085. பழைய ஏற்பாட்டுச் சட்டத்தையும் கடவுள்தானே கொடுத்தார். ஏன் புதிய ஏற்பாட்டை உருவாக்கினார் ?

பழைய ஏற்பாட்டுச் சட்டத்தையும் கடவுள்தானே கொடுத்தார். ஏன் புதிய ஏற்பாட்டை உருவாக்கினார் ?

ஒரு நல்ல கேள்வி கேட்டீர்கள். எது பாவம், எது பாவமல்ல என்றும், ஒரு பாவம் செய்தால் அதற்கு தண்டனை என்ன என்றும் மனிதன் தெரிந்துகொள்ளத்தான் கடவுள் பழைய ஏற்பாட்டுத் திருச்சட்டத்தைக் கொடுத்தார். திருச்சட்டம் வழியாய் அன்றிப் பாவம் என்ன என்று நான் அறிந்திருக்கமாட்டேன். எப்படியெனில், “பிறருக்குரியது எதையும் கவர்ந்திட விரும்பாதே” என்று சட்டம் சொல்லாமல் போயிருந்தால், அவ்விருப்பம் என்ன என்றே அறிந்திருக்க மாட்டேன் (உரோ. 7:7). திருச்சட்டம் தரப்படுமுன்பும் உலகில் பாவம் இருந்தது ஆனால், சட்டம் இல்லாதபோது அது பாவமாகக் கருதப்படவில்லை (உரோ. 5:13).
திருச்சட்டம் மூலம் தான் பாவத்தின் விளைவு என்ன என்றும், கடவுள் எவ்வளவு நீதியுள்ளவர் என்றும் மனிதனுக்கு தெரிந்தது. மனிதர்கள் பாவிகள் என்பதை சட்டம் அவர்களுக்கு உணர்த்துகிறது (உரோ. 3:20) திருச்சட்டம் இறைவனின் சினத்தை வருவிக்கிறது. சட்டம் இல்லையெனில் அதை மீறவும் இயலாது (உரோ. 4:15). திருச்சட்டத்துக்கு உட்பட்ட எவரும் பாவம் செய்தால், அச்சட்டத்தாலேயே தீர்ப்பளிக்கப்படுவர் (உரோ. 2:12) என்று பவுல் எழுதுகிறார். மனிதன் பாவம் செய்யும் போதெல்லாம் அவனைக் கட்டுப்படுத்த, பாவத்திற்குத் தக்க தண்டனையைக் கடவுள் அவ்வப்போது கொடுத்ததால்தான், தனக்கு மேல் ஒரு நீதியுள்ள சக்தி உண்டு என்னும் பயம் மனிதனுக்கு வந்தது.
ஒரு குழந்தை ஒன்றாம் வகுப்பில் படிக்கும்போது, அந்த குழந்தையிடம் தாயும் தகப்பனும் சில விதிமுறைகளையும் சட்டங்களையும் சொல்லிக் கொடுக்கிறார்கள். அவன் பத்தாம் வகுப்பிற்கு வரும்போது, பழைய சின்னபிள்ளைப் பருவச் சட்டம் மாறி, முதிர்ந்த மாணவனுக்கு பொருத்தமான சட்டங்களை கொடுப்பார்கள். அதே மாணவன் ஒரு வேலையில் சேர்ந்து, பின் திருமணம் செய்கிறான். திருமணமான ஒரு முதிர்ந்த மனிதனிடம் தாயும் தகப்பனும் எப்படி நடந்துகொள்வார்கள்? அவன் குழந்தையாக இருந்த போதைய சட்டங்களை இப்போது நடைமுறைப்படுத்த முடியுமா? குழந்தையிடம் அதன் தகப்பன் கண்டிப்பாக இருப்பார். ஆனால் அவன் வளர்ந்த பின் தகப்பனுடைய எதிர்பார்ப்பை தானே புரிந்து கொண்டு எந்த கட்டாயமும் இல்லாமல் கீழ்ப்படிகிறான்.
அதுபோல பழைய ஏற்பாட்டு சிறுபிள்ளைத்தனமான, கண்டிப்பான சட்டப்படியே இன்று மனிதன் வாழ்வதை கடவுள் விரும்பவில்லை. மனிதன் கடவுளைப்போல இந்த உலகில் வாழவேண்டும், சக மனிதர்களை கடவுள் பார்ப்பதுபோல பார்க்கவேண்டும் என்னும் உயர்ந்த எண்ணத்தில் உருவாக்கினார். கடவுள் தன் சாயலாக மனிதனைப் படைத்தார். ஆனால் பல யுகங்களாகத்தான் அவனுடைய சிந்தையில் முதிர்ச்சி வந்துள்ளது.
தன் அருட்பணியாளர்களை வைத்து மரித்த சடலங்களை உயிரோடு எழுப்பினார். நடுவானில் சூரியனை நிறுத்தினார். தன்னை நம்பி வாழ்ந்த மக்களை, அவர்களைத் துன்புறுத்தியவர்களிடமிருந்து காப்பாற்றி பற்பல அதிசயங்களை செய்தார். பார்வோன் என்னும் ஒரு கொடுங்கோல் அரசனுடைய இரும்பு பிடியினின்று விடுவிக்க ஆண்டவர் செய்த அற்புதங்கள் கண்கொள்ளா காட்சிகளாக இருந்திருக்கும். செங்கடலை இரண்டாகப் பிரித்து அதன் நடுவே வெட்டாந்தரையான சாலையை உருவாக்கி, தன்னை வணங்கும் மக்களை காப்பாற்றினார். தன் மக்கள் பாலைவனத்தில் உணவின்றி வருந்தியபோது அவர்களுக்கு வானத்திலிருந்து தேனிலிட்ட பணியாரத்தின் சுவையுடைய உணவையும், காடை பறவைகளையும் கொடுத்தார். தண்ணீர் தாகம் வந்தபோது பாலைவன மலையிலிருந்து நீருற்றை உருவாக்கினார். அப்பப்பா…பழைய ஏற்பாட்டின் நாட்களில் ஆண்டவர் செய்த அற்புதங்கள் தான் எத்தனை! சுருக்கமாகச் சொன்னால், கர்த்தர் தன்னை ஒரு சர்வ சக்தீஸ்வரனாக ராஜரீகம் செய்திருக்கிறார்.
ஆனால், கடவுள் தன் மக்களிடம், எதிர்பார்த்த அன்பு, பொறுமை, முதிர்ச்சி, சாந்தம், மனிதநேயம் எதையுமே அவர்களிடம் காண முடியவில்லை. தன் மக்கள் அவற்றை உடைவர்களாக மாறவேண்டுமானால், கடவுளே மனித உருவில் வரவேண்டும் என்று அவர் தீர்மானித்தார். அந்த தெய்வீகத் தீர்மானத்திற்கு அடிபணிந்து, கடவுளின் வார்த்தையாகிய இறைமைந்தன் இயேசு இந்த உலகிற்கு மனிதவடிவில் வந்து, ‘மனிதன் தன்னை நேசிப்பது போல பிறரையும் நேசிக்க வேண்டும்’ என்னும் உன்னதக் கொள்கையை கற்றுக்கொடுத்து, அதன்படி தானும் வாழ்ந்து, அதை நிரூபிக்க தன் உயிரையே கொடுத்தார். மரித்த மூன்றாம் நாளில் வெற்றித் திருமகனாய் உயிரோடு எழுந்தார். அதன்பின், அன்போடு வாழ பரிசுத்தஆவியின் சக்தியை மக்களுக்கு கொடுத்தார். பழைய ஏற்பாட்டின் நாட்களில் கடவுளின் மக்களால் முடியாமல் இருந்தது இப்போது சாத்தியமாயிற்று. ஒரு அடிமையைப்போல, கடமைக்காக, பயந்து பயந்து கடவுளை கும்பிடாமல், கடவுள் மீது அன்புவைத்து ஆராதிக்கும் யுகம் ஆரம்பமானது. ஒரு கடுமையான எஜமானின் கீழ் கைகட்டி நிற்கும் வேலைக்காரர்களைப் போல் வாழ்ந்த நம்மை, அன்புள்ள ஒரு அப்பாவின் மடியில் பயமில்லாமல் அமர்ந்திருக்கும் பாசப்புதல்வர்களாக மாற்றவிரும்பினார். இதனால்தான் பவுல் கலாத்திய திருச்சபையாருக்கு கடிதம் எழுதும்போது இனி நீங்கள் அடிமைகளல்ல மகனாக, மகளாக இருக்கின்றீர்கள். கிறிஸ்துமூலம் உரிமைப் பேறுடையவராய் இருக்கிறீர்கள் (கலா. 4:6) என்கிறார். பழைய ஏற்பாட்டு நாட்களிலேயே புதியஏற்பாடு உருவாகுமென்று இறைவாக்கு உரைக்கப்பட்டது. இதோ நாட்கள் வருகின்றன. அப்போது நான் இஸ்ரயேல் வீட்டாரோடும் யூதாவின் வீட்டாரோடும் புதுஉடன்படிக்கை ஒன்றை செய்து கொள்வேன் (எரே.31:31) என்று கடவுள் கூறினார்.
ஒரு குழந்தை சிறுவனாயிருக்கும்போது தன் தந்தை சொன்ன கட்டளைகளுக்கு கீழ்படியாவிட்டால், ‘தந்தை பிரம்பால் அடிப்பார்’ என்னும் பயத்தால் கீழ்படிகிறான். அதுபோலத்தான் கடவுள் தனக்கு கீழ்படியாத மக்களுக்கு உடனே தண்டனை கொடுத்ததால், அந்த தண்டனைக்குப் பயந்து, வேறுவழியின்றி, வேண்டா வெறுப்போடு கீழ்படிந்தனர். ஆனால், குழந்தை முதிர்ந்தபின் அவனுடைய நிலை வேறு. தன்னை பெற்ற தன் தாயும், தந்தையும் தன்னைப் பாதுகாத்து, உணவூட்டி, சீராட்டி, வளர்த்த நன்றி உணர்வால் எந்த கட்டாயமும் இல்லாமல் அவர்களுக்குக் கீழ்படிகிறான்.
அதேபோல், புதிய ஏற்பாட்டு மக்கள் இயேசு தங்களுக்காக அவருடைய உயிரையே கொடுத்ததை நினைத்து, அவருடைய கட்டளைகளுக்கு அவருடைய அன்பின் பொருட்டு கீழ்படிகின்றனர். பழைய உடன்படிக்கையை விட புதிய உடன்படிக்கை கைக்கொள்ள எளிமையானது. இயேசு கூறினார்: “என்மீது அன்பு கொண்டுள்ளவர் நான் சொல்வதைக் கடைப்பிடிப்பார். என் தந்தையும் அவர்மீது அன்பு கொள்வார். நாங்கள் அவரிடம் வந்து அவருடன் குடிகொள்வோம். என்மீது அன்பு கொண்டிராதவர் நான் சொல்வதைக் கடைபிடிப்பதில்லை” (யோவா. 14:23,24).

பணமே தெய்வம்.