083. எல்லோரும் கடவுளின் பிள்ளைகள் தானே. இரக்கமுள்ள இறைவன் எப்படி தன் மக்களை நரகத்தில் போடுவார் ?

எல்லோரும் கடவுளின் பிள்ளைகள் தானே. இரக்கமுள்ள இறைவன் எப்படி தன் மக்களை நரகத்தில் போடுவார் ?

நரகம் மனிதனுக்காக படைக்கப்பட்டதல்ல அது பிசாசுக்காகவும் அவனுடைய தூதர்களுக்காகவும் படைக்கப்பட்டது. இயேசு இரக்கமுள்ள கருணாமூர்த்தியாக நம்மை இரட்சிக்க வந்த இரக்கத்தின் பெருங்கடல்தான். எல்லா மனிதரும் மீட்கப்படவும், உண்மையை அறிந்துணரவும் வேண்டுமென அந்த ஜெகத்துரட்சகன் விரும்புகிறார் (1திமொ.2:4). அனைத்து மக்களுடைய மீட்புக்காகவும்தான் அவர் சிலுவையில் மரித்தார் (1திமொ.2:6, 1யோவா.2:2). ஆனால், தன் போதனைகளை கேட்டு அதன்படி வாழ விருப்பம் இல்லாதவர்களுக்கும், தன் சித்தப்படி வாழ்வோருக்கும் பிரதிபலன் கொடுத்தாக வேண்டும் என்னும் நீதியின்படி பரலோகம், நரகம் என்பது தவிர்க்க முடியாததாகிவிடுகிறது. கடவுள் எவ்வளவு அன்புள்ளவரோ, அவ்வளவு நீதியுள்ளவர். ஒரு தாய்க்கும் கடவுளுக்கும் உள்ள வித்தியாசங்களில் ஒன்று இது. உலக நீதிமன்றத்தாரின் கண்களுக்கு தப்பித்துவிடும் புத்திசாலி குற்றவாளிகளை துரத்திப்பிடித்து நீதியான தண்டனையைக் கொடுக்க, முழு உலகத்திற்கும் பொதுவான ஒரு நீதியுள்ள தெய்வசக்தி இருப்பது தேவையல்லவா!
ஒரு குழந்தையை தண்டிக்க அக்குழந்தையை பிரசவ வேதனைப்பட்டு பெற்றெடுத்த தாய்க்கு மட்டுமே உரிமையுண்டு. அதுபோல, பாவிக்காக தன் உயிரையே கொடுத்தவர்தான், அவரது தியாகத்தை ஏற்றுக்கொள்ளாத பாவியை நரகத்தில் தள்ளவும் தகுதியுள்ளவர்.
தீங்கு புரிவோர் தீங்கு புரிந்து கொண்டே இருக்கட்டும் இழுக்கானவற்றை செய்வோர் இழுக்கானவற்றை செய்து கொண்டே இருக்கட்டும். தூயோர் தூய்மையானவற்றை செய்து கொண்டே இருக்கட்டும். இதோ, நான் விரைவில் வருகிறேன். அவரவர் செயலுக்கு ஏற்ப அவரவருக்கு நான் அளிக்கவிருக்கின்ற கைம்மாறு என்னிடம் உள்ளது (தி.வெ. 22:12) என்று இயேசு கூறினார். நம்முடைய மரணத்திற்கு பின் பரலோகம், நரகம் என்னும் இரண்டு இடங்களில் ஏதாவது ஓரிடத்துக்கு நாம் சென்றடைய வேண்டும் என்பதை வலியுறுத்தும் ஒரு வேத பகுதி இதோ.
வானதூதர் அனைவரும் புடைசூழ மானிடமகன் மாட்சியுடன் வரும்போது, தம் மாட்சிமிகு அரியணையில் வீற்றிருப்பார். எல்லா மக்களினத்தாரும் அவர் முன்னிலையில் ஒன்று கூட்டப்படுவர். ஓர் ஆயர் செம்மறியாடுகளையும், வெள்ளாடுகளையும் வௌ;வேறாக பிரித்து செம்மறியாடுகளை வலப்பக்கத்திலும், வெள்ளாடுகளை இடப்பக்கத்திலும் நிறுத்துவதுபோல், அம்மக்களை அவர் வௌவேறாக பிரித்து நிறுத்துவார். பின்பு அரியணையில் வீற்றிருக்கும் அரசர் தம் வலப்பக்கத்தில் உள்ளோரைப் பார்த்து, “என் தந்தையிடமிருந்து ஆசிபெற்றவர்களே வாருங்கள் உலகம் தோன்றியதுமுதல் உங்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் ஆட்சியை உரிமைப்பேறாகப் பெற்றுக் கொள்ளுங்கள். ஏனெனில், நான் பசியாயிருந்தேன், நீங்கள் உணவளித்தீர்கள் தாகமாயிருந்தேன், என் தாகத்தைத் தணித்தீர்கள் அந்நியனாயிருந்தேன், என்னை ஏற்றுக்கொண்டீர்கள் ஆடையின்றி இருந்தேன், நீங்கள் எனக்கு ஆடையணிவித்தீர்கள் சிறையிலிருந்தேன், என்னைத் தேடிவந்தீர்கள்” என்பார். அதற்கு நேர்மையாளர்கள், “ஆண்டவரே எப்பொழுது உம்மை பசியுள்ளவராகக் கண்டு உணவளித்தோம்? அல்லது தாகமுள்ளவராகக் கண்டு உமது தாகத்தைத் தணித்தோம்? எப்பொழுது உம்மை அந்நியராக கண்டு ஏற்றுக்கொண்டோம்? அல்லது ஆடையில்லாதவராக கண்டு ஆடையணிவித்தோம்? எப்பொழுது நோயுற்றவராக அல்லது சிறையில் இருக்கக்கண்டு தேடிவந்தோம்?” என்று கேட்பார்கள்.அதற்கு அரசர், “மிகச்சிறியோராகிய என் சகோதரர் சகோதரிகளுள் ஒருவருக்கு நீங்கள் செய்ததை எல்லாம் எனக்கே செய்தீர்களென உறுதியாய் உங்களுக்கு சொல்லுகிறேன்” எனப் பதிலளிப்பார். பின்பு இடப்பக்கத்தில் உள்ளோரைப் பார்த்து, “சபிக்கப்பட்டவர்களே என்னிடமிருந்து அகன்று போங்கள் சாத்தானுக்கும் அதன் தூதருக்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிற என்றும் அணையாத நெருப்புக்குள் செல்லுங்கள். ஏனெனில்,நான் பசியாயிருந்தேன், நீங்கள் எனக்கு உணவளிக்கவில்லை தாகமாய் இருந்தேன் என் தாகத்தைத் தணிக்கவில்லை நான் அந்நியனாயிருந்தேன், நீங்கள் என்னை ஏற்றுக்கொள்ளவில்லை நோயுற்றிருந்தேன், சிறையிலிருந்தேன், என்னைக் கவனித்துக் கொள்ளவில்லை”என்பார்.அதற்கு அவர்கள், “ஆண்டவரே எப்பொழுது நீர் பசியாகவோ, தாகமாகவோ, அந்நியராகவோ, ஆடையின்றியோ, நோயுற்றோ, சிறையிலோ இருக்கக்கண்டு உமக்குத் தொண்டு செய்யாதிருந்தோம்?” எனக் கேட்பார்கள். அப்பொழுது அவர், “மிகச்சிறியோராகிய இவர்களுள் ஒருவருக்கு நீங்கள் எதைச் செய்யவில்லையோ அதை எனக்கும் செய்யவில்லை என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்” எனப் பதிலளிப்பார். இவர்கள் முடிவில்லா தண்டனை அடையவும் நேர்மையாளர்கள் நிலைவாழ்வு பெறவும் செல்வார்கள் (மத்.25:31-41). மேற்கண்ட வசனங்களிலிருந்து உலகத்துக்கு ஒரு முடிவு உண்டு என்றும், பாவிகளும், தூயவர்களும் வெவ்வேறு இடங்களுக்கு அனுப்பப்படுவார்கள் என்றும் அறிகிறோம்.
உங்கள் கையோ, காலோ, உங்களை பாவத்தில் விழச்செய்தால் அதை வெட்டி எறிந்துவிடுங்கள். நீங்கள் இருகைகளுடனோ, இருகால்களுடனோ என்றும் அணையாத நெருப்பில் தள்ளப்படுவதைவிட, கைஊனமுற்றோராய் அல்லது கால்ஊனமுற்றோராய் இங்கு வாழ்ந்து நிலைவாழ்வில் புகுவது உங்களுக்கு நல்லது (மத்.18:8). கோழைகள், நம்பிக்கை இல்லாதோர், அருவருப்புக்குரியோர், கொலையாளிகள், விபச்சாரத்தில் ஈடுபடுவோர், சூனியக்காரர், சிலைவழிபாட்டினர், பொய்யர்; ஆகிய அனைவருக்கும் நெருப்பும் கந்தகமும் எரியும் ஏரியே உரிய பங்கு ஆகும். இதுவே இரண்டாம் சாவு (தி.வெ. 21:8). சில இடங்களில் தன்னுடைய பிள்ளைகள் என்றும், பிசாசின் பிள்ளைகள் என்றும் இயேசு பிரித்து பேசி இருக்கிறார் (யோவா. 8:42-44). நேர்மையாக செயல்படாதவரும் தம் சகோதர சகோதரிகளிடம் அன்பு செலுத்தாத வரும் கடவுளிடமிருந்து வந்தவர்களல்ல. இதனால் ‘கடவுளின் பிள்ளைகள்’ யாரென்றும் ‘சாத்தானின் பிள்ளைகள்’ யாரென்றும் புலப்படும் (1யோவா.3:10). கண்டதே காட்சி கொண்டதே கோலம் என்று சல்லாபித்து வாழ்ந்த ஒரு பணக்கார பாவி தன் மரணத்திற்கு பின்பு எங்கு போய் சேர்ந்தான் என்பதை லூக். 16:19-31 என்ற வேதப்பகுதியில் காணலாம். படிக்கட்டுப் பயணம் பரலோகப் பயணம் என்று சென்னை டவுன் பஸ்ஸில் எழுதியிருந்தனர். அதை வாசித்துவிட்டு படிகட்டில் நின்று பயணம் செய்தால் நரகத்துக்குத் தப்பிவிடலாமென்று தவறாக எண்ணவேண்டாம். ‘படிக்கட்டில் நின்று பயணம் செய்தால் கால்தவறி கீழேவிழுந்து இறந்துவிடுவாய். உள்ளே போனால் பத்திரமாக இருக்கலாம்’ என்பதுதான் அதன் பொருள்.

முஸ்லீம்கள் கிறிஸ்துவின் இரட்சிப்பை ஏற்றுக் கொள்கிறார்களா ?