062. நீங்கள் கொடுக்கும் கிறிஸ்மஸ் கேக்கை நாங்கள் சாப்பிடுகிறோம். ஆனால், எங்கள் பிரசாதத்தை நீங்கள் சாப்பிடுவதில்லையே ?

நீங்கள் கொடுக்கும் கிறிஸ்மஸ் கேக்கை நாங்கள் சாப்பிடுகிறோம். ஆனால், எங்கள் பிரசாதத்தை நீங்கள் சாப்பிடுவதில்லையே ?

இவ்வுலகில் சிலை என்பது ஒன்றுமே இல்லை. கடவுள் ஒருவரென்றும் வேறு தெய்வங்கள் இல்லை என்றும் நமக்கு தெரியும். விண்ணிலும் மண்ணிலும் தெய்வங்கள் என்று சொல்லப்படுபவை பல இருக்கலாம். தெய்வங்கள் பலவும் ஆண்டவர்கள் பலரும் உள்ளனர். ஆனால், நமக்குக் கடவுள் ஒருவரே. அவரே நம் தந்தை அவரிடமிருந்தே அனைத்தும் வருகின்றன. அவருக்காக நாம் இருக்கிறோம்.அவ்வாறே நமக்கு ஆண்டவரும் ஒருவரே. அவரே இயேசு கிறிஸ்து. அவர் வழியாக அனைத்தும் வருகின்றன. அவர் மூலமாகவே நாம் வாழ்கிறோம். ஆனால், இவ்வறிவு எல்லோரிடமுமில்லை. இதுவரை சிலைகளை வழிபட்டு பழக்கப்பட்ட சிலர் அவற்றிற்கு படைக்கப்பட்டவற்றை படையல் பொருள் என எண்ணி உண்கிறார்கள். அவர்களின் மனச்சான்று வலுவற்றதாயிருப்பதால், அது கறைபடுகிறது. நாம் உண்ணும் உணவு நம்மைக் கடவுளிடம் கொண்டு சேர்க்காது. உண்ணாதிருப்பின் அதனால் ஒரு குறைவுமில்லை. உண்போமாயின் அதனால் ஒரு நிறைவுமில்லை. ஆனால், உங்களுக்கு இருக்கும் உரிமை, மனவலிமையற்றவர்களுக்கு தடைக்கல்லாய் இராதவாறு பார்த்துக் கொள்ளுங்கள். அறிவு கொண்டுள்ள நீங்கள் சிலைவழிபாட்டுக் கோயிலில் பந்தியமர்ந்திருப்பதை வலுவற்ற மனச்சான்றுடைய சகோதரர், சகோதரிகளுள் ஒருவர் காண்பாரானால் அவரும் சிலைகளுக்குப் படைக்கப்பட்டவற்றை (படையல் பொருள் என எண்ணி) உண்ணத் தூண்டப்படுவாரல்லவா? இவ்வாறு இந்த அறிவு வலுவற்றவரின் அழிவுக்குக் காரணமாகிறது. அவர் சகோதரர், சகோதரிகளுள் ஒருவரல்லவா? அவருக்காகவும் கிறிஸ்து இறந்தாரல்லவா? இவ்வாறு நீங்கள் வலுவற்ற மனச்சான்றைக் காயப்படுத்தி சகோதரர்களுக்கு எதிராகப் பாவம் செய்தால் அது கிறிஸ்துவுக்கே எதிரான பாவமாகும் (1கொரி. 8:4-12).
நம்பிக்கை கொள்ளாதவருள் ஒருவர் உங்களை உணவருந்த அழைக்கும்போது நீங்கள் அவரோடு செல்ல விரும்பினால், அவர் உங்களுக்குப் பரிமாறும் எதையும் உண்ணுங்கள் கேள்விகள் எழுப்பி உங்கள் மனச்சான்றைக் குழப்பிக்கொள்ள வேண்டாம். எவராவது உங்களிடம், “இது படையல் உணவு” என்று சொன்னால் அவ்வாறு தெரிவித்தவரை முன்னிட்டும் மனச்சான்றை முன்னிட்டும் அதை உண்ண வேண்டாம். உங்கள் மனச்சான்றை முன்னிட்டல்ல, மற்றவருடைய மனச்சான்றை முன்னிட்டே இதைச் சொல்கிறேன். “ஏன், எனது தன்னுரிமை மற்றவருடைய மனச்சான்றின் தீர்ப்புக்கு உள்ளாக வேண்டும்? நான் நன்றியுடன் உணவருந்தினால், நன்றி கூறி அருந்திய உணவைக் குறித்து ஏன் பழிப்புரைக்கு ஆளாக வேண்டும்?” என்று ஒருவர் கேட்கலாம். அதற்கு நான் சொல்வது: நீங்கள் உண்டாலும் குடித்தாலும் எதைச் செய்தாலும், எல்லாவற்றையும் கடவுளுடைய மாட்சிக்காகவே செய்யுங்கள். யுதருக்கோ கிரேக்கருக்கோ கடவுளின் திருச்சபைக்கோ இடையூறாய் இராதீர்கள். நானும் அனைத்திலும், அனைவருக்கும் உகந்தவனாய் இருக்கிறேன். நான் எனக்குப் பயன்தருவதை நாடாமல், பலரும் மீட்படையும்படி அவர்களுக்குப் பயன் தருவதையே நாடுகிறேன் (1கொரி. 10:27-33) என்று பவுல் கூறினார். ஆக, ஆன்மீக வலுவற்றவரின் பொருட்டு சிலைகளுக்கு படைக்கப்பட்டதை இயேசுவின் சீடர்கள் உண்பதை தவிர்ப்பதே நல்லது (தி.பணி. 15:20, 1கொரி. 10:28) என்று வேதம் கூறுகிறது.
விக்கிரகங்களுக்கு படைக்கப்படாத உணவை நீங்கள் தந்தால் மூக்கு பிடிக்க நாங்கள் சாப்பிடுவோம். நீங்கள் கிறிஸ்மஸ் கேக் சாப்பிடக்கூடாது’ என்னும் சட்டம் உங்களுக்கு இல்லை. அதனால்தான் உங்களுக்கு கிறிஸ்மஸ் கேக் தருகிறோம்.எல்லாவற்றையும் செய்ய உரிமையுண்டு ஆனால் எல்லாம் நன்மை தரக்கூடியவை அல்ல.
எல்லாவற்றையும் செய்ய உரிமையுண்டு ஆனால் எல்லாம் வளர்ச்சிதரக் கூடியவை அல்ல (1கொரி. 10:23) என்று பவுல் கூறினார்.கடவுளின் ஆசி உங்களோடு இருக்கட்டும்.

என்னுடைய நண்பர்கள் என்னைக் கேலி செய்வார்கள் !