076. நான் கிறிஸ்தவன் என்று அழைக்கப்பட தகுதியில்லை.

நான் கிறிஸ்தவன் என்று அழைக்கப்பட தகுதியில்லை.

கிறிஸ்தவர்களாக மாறுவதற்கு குறிப்பிட்ட வயது, ஜாதி, கல்வி, தேசம், நிறம், பணம் என்னும் எந்த தகுதியும் தேவையில்லை. எந்த நாட்டை சார்ந்தவர்களாக இருந்தாலும், எந்த மதத்து, இனத்து மக்களானாலும், வெள்ளையர்கள் கறுப்பர்கள் என்ற பாகுபாடின்றி, ஏழை பணக்காரன் என்ற வேறுபாடின்றி யாரானாலும் கிறிஸ்துவின் கொள்கைளைப் பின்பற்றலாம். படித்தவரும் படிக்காதவரும் கிறிஸ்துவைப் பின்பற்றலாம். யாரானாலும் இயேசுவின் அன்பை அனுபவிக்கலாம்.
ஒருமுறை, “நான் இரட்சிக்கப்பட வேண்டுமானால் என்ன தகுதி வேண்டும்?” என்று ஒரு போதகரைப் பார்த்து ஒருவர் கேட்டார். “இரட்சிக்கப்பட வேண்டுமானால் பாவியாக இருக்கவேண்டும்” என்று போதகர் பணிவாகப் பதிலுரைத்தார். இயேசு பரிசுத்தவான்களைத் தேடி வரவில்லை பாவிகளை தேடியே வந்தார். இயேசு உலகத்தில் மனிதவடிவத்தில் வாழ்ந்த நாட்களில் பாவிகளோடு செலவு செய்த நேரம்தான் அதிகம். அதனால்தான் பரிசேயர்கள் என்னும் மத அடிப்படைவாதிகள் இயேசுவை இகழ்ந்து பேசும்போது, அவர் ஆயக்காரர்களோடும் (வரிவசூலிப்பவர்கள்) பாவிகளோடும் உணவு உண்கின்றாரே என்றனர். அவர்களிடம் இயேசு, “நோயற்றவருக்கு அல்ல,நோயுற்றவருக்கே மருத்துவர் தேவை” (மத். 9:11,12) என்றார். ஆக, இயேசுவின் மீட்பைப் பெற்றுக்கொள்ள என்ன தகுதி தேவையோ அந்த தகுதி உங்களிடம் உள்ளது. கடவுள் ஞானிகளை வெட்கப்படுத்த மடமை என உலகம் கருதுபவற்றை தெரிந்து கொண்டார். வலியோரை வெட்கப்படுத்த வலுவற்றவன் என உலகம் கருதுபவனை தெரிந்துகொண்டார். கடவுளுக்கு திறமைசாலிகளும், பணக்காரர்களும் தேவை தான்.ஆனால், அவர் முட்டாள்களை திறமைசாலிகளாக மாற்றும் வலிமையுடையவர். எந்த தகுதியும் இல்லாதவர்களையும் பயன்படுத்தி பெரியவைகளை சாதிக்கும் தெய்வமே தெய்வம்.

எனக்கு ஞாயிற்றுக்கிழமையும் வேலை உண்டு.