வெற்றிலை, புகை, மது, மாது என்று எல்லா பழக்கங்களும் எனக்கு உண்டு. இவற்றிலிருந்து எனக்கு விடுதலை கிடைக்குமா ?
திருந்த வேண்டுமென்ற உங்கள் ஆர்வத்தை நெஞ்சாரப் பாராட்டுகிறேன். இன்று கெட்டபழக்கங்கள் என்னும் சாக்கடையில் சுகமாக வாழ்ந்து கொண்டிருக்கும் பல்லாயிரக்கணக்கான மக்கள் வாழும் இம்மண்ணில் உங்களைப் போன்ற மனமாற்ற விரும்பிகள் இருப்பதை நினைத்து பரவசமடைகிறேன். வெற்றிலை, புகைப்பழக்கம் என்னும் பழக்கங்கள் மூலம் புற்றுநோய் உருவாகின்றன என்று மருத்துவ வல்லுநர்கள் கூறுகின்றனர். மதுமானம் அருந்துவதன் மூலம் கல்லீரல் பாதிக்கப்படுகிறது. விபச்சாரத்தின் மூலம் தன்மானம் கெடுவது மட்டுமல்ல, எய்ட்ஸ் போன்ற உயிர்கொல்லி நோய்கள் பரவுகின்றன. இவை எல்லாவற்றின் மூலம் குற்றமனசாட்சி உருவாகி, வாழ்க்கை மீதே வெறுப்பு வந்துவிடுகிறது. இந்த நாற்றம் பிடித்த சேற்றிலிருந்து வெளியே வர நீங்கள் விரும்புவது உங்களுக்கும் நாட்டுக்கும் நல்லது. ‘புகைப்பழக்கம் உடல் நலத்துக்கு தீங்கானது’ என்று சிகரெட் பெட்டியிலே எழுதப்பட்டுள்ளது. ஆனால், அந்த அறிவுரையை படித்து அந்த கெட்டப் பழக்கத்தை விட்டுவிட்டவர்கள் யாருமில்லை. ‘புகை நாட்டுக்குப் பகை’ என்று தெரிந்தும் சிகரெட், பீடி உருவாக்கும் தொழிலை அரசாங்கம் நிறுத்தவில்லையே. காரணமென்ன? அரசாங்கத்திற்கு அந்த கொடுமையின் மூலம் கிடைக்கும் வருமானம்தான்.
‘மது நாட்டுக்கு, உயிருக்கு, வீட்டுக்கு கேடு’ என்னும் கொள்கை பரபரப்பாக அறியப்பட்டு பேசப்பட்டிருந்தாலும், அரசாங்கமே மதுக்கடைகளை நடத்திக்கொண்டிருக்கிது. இதைத் தடுத்து நிறுத்த பல அமைப்புகள் போராடினாலும், பெரும்பான்மையான மக்கள் இதை எதிர்க்கவில்லையே! அரசாங்கத்திற்கு இந்த மதுக்கடைகள் மூலம் வரும் வருமானம்தான் இந்த சீரழிவுக்கு காரணம். இந்த கெட்டபழக்கங்களால் அழிந்துபோன குடும்பங்கள் தான் எத்தனை ஆயிரங்கள்! இப்பழக்கங்கள் கடவுள் குடியிருக்கும் ஆலயமாகிய நம் உடல்களை தீட்டுப்படுத்தி அழிக்கும் வலிமையுடையவை. ஆதலால் கடவுளும் இவற்றிக்கு எதிராக நிற்கிறார். “ஒருவன் என் ஆலயத்தை கெடுத்தால் நான் அவனை கெடுப்பேன்” (1கொரி. 3:17) என்று கடவுள் ஆதங்கப்படுகிறார். பாவம் செய்பவன் பாவத்திற்கு அடிமையாக இருக்கிறான் (யோவா. 8:34) என்று வேதம் கூறுகிறது.
கவலைப்பட வேண்டாம். சர்வேஸ்வரனை நம்புங்கள் இயேசுவின் நாமத்தை நம்புங்கள். உங்கள் நம்பிக்கை உங்களுக்கு வெற்றியை கொடுக்கும். தன்னையே நம்பியிருக்கும் பக்தர்களை பரமேஸ்வரன் கைவிட்டதில்லை. “பெரும்சுமை சுமந்து சோர்ந்திருப்பவர்கள் எல்லாரும் என்னிடத்தில் வாருங்கள். நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன் (மத். 11:28) என்று காருண்யேஸ்வரன் அழைக்கிறார். ‘உங்களை தொற்றிக்கொண்டுள்ள இந்த கெட்டபழக்கங்கள் நல்லதல்ல’ என்று அறிவுரை கூற ஆயிரக்கணக்கான மக்களுண்டு. ஆனால், அவர்களால் உங்களை விடுவிக்க முடியாது. தேவகுமாரனாகிய இயேசுவை நீங்கள் பற்றிக்கொண்டால், அவர் உங்களை மெய்யாகவே விடுவிப்பார். கிறிஸ்துவின் இரத்தம் சகல பாவங்களையும் நீக்கி நம்மைத் தூய்மைப்படுத்தும் வலிமையுடையது (1யோவா.1:7). நீங்கள் இதுவரை சொல்லாலும் செயலாலும், சிந்தனையாலும் செய்த தவறுகள் எல்லாவற்றையும் இயேசுவின் நாமத்தில் இறைவனிடம் கூறி மன்னிப்பு கேளுங்கள். அவர் மன்னிப்பார். இனிமேல் பாவம் செய்யாதிருக்க உறுதியான சமதமெடுக்க வேண்டும். உங்கள் வாய் திறந்து இயேசுவிடம் இனி பாவம் செய்யாதிருக்க எனக்கு உம் சக்தியைத் தாரும் என்று சத்தமாக கூறி ஜெபம் செய்யுங்கள்.
பிரார்த்தனை என்பது யாரோ வேதசாஸ்திரிகள் எழுதிய மந்திரங்களை திரும்ப திரும்ப ஓதுவதல்ல. ஒரு குழந்தை பெற்றதாயிடம் உரிமையாக பேசுவதுபோல, தாயினும் மேலான பாசமுள்ள பரமாத்மாவிடம் மனம்விட்டு பேசுவதே பிரார்த்தனை. அதற்கு ஒரு குறிப்பிட்ட மொழியில் பேசவேண்டுமென்றோ, ஒரு குறிப்பிட்ட திசையைப் பார்த்து பிரார்திக்க வேண்டுமென்றோ சட்டம் கிடையாது. கடவுள் எங்கும் நிறைந்தவர். கண்ணை மூடித்தான் பிரார்த்தனை செய்ய வேண்டுமென்றும் சட்டமில்லை. இயேசுவே வானத்தை அண்ணாந்து பார்த்து கடவுளைப் போற்றினார் என்று மத். 14:19-ல் வாசிக்கிறோம். ஆனால், கண்களை மூடி பிரார்த்தனை செய்வதால் நம் மனதை எளிதில் ஒருமுகப்படுத்த முடியும் என்பது நடைமுறை உண்மை என்பதால்தான் சபைப்போதகர் கண்களை மூடி ஜெபம் செய்வதை வலியுறுத்துகிறார். உங்கள் மனம் திறந்து இறைவனிடம் பேசுங்கள். இயேசுவின் அன்பையும், அவரது வல்லமையையும் நம்பும் ஒரு திருச்சபையோடு இணைந்து வாழுங்கள். சபை ஊழியக்காரரிடம் உங்கள் பிரச்சனைகளைக் கூறுங்கள். அவரும் உங்களுக்காக ஜெபம் செய்வார். நிச்சயமாக நீங்கள் விடுதலை அடைந்து மறுமலர்ச்சியான புதுவாழ்வு பெறுவீர்கள்.