தற்கொலை செய்வது பெரும்பாவம். நான் ஏற்கனவே கூறியதுபோல உங்கள் உடல் உங்களுக்குரியதல்ல உங்களுக்குள் குடியிருக்கும் கடவுளின் திருக்கோயில். அதைக் கெடுப்பதையோ, அழிப்பதையோ அவர் அனுமதிக்கமாட்டார் (1கொரி.3:16,17 6:19). நீங்கள் தற்கொலை செய்வதை அரசாங்கமும் அனுமதிக்காது. நீங்கள் தற்கொலை செய்வதால் ஒரு பிரச்சனையும் தீர்ந்துவிடாது. தற்கொலை என்பது வாழத்தெரியாதவர்கள் எடுக்கும் கோழைத்தனமான முடிவு.
உங்களைவிட படிப்பில், அந்தஸ்தில், பணவசதியில், தாழ்ந்த நிலையிலுள்ள பலர் வாழ்க்கையில் வரும் சோதனைகளை கடவுளின் துணையோடு தைரியமாய் எதிர்கொண்டு சமாளிக்கிறார்களே! உங்களது பிள்ளைகளை கிறிஸ்து தன் வலிமையால் மாற்றுவார். உங்களால் வளர்க்க முடியாத அளவுக்கு ஒரு கடினமான குழந்தையை கடவுள் உங்களுக்கு தரமாட்டார். மனிதனால் சுமக்க முடியாத அளவுக்கு கடினமான சூழ்நிலைகளை இறைவன் அனுமதிக்கமாட்டார். ஒரு குழந்தையால் சுமக்க முடியாத சுமையை ஒரு தாய் குழந்தையின் தலையில் சுமத்துவாளா? யோசியுங்கள். ஒரு காலத்தில் பெற்றோருக்கு கீழ்ப்படியாமல் தாறுமாறாய் வாழ்ந்து கொண்டிருந்த நாங்கள் கீழ்படிதலோடு, பணிவோடு வாழ பரமேஸ்வரன் அருள் தந்திருக்கிறார். அவரால் உங்கள் பிள்ளைகளை புனிதக் குழந்தைகளாக மாற்றமுடியும். நம்பிக்கை இழந்து விடாதீர்கள். பிள்ளைகளை மாற்ற உங்களால் முடியாமலிருக்கலாம். கடவுளுக்கு எல்லாமே எளிதான காரியம்.
வாய்க்கு வந்தபடி குழந்தைகளைத் திட்டுவதை இன்றே விட்டுவிடுங்கள். ஒருமுறை தன் மகனைப்பார்த்து ஒருதாய் எய்! எருமை மாடு, இங்கே வா என்று முறைத்துக்கொண்டு சீறினார். ஒரு மனிதனுடைய வயிற்றில் எப்படி எருமைமாடு பிறக்கமுடியும்? தயவுசெய்து தாயே, பிள்ளைகளை காயப்படுத்தும் கூர்மையான வார்த்தைகளால் பழித்துப் பேசாதீர்கள். உங்கள் பிள்ளைகளை கடவுளால் மட்டுமே மாற்றமுடியும் என்னும் முழுநம்பிக்கையோடு அவரிடம் உங்கள் பிள்ளைகளுக்காக முழுமனதோடு மன்றாடுங்கள். திக்கற்றவர்களுக்கு கர்த்தர் அடைக்கலமாயிருக்கிறார் என்பதே நமக்கு கடவுள் தந்த நம்பிக்கை. கடவுளைப் பார்த்து ஒரு பக்தன் உள்ளம் உருகி தெய்வமே, உம்மை உறுதியாய் பற்றிக்கொண்ட மனதையுடையவன், உம்மை மட்டுமே நம்பியிருக்கிறபடியால் நீர் அவனை முழுநிம்மதியுடன் காத்துக் கொள்ளும் (எசா. 26:3) என்று கூறுகிறான். உன் குழந்தைகள் அனைவருக்கும் ஆண்டவரே கற்றுத்தருவார். உன் பிள்ளைகள் நிறைவாழ்வு பெற்று சிறப்புறுவர் (எசா.54:13) என்று கடவுள் உறுதிமொழியாய் கூறியிருக்கிறார். உங்கள் பிள்ளைகள் உங்களுடைய பிள்ளைகள் அல்ல. இறைவன்உங்களிடம் வளர்க்கக்கொடுத்த அவருடைய குழந்தைகள். அவருடைய குழந்தைகளைப் பற்றி அவருக்கு அக்கரை இருக்காதா? உங்கள் குழந்தைகளை அவர் பார்த்துக்கொள்வார். நீங்கள் உங்கள் கவலைகளை அவர்மேல் வைத்துவிடுங்கள். அவர் உங்கள் குடும்பத்தை கட்டி எழுப்புவார். உங்கள் சொந்தங்களும் பந்தங்களும் உங்கள் வீட்டைப்பார்த்து வாயடைத்து போகுமளவுக்கு ஒரு பெரிய மாற்றத்தை கடவுள் உங்களுக்கு தருவார். உங்கள் பிள்ளைகள் நல்ல தரமான படிப்பு படித்து, காலாகாலத்தில் நல்ல வாழ்க்கைத் துணையை அடைந்து, குழந்தைக் குட்டிகளை பெற்று, உங்கள் பெயருக்கு புகழ் சேர்ப்பார்கள்.
அதற்கு நீங்கள் செய்ய வேண்டியது என்னவென்று கூறுகிறேன். இயேசுவால் உங்கள் பிள்ளைகளை முழுமையாக மாற்றமுடியும் என்று நம்புங்கள். உடனேயே உங்களுக்காக ‘கரிசனையோடு’ பிரார்த்தனை செய்யும் ஒரு கிறிஸ்தவ ஊழியரை அணுகி அவரிடம் உங்களுக்காக ஜெபிக்க சொல்லுங்கள். அவர் உங்களுக்காக ஜெபிப்பார். உங்கள் பிள்ளைகளுக்கு நல்லொழுக்கமுள்ள நண்பர்களை அவர் அறிமுகப்படுத்துவார். ‘பூவோடு சேர்ந்த நாரும் மணம் பெறும்’. நீங்கள் எப்படி ஜெபிக்கவேண்டும் என்று அந்த போதகர் உங்களுக்கு போதிப்பார். உங்களுக்கு ஒரு ஒளிமயமான எதிர்காலத்தை ‘நானே உலகிற்கு ஒளி’ என்று திருவாய் மலர்ந்த ஜோதிஸ்வரன் இயேசு அருளிச்செய்வார். அவர்மீது அன்புகூர்ந்து அவர் கட்டளைகளைக் கடைப்பிடிப்போர்க்கு ஆயிரம் தலைமுறைக்கும் பேரன்பு காட்டுபவர் கடவுள் (இ.ச. 5:10).
எங்கள் மகளுக்கு திருமணம் செய்து கொடுக்க காசு இல்லை. இயேசு எங்களுக்கு உதவி செய்ய முடியுமா ?