002) சாதியம் பெரிய பாவமா?

பதில்: சகோதரர் ஒன்றுபட்டு வாழ்வது எத்துணை நன்று, எத்துணை இனியது! (தி.பா. 133:1) என்று தாவீது அரசர் கூறுகிறார். இறைமக்கள் ஒற்றுமையாக வாழ்வதன் முக்கியத்துவத்தை பழைய உடன்படிக்கையின் நாட்களில் வாழ்ந்த ஆன்மீகத் தலைவர்களே தெரிந்து வைத்திருந்தனர் என்பதற்கு இந்த வசனம் ஒரு சான்றாகும். ஒரே தாயின் பிள்ளைகளைப்போல ஒற்றுமையாக வாழ வேண்டிய கிறிஸ்தவர்கள் இந்துத்துவ சாதியத்தின் அடிப்படையில் பிரிந்து கிடப்பது மிகவும் அலங்கோலமாக இருக்கிறது. இந்தியாவைப் பொறுத்தவரையில் பெரும்பான்மையான கிறிஸ்தவர்கள் சக கிறிஸ்தவரை, “நீங்கள் எங்கள் சாதி அல்ல; நீங்கள் கீழ்சாதி; நீங்கள் பிறசாதி; உங்களை நான் திருமணம் செய்யமுடியாது” என்று தேவனுடைய சாயலாக படைக்கப்பட்ட, கிறிஸ்துவின் இரத்தத்தால் கழுவப்பட்ட சக விசுவாசியை அடிப்படை மனிதநேயமே இல்லாமல் இழிவுபடுத்திப் புறக்கணிக்கிறார்கள். இந்த கொடிய செயல் பாவம் இல்லையா?
மரக்காயர் என்ற சாதிப் பிரிவிலிருந்து மீட்கப்பட்ட ஒரு முன்னாள் இஸ்லாமியர், ராவுத்தர் என்ற சாதிப் பிரிவிலிருந்து மீட்கப்பட்ட ஒரு முன்னாள் இஸ்லாமியரை திருமணம் செய்ய முயற்சி செய்யும்போது, நாங்கள் ‘ராவுத்தர் கிறிஸ்தவர்கள்’; நீங்கள் ‘மரக்காயர் கிறிஸ்தவர்கள்’; உங்களை நாங்கள் திருமணம் செய்யமுடியாது என்று சொல்வது எவ்வளவு கேவலமாக இருக்கிறது! அதேபோல, நாடார் என்ற சாதிப் பிரிவிலிருந்து மீட்கப்பட்ட ஒரு முன்னாள் இந்து, பறையர் என்ற சாதிப் பிரிவிலிருந்து மீட்கப்பட்ட ஒரு முன்னாள் இந்துவைத் திருமணம் செய்ய முயற்சி செய்யும்போது, நாங்கள் ‘நாடார் கிறிஸ்தவர்கள்’; நீங்கள் ‘பறையர் கிறிஸ்தவர்கள்’; உங்களை நாங்கள் திருமணம் செய்யமுடியாது என்று சொல்வது எவ்வளவு அசிங்கமாக இருக்கிறது! இதைத் தவறு என்று புரிந்துகொள்வதற்கு நாம் பல்கலைக்கழகத்திற்கு சென்று படிக்கவேண்டிய தேவையில்லை. அடிப்படைப் பகுத்தறிவாளிக்கே அது தெரியும்.
தன்னால் படைக்கப்பட்ட உலக மக்கள் அனைவரும் சகோதரத்துவ சிந்தையோடு வாழவேண்டும் என்பதற்காக ஒரே மனிதனைப் (ஆதாம்) படைத்து, அவனிலிருந்து உலக மக்கள் அனைவரையும் தோன்றப்பண்ணிய கடவுளை இழிவுபடுத்தி வேதனைப்படுத்தும் செயல் அல்லவா இது! யூதர்களையும் யூதரல்லாதவர்களையும் ஆன்மீகமாக ஒரே உடலாக இணைப்பதற்காக தன் உயிரையே கொடுத்த (எபே. 2:15) அந்த இலட்சிய திருமகனாரின் முகத்தில் சாத்தான் கரிபூச நாம் கொடுத்த எளிய வாய்ப்பல்லவா இது!
கடவுள் நம்பிக்கை இல்லாதவர்களைவிட கிறிஸ்தவர்கள் மோசமாக இருக்கிறார்களே! இறையரசில் ஒரு விசுவாசியின் நியாயமான உரிமையைப் பறிக்க சக விசுவாசிக்கு என்ன உரிமையிருக்கிறது? கிறிஸ்து தன் உயிரைக் கொடுத்து வாங்கிய சபைக்கும் இந்துத்துவ சாதிப் பாகுபாடுகளுக்கும் என்ன சம்பந்தம் இருக்கிறது? இந்துத்துவத்தால் இழிவுபடுத்தப்பட்டு, வெறுக்கப்படும் மக்கள் சகோதரத்துவத்தைத் தேடி கிறிஸ்துவிடம் வருவதற்கு இந்த பாகுபாடு தடையாக இருக்கிறதே!
பிராமணர்களாலும், மேல்சாதி என்று அழைக்கப்படும் பிறராலும் இழிவுபடுத்தப்பட்டு, ஒடுக்கப்பட்ட *அம்பேத்கர்,* இந்துத்துவ *சாதி இழிவிலிருந்து* விடுதலை அடைவதற்காக ஒடுக்கப்பட்ட மக்கள் 6 லட்சம் பேரோடு 1956-ல் *பெளத்த மதத்துக்கு* மாறினார்.
1986-ல் நெல்லை *மீனாட்சிபுரத்திலுள்ள* 900 இந்து தலித்துகள் *இந்துத்துவ சாதி இழிவிலிருந்து விடுதலை அடைந்து, சகோதரத்துவத்தை அனுபவிக்க* இஸ்லாத்துக்கு மாறினார்கள்.
2018 ஏப்ரல் *குஜராத்திலுள்ள* 300 இந்து தலித்துகள் *இந்துத்துவ சாதி இழிவிலிருந்து விடுதலை அடைந்து, சகோதரத்துவத்தை அனுபவிக்க* பெளத்தத்துக்கு மாறினார்கள்.
2020 பிப்ரவரியில் *கோவை மேட்டுப்பாளையத்திலுள்ள* 430 இந்து தலித்துகள் *இந்துத்துவ சாதி இழிவிலிருந்து விடுதலை அடைந்து, சகோதரத்துவத்தை அனுபவிக்க* இஸ்லாத்துக்கு மாறினார்கள்.
2020 அக்டோபர் *உ.பி-யிலுள்ள* 236 இந்து தலித்துகள் *இந்துத்துவ சாதி இழிவிலிருந்து விடுதலை அடைந்து சகோதரத்துவத்தை அனுபவிக்க* பெளத்தத்துக்கு மாறினார்கள்.
லட்சக்கணக்கான ஒடுக்கப்பட்டோர் *இந்துத்துவ சாதி இழிவிலிருந்து விடுதலை அடைவதற்காக* விரக்தியில் *கடவுளே இல்லை* என்னும் கொள்கைக்கு மாறிக்கொண்டிருக்கிறார்கள்.
இவர்களெல்லாம் தேடிய சகோதரத்துவ அன்பைத்தேடி நம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவிடம் ஏன் வரவில்லை?
“இந்துத்துவ சாதிய இழிவிலிருந்து விடுதலை அடைவதே மதமாற்றத்தின் நோக்கமாக இருக்குமானால் நிச்சயமாக கிறிஸ்தவத்தை யாரும் தேர்வு செய்யமாட்டார்கள்” என்று திருமாவளவன் என்பவர் தன் காணொலியில் கூறுகிறார்.
பாவங்களிலிருந்து, சாபங்களிலிருந்து விடுதலை அடைய இயேசுவிடம் வரும் உரிமை மனிதனுக்கு உண்டென்றால், சாதிவெறியிலிருந்தும், சாதித் தாழ்வு மனப்பான்மையிலிருந்தும் விடுதலை அடைய நம் கருணை மயமான கடவுள் இயேசுவிடம் வரக்கூடாதா?
நியாயப்பிரமாணத்தால் மட்டுமல்ல, சாதிப்பிரமாணத்தால் பாதிக்கப்பட்டோரையும் பார்த்து : “வருத்தப்பட்டு பாரம் சுமப்பவர்களே, எல்லோரும் என்னிடத்தில் வாருங்கள்; உங்களுக்கு நான் இளைப்பாறுதல் தருகிறேன்” (மத். 11:28) என்று நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்து கரிசனையோடு அழைக்கிறார். வேதாகம வார்த்தைகள் இன்றும் உயிருள்ள ஜீவ வார்த்தைகள் அல்லவா! அப்படியிருக்க, தலைமுறைகளாக அம்மக்கள் வருத்தப்பட்டு சுமந்த சாதி இழிவு என்னும் பாரத்திலிருந்து இளைப்பாறுதல் அடைய விரும்பி, அவர்கள் ஏன் நம் விடுதலை நாயகன் இயேசு கிறிஸ்துவிடம் வரவில்லை என்று என் மனம் கேள்வி கேட்கிறது. நான் கேட்கும் கேள்வி தவறானதா? அவர்கள் தங்கள் விடுதலைக்காக கிறிஸ்தவத்தை தேர்வு செய்யாத காரணம்: இந்துத்துவ சாதி பாகுபாடுகளும், இழிவுகளும், கொடுமைகளும் கிறிஸ்தவர்களுக்குள்ளும் அப்படியே உள்ளன என்பதல்லவா அந்த கசப்பான பதில்!
கிறிஸ்தவர்களின் நிலை இப்படி இருக்கும்போது கிறிஸ்தவ சாதி வெறியர்கள் பரப்பும் ஆன்மீக மீட்பை அடிப்படை மனிதவியல் அறிவுடையவர்கள் எப்படி ஏற்றுக்கொள்ளமுடியும்? ஒரு அடிமைத்துவத்திலிருந்து வேறொரு அடிமைத்துவத்துக்கு நகர்வதில் அவர்களுக்கு என்ன பயன் கிட்டப்போகிறது? சிந்திப்போம்.
இப்படி மிகப்பெருங்கூட்ட மக்கள் இயேசுவின் மகா முக்கியத்துவம் வாய்ந்த ஆன்ம இரட்சிப்பை அடைவதற்கு தடையாக இருக்கும் கிறிஸ்தவ சாதிப் பாகுபாடுகளை சின்ன பாவம் என்று கூறமுடியுமா?
பல ஊர்களில் ஒரே தெருவில் சாதி அடிப்படையில் இரட்டை திருச்சபைகள் பிரிந்து கிடக்கின்றன. அதாவது, ஒரே ஸ்தாபனத்தின் வழிபாட்டு ஸ்தலங்கள் இரண்டு சாதியினருக்கென்று தனித்தனியே ஒரே ஊரில் பிரித்து கட்டப்பட்டுள்ளன. (எடுத்துக்காட்டு: குமரி மாவட்டம்: அருமநல்லூர், கொற்றிகோடு, ஆண்டித்தோப்பு, தோப்பூர், கோவை, திருநெல்வேலி: டக்கரம்மாள்புரம், நாஞ்சாங்குளம், ஈரோடு: சத்தியமங்கலம், கோபிசெட்டிப்பாளையம், பெருந்துறை, சிவகாசி சாட்சியாபுரம், திருப்பூர், தேனி பெரியகுளம், உடுமலைப்பேட்டை etc. அதில் மேல்சாதி என்று அழைக்கப்படுவோரின் சபைக்கு கீழ்சாதி என்று அழைக்கப்படுவோர் சென்றால் அவர்கள் ஏற்றுக்கொள்ளப்படுவதில்லை. கிறிஸ்துவால் மீட்கப்பட்ட ஒரு விசுவாசி சக விசுவாசியிடம் காட்டும் இந்த சாதி வக்கிரம் சிறிய பாவம் என்று சொல்லமுடியுமா?
பல கிறிஸ்தவர்கள், தேவ ஊழியர்கள் இன்றும் தங்கள் பெயருக்குப்பின் தங்கள் சாதிப்பெயரை தற்பெருமைக்காக எழுதி தங்களிடமிருந்து சக கிறிஸ்தவர்களை அந்நியப்படுத்துகிறார்கள். அவர்கள் பெயர்களை இங்கே நான் அட்டவணைப்படுத்த விரும்பவில்லை.
கிறிஸ்தவ *கல்லறைத் தோட்டத்தில்கூட* இந்த சாதி பாகுபாட்டுக் கொடுமைகளை அப்பட்டமாகக் காணலாம். தாழ்த்தப்பட்டவருக்கென்றும் மேல்சாதி என்று தங்களை அழைத்துக்கொள்வோருக்கென்றும் தனித்தனி கல்லறைத் தோட்டங்கள் நியமிக்கப்பட்டுள்ளன. ‘உயர்சாதியினர்’ என்று அழைக்கப்படும் கிறிஸ்தவர்களுடைய கல்லறைத் தோட்டத்தில் ‘கீழ்சாதியினர்’ என்று அழைக்கப்படும் கிறிஸ்தவர்களின் சடலங்களை அடக்கம் செய்ய அனுமதிப்பதில்லை. (எடுத்துக்காட்டு: *திருச்சி கத்தோலிக்க கல்லறைத் தோட்டம்).* இது ஏதோ இரண்டாம் நூற்றாண்டில் நடந்த வரலாற்று நிகழ்வு அல்ல. இன்றும் நிலவில் இருக்கும் கொடுமை. இது தனிமனித உரிமை மீறல் அல்லவா!
அரசியல் தேர்தல் வரும்போது கிறிஸ்தவர்களில் பெரும்பான்மையானோர் வேட்பாளர் *நல்லவரா, நாட்டுக்கு நன்மை செய்பவரா* என்று பாராமல், *தங்கள் சாதிக்காரரா* என்று பார்த்தே வாக்களிக்கிறார்கள் என்பதல்லவா நடைமுறை உண்மை!
சாதி மறுப்பு திருமணம் செய்த கிறிஸ்தவ மணமக்கள், கிறிஸ்தவப் பெற்றோராலேயே *ஆணவக் கொலை* செய்யப்பட்டுள்ளனர். (எ.கா. : *கேரளா குமாரநல்லூர் கெவின் ஜோசப் படுகொலை, செங்கல்பட்டு தச்சூர் இராஜேந்திரன் படுகொலை).* தங்கள் கிறிஸ்தவ பிள்ளைகள் சாதி மறுப்பு திருமணம் செய்ததால், பல பிள்ளைகளுக்கு வரவேண்டிய *குடும்ப சொத்து* மறுக்கப்பட்டுள்ளது.
இந்துத்துவ சாதியத்தால் பாதிக்கப்பட்ட *இந்து தலித்துகள் தங்கள் உளவியல் விடுதலையைத் தேடி இயேசுவிடம் வராமல் கூட்டம் கூட்டமாக *இஸ்லாத்துக்கும், பெளத்தத்துக்கும்* மாறுவதற்கு கிறிஸ்தவர்களுக்குள் இருக்கும் இந்த சாதி பாகுபாடுகளே மிகப்பெரிய காரணமாக அமைகின்றன என்பதே நிதர்சனமான பேருண்மை.
கண்ணுக்கு தெரிந்த சகோதரனிடம் அன்புகாட்ட முடியாதவர் கண்ணுக்குப் புலப்படாத கடவுளிடம் எப்படி அன்பு காட்டமுடியும்? (1யோவான் 4:18) என்று வேதம் கேள்வி கேட்கிறது. *கண்ணுக்குத் தெரிந்த சகோதரனை கீழ்சாதி, பிறசாதி என்று புறக்கணித்துவிட்டு* கண்ணுக்குத் தெரியாத கடவுளிடம், “அன்பு கூருவேன், இன்னும் அதிகமாய்…” என்று பாடுவதில் என்ன அர்த்தம் இருக்கிறது?
இனி உங்களிடையே யூதர் என்றும் கிரேக்கர் என்றும், அடிமைகள் என்றும் உரிமைக் குடிமக்கள் என்றும் இல்லை; ஆண் என்றும் பெண் என்றும் பாகுபாடு இல்லை; கிறிஸ்து இயேசுவோடு இணைந்துள்ள நீங்கள் யாவரும் ஒன்றாய் இருக்கிறீர்கள் (கலா. 3:28) என்று திருத்தூதர் பவுல் அறிவுறுத்துகிறார்.
தனக்கு எதிராகத் தானே பிளவுபடும் எந்த அரசும் பாழாய்ப்போகும். அவ்வாறே தனக்கு எதிராகத் தானே பிளவுபடும் எந்த நகரமும் வீடும் நிலைத்து நிற்காது (மத். 12:25) என்று ஆண்டவர் சொல்கிறார். அப்படியானால், *சபையாருக்கு எதிராக சக சபையாரே சாதி அடிப்படையில் பிரிந்து சண்டையிடும் நிலையில் சபை எப்படி உருப்படப் போகிறது?* சிந்தித்துப் பாருங்கள். _”ஒருவரையும் இழிவாகக் கருதவேண்டாம்; கவனமாயிருங்கள்” (மத். 18:10)_ என்று இயேசு கிறிஸ்து எச்சரிக்கிறார். அந்த வார்த்தைகளுக்குக் கீழ்படிகிறோமா?
ஒரு பெண்ணை இச்சையோடு பார்ப்பது அவரோடு விபச்சாரம் செய்வதற்கு சமமானால் (மத்.5:28), பிறரை கீழ்ஜாதி என்று புறக்கணிப்பது அவரை கொலை செய்வதற்கு சமமல்லவா?
யாரையும் தீட்டுள்ளவர் என்றோ, தூய்மையற்றவர் என்றோ சொல்லக்கூடாது எனக் கடவுள் எனக்குக் காட்டினார் (தி.ப. 10:28) என்று திருத்தூதர் பேதுரு அறிவுறுத்துகிறார்.
நீங்கள் சாலை விபத்தில் அடிபட்டு துடித்துக்கொண்டிருக்கும்போது உங்கள் சாதிக்காரன் வந்துதான் உங்களுக்கு உதவி செய்யவேண்டும்; மற்ற சாதிக்காரர்கள் உங்களுக்கு உதவி செய்யக்கூடாது என்று நீங்கள் கூறுவீர்களா? உங்களுக்கு சேவை தேவைப்படும்போது சாதியைப் பார்க்கமாட்டீர்கள்; யாராவது வந்து உங்கள் உயிரைக் காப்பாற்றினால் போதும் என்று நினைப்பீர்கள். ஆனால், திருமணத்தில் சாதி பார்ப்பீர்கள். இது எந்த விதத்தில் நியாயம்? நீங்கள் அணிந்திருக்கும் உடையை உருவாக்குகின்ற செயல்முறைகள் எல்லாவற்றையும் உங்கள் சாதிக்காரர்கள்தான் செய்தார்களா? உங்கள் சாதிக்காரர்களே பருத்தி விதைத்து, பஞ்சு எடுத்து, நூல் நூற்று, சாயமேற்றி, நெசவு செய்து, தையல் செய்த உடையைத்தான் நீங்கள் உடுக்கிறீர்களா?
ஒருமுறை ஒருவர் தன்னை, “கிறிஸ்தவ நாடார்” என்று அறிமுகப்படுத்தி என்னை அந்நியப்படுத்தினார். கிறிஸ்தவத்தின் சாராம்சமே அன்புதானே! அன்புள்ளவர்கள் அப்படி சாதி அடிப்படையில் பிறரை புறக்கணிக்கமுடியுமா? இயேசு கிறிஸ்துவின் அன்புப் பிரமாணத்துக்கும் சாதி பாகுபாடுகளுக்கும் சம்பந்தமே இல்லையே! நான் கிறிஸ்தவ விபச்சாரி, நான் கிறிஸ்தவ கொலைகாரன், நான் கிறிஸ்தவ பொய்யன், நான் கிறிஸ்தவத் திருடன் என்று சொல்வதுபோல் அல்லவா இது இருக்கிறது!
இந்த அவல நிலையை பார்த்தபின்பும் கொஞ்சம்கூட மனவேதனையோ அக்கறையோ உங்களுக்கு இல்லையென்றால் இந்தியாவிலுள்ள அவிசுவாசிகள் மீட்கப்படவேண்டும் என்று உங்களுக்கு கொஞ்சம்கூட கரிசனை இல்லை என்று அர்த்தம். அதாவது நரகத்துக்குச் செல்லும் விலையேறப்பெற்ற ஆன்மாக்களைவிட உங்கள் சாதிக்கு முக்கியத்துவம் கொடுக்கிறீர்கள் என்று அர்த்தம். ஆகவே, இயேசு கிறிஸ்து உங்களுக்காக துடிக்கத் துடிக்கத் தன் உயிரை கொடுத்ததை மறந்து பேசுகிறீர்கள். இயேசு மட்டும்தான் பரலோகத்துக்குப் போகும் ஒரே வழி என்றும் (யோவா. 14:6, தி.ப. 4:12) என்றும், எல்லா மனிதரும் மீட்புப் பெறவும் உண்மையை அறிந்துணரவும் வேண்டுமென அவர் (கடவுள்) விரும்புகிறார் (1திமொ. 2:4) என்றும் மறைநூல் கூறுகிறது. அது நிறைவேற நீங்கள் தடையாக நிற்கிறீர்கள். மனம் மாறும் ஒரு பாவியைக் குறித்து விண்ணுலகில் மிகுதியான மகிழ்ச்சி உண்டாகும் என நான் உங்களுக்குச் சொல்கிறேன் (லூக். 15:7) என்று கிறிஸ்து கூறுகிறார். அப்படியானால் ஒரு ஆன்மா எவ்வளவு விலையேறப் பெற்றது என்பதை நீங்கள் புரிந்து பேசவேண்டும்.
உயர்சாதி என்று அழைக்கப்படும் கிறிஸ்தவர்களால் ஒடுக்கப்பட்ட கிறிஸ்தவர்களும் ஊழியர்களும் பலர் அவர்களைவிட ஒடுக்கப்பட்டவர்களை ஒடுக்கத்தான் செய்கிறார்கள் என்பதும் மறுக்கமுடியாத உண்மையாகும்.
ஒரு மனிதருடைய ஆன்மாகூட நரகத்தில் அழிந்துபோகக்கூடாது; எல்லோரும் இயேசுவை தங்கள் இரட்சகராக ஏற்றுக்கொள்ளவேண்டும் என்ற ஆன்ம கரிசனை நிஜமாகவே உங்களுக்கு இருந்தால் இந்த கேள்வியை கேட்டிருக்கமாட்டீர்கள்.