009. பரலோகத்திற்கு போகும் ஒரே வழி இயேசுவானால், இயேசுவுக்குமுன் இறந்தோரும், அவரைத் தெரியாமல் இறப்போரும் எங்கே போவார்கள் ?

வழியும், உண்மையும், வாழ்வும் நானே. என் வழியாய் அன்றி எவரும் தந்தையிடம் வருவதில்லை (யோவா. 14:6) என்று இயேசு கூறினார். இவராலேயன்றி வேறு எவராலும் மீட்பு இல்லை. ஏனென்றால் நாம் மீட்புப் பெறுமாறு வானத்தின்கீழ், மனிதரிடையே இவரது பெயரன்றி வேறு எப்பெயரும் கொடுக்கப்படவில்லை (தி.பணி. 4:12) என்று பேதுரு கூறினார். ஆனால், நாம் ஒருவரிடம் ஒரு பொருளைக் கொடுக்காமல் அவரிடம் எதையும் திரும்ப கேட்க முடியாது. அதிகமாக ஒருவரிடம் கொடுத்தால் அவரிடம் அதிகமாக திரும்ப எதிர்பார்ப்போம். குறைவாக ஒருவரிடம் கொடுத்தால் குறைவாக திரும்ப எதிர்பார்ப்போம். அதுபோல, எவர்களுக்கு எப்படிப்பட்ட சட்டங்கள் கொடுக்கப்பட்டதோ அவர்கள் அந்த சட்டத்திற்கு கீழ்படியவேண்டும் என்று கடவுள் எதிர்பார்ப்பார்.

ஆதியில் இறைவன் ஏதேன் என்னும் நந்தவனத்தில், மனிதன் உண்ணத்தக்க கனிகளைக் கொடுக்கும் மரங்களை உருவாக்கி இருந்தார். அந்த தோட்டத்தில் குடியமர்த்தப்பட்ட ஆதாம், ஏவாள் என்னும் நம் ஆதிப் பெற்றோரிடம் ஆண்டவர் அந்த எல்லா மரத்தின் கனிகளையும் உண்ணலாம் என்று உரிமை அளித்திருந்தார். ஆனால், தோட்டத்தின் நடுவிலே ‘மனிதன் உண்ணக்கூடாது’ என்று விலக்கப்பட்ட கனி கொடுக்கும் ஒரு மரத்தையும் கடவுள் உருவாக்கி இருந்தார். சாத்தான் ஏவாளை ஏமாற்றி அந்த விலக்கப்பட்ட மரத்தின் பழத்தை உண்ணத் தூண்டினான். அவனது சதி வலையில் அவர்கள் விழுந்தனர். ஆண்டவர் கொடுத்திருந்த ஒரே ஓரு சட்டத்திற்கு கூட ஆதாமும் ஏவாளும் கீழ்படிய முடியாமல் சாத்தானின் தந்திரத்திற்கு இரையாயினர். அன்றே அந்த அழகிய தோட்டத்தைவிட்டு அவர்கள் வெளியேற்றப்பட்டனர். அதன்பின் ஆதாமுக்கும் ஏவாளுக்கும் பிள்ளைகளும், பேரப்பிள்ளைகளும் பிறந்தார்கள். அவர்கள் எல்லோருமே ஆதாம் செய்த பாவத்தால் பிறவியிலேயே பாவம் உடையவர்களாக இருந்தனர். அப்பொழுது மனிதனுடைய மனசாட்சிப்படி நல்லது எதுவோ அதை செய்ய கடவுள் அனுமதித்தார். தங்கள் மனசாட்சிப்படியே தவறென்று உணர்ந்ததை பாவமாக கடவுளும் கருதினார்.

     அதன்பின், மோசே என்னும் ஒரு இறைதூதர் மூலமாக, மனிதன் எப்படி வாழவேண்டும், எப்படி வாழக்கூடாது என்ற திருச்சட்டத்தையும், அவற்றை நிறைவேற்றாவிட்டால் என்னென்ன தண்டனைகள் என்றும் கடவுள் மக்களிடம் பேசினார். பின்பு, பெரும்பான்மையான மக்கள் திருச்சட்டத்தை ஒழுங்காக கடைபிடித்து தூய்மையாக வாழ வலிமையற்ற நிலைமையில் இருப்பதை கடவுள் கண்டார் (தி.பணி. 15:10). எனவே, திருச்சட்டத்தை ஒரு முடிவுக்கு கொண்டுவர நினைத்தார். “விண்ணும் மண்ணும் ஒழிந்து போனாலும் திருச்சட்டம் யாவும் நிறைவேறும் வரை அதன் ஒரு சிற்றெழுத்தோ ஒரு புள்ளியோ ஒழியாது என உறுதியாக உங்களுக்குச் சொல்லுகிறேன்” (மத். 5:18) என்று இயேசு சொன்னார். திருச்சட்டம் நிறைவேறும்வரை ஒழியாது என்பதிலிருந்து நிறைவேறினால் ஒழியும் என்று அறிகிறோம். எனவே, கடவுளே திருச்சட்டத்தை நிறைவேற்றத் திட்டமிட்டார். பிறரிடத்தில் அன்புகூர்பவர் திருச்சட்டத்தை நிறைவேற்றுபவர் ஆவார். ஏனெனில், ‘விபச்சாரம் செய்யாதே, கொலை செய்யாதே, களவு செய்யாதே, பிறருக்குரியதைக் கவர்ந்திட விரும்பாதே’ எனும் கட்டளைகளும், பிற கட்டளைகளும், ‘உன்மீது அன்புகூர்வது போல், உனக்கு அடுத்தவர் மீதும் அன்புகூர்வாயாக’ எனும் கட்டளையில் அடங்கியுள்ளன. அன்பு அடுத்திருப்பவருக்குத் தீங்கிழைக்காது. ஆகவே, அன்பே திருச்சட்டத்தின் நிறைவு (உரோ. 13:8-10) என்னும் வசனத்தின்படி, நம்மேல் அன்புவைத்து நமக்காக இயேசு உயிர்நீத்தார். யாராலும் நிறைவேற்ற முடியாத திருச்சட்டத்தை தன் அன்பினால் நிறைவேற்றினார் (மத். 5:17). இயேசு சட்டத்தை நிறைவேற்றினதால் சட்டம் ஒழிந்தது (மத்.5:18, எபே.2:15). இனி, திருச்சட்டத்திற்கு நம்மேல் வலிமையில்லை. இயேசு தன் அன்புக் கொள்கையை மனிதனுக்கு போதித்தார். இறைவனுடைய அன்பால் எல்லா மக்களும் அவரிடம் ஈர்க்கப்படுகிறார்கள்.

ஏதேனில், ‘விலக்கப்பட்ட கனியை உண்ணக்கூடாது’ என்ற சட்டத்தை கடவுள் ஆதாமுக்கு கொடுக்காதிருந்தால் அந்த பழத்தை உண்டாலும் அது பாவமல்ல. களவு செய்யக்கூடாது, பொய் சொல்லக்கூடாது என்ற சட்டங்கள் கொடுக்கப்படுவதற்கு முன், மனசாட்சிப்படி அவை தவறென்று தெரியாததினால் அவற்றின்படி வாழாதிருந்தாலும் அதை கடவுள் குற்றமாக கருதமுடியவில்லை. எனவே தான், “திருச்சட்டம் தரப்படுமுன்பும் உலகில் பாவமிருந்தது ஆனால், சட்டமில்லாதபோது அது பாவமாகக் கருதப்படவில்லை” (உரோ. 5:13) என்று கடவுள் கூறுகிறார்.

இன்று நாம் வாழும் சமுதாயத்தில் அரசாங்கசட்டம், தனிப்பட்டச்சட்டம், சமுதாயச்சட்டம், ஆன்மீகச்சட்டம் என பலவித சட்டங்களுண்டு. வண்டி ஓட்டுபவர் ‘ஓட்டுநர் உரிமம்’ வைத்திருக்க வேண்டுமென்பது அரசாங்கச்சட்டம். அதிகாலையில் எழுந்தவுடன் காலைக்கடன்களை முடித்து சுறுசுறுப்பாய் வேலைகளைக் கவனிக்க வேண்டும் என்பது தனிப்பட்டச்சட்டம். ஒருவர் உங்களைப் பார்த்து ‘காலை வணக்கம்’ என்று சொல்லும்போது, நீங்கள் பதிலுக்கு ‘காலை வணக்கம்’ என்று சொல்ல வேண்டியது சமுதாயச்சட்டம். எல்லாவற்றிற்கும் மேலாக கடவுளிடம் அன்புகூரவேண்டும்; நம்மை நாம் நேசிப்பதுபோல பிறரையும் நேசிக்க வேண்டும் என்பது ஆன்மீகச்சட்டம். இந்த எல்லா சட்டங்களின்படியும் நாம் கீழ்ப்படிந்து வாழ வேண்டுமென்று கடவுள் எதிர்பார்க்கிறார். இறைவனுடைய அன்புச்சட்டம் கொடுக்கப்படுவதற்கு முன் அதை அறியாதிருக்கும் நிலையில் தன் மனசாட்சிப்படி தூய்மையாக வாழ்ந்தால், அவனை நரகத்தில் போட கடவுள் அநியாயமானவரல்ல. நிச்சயமாக அவன் இரட்சிக்கப்படுவான்.

திருச்சட்டத்தைப் பெற்றிராத பிறஇனத்தார், அதிலுள்ள கட்டளைகளை இயல்பாகக் கடைபிடிக்கும்போது அவர்களுக்கு திருச்சட்டம் இல்லாத போதிலும், தங்களுக்குத் தாங்களே சட்டமாய் அமைகிறார்கள். திருச்சட்டம் கற்பிக்கும் ஒழுக்கநெறி, தங்கள் உள்ளத்தில் எழுதப்பட்டிருக்கிறது என்பதை அவர்கள் தங்கள் நடத்தையில் காட்டுகிறார்கள். அவர்களது மனச்சான்றே இதற்கு சாட்சி. ஏனெனில், அவர்கள் செய்வது குற்றமா, குற்றமில்லையா என அவரவர் எண்ணங்களே வெளிப்படுத்துகின்றன (உரோ.2:14,15). அதாவது, இறைவனது திருச்சட்டத்தையோ, இயேசுவின் அன்புக்கொள்கையையோ கேள்விப்படாதவர்கள் எது பாவம், எது பாவமல்ல என்னும் அறிவு வந்தபின் பாவம் செய்து இயேசுவின் இரத்தத்தால் மன்னிக்கப்படாவிட்டால் அவர்களுடைய மனசாட்சியின்படி தீர்ப்பிடப்படுவர்.

      சட்டம் இல்லையேல் பாவத்திற்கு உயிரில்லை. “ஒருகாலத்தில் சட்டமில்லாதபோது நான் உயிருள்ளவனாக இருந்தேன். கட்டளை தரப்பட்டபோது பாவம் உயிர்பெற்றது. ஆனால், திருச்சட்டம் வழியாக அன்றி பாவமென்றால் என்ன என்று நான் அறிந்திருக்க மாட்டேன். எப்படியெனில் ‘பிறருக்குரிய எதையும் கவர்ந்திட விரும்பாதே’ என்று சட்டம் சொல்லாதிருந்தால் அப்படி கவர்வது பாவமென்று நான் தெரிந்திருக்கமாட்டேன்” (உரோ. 7:7-9) என்று பவுல் கூறுகிறார். ஒருமுறை இயேசு மக்களிடம் பேசும்போது, “நான் வந்து அவர்களிடம் பேசியிருக்காவிட்டால் அவர்களுக்கு பாவமிராது.ஆனால், இப்போது அவர்கள் தங்கள் பாவத்திற்கு சாக்குப் போக்குச் சொல்ல வழியில்லை வேறு யாரும் செய்திராத செயல்களை நான் அவர்களிடையே செய்யவில்லையென்றால் அவர்களுக்குப் பாவமிராது. ஆனால், இப்போது அவர்கள் என்னையும் என் தந்தையையும் கண்டு வெறுத்தார்கள்” (யோவா. 15:22,24) என்றார்.

     மேற்கண்ட வசனங்களிலிருந்து, இயேசு தன்னைத்தானே நமக்கு வெளிப்படுத்தாமல் நாம் இயேசுவை அறியமுடியாது. நமக்கு தண்டனை கொடுக்க முடியாதென்று அறிகிறோம். அவர் நீதியுள்ள தெய்வம். “கடவுளுடைய விருப்பத்தை அறியாமல், தண்டனைக்கு தகுதியான செயல்களைச் செய்பவன் சில அடிகளை பெறுவான். மிகுதியாகக் கொடுக்கப்பட்டவரிடம் மிகுதியாக எதிர்பார்க்கப்படும். மிகுதியாக ஒப்படைக்கப்படுபவரிடம் இன்னும் மிகுதியாகக் கேட்கப்படும்” (லூக். 12:48) என்று குருநாதன் கூறியிருக்கிறார். மக்கள் அறியாமையில் வாழ்ந்த காலத்தில் கடவுள் காணாதவர் போலிருந்தார். ஆனால்,இப்போது எங்குமுள்ள மனிதர் யாவரும் மனம்மாற வேண்டுமென்று கட்டளையிடுகிறார் (தி.பணி. 17:30). ஒருவரையும் அநீதியாக நியாயம் தீர்க்காத சத்தியமூர்த்தி நிச்சயமாக தவறு செய்யமாட்டார். எனவே, செத்துப்போனவர்களைப் பற்றிக் கவலைப்படாமல், இப்போது வாழும் மக்களைப்பற்றி கவனிப்போம். கர்த்தருடைய நியாயதீர்ப்புகள் அளவிடப்படாதவைகள் (உரோ. 11:33). உலகிற்கு அவர் நீதியான தீர்ப்பு வழங்குவார் மக்களினத்தார்க்கு நேர்மையான தீர்ப்பு கூறுவார் (தி.பா. 9:8,11:7). கடைசி நாட்களில் நியாயத்தீர்ப்பின் முழுபொறுப்பும் இயேசுவிடமே உள்ளது (யோவா. 5:22). ஆனாலும், அவர் மனிதனாய் சுற்றித்திரிந்தபோது யாரையும் நியாயம் தீர்க்கவில்லை (யோவா. 12:47). அதுபோல, நாமும் யாரையும் நியாயம் தீர்க்கவேண்டாம். அதை கடவுள் பார்த்துக்கொள்வார்.

கிறிஸ்து கிறிஸ்தவர்களுக்கு மட்டுமே உரியவர்.