001) கிறிஸ்தவர்களுக்குள் சாதியே இல்லையே! இல்லாத சாதியை எப்படி ஒழிப்பீர்கள்?
பதில்: இந்து சனாதனவாதிகள் தங்கள் மதத்தைச் சார்ந்தவர்களில் பெரும்பான்மையானோரை ‘கீழ்சாதி’ என்று ஒடுக்குவது உலகறிந்த உண்மை. பொதுவாக ஒரு பிராமணர் ஒரு பொருளை பிராமணர் அல்லாதவருக்குக் கொடுக்கும்போது கையில் மரியாதையாகக் கொடுப்பதில்லை. மாறாக, அதை அவருடைய கையில் தூக்கி எறிவார். அண்மையில் ஆந்திர மாநிலத்தின் ஆளுநராக இருக்கும் தமிழிசை செளந்தர்ராஜன் என்பவர் பிராமணர் இல்லாததால் ஒரு துணியை ஒரு பிராமணர் அவருக்கு கொடுக்கும்போது தூக்கி எறிந்ததை காணொளியில் பார்த்தோம். சூத்திரர்கள் எனப்படுவோரைத் தொடக்கூடாது; அப்படித் தொட்டால் தீட்டு என்ற அவர்களுடைய சனாதனச் சட்டப்படி அவர்கள் எறிகிறார்கள். மேலும், சங்கராச்சாரியை பார்க்கப் போகும் பிராமணர் அல்லாதவர்களை சங்கராச்சாரி தனக்கு சமமான ஆசனத்தில் அமரவைக்காமல் தரையிலே அமரவைக்கிறார். எடுத்துக்காட்டாக, அமைச்சர் இராதாகிருஷ்ணன், அர்ஜுன் சம்பத், அண்ணாமலை போன்ற அரசியல்வாதிகள் சங்கராச்சாரியை பார்க்கச் சென்றபோது அவர்களை கீழே அமரவைத்து பேசியுள்ளார். காரணம் சூத்திரர் எனப்படுவோரை பிராமணர்கள் சம ஆசனத்தில் அமரவைக்கக்கூடாது என்ற அவர்களுடைய சனாதனச் சட்டப்படி அவர்கள் அப்படி செய்கிறார்கள். இப்படியெல்லாம் இன்னும் பலவிதங்களில் இந்துத்துவத்தில் சாதிப் பாகுபாடுகளும், அவமானப்படுத்தல்களும் அரங்கேறுகின்றன. அவற்றை எழுதினால் பக்கக் கணக்கில் எழுதவேண்டும்.
இதைப்பார்த்து பல கிறிஸ்தவர்கள், “பாதிக்கப்படும் இந்துக்கள் சுயமரியாதை அற்றவர்கள்” அதனால்தான் அவர்கள் சனாதனிகளுக்கு அடிமைகளாக இன்னும் இந்து மதத்திலேயே இருக்கிறார்கள்” என்று விமர்சிக்கிறார்கள். ஆனால், யதார்த்த உண்மை என்னவென்றால், இந்த இந்துத்துவ சாதியத்துக்கும், கிறிஸ்து தன் ஆருயிரைக் கொடுத்து உருவாக்கிய சத்திய ஜீவ மார்க்கமாகிய கிறிஸ்தவத்துக்கும் சம்பந்தமே இல்லாவிட்டாலும், பெரும்பான்மையான கிறிஸ்தவர்களும் இந்துக்களைப் போலவே சாதிப் பாகுபாட்டைக் கடைபிடிக்கிறார்கள் என்பதே நிதர்சனமான உண்மை. பல இடங்களில் ஒவ்வொரு சாதிக்கும் தனித்தனி திருச்சபைகள், தனித்தனி கல்லறைத் தோட்டங்கள் உண்டு என்பதே நிதர்சனமான உண்மை. விசுவாசிகள் மட்டுமல்ல; ஊழியக்காரர்களே பலர் பெயருக்குப்பின் சாதிப் பெயரைச் சேர்த்து எழுதுகிறார்கள். 90% கிறிஸ்தவர்களும் திருமணத்தில் சாதி பார்ப்பவர்கள்தான் என்பதே ஆய்வின் முடிவு. பாஸ்டர்களும் அதற்கு விதிவிலக்கல்ல. சில சாதிக் கிறிஸ்தவர்கள் அவர்களைவிட தாழ்ந்த சாதி என்று அழைக்கப்படும் கிறிஸ்தவர்களின் வீட்டில் தண்ணீர் குடிப்பதில்லை. போதகர்களும் அதற்கு விதிவிலக்கல்ல.
கிறிஸ்தவர்களில் யாராவது சிலர் சாதிமறுப்பு திருமணம் செய்தாலும், அவை மணமக்களே தீர்மானித்து முடிவு செய்யப்பட்ட காதல் திருமணங்கள் மட்டும்தானே தவிர, பெற்றோரின் முழு ஒப்புதலோடு செய்யப்பட்டவை அல்ல. காரணம், சாதியம் ஒரு பொருட்டல்ல என்று சிந்திக்கும் மனமுதிர்ச்சி உடைய பெற்றோர் கிறிஸ்தவரிடையே அபூர்வமாகவே உள்ளனர். கிறிஸ்தவ இளைஞர்கள் சிலர் சாதிமறுப்பாளர்களாக இருப்பதை இந்நாட்களில் பார்க்கமுடிகிறது. ஆனாலும், பெற்றோரின் வழிகாட்டுதல்படி சாதித் திருமணம் செய்யாமல், சாதிமறுப்புத் திருமணம் செய்யும்போது பெற்றோரின் மனதை சங்கடப்படுத்திவிட்டோமே என்ற குற்றமனசாட்சி மணமக்களை வதைப்பதையும் பார்க்கிறோம். பல கிறிஸ்தவர்கள் தங்கள் சாதியில் இணையர் கிடைக்காததால் திருமணம் செய்யாமலேயே வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள். ஏனெனில் சாதி பார்க்காமல் திருமணம் செய்வதை முறைகேடு என்று நினைக்கின்றனர்.
“கிறிஸ்தவர்கள் சாதி பார்ப்பதில்லை” என்று சென்னை, பெங்களூரு, மும்பை போன்ற மாநகரங்களில் பிறந்து வளர்ந்த சிலர் நினைத்துக்கொண்டிருக்கிறார்கள். ஏனென்றால், அவர்களுக்கு கிராம கிறிஸ்தவர்களின் நிலை தெரியாது. இரத்தத்தில் புற்றுநோய் இருப்பதை அந்த நோயாளிக்கு அருகில் அமர்ந்திருப்பவரால்கூட கண்டுபிடிக்க முடியாது. அவரது இரத்தத்தை பரிசோதனை செய்த பரிசோதனை நிபுணரால்தான் கண்டுபிடிக்கமுடியும். அதேபோல, சென்னையில் பிறந்து, வாழ்க்கையில் ஒருமுறைகூட கிறிஸ்தவர்கள் அதிகமாக வாழும் தமிழகத்தின் கிராமப் புறங்களைக்கொண்ட திருநெல்வேலி, நாகர்கோயில், தூத்துக்குடி போன்ற இடங்களுக்கு போகாத நகரவாசிகளுக்கு கிராம விசுவாசிகளின் நிலை எப்படி தெரியும்? கிராமங்களில் வாழும், கிறிஸ்தவர்களிடம் நேரடியாக உரையாடி, கள யதார்த்தத்தைப் புரிந்துகொண்டவர்கள், “கிறிஸ்தவர்கள் சாதி பார்ப்பதில்லை” என்று பேசுவதில்லை. நகர்புறங்களில் வாழும் கிறிஸ்தவர்களில்கூட சாதி பார்க்காமல் திருமணம் செய்தோரை விரல்விட்டு எண்ணிவிடலாம். ஏனென்றால், நகர்புறத்து மக்களும் கிராமங்களிலிருந்து வந்தவர்கள்தானே! எடுத்துக்காட்டாக தெற்குத் தமிழகத்தில் ‘கிறிஸ்தவ நாடார்’ என்று அழைக்கப்படுவோர் உலகில் எங்கே சென்று வாழ்ந்தாலும் 99% பேரும் சாதி பார்க்காமல் திருமணம் செய்வதில்லை என்பது அங்குள்ள கிறிஸ்தவரிடையே செய்யப்பட்ட ஆய்வின் முடிவு. சாதி பார்க்காமல் திருமணம் செய்தால் விவாகரத்து ஆகிவிடும் என்று வேடிக்கையாகச் சொல்வோரும் உண்டு. இது என்னைப் போன்ற தெற்குத் தமிழகத்தைச் சார்ந்த விசுவாசிகள் எல்லோருக்கும் அப்பட்டமாகத் தெரியும். கிறிஸ்தவர்கள் சாதி பாகுபாட்டுக் கொள்கையை கடைபிடிக்கிறார்கள் என்று தெரிந்த கிறிஸ்தவர்கள்கூட பலர் இந்த கொடிய தவறை மறைக்க பெருமுயற்சி செய்கிறார்களே தவிர அந்த கொடுமையிலிருந்து மக்களை காப்பாற்ற நினைக்கவில்லை. அப்படி மறைப்பதன்மூலம் கிறிஸ்தவத்தின் மானத்தைக் காப்பாற்றிவிடலாம் என்று அந்த பாரம்பரியவாத கிறிஸ்தவர்கள் நினைக்கிறார்கள். அதனாலேயே சாதி மறுப்பு பரப்புரைகளை யார் பேசினாலும் அவர்கள் வெறுக்கிறார்கள்.
ஒருமுறை, “சாதியே இல்லாத குமரி மாவட்டத்தில் சாதிமறுப்புக் கருத்தரங்கு ஏன் நடத்தவேண்டும்?” என்று ஒரு சாதி உணர்வாளர் என்னிடம் கேட்டார். அதற்கு நான், “சமாதானமாக இருக்கும் குமரி மாவட்டத்தில், ‘சமாதான பெருவிழாக்கள்’ ஏன் நடத்தவேண்டும்? எல்லா குடும்பங்களும் ஆசீர்வதிக்கப்பட்டிருக்கும் நிலையில், ‘குடும்ப ஆசீர்வாத பெருவிழாக்கள்’ ஏன் நடத்தவேண்டும்?” என்று கேட்டேன். கிறிஸ்தவர்கள் சாதிச் சாக்கடையில் உழன்று, தீண்டாமையைக் கடைபிடிப்பவர்கள் என்று மற்றவர்கள் கண்டுபிடித்து, கிறிஸ்தவத்தை தரக்குறைவாக நினைத்தால் அது அவமானமாக இருக்கும் என்று நினைத்து அவர் அப்படி சொன்னார். ஆனால், பெரும்பான்மையான பிறருக்கு கிறிஸ்தவர்கள் சாதி உணர்வு உடையவர்கள் என்று ஏற்கெனவே தெரியும். கிறிஸ்தவர்களுக்கு, குறிப்பாக பாஸ்டர்களுக்கு விசுவாசிகளின் மனமாற்றத்தைவிட, பிறருடைய மதமாற்றமே முக்கியமாக தெரிகிறது. சாதியால் பாதிக்கப்பட்டவர்களும், சாதியத்தால் பாதிக்கப்பட்டவர்கள்மீது அடிப்படை இரக்கம் உடையவர்களும், சாதியமே கிறிஸ்தவத்தின் வளர்ச்சிக்கு மிகப்பெரிய தடையாக இருக்கிறது என்று தெரிந்தவர்களும்தான் சாதியம் ஒழியவேண்டும் என்று விரும்புவார்கள். தன் மகனுக்கு புற்றுநோய் இருப்பதை கண்டுபிடித்தபின், அவனுக்கு புற்றுநோய் இருக்கிறது என்று வெளியேச் சொன்னால் அவமானமாக இருக்கும் என்று நினைத்து, “என் மகனுக்கு புற்று நோய் இல்லை” என்று மருத்துவமனையில் உள்ளவர்களிடம் ஒரு அன்புள்ள தந்தை பொய் சொல்லமுடியாது. ஒருவர் தனிப்பட்ட முறையில் பாதிக்கப்படும்போது மானம் மரியாதை எல்லாவற்றையும் மறந்து கத்தி, கதறத் தொடங்கிவிடுவாரல்லவா!
இந்தியாவின் பல இடங்களில் தேநீர் கடைகளில் ஆதிக்க சாதியினருக்கும் ஒடுக்கப்பட்டவர்களுக்கும் தேனீர் அருந்துவோருக்கு தனித்தனி குவளைகள் வைக்கப்பட்டிருக்கும். பெரும்பாலும் இந்து கோயில்கள் சாதி அடிப்படையில் தனித்தனியாக பிரித்துக் கட்டப்பட்டிருக்கும். அதேபோல பல ஊர்களில் கிறிஸ்தவத் திருச்சபைகள் சாதி அடிப்படையில் பிரித்துக் கட்டப்பட்டுள்ளதை காணமுடியும். குமரி மாவட்டம் அருமநல்லூர், ஆண்டித்தோப்பு, கொற்றிகோடு, திருநெல்வேலி மாவட்டம் நாஞ்சாங்குளம், டக்கரம்மாள்புரம், விருதுநகர் மாவட்டம் ஏழாயிரம் பண்ணை, சிவகாசி சாட்சியாபுரம், மதுரை மாவட்டம் திருமங்கலம், ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம், பெருந்துறை, கோபி செட்டிப்பாளையம், தேனி மாவட்டம் பெரியகுளம், திருப்பூர், உடுமலைப்பேட்டை என்னும் ஊர்களில், ஒரே ஊரில் இரண்டு CSI சபைகள் உள்ளன. ஒன்று ‘நாடார்’ என அழைக்கப்படுவோருக்குரியது மற்றொன்று ‘தலித்’ என அழைக்கப்படுவோருக்குரியது. இதில் நாடாருடைய சபைக்கு தலித்துகள் சென்றால் நாடார்கள் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள்; தலித்துகளுடைய சபைக்கு நாடார்கள் போவதில்லை. கோவையில் CSI CHRIST CHURCH என்று ஒரு சபை உள்ளது. அதில் நாடார்களைத் தவிர வேறு யாரையும் அனுமதிப்பதில்லை. அந்த சபையில் அங்கமாக விரும்புவோர் தங்கள் சாதி சான்றிதழை காட்டவேண்டும் என்று அந்த சபையோடு சம்பந்தப்பட்ட சிலர் சொன்னார்கள். மதுரை இராமநாதபுரம் திருமண்டலத்திலுள்ள உறுப்பினர் சேர்க்கை படிவத்தில் ‘சாதி’ என்ற கட்டம் இருப்பதை நானே நேரடியாகப் பார்த்திருக்கிறேன்.
தென்காசி மாவட்டத்திலுள்ள பங்களா சுரண்டை CSI ‘பனையேறி நாடாருக்கும்’, கீழச்சுரண்டை CSI ‘வியாபாரி நாடாருக்கும்’ உரியது. அதில் வியாபாரி நாடாருடைய சபையில், பனையேறி நாடார்களுக்கு அங்கத்துவம் கொடுப்பதில்லை. சில வியாபாரி நாடார்கள் பனையேறி நாடார்களுடைய வீட்டில் தண்ணீர் குடிக்கமாட்டார்கள் என்றும் கேள்விப்படுகிறோம். இந்த வியாபாரி நாடார்களுடைய சபை விருந்துகளில் வேறு சாதியினர் பங்கெடுத்தால், அவர்கள் சபை வளாகத்திலிருந்து வெளியேற்றப்பட்ட சம்பவங்கள் நடந்துள்ளன.
குமரி மாவட்டத்தில் தோப்பூர் என்னும் ஒரே கிராமத்தில் இரண்டு கத்தோலிக்க சபைகள் இருக்கின்றன. ஒன்று ‘வெள்ளாளர்’ எனப்படுவோருக்குரியது. மற்றொன்று ‘நாடார்’ எனப்படுவோருக்குரியது.
தூத்துக்குடி மாவட்டம் கயத்தார் என்ற ஒரே ஊரில் நாடார் எனப்படுவோருக்கும், பிள்ளைமார் எனப்படுவோருக்கும் தனித்தனி கத்தோலிக்க சபைகள் உள்ளன.
விழுப்புரத்தில் “வன்னியர்” எனப்படுவோருக்கென்றும், ‘தலித்’ எனப்படுவோருக்கும் தனித்தனி தேவாலயமும் உள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் என்னும் ஊரில் பிள்ளைமார் எனப்படுவோருக்கும், தலித்துகள் எனப்படுவோருக்கும் தனித்தனி கத்தோலிக்க சபைகள் உள்ளன.
சிவகங்கை மறைமாவட்டம் ஆர்.எஸ்.மங்கலம், எட்டியத்திடல், ஆண்டாவூரணி, வளியன்வயல், சுக்குராபுரம் ஆகிய ஊர்களில் இடைநிலை சாதியினர் எனப்படுவோருக்கும், தலித் எனப்படுவோருக்கும் தனித்தனி கத்தோலிக்க பேராலயங்கள் உள்ளன. கிறிஸ்தவர்களுக்குள் சாதிப்பிரிவினைகள் இல்லையானால், ஏன் சபைகள் இப்படி சாதி அடிப்படையில் பிரிந்து கிடக்கவேண்டும்? இந்திய கிறிஸ்தவர்களை பற்றி முழுக்க தெரியாமல் சிலர், “கிறிஸ்தவத்தில் சாதி உண்டு; ஆனால் தீண்டாமை இல்லை” என்று சொல்கிறார்கள். “நாங்கள் நாடார்கள்; நாங்கள் உடையார்கள்; நாங்கள் பிள்ளைமார்கள்; எங்கள் கோயிலுக்குள் தலித்துகள் வரக்கூடாது” என்று புறக்கணித்து இழிவுபடுத்துவது சாதி உணர்வையும் தாண்டி தீண்டாமையல்லாமல் வேறு என்ன?
தென் தமிழகத்தில் பொதுவாக ‘இரட்சணிய சேனை’ என்ற சபையில் ‘தலித்’ என்று தங்களை அழைத்துக்கொள்வோர் மட்டும்தான் இணைகிறார்கள். வேறு எந்த சாதியினரும் அங்கத்தினர் ஆவதில்லை. அவர்கள் பிறரை எதிர்பார்ப்பதும் இல்லை. இரட்சண்ய சேனை சபையிலுள்ளவர்கள் என்றாலே தாழ்த்தப்பட்ட சாதியை சார்ந்தவர்கள்தான் என்று எல்லோருக்கும் தெரிந்திருப்பதால் அந்த சபையை சார்ந்தவர் என்று சொன்னாலே தாங்கள் தாழ்த்தப்பட்டவர் என்று பிறர் எளிதில் புரிந்துகொள்வதால் அந்த இழிவிலிருந்து விடுதலை அடைவதற்காகவே பலர் வேறு சபைகளுக்கு போகிறார்கள். ஆனாலும் திருமணம் வரும்போது அங்கும் சக கிறிஸ்தவர்களால் புறக்கணிக்கப்படுகிறார்கள் என்பதே ஒரு கொடிய உண்மை.
சில ஊர்களில் ஒரே கட்டடத்தில் ‘தலித்’ எனப்படும் கிறிஸ்தவருக்கும், மற்றவர்களுக்கும் வெவ்வேறு நேரங்களில் ஆராதனை நடக்கிறது. எடுத்துக்காட்டு: கடலூர் கிறிஸ்தவர்களுக்குள் சாதிப் பிரிவினைகள் இல்லையானால், தொழுகை நேரங்களில் ஏன் பாகுபாடு காட்டவேண்டும்? பல கிறிஸ்தவர்கள் இன்றும் தங்கள் பெயருக்குப்பின் சாதிப்பெயரை தற்பெருமைக்காக எழுதி தன்னை சக கிறிஸ்தவர்களிடமிருந்து அந்நியப்படுத்துகிறார்கள். பல ஊர்களில் ‘உயர்சாதியினர்’ என்று அழைக்கப்படும் கிறிஸ்தவர்களுடைய கல்லறைத் தோட்டத்தில் ‘கீழ்சாதியினர்’ என்று அழைக்கப்படும் கிறிஸ்தவர்களின் சடலங்களை அடக்கம் செய்ய அனுமதிப்பதில்லை. (எடுத்துக்காட்டு: திருச்சி கத்தோலிக்க கல்லறைத் தோட்டம்). ஆக, கிறிஸ்தவர்களும் சனாதனத்தைக் கடைபிடிக்கிறார்கள் என்றுதானே அர்த்தம்! நம் கண்ணில் உத்தரத்தை வைத்துக்கொண்டு பிறருடைய கண்ணிலுள்ள துரும்பை எடுக்க வகைதேடுவதில் என்ன அர்த்தம் இருக்கிறது?
எத்தனையோ போதகர் ஐக்கியங்களில் தலித் என்று அழைக்கப்படும் போதகர்கள், இடைநிலைச் சாதி என்று அழைக்கப்படும் போதகர்களால் புறக்கணிக்கப்படுகிறார்கள். அது அவர்களை எவ்வளவு வேதனைப்படுத்தும் என்று நாம் சிந்திக்கவேண்டும். கிறிஸ்தவர்களின் சாதி உணர்வால் எத்தனை சபைகளில் அநியாயப் பாகுபாடுகளும், அடிதடிகளும் நடக்கிறது என்பதை நாம் அறிவோம். பூனை கண்ணை மூடிவிட்டால் உலகமே இருட்டாயிருக்கிறது என்று நினைக்குமாம். அதுபோல உலகின் ஏதோ ஒரு மூலையில் அமர்ந்துகொண்டு மற்ற இடங்களில் என்ன நடக்கிறது என்று தெரியாமல் பேசக்கூடாது. மணிப்பூரில் நூற்றுக்கணக்கான சபைக் கட்டடங்கள் எரித்து சாம்பலாக்கப்பட்டாலும், நூற்றுக்கணக்கானோர் கொல்லப்பட்டாலும், “எங்கள் ஊரில் அப்படி எதுவும் நடக்கவில்லையே!” என்று சப்பைக் கட்டமுடியுமா? அதுபோல்தான் உங்கள் பேச்சும் இருக்கிறது.