு. வேலையிருந்தாலும் அவ்வேலையில் சரியான சம்பளமில்லாமல் திருப்தியின்றி அவதியுறுவோர் பலருண்டு. படித்து நல்ல சம்பளத்தில் வேலை கிடைத்தாலும், திருமணம் ஆகவில்லையே என்று பலர் சோகமாயிருக்கிறார்கள். திருமணமானாலும் வாழ்க்கைத்துணை சரியாக அமையவில்;லையே என்று கூறுவோர் பலருண்டு. நல்ல இடத்தில் திருமணமானாலும், குழந்தையில்லையே எனும் ஏமாற்றத்தில் காலம்தள்ளும் பலருண்டு, குழந்தையைப் பெற்றெடுத்தாலும், அந்த குழந்தை கீழ்படியவில்லையே, நோயோடு இருக்கிறதே என்று அலங்கலாய்க்கும் பலருண்டு. கணவன் அன்போடிருந்தாலும், கொஞ்சம்கூட அன்பில்லாமல் கொடுமைப்படுத்தும் மாமனார், மாமியாரிடம் சிக்கிக் கொண்ட பலருண்டு. இப்படி இந்த பட்டியல் நீண்டு கொண்டே போகும். ஆனால், வாழ்வில் எல்லா கட்டங்களிலும் எது இருந்தாலும், இல்லாமலிருந்தாலும் மன அமைதியோடு வாழ உங்களுக்கு இறையருள் தேவை. கடவுளில்லாத வாழ்வு அமைதியில்லாத வாழ்வு. எனவே, எவ்வளவுதான் அவசரமான வேலைகள் இருந்தாலும் படைத்த பரமாத்மாவை மறந்துவிடாமல் நன்றியுணர்வோடு வாழ்வது மேன்மையானது. ஒருவர் உலகம் முழுவதையும் தமதாக்கிக் கொண்டாலும் தம் வாழ்வையே இழப்பாரெனில் அவருக்கு கிடைக்கும் பயனென்ன? அவர்தம் வாழ்வுக்கு ஈடாக எதைக்கொடுப்பார்? (மாற்.8:36,37) என்று வேதநாயகன் இயேசுகிறிஸ்து கேட்கிறார்.
படகோட்டி ஒருவர் தன் படகின் மூலம் ஆற்றின் ஒருகரையிலிருந்து மறுகரைவரை பயணிகளை கொண்டுபோய்விட்டு பணம் சம்பாதித்து வந்தார். ஒருநாள் கல்விமான் ஒருவர் இப்படகின் மூலம் மறுகரைக்கு போக விரும்பி அப்படகிலேறி உட்கார்ந்தார். படகு கொஞ்சதூரம் போனபின் இவர் படகோட்டியிடம், “உமக்கு தர்க்கசாஸ்திரம் தெரியுமா?” என்றார். அதற்கு படகோட்டி, “தெரியாது ஐயா” என்றார். “அப்படியானால் உம் வாழ்க்;கையில் கால்பகுதியை வீணடித்துவிட்டீரே!” என்று கல்விமான் கூறினார். படகு இன்னும் கொஞ்சம் தூரம் நகர்ந்தபின் கல்விமான் படகோட்டியிடம், “உமக்கு கணிதசாஸ்திரம் தெரியுமா?” என்று கேட்டார். அதற்கு அந்த படகோட்டி மனவேதனையுடன், “தெரியாது ஐயா” என்றார். உடனே கல்விமான் படகோட்டியிடம், “உம் வாழ்வில் பாதியை இழந்துவிட்டடீரே!” என்றார். அப்படி அவர்கள் பயணம் செய்து கொண்டிருக்கும்போது, திடீரென்று ஆற்றில் நீர்சுழற்சி உண்டானது. படகு கவிழும் நிலையில் படகோட்டி அந்த கல்விமானைப் பார்த்து, “ஐயா உங்களுக்கு நீச்சல்சாஸ்திரம் தெரியுமா?” என்று கேட்டான். அதற்கு கல்விமான், “தெரியாதே” என்றார். உடனே படகோட்டி, “உம் முழுவாழ்வையும் இழந்துவிட்டீரே” என்று கூறினார். “என்ன சொல்லுகிறீர்?” என்று கல்விமான் படகோட்டியிடம் கேட்டுக்கொண்டிருக்கும் போதே படகு கவிழ்ந்து. அறிஞருக்கு நீச்சல் தெரியாததால் அவர் நீரில் மூழ்கி இறந்துபோனார். ஆனால், படகோட்டிக்கு நீச்சல் தெரிந்திருந்ததால் நீந்தி கரைசேர்ந்தான்.
இறையருள் என்னும் நீச்சல்சாஸ்திரம் தெரியாமல் உலகத்தின் சுழற்காற்றுகளை சமாளிக்க முடியாது. கல்விமான்கள் பலருக்கு எப்படி வாழவேண்டுமென்று தெரியாமல் தற்கொலை செய்துகொண்ட விபரம் உங்களுக்கு தெரியுமே! வாழ்வில் எவ்வளவு பெரிய பல்கலைக் கழகங்களில், எத்தனை வருடங்கள் கற்றிருந்தாலும், நிம்மதியாக வாழ்வது எப்படி என்னும் நுணுக்கமான கலையை கற்காவிட்டால் எல்லாமே வெறும் குப்பைதான். முதலாவது இறையருளை நாடினால் மீதியுள்ள எல்லா செல்வங்களும் ஆசிகளும் உங்களைத் தொடர்ந்து வரும்.

நான் கடவுளை நம்புகிறேன். ஆனால், எந்த கடவுளையும் பின்பற்றவில்லை.