068. என் தொழிலை முதலாவது நிறுவிவிட்டு, அதன் பின் இயேசுவை பின்பற்றுவேன்.

என் தொழிலை முதலாவது நிறுவிவிட்டு, அதன் பின் இயேசுவை பின்பற்றுவேன்.

இன்று தொழில் செய்து கொண்டிருக்கும் பலர் வாழ்வதா, சாவதா என்று தெரியாமல் தத்தளித்துக் கொண்டிருக்கிறார்கள். ஏனென்றால், எல்லாம் நல்லபடியாக இருக்குமென்று நம்பி தங்கள் சுயஅறிவை, மதிநுட்பத்தை, பணத்தை, நண்பர்களை நம்பி தொழிலைத் தொடங்கினார்கள். இன்று பலர் நடுத்தெருவில் நிற்கிறார்கள். காரணம், இறைவனுடைய வழிகாட்டுதலுக்கு முக்கியத்துவம் தரவில்லை. கடவுளின் பாதை என்பது பொழுது போக்குக்கான ஒரு விளையாட்டல்ல. வாழ்வாதாரமே தெய்வம்தான்.
ஒரு காட்டுப்பாதையில் தன்னந்தனியாக இருட்டில் நடந்து கொண்டிருக்கும் ஒருவர் தன் கையிலிருக்கும் மின்கல விளக்கை உபயோகிக்காமல் தத்தி தடுமாறி வீடு போய் சேர்ந்தால் அவர் செய்தது சரியா? பாதுப்பாக நடந்துசெல்ல அந்த விளக்கை ஞானமாக உபயோகித்திருக்கலாமே. எளிதாக நடந்து வந்திருக்கலாமே! மழுங்கிபோன கத்தியை வைத்து ஒரு கடினமான பொருளை கஷ்டப்பட்டு வெட்டிவிட்டு அதன்பின் அந்த கத்தியைத் தீட்டுவதில் என்ன பயன்? வெட்டும்முன் கத்தியைத் தீட்டியிருந்தால் வெட்டுவது எளிதாகி இருக்குமே! மழைவருமுன் அணை கட்டாமல் தண்ணீர் முழுவதையும் விட்டுவிட்டபின் பெரிய அணையைக் கட்டி பயனென்ன?
     “அனைத்துக்கும் மேலாக கடவுளுடைய ஆட்சியையும், அவருக்கு ஏற்புடையவற்றையும் நாடுங்கள். அப்பொழுது இவை அனைத்தும் உங்களுக்கு சேர்த்து கொடுக்கப்படும்” (மத்.6:33) என்று இயேசு கூறினார். நீங்கள் இயேசுவை மனதார நம்பினால் அவர் உங்களுக்கு செய்யும் அதிசயங்கள் அளவிட முடியாததாக இருக்கும். கர்த்தர் உங்களுக்காக யாவற்றையும் செய்து முடிப்பார். இயேசுவாகிய வண்டிக்குள் ஏறியபின் அவரே உங்கள் பாரங்களைச் சுமப்பார். வீடு கட்டுவதற்கான பொறியியல் கல்வியைக் கற்றபின் வீடுகட்ட ஆரம்பிப்பது தானே புத்திசாலித்தனம். ஒரு விமானத்தை ஓட்டக் கற்று கொள்ளாமல் விமானத்தை ஓட்ட முடியாது அப்படியே ஓட்டினாலும் அது ஆபத்தில்தான் முடியும். அதுபோல் கடவுளைப் புறக்கணித்து விட்டு நீங்கள் செய்யும் முயற்சிகளும் தோல்வியிலேயே முடியும். “ஆண்டவரே நம் வீட்டைக் கட்டவில்லையெனில் அதைக்  கட்டுவோரின் உழைப்பு வீணாகும். ஆண்டவரே நகரைக் காக்கவில்லையெனில் காவலர்கள் விழித்திருப்பதும் வீணாகும்” (தி.பா. 127:1) என்று வேதம் அறிவுறுத்துகிறது.
ஆண்டவர் மீது உன் கவலையைப் போட்டு விடு. அவர் உனக்கு ஆதரவளிப்பார் (தி.பா. 55:22) என்று வேதம் நம்மை உர்ச்சாகப் படுத்துகிறது. அஸ்திபாரமில்லாமல் வீடு கட்டமுடியாது. அதுபோல கிறிஸ்துவாகிய அஸ்திபார மூலைக்கல் இல்லாமல், மனிதன் தன் வாழ்வை முழுமையாக கட்டி எழுப்ப முடியாது. உங்கள் தொழிலில் என்ன செய்யவேண்டும், என்ன செய்யக் கூடாது என்பதை சொல்லித்தர பரமாத்மா கூட இருப்பார். உங்கள் வாழ்வில் கடவுளுக்கு முதல் மரியாதை கொடுத்துப் பாருங்கள். வாழ்க்கை தானாக வசந்தமாகும். உடலுழைப்பு ஓரளவுதான் பயன் தரும். ஆனால், இறைப்பற்று எல்லா வகையிலும் பயன்தரும். இம்மையிலும் மறுமையிலும் பயன் தரும்.

எனக்கு நிம்மதி இல்லை. பிரச்சனைமேல் பிரச்சனை. ஆனால், எனக்கு ஆராதனைக்கு வர நேரமில்லை. நீங்கள் எனக்காக ஜெபியுங்கள்.