- ஜல்லிக்கட்டில் கிறிஸ்தவர்களின் நிலைப்பாடு
ஜல்லிக்கட்டை கிறிஸ்தவர்கள் ஆதரிக்கவேண்டும் என்பதற்கு கீழ்காணும் வசனத்தை “கிறிஸ்தவர்கள் ” என்று அழைக்கப்படுகிறவர்கள் மேற்கோள் காட்டியுள்ளனர்.
உழவு மாடுகள் இல்லையேல் விளைச்சலும் இல்லை; வலிமைவாய்ந்த காளைகள் மிகுந்த விளைச்சலை உண்டாக்கும். நீதிமொழிகள் 14:4
இங்கே காளை மாடுகளை உழவுத்தொழிலுக்கு (நிலத்தை உழுவதற்கு) பயன்படுத்துவதால் விளைச்சல் உண்டாகும் என்றுதானே பார்க்கிறோம். மாட்டுக்கு கொம்பு சீவி விட்டு அந்த கொம்பால் குத்துபட்டு செத்துப் போவதைப் பற்றியா கூறுகிறது? அது சொந்த செலவில் சூனியம் வைத்துக்கொள்வது போன்றது அல்லவா! அருமையான வேத விசுவாசியே! இந்த வசனத்துக்கும் மாட்டோடு யுத்தம் பண்ணும் ஜல்லிக்கட்டுக்கும் என்ன சம்பந்தம்?
1கொரி 10:31-ல் நீங்கள் உண்டாலும் குடித்தாலும் எதைச் செய்தாலும், எல்லாவற்றையும் கடவுளுடைய மாட்சிக்காகவே செய்யுங்கள் என்று வாசிக்கிறோம். ஜல்லிக்கட்டின் மூலம் இயேசுவின் பெயருக்கு எப்படி புகழ் உண்டாகும் என்று நீங்களே சிந்தியுங்கள்.
- இந்தியாவில் மாடுகளின் எண்ணிக்கை குறைந்துவிட்டதே என்று பலர் கேள்வி கேட்கின்றனர்.
மாடுகளின் எண்ணிக்கை குறைந்ததற்கு காரணம் ஜல்லிக்கட்டு நடத்தாததால் அல்ல. காளை மாடுகளை பயன்படுத்தி மாட்டுவண்டி, ஏர், செக்கு போன்றவற்றைப் பயன்படுத்திக்கொண்டிருந்த நாம் குட்டியானை, Tractor போன்ற மின்சார தானியங்கிகளுக்கு மாறிவிட்டோம். உழவுத்தொழிலையும, மாடு வளர்ப்பதையும் கேவலமான தொழிலாக நினைக்கத் தொடங்கியதால்தான் மாடுகள் குறைந்துவிட்டன. இந்திய மாணவர்கள் மற்றும் பெற்றோரின் அத்தகைய மனப்பான்மை மாறவேண்டும். ஜல்லிக்கட்டால் நூறு மாடுகளை காப்பாற்ற முடியுமானால், குட்டியானை போன்ற சரக்கு வண்டிகளை புறக்கணித்துவிட்டு தமிழ் கலாச்சார மாட்டுவண்டிக்கு மாறுவதால் பல கோடி மாடுகளை காப்பாற்றலாம். மாட்டு வம்சத்தை காப்பாற்ற விலையேறப்பெற்ற மனித உயிரை காவு வாங்கும் ஜல்லிக்கட்டு தேவை என்னும் கூற்று அர்த்தமற்றது. ஜல்லிக்கட்டின் மூலம்தான் தரமான பாலை நாம் அருந்தமுடியும் என்பது “பத்து பேரு செத்தாத்தான் என் பொழப்பு நடக்கும், அதனால எப்படியாவது 10 பேரை கொன்றுவிடு கடவுளே!” என்று ஒரு வெட்டியான் சொல்வதுபோல் இருக்கிறது.
- வெளிநாட்டு மாடுகளின் பால் ஆரோக்கியமற்றது என்று கண்டுபிடித்திருக்கிறார்களே என்று பலர் கேள்வி கேட்கின்றனர்.
அயல்நாட்டு ஜெர்சி பசுக்களின் பால் ஆரோக்கியமற்றது என்றும் இந்திய மாடுகளின் பால்தான் ஆரோக்கியமானது என்றும் விஞ்ஞானபூர்வமாக நிரூபணமாகிவிட்டால், மாடு வளர்த்து பால் உற்பத்தி செய்வோரிடமும், பால் பண்ணை வைத்திருப்போரிடமும் இந்திய மாட்டுப் பாலை வழங்கும் விழிப்புணர்வை உருவாக்கவேண்டும். ஜெர்சி பசுக்களை இறக்குமதி செய்வதை அரசு தடை செய்யவேண்டும். பால் வளத்துறையினர் வீரியமுள்ள பசுக்களை அரசு வளர்க்கவேண்டும். அதற்காக அவற்றோடு போராடி மாட்டைவிட விலை உயர்ந்த மனித உயிரை, காளையால் குத்துப்பட்டு இழந்தால்தான் அந்த வம்சத்தை காப்பாற்ற முடியும் என்பது நகைச்சுவையாக இருக்கிறது.
- ஜல்லிக்கட்டு தமிழரின் கலாச்சாரம் அல்லவா என்று பலர் கேள்வி கேட்கின்றனர்.
ஒரு பெண்ணின் கணவன் இறந்தால் அந்த பெண்ணின் கணவனை எரிக்கும் சிதையிலேயே அவளையும் உயிரோடு எரிக்க வேண்டும் என்னும் உடன்கட்டை ஏறும் பழக்கமும் தமிழரால் கடைபிடிக்கப்பட்ட தமிழ்க் கலாச்சாரமாகத்தான் இருந்தது. அதை ஒழித்தது தவறு என்று சொல்கிறீர்களா? ஜல்லிக்கட்டு என்பது பல்லாயிரக்கணக்கான ஆண்டு பழமையான ஒரு கலாச்சாரம் என்று வரலாற்று அறிஞர்கள் கூறுகிறார்கள். ஆனால், இதன்மூலம் எத்தனை லட்சம் அப்பாவி இளைஞர்கள் ஊனப்பட்டுள்ளனர்; எத்தனை ஆயிரம் மக்கள் மரணமடைந்துள்ளனர். எத்தனை ஆயிரம் பெண்கள் விதவைகளாக்கப்பட்டுள்ளனர்?என்பதையும் யோசிக்க வேண்டுமல்லவா? இப்படி ஒரு ஆபத்தான விளையாட்டை விளையாடுவதால் சமுதாயத்தில் என்ன முன்னேற்றம் உருவாகப்போகிறது? நிதானமாக யோசியுங்கள்! பழங்காலத்தில் மாட்டை அடக்குபவருக்குத்தான் மணப்பெண் கிடைக்கும் என்னும் சமுதாய சட்டம் இருந்ததால் ஒவ்வொரு இளைஞனும் தன் வீரத்தை நிரூபிக்கும் கட்டாயம் இருந்தது. ஆனால், இன்று அறிவும், அன்பும் அல்லவா முக்கியமாக கருதப்படுகிறது! எனவே, இந்த விஞ்ஞான வளர்ச்சியடைந்த யுகத்தில் இப்படிப்பட ஆபத்தான விளையாட்டுகளை கைவிடுவதே நல்லது.
- வாகனங்களை ஓட்டும்போது விபத்துகள் வருவதால் வாகனங்களை ஓட்டாமல் இருக்கலாமா என்று பலர் கேள்வி கேட்கின்றனர்.
நாம் வாகனம் ஓட்டும்போது ஒரு காரியத்தை சாதிக்க ஒரு இடத்துக்கு போகவேண்டும் என்பதற்காக ஓட்டுகிறோம். அதுவும் அதிக தூரம் போகவேண்டும் என்பதற்காகவும், வேகமாக போய் சேரவேண்டும் என்பதற்காகத்தான் வாகனங்களை பயன்படுத்துகிறோம். மாட்டோடு போராடுவது எதை சாதிப்பதற்காக? நாட்டுப்பற்று உடையவர்களே சிந்தியுங்கள்.