007. இயேசுவால் நோய்களை குணப்படுத்த முடியுமானால், கிறிஸ்தவர்கள் மருத்துவமனைகள் தொடங்க வேண்டிய தேவை இல்லையே ?

உங்களுள் யாரேனும் நோயுற்றிருந்தால், திருச்சபையின் மூப்பர்களை அழைத்து வாருங்கள். அவர்கள் ஆண்டவரது பெயரால் அவர்மீது எண்ணெய் பூசி இறைவனிடம் வேண்டுவார்கள். நம்பிக்கையோடு இறைவனிடம் வேண்டும்போது நோயுற்றவர் குணமாவார். ஆண்டவர் அவரை எழுப்பிவிடுவார். அவர் பாவம் செய்திருந்தால் மன்னிப்புப் பெறுவார் (யாக். 5:14,15).

இயேசுவை நம்புபவர்களை மட்டும்தான் இயேசுவால் குணப்படுத்த முடியும் (யோவா. 11:40). இயேசு மனித வடிவத்தில் வாழ்ந்த நாட்களில் தன்னிடம் வந்த எந்த நோயாளியையும் குணப்படுத்தினார் (மத். 4:23). பிசாசின் ஆக்கிரமிப்பால் பாதிக்கப்பட்டவர்களிடமிருந்து பிசாசை துரத்தினார் (மத். 8:28-33). அவரைப் பின்பற்றிய சீடர்களும் அவ்வண்ணமே அற்புதங்கள் செய்தனர் (தி.பணி. 3:1-11). பிசாசினால் பாதிக்கப்பட்ட ஒரு சிறுவனை அவன் தகப்பன் இயேசுவிடம் கொண்டுவந்து, “நீர் ஏதாகிலும் செய்யமுடியுமானால் எங்கள் மேல் மனதிரங்கி எங்களுக்கு உதவி செய்யவேண்டும்” என்றான். இயேசு அவனை நோக்கி, “நீ நம்பமுடியுமானால் உதவி செய்யமுடியும், நம்புகிறவனுக்கு எல்லாம் முடியும்” என்று உறுதியளித்தார் (மாற். 9:17-23). நோய் குணமாக வேண்டுமென்று விரும்புகிறவர்கள் கடவுளை முழுமையாக நம்பவேண்டும். “நம்பிக்கை இல்லாமல் எவரும் கடவுளுக்கு உகந்தவராய் இருக்க இயலாது” (எபி. 11:6) என்று வேதம் கற்பிக்கிறது.

முடக்குவாத நோயுடைய ஒருவனை இயேசுவிடம் கொண்டுவந்தபோது, அவர்களுடைய நம்பிக்கையை கண்டு அவனைக் குணமாக்கினார் (மத். 9:2). பன்னிரெண்டு ஆண்டுகளாக இரத்தப்போக்கு நோயால் பாதிக்கப்பட்டு, மருத்துவர் பலரிடம் தமக்குள்ள செல்வம் எல்லாவற்றையும் இழந்து, தன் வாழ்க்கையே ஒரு கேள்விக் குறியாகிப்போய், ஊர்மக்களால் ஊரைவிட்டு விலக்கி புறம்பாக்கப்பட்ட அபலைப்பெண் ஒருத்தி, இயேசுவின் ஆடையைத் தொட்டால் நலம்பெறுவேன் என நம்பி, அவரது ஆடையின் ஓரத்தை தொட்டவுடனேயே அன்றுவரை அவளை ஆட்டிப் படைத்துக் கொண்டிருந்த அந்த கொடூரநோய் அவளை விட்டு விலகியது. உடனே இயேசு அவளிடம், “மகளே, உனது நம்பிக்கை உன்னைக் குணமாக்கிற்று; அமைதியுடன் போ; நீ நோய் நீங்கி நலமாயிரு” (மாற்.5:25-34) என்றார். இந்த சம்பவத்திலும் இயேசு நம்பிக்கையைத்தான் மெச்சிப் பேசுகிறார்.

ஒருமுறை இரண்டு குருடர்கள் இயேசுவின் பின்சென்று, எங்களுக்கு இரங்கும் என்று பிரார்த்தனை செய்தார்கள். இயேசு அவர்களை நோக்கி, “இதை செய்ய எனக்கு வலிமை உண்டென்று நம்புகிறீர்களா?” என்று கேட்டார். அதற்கு அவர்கள், “ஆம், நம்புகிறோம் ஆண்டவரே” என்றார்கள். அப்பொழுது அந்த குருடர்களின் கண்களை அவர் தொட்டு, “நீங்கள் நம்பியபடியே உங்களுக்கு நிகழட்டும்” என்றார். உடனே, அவர்களுடைய கண்கள் திறக்கப்பட்டன (மத்.9:27-30). இந்த சம்பவத்திலும் குருடர்களுடைய இறைநம்பிக்கையின் படியே அவர்கள் பார்வையடைந்தனர்.
இராணுவத்தில் வேலை பார்த்துக் கொண்டிருந்த ஒருவன் இயேசுவிடம் வந்து, “ஆண்டவரே, என் வேலைக்காரன் வீட்டிலே திமிர்வாதமாய்க் கிடந்து கொடிய வேதனைப்படுகிறான்” என்று அவரிடம் கூறினான்;. இயேசு அவனை நோக்கி, “நீ போகலாம், நீ நம்பியபடியே உனக்கு ஆகட்டும்” என்றார். அந்நேரமே அவனுடைய வேலைக்காரன் குணமானான் (மத்.8:5-13). இந்த நிகழ்ச்சியிலும் நம்பிக்கை என்னும் அஸ்திபாரத்தின் மீது தான் அற்புதம் என்னும் கட்டடத்தைக் கட்டுகிறார் கடவுள். நோயாளிகள் இயேசுவிடமிருந்து அற்புத சுகத்தை பெற்றுக்கொள்ள வேண்டுமானால், அவரை முழுமையாக நம்ப வேண்டும் என்று அவர் எதிர்பார்க்கிறார். நம்பிக்கை உள்ளவர்களை மட்டும்தான் இயேசு குணப்படுத்தினார்.
ஆயிரம் பேருந்துகள் ஒரு பேருந்து நிலையத்தில் வந்து நின்றாலும், அதில் எதிலுமே ஏறாமல் இருந்தால் நாம் விரும்பும் இடத்திற்கு போகமுடியாது. அதுபோல கடவுளை (இயேசுவின் நாமத்தில்) முழுமையாக நம்பாமல் குணமடைய முடியாது. குணமாக விரும்பும் அநேகருக்கு இயேசுவை தங்கள் வாழ்வின் தலைவராக ஏற்றுக்கொள்வது கடினமாக இருக்கிறதே! அவரை நம்பினால் இலவசமாக புதுவாழ்வு தருகிறார். கடினமாக உழைத்து படிக்கும் மாணவனுக்கு வெற்றி நிச்சயம். படிக்கவேண்டிய நேரத்தில் தூங்கியவர்கள் பரீட்சையில் தோல்வியடைந்து, “எனக்கு அதிர்ஷ்டம் இல்லை” என்று அலட்டுவதில் பயனென்ன?
நமது வீட்டில் இருக்கும் வானொலிப் பெட்டியை ஒரு குறிப்பிட்ட அதிர்வு எண்ணுக்கு இசைவு செய்தால்தான் நிகழ்ச்சியை கேட்கமுடியும். கொஞ்சம் கவனமாக இருந்தால் வாழ்வை நிம்மதியாக வாழலாம். ஒரு குழந்தை தன் தாயை எப்படி நம்புகிறதோ, அதுபோல நாமும் இறைவனை நம்புவோமானால், பதட்டப்படாமல் வாழலாம். எந்த நோய்களையும் குணப்படுத்தும் வலிமை இயேசுவுக்கு உண்டு. ஆனால், “எங்களுக்கு எங்கள் மதம்தான் முக்கியம் செத்தாலும் எங்கள் பாரம்பாரியம்தான் எங்கள் வாழ்க்கையின் லட்சியம்” என்பவர்கள் நிச்சயமாக இயேசுவிடமிருந்து எதையும் பெற்றுக்கொள்ள முடியாது. வருடம் முழுவதும் மழை பெய்தாலும் சமையலுக்கு நீர் இல்லையானால் அதன் காரணமென்ன? மழைத்தண்ணீரை பாத்திரம் வைத்து சேகரிக்கவில்லை என்றுதானே அர்த்தம்!
கிறிஸ்துவின் திருப்பணியாளர்கள் நடத்தும் குணமளிக்கும் கூட்டங்களில் நோயாளிகள் பலர் குணமடைகிறார்கள். ஆனால், இயேசுவிடம் நம்பிக்கை வைக்காததால் ஒருசிலர் குணமடையவில்லை. இயேசு அன்று மனிதவடிவில் அருட்பணி செய்தபோது அவரோடு ஆயிரக்கணக்கான மக்கள் சுற்றித்திரிந்தார்கள். ஆனால், அவர்களில் அநேகர் குணமடையவில்லை. காரணம், அவர்கள் அவரை நம்பவில்லை (மத். 13:58). இயேசு தம்மை நம்பும் எவரையும் கைவிடுவதுமில்லை வெட்கப்படுத்துவதுமில்லை. “நான் உன்னைவிட்டு விலகுவதுமில்லை, உன்னைக் கைவிடுவதுமில்லை” (எபி.13:5) என்று உறுதி கூறியிருக்கிறாரே! கர்த்தரை நம்புகிறவர்கள் வெட்கப்பட்டு போவதில்லை (உரோ.10:11) என்று வேதம் நம்மைப் படிப்பிக்கிறது. ஆனால், ஆண்டவர் யாரையும் கட்டாயப்படுத்தி தன்னை பின்பற்ற வைக்கமாட்டார் (தி.வெ.3:20, 2கொரி.9:7). “கேளுங்கள் தரப்படும்” (மத்.7:7) என்று எல்லோருக்கும் பொதுவாகத்தானே கூறியிருக்கிறார்.
ஒரு சிற்பி ஒரு மரத்துண்டை ஒரு அழகிய சிற்பமாகப் பார்க்கிறான். ஆனால், விறகு பொறுக்கும் பெண்ணின் பார்வையில் அது வெறும் விறகுதான். அதுபோல இயேசுவை புத்தர், காந்தி என்று மனிதர்களின் பட்டியலில் வைத்துப்பார்ப்பவர்களுக்கு, இயேசு எந்த அற்புதங்களையும் செய்யமுடியாது. ஆனால், அவரை கடவுளாகப் பார்ப்பவர்கள் எளிதில் குணமடையமுடியும். ஆண்டவரைப் பற்றி ஒரு போதகர் தெருமுனையில் பிரச்சாரம் செய்கிறார் என்று வைத்துக்கொள்வோம். இதைக் கேட்டு ஒருவர் “இது மூடநம்பிக்கை” என்று கேலிசெய்கிறார். வேறொருவர் இயேசுவை நம்பி வாழ்வில் மறுமலர்ச்சியடைகிறார். நம்பிக்கையில்லாமல் பலர் கேட்கிறபடியால் கேட்கும் செய்தி அவர்களுக்கு பயனின்றிப் போகின்றது (எபி. 4:1).
கிறிஸ்தவர்கள் மருத்துவமனைகளை ஆரம்பிப்பது கிறிஸ்தவர்களுக்காக மட்டுமல்ல மற்றவர்களுக்காகவும் தான். “கிறிஸ்தவர்களின் மருத்துவ சேவை கிறிஸ்தவர்களுக்கு மட்டுமே” என்று யாரும் சட்டமிட முடியாது. நோயோடு வரும் ஒருவரை, “நீ கட்டாயம் இயேசுவை தெய்வமாக ஏற்றுக்கொள்ள வேண்டும்” என்று வற்புறுத்த முடியாது. அவர் முழுமனதோடு இயேசுவை ஏற்றுக்கொள்வது வரை அவருக்கு மருத்துவமனை தேவையல்லவா! கிறிஸ்தவ மருத்துவமனைகளில் வந்து குணமடைந்தவர்கள் எல்லாரும் கண்டிப்பாக கிறிஸ்தவத்தை தழுவ வேண்டுமென்று கட்டாயப்படுத்தவும் முடியாது. ஜெபத்தின் மூலம் தெய்வீக குணமடைந்தாலும், கிறிஸ்தவ மருத்துவர்கள் தங்களிடம் வரும் இறைநம்பிக்கையே இல்லாத நோயாளிகளுக்கும் மருந்து கொடுத்து காப்பாற்றுவது அவர்களுடைய கடமையல்லவா? “என்னிடம் வருபவனை நான் புறம்பே தள்ளுவதில்லை” (யோவா. 6:37) என்று இயேசு கூறுகிறார். தன்னிடம் வருபவர்கள் எந்த மதத்தினரானாலும் ஏற்றுக்கொண்டு நலவாழ்வு தரும் மதபேதமில்லாத தெய்வம் கிறிஸ்து. “நல்ல மேய்ப்பன் தன் ஆடுகளுக்காகத் தன் உயிரையே கொடுக்கிறான். நானே நல்ல மேய்ப்பன்” (யோவா. 10:11) என்று இயேசு கூறினார். அவரை நம்பாத சந்தேகப் பிராணிகளைப் பார்த்து, “நீங்கள் நம்பாமல் இருக்கிறீர்கள். ஏனெனில், நீங்கள் என் மந்தையைச் சேர்ந்தவர்களல்ல” (யோவா. 10:26) என்றும் கூறுகிறார்.
இலாசர் என்னும் ஒருவர் இறந்து கல்லறையில் வைக்கப்பட்டிருந்த நிலையில், இயேசு கல்லறை அருகில் சென்று அங்கே நிற்பவர்களிடம், “இந்த கல்லறையின் கல்லைப் புரட்டிப் போடுங்கள்” என்று கூறினார். உடனே அவருடைய தெய்வீக சக்தியை நம்பி, அவருடைய வார்த்தைக்குக் கீழ்ப்படிந்து அக்கல்லை புரட்டிப்போட்டனர். உடனே சடலத்தை நோக்கி, “இலாசரே வெளியே வா” என்றார். இலாசர் உயிர்பெற்று, நடந்து வந்தார். கீழ்படிந்தால் அற்புதம் நடக்கும். பெரியவர் இயேசுவின் அறிவுரைக்கு அடிப்பணிந்தால் அதிசயம் நடக்கும். நாகமானுடைய தொழுநோய் நீங்க வேண்டுமானால் யோர்தானில் அவர் ஏழுமுறை மூழ்கி எழவேண்டும் என்று எலிசா இறைவாக்கினர் கூறினார். அவர் கேள்விக்கணை தொடுத்துக் கொண்டிருந்தவரை எதுவும் நடக்கவில்லை. கீழ்படிந்து அவர் சொன்னபடியே ஏழுமுறை மூழ்கியெழுந்தார் தொழுநோய் குணமானது (2அர.5:1-14). இயேசு மனிதனாக இம்மண்ணில் புரட்சிகரமாக ஆன்மீகப்பணி செய்தபோது அவரது பணியின்மீது பொறாமைப்பட்டு, அவரைப் புரிந்துகொள்ளாமல் அவரைப் பார்த்து “பைத்தியக்காரன், பேய்பிடித்தவன்” என்றெல்லாம் பரிகசித்தவர்களால் இயேசுவின் அருளாசியை பெறமுடியவில்லை. அன்றும் இன்றும் இயேசுவை நம்பினோர் கெட்டுப்போகவில்லை.

இயேசு இன்றும் உயிரோடிருக்கிறார் என்று எப்படி சொல்கிறீர்கள்?