065. நாங்கள் அணிந்திருக்கும் நகையை கழட்டவும், பூ, பொட்டு வைக்கக்கூடாது என்றும் கட்டாயப்படுத்துவீர்களே !

நாங்கள் அணிந்திருக்கும் நகையை கழட்டவும், பூ, பொட்டு வைக்கக்கூடாது என்றும் கட்டாயப்படுத்துவீர்களே !

மனிதனுக்கு நகையை கொடுத்தது யாரென்பதை முதலில் நீங்கள் தெரிந்து கொள்ளவேண்டும். கடவுள் தன் தீர்க்கதரிசி எசேக்கியேல் மூலம் மக்களுக்கு சொல்வதை கவனியுங்கள்.
     “அணிகலன்களால் உன்னை அழகு செய்தேன். உன் கைகளுக்கு காப்புகளும், கழுத்துக்கு சங்கிலியும் இட்டேன், மூக்குக்கு மூக்குத்தியும், காதுகளுக்கு தோடுகளும், தலையில் அழகிய மணிமுடியும் அணிவித்தேன். பொன்னாலும், வெள்ளியினாலும் நீ அணிசெய்யப் பட்டாய்” (எசே. 16:11-13) என்று கடவுள் கூறுகிறார்.
கடவுள் எகிப்தின் அடிமைத்தனத்திலிருந்து இஸ்ராயேல் மக்களை மீட்டு கொண்டுவர தீர்மானித்தபோது, “ஒவ்வொருத்தியும் தனது அண்டை வீட்டுக் காரியிடமும், தன் வீட்டிலுள்ள அந்நிய பெண்ணிடமும், வெள்ளி அணிகலன்களையும், தங்க அணிகலன்களையும் கேட்டு வாங்கி உங்கள் புதல்வருக்கும், புதல்வியருக்கும் அணிவியுங்கள்” (வி.ப. 3:22) என்று தேவன் கூறினார். நாம் நகை அணிவதை கடவுள் தவறென்று நினைத்திருந்தால் மக்களுக்கு காப்பு, சங்கிலி, மூக்குத்தி, தோடு, மணிமுடி என்னும் அணிகலன்களை கொடுத்திருப்பாரா?
பேதுரு என்னும் திருத்தூதர், “முடியை அழுகுபடுத்துதல், பொன் நகைகளை அணிதல், ஆடைகளை அணிதல் போன்ற வெளிப்படையான அலங்காரம் உங்களுக்கு அலங்காரமாயிராமல், மனித உள்ளத்தில் மறைந்திருக்கும் பண்புகளாகிய பணிவும், அமைதியுமே உங்களுக்கு அழியாத அலங்காரமாக இருக்கட்டும். கடவுள் பார்வையிலே அதுவே விலையுயர்ந்தது” (1பேது. 3:3,4) என்று கூறுகிறார்.
பேதுரு, முடியை அழுகுபடுத்துவதோ, நகையணிவதோ, ஆடையணிவதோ தவறெனக் கூறாமல் உட்புறத்தின் அழகுதான் வெளிப்புற அழகைவிட மேலானதென்று அழுத்தமாக கூறுகிறார். “முற்காலத்தில் கடவுள்மேல் நம்பிக்கை கொண்டிருந்த தூயபெண்களும் இவ்வாறுதான் தங்களை அணி செய்துகொண்டார்கள். தங்கள் கணவருக்கும் பணிந்திருந்தார்கள். அவ்வாறே சாரா ஆபிரகாமை ‘தலைவர்’ என்று அழைத்து கீழ்படிந்திருந்தாள்” (1பேது. 3:5,6) என்று பேதுரு விளக்குவதிலிருந்து பழைய ஏற்பாட்டு நாட்களில் இறைவனிடத்தில் நம்பிக்கையாயிருந்த பக்தியுள்ள பெண்மணிகளைப் போலத்தான் உள்ளும் புறமும் இக்காலப்பெண்களும் இருக்கவேண்டும் என்கிறார்.
முற்காலத்தில் தேவனிடத்தில் நம்பிக்கையாயிருந்த பெண்கள் யார்? சாரா, ரெபேக்கா, ராகேல், ரூத், எஸ்தர், தெபோரா போன்றோர்தானே. இந்த பரிசுத்தவாட்டிகள் நகை அணிந்திருந்தார்கள். பழைய ஏற்பாட்டில் பரிசுத்தவான்கள் (ஆண்களும்) நகை அணிந்திருந்தார்கள். எ.கா: யோசேப்பு (தொ.நூ. 41:42), தானியேல் (தானி. 5:22), மொர்தேகாய் (எஸ். 8:2), எசேக்கியா (2குறி. 32:22), யோபு (யோபு. 42:11). இயேசு தங்கம் அணிவதற்கு விரோதியல்ல. அவர் அணிகலன்களை விட, பண்பாட்டு மாற்றமே பெரியது என்று பேதுருவின் மூலம் விளக்குகிறார். எனக்கு தெரிந்த எத்தனையோ நகையணியாத கிறிஸ்தவர்கள் பக்கத்து வீட்டுக்காரர்களிடம் பேசமாட்டார்கள். ஏனென்று கேட்டால், ‘சொற்களின் மிகுதியினால் பாவமில்லாமல் போகாது’ என்கிறார்கள். இயேசு ஒருமுறை தனது போதனையின் போது மனம்மாறி வந்த மைந்தனுக்கு மோதிரம் அணிவிப்பதை பற்றி (லூக். 15:22) கூறுகிறார். தி.வெ. 1:13 நாம் வாசிக்கும் போது, “மானிட மகன் இயேசு, மார்பு அருகே பொன்பட்டை அணிந்திருக்கிறார்” என்று யோவான் குறிப்பிடுகிறார். இயேசு மட்டும் தங்கம் அணியலாம், அவரது பிள்ளைகள் அணியக்கூடாது என்று கூறமுடியுமா? அவர் அவ்வளவு கொடியவரா?
இஸ்ராயேல் மக்களுக்கு கடவுள்; அணிவித்த அணிகலன்களை அவர் கழட்டவும் சொன்னார். “நான் உங்களோடு வரப்போவதில்லை ஏனெனில், நீங்கள் வணங்காக் கழுத்துள்ள மக்கள் ஆதலால், வழியில் நான் உங்களை அழித்தொழிக்க நேரிடும்” என்றார். இத்துயரச் செய்தியை கேட்டபோது மக்கள் அழுது புலம்பினர். யாருமே அணிகலன்களை அணிந்து கொள்ளவில்லை. ஏனெனில், ஆண்டவர் மோசேயிடம், “நீங்கள் வணங்காகழுத்துள்ள மக்கள் நொடிப்பொழுதில் நான் உங்களிடையே வந்து உங்களை அழித்தொழிக்க போகிறேன். உடனடியாக உங்கள் அணிகலன்களை கழட்டிவிடுங்கள். உங்களுக்கு என்ன செய்யவேண்டும் என்பது எனக்கு தெரியுமென இஸ்ராயேல் மக்களுக்கு அறிவி” என்று கூறியிருந்தார். அவ்வாறே இஸ்ராயேல் மக்கள் ஓரேபு மலையை விட்டு புறப்பட்ட பின்பு தங்கள் அணிகலன்களை அணியவே இல்லை (வி.ப. 33:3-6).
மேற்கண்ட வேதபகுதியை நீங்கள் கவனமாக வாசித்தால், ஏன் அணிகலன்களை கழட்ட சொன்னார் என்று புரிந்துகொள்ளலாம். விடுதலை பயணம் 3-ஆம் அதிகாரத்தில் நகை அணியச் சொன்ன கடவுள் 33-ஆம் அதிகாரத்தில் கழட்டச் சொன்ன காரணம் என்ன? அதுவரை ஏன் அணிய அனுமதித்தார்? 32-ஆம் அதிகாரத்தில், இஸ்ராயேல் மக்கள் கடவுள் மிகவும் வெறுத்த சிலைவழிபாடு செய்து வணங்காகழுத்துள்ள மக்களாய் மாறிப்போனதால் தான் இந்த விபரீதத்தை சந்தித்தனர்.
தான் அணிவித்த அணிகலன்களை கடவுள் கழட்ட வைத்த வேறொரு சம்பவத்தை பார்ப்போம். சீயோன் மகளிர் செருக்கு கொண்டுள்ளார்கள், தங்கள் கழுத்தை வளைக்காது நிமிர்ந்து நடக்கிறார்கள், தம் கண்களால் காந்தக்கணை தொடுக்கிறார்கள், தங்கள் கால்களிலுள்ள சிலம்பு ஒலிக்கும்படி ஒய்யார நடை நடந்து உலாவித் திரிகிறார்கள். ஆதலால், ஆண்டவர் சீயோன் மகளிரின் உச்சந்தலைகளில் புண்ணை வருவிப்பார். வழுக்கை தலையர்களாய் அவர்களை ஆக்குவார். ஆண்டவர் அவர்களின் மானத்தை குலைப்பார். அந்நாளில், அவர்களுடைய அணிகலன்களாகிய கால்சிலம்புகள், சுட்டிகள், பிறைவடிவமான அணிகலன்கள், ஆரங்கள், கழுத்து பொற்சங்கிலிகள், கழுத்துத் துண்டுகள், கைவளையல்கள், தலையணிகலன், கூந்தல் கட்டும் பட்டுநாடாக்கள், அரைக்கச்சைகள், நறுமணச்சிமிழ்கள், காதணிகள், மோதிரங்கள், மூக்கணிகள், வேலைப்பாடுகளுள்ள அழகிய ஆடைகள், மேலாடைகள், போர்வைகள், கைப்பைகள், கண்ணாடிகள், மெல்லிய சட்டைகள், குல்லாக்கள், முக்காடுகள் ஆகியவற்றை ஆண்டவர் களைந்துவிடுவார். நறுமணத்தற்கு பதிலாக அவர்கள்மேல் துர்நாற்றம் வீசும். கச்சைக்கு பதிலாக கயிற்றைக்கட்டி கொள்வார்கள். வாரிமுடித்த கூந்தலுக்குப் பதிலாக அவர்கள் வழுக்கைத் தலையை கொண்டிருப்பர். ஆடம்பர உடைகளுக்கு பதிலாக அவர்கள் சாக்குடையை உடுத்துவார்கள். அழகிய உடல்கொண்ட அவர்கள் மானக்கேடு அடைவர் (எசா. 3:16-24).
இஸ்ராயேல் மக்கள் கடவுளுக்கு எதிராக செருக்குற்று தவறு செய்யும் போதெல்லாம் கடவுள் அணிகலன்களை அகற்றுகிறார். ஒருமுறை யாக்கோபு தன் மக்களிடம், “உங்களிடம் உள்ள வேற்று தெய்வங்களின் சிலைகளை அகற்றிவிட்டு, உங்களை தூய்மைப்படுத்தி, உங்கள் உடைகளை மாற்றிக் கொள்ளுங்கள்” என்றார். உடனே, அவர்கள் தங்களிடமிருந்த வேற்றுதெய்வங்களின் சிலைகளையும், தங்கள் காதணிகளையும் யாக்கோபின் கையில் கொடுக்க, அவர் அவற்றை செக்கேம் அருகிலிருந்த ஒரு கருவாலி மரத்தினருகே புதைத்தார் (தொ.நூ. 35:2-4). மேற்கண்ட வேதபகுதியில் யாக்கோபு நகைகளை கழட்டச் சொல்லவில்லை. மாறாக, கடவுள் வெறுக்கும் சிலைகளை அகற்றி, தூய்மையாக்கி, உடைகளை மாற்றச் சொன்னார். ஆனால், கம்மல்களை அவர்கள் அகற்றிய காரணத்தை யோசியுங்கள். அந்த கம்மல்களில் பொய்தெய்வங்களின் வடிவமைப்புகள் இருந்திருக்க வேண்டும். அதனால்தான் அம்மக்கள் காதணிகளையும் அகற்றினார்கள். ஒரு கிறிஸ்தவன் நகையணியவே கூடாதென்றோ, அல்லது கண்டிப்பாக அணியவேண்டுமென்றோ கட்டாயம் செய்யமுடியாது. கட்டாயப்படுத்துவது எல்லாமே மதப்பிரமாணமாக மாறிவிடும்.
நகையணியாத அன்னை தெரேசாவுக்கு மக்கள் கொடுக்கும் மதிப்புக்குமுன், அணிகலன்கள் ஒன்றுமேயில்லை. ஆனால், இந்தியாவில் திருமணம் செய்யாதவர்களோ, விதவைகளோ நகையணியாமல் இருக்கலாமென்ற ஐதீகமுண்டு. இந்நிலையில் நகையில்லாமல் நடமாடி மக்களால் தவறாக புரிந்துகொள்ளப்படுவது கிறிஸ்துவுக்கு பெருமையைக் கொண்டுவராது. ஆனால், அளவுக்கு மிஞ்சி நகையணிந்து வெளியே நடமாடுவது கொள்ளையர்கள் வாழும் இந்தியாவில் ஆபத்தானது. அண்மையில் நகையணிந்த ஒரு வயதான தாயார் சாலையில் நடந்து கொண்டிருக்கும்போது, அவரிடம் கத்தியைக்காட்டி மிரட்டி அவ்வளவு நகைகளையும் பறித்துச் சென்றார்களாம் திருடர்கள். அவ்வகையில் நகையணிவது சிக்கலானது தான். மற்றபடி நகை அகற்றினால்தான் பரலோகம் போகமுடியுமென்று சட்டமிடமுடியாது. ஏனெனில், பரலோகத்தில் தரை தங்கமயமாயிருப்பது மட்டுமல்ல, தலையிலும் தங்ககிரீடம் வைக்கப்படும் (தி.வெ. 4:4). தலையில் பூ வைக்கக்கூடாது என்று யாரும் சட்டமிட முடியாது. வேதம் இதைப்பற்றி எதையும் கூறவில்லை. தலையில் மலரணிவது தமிழர் கலாச்சாரம்.
அதுபோல பொட்டு வைக்கக்கூடாது என்று சட்டமியற்ற முடியாது. ஒருமுறை பால் தினகரன் அவர்களிடம் நான் பேசும்போது, “அண்ணா, கிறிஸ்தவ பெண்கள் பொட்டு வைக்கக்கூடாது என்று வேதம் கூறுகிறதா?” என்று கேட்டேன். “வேதத்தில் எங்குமே ‘பொட்டு வைக்கக்கூடாது’ என்ற வார்த்தையில்லை” என்றார். “பொட்டு வைப்பதற்கு எதிராக ஆண்டவர் என்றாவது உங்களிடம் ஏதாவது பேசியிருக்கிறாரா?” என்று கேட்டேன். “இல்லை, தேவன் பொட்டு சம்பந்தமாக எதையும் என்னிடம் பேசியதில்லை” என்று தெளிவாக்கினார். என் மனதை அரித்துக் கொண்டிருந்த அந்த சந்தேகத்திற்கு தெளிவு கிடைத்த மகிழ்ச்சியில் நான் பார்க்கும் எல்லா ஊழியரிடமும் இந்த விஷயத்தை தெளிவாக்கி கொண்டிருக்கிறேன். கிறிஸ்தவத்தைத் தழுவிய பிராமண சகோதரர்களிடம் விசாரித்தபோது, இந்து பெண்கள் தங்கள் கணவர் உயிரோடிருப்பதற்கு அடையாளமாக பொட்டு வைக்கிறார்கள் என்றனர். ஒரு பெண் பொட்டு இல்லாமல் நடமாடினால், அவரது கணவர் இறந்துவிட்டார் என்று பொதுமக்கள் புரிந்துகொள்வார்கள். ‘பொட்டு வைக்கக்கூடாது’ என்று வேதமறிந்த அறிஞர்களும் கூறியதில்லை. பாரம்பரியவாதிகள் வசன ஆதாரமில்லாமல் பேசி கல்வியறிவில்லாத மக்களை குழப்பி, அவர்களது மனசாட்சியை புண்படுத்துகிறார்கள். கிறிஸ்தவர்கள் விழித்துக் கொள்ள வேண்டும்.
80 லட்சம் ரூபாய் வங்கிக்கணக்கில் வைத்திருப்பதை பற்றி யாரும் பாவமென்று கூறமாட்டார்கள். RC, CSI பெந்தகோஸ்தே என்று ஓநாய்களைப்போல சண்டை போடுவதை யாரும் பெரிதுபடுத்த மாட்டார்கள். 25000 ரூபாய்க்கு கைக்கடிகாரம் அணிவதை ‘கர்த்தருடைய ஆசீர்வாதம்’ என்று கூறுகிறார்கள். ஆனால், பொட்டு வைப்பதை புறஜாதிப் பழக்கம் என்று மூச்சு இறைக்க முழங்குகிறார்கள். இந்திய கிறிஸ்தவப் பெண்கள் புடவை கட்டுவது எந்த ஜாதிப் பழக்கம்? யோசியுங்கள். மூன்று தலைமுறைக்கு தேவையான பணத்தை சேர்த்து வைத்துவிட்டு, “எனக்கென்று எதுவுமில்லை” என்று பாரம்பரிய கிறிஸ்தவர்கள் பாட்டு பாடுகிறார்கள். நாங்கள் ஒரு கிராம்கூட நகை போடமாட்டோமென்று இவர்கள் பெருமையாக பேசுவது, வெள்ளையடிக்கப்பட்ட கல்லறைகளிலிருந்து வரும் வறட்டு வேதாந்தமல்லவா?

எங்கள் தெய்வங்களோடு இயேசுவையும் கும்பிடுகிறேன். இது தவறா ?