003) கடவுள் படைக்கும்போது ஜாதி ஜாதியாகப் படைத்தார் என்று வேதம் கூறுகிறதே!

பதில்: *சீர்திருத்த கிறிஸ்தவர்கள் (Protestants)* என்று அழைக்கப்படுவோரில் பெரும்பான்மையானோர் அதிகமாகப் பயன்படுத்தும் ஆறுமுக நாவலருடைய தமிழ் வேதாகம மொழி பெயர்ப்பில் _’ஜாதி’_ என்ற வார்த்தை நூற்றுக்கணக்கான இடங்களில் வருகிறது. அதனாலேயே, இந்துத்துவ வருணாசிரம சாதிப்பாகுபாட்டுக் கொள்கையை கிறிஸ்தவர்கள் பின்பற்றலாம் என்று சாதி உணர்வுடைய கிறிஸ்தவ ‘போதகர்கள்’ பலர் விளக்கம் கொடுக்கிறார்கள். ஆனால், அந்த வார்த்தை வேறு பல அர்த்தங்களில் எழுதப்பட்டுள்ளது என்பதை ஆய்வு செய்து கண்டுபிடித்துவிட்டோம்.
1) ஜாதி= இனம், ரகம், வகை
_பூமியானது *புல்லையும்,* தங்கள் *ஜாதியின்படியே* விதையைப் பிறப்பிக்கும் *பூண்டுகளையும்,* தங்கள் தங்கள் *ஜாதியின்படியே* தங்களில் தங்கள் விதையையுடைய கனிகளைக் கொடுக்கும் *விருட்சங்களையும்* முளைப்பித்தது. தேவன் அது நல்லது என்று கண்டார். தேவன், மகா *மச்சங்களையும்,* ஜலத்தில் தங்கள் *ஜாதியின்படியே* திரளாய் ஜநிப்பிக்கப்பட்ட சகலவித *நீர்வாழும் ஜந்துக்களையும், சிறகுள்ள ஜாதிஜாதியான சகலவிதப் பட்சிகளையும்* சிருஷ்டித்தார். தேவன் அது நல்லது என்று கண்டார். பின்பு தேவன்: “பூமியானது ஜாதிஜாதியான ஜீவ ஜந்துக்களாகிய *நாட்டு மிருகங்களையும், ஊரும் பிராணிகளையும், காட்டு மிருகங்களையும் ஜாதிஜாதியாக* பிறப்பிக்கக்கடவது” என்றார் (ஆதி. 1:12,21,24)_ என்று ஆறுமுக நாவலருடைய மொழிபெயர்ப்பு கூறுகிறது.
மேற்கண்ட வசனங்களை திருவிவிலியம் என்ற (பொதுமொழிபெயர்ப்பு): _*புற்பூண்டுகளையும்* விதையைப் பிறப்பிக்கும் *செடிகளையும்* கனிதரும் *மரங்களையும்* அந்தந்த *இனத்தின்படி* நிலம் விளைவித்தது. கடவுள் அது நல்லது என்று கண்டார். இவ்வாறு, கடலின் *பெரும் பாம்புகளையும்,* திரள் திரளாக *நீரில் நீந்திவாழும் உயிரினங்களையும்,* இறக்கையுள்ள எல்லாவிதப் *பறவைகளையும்* அவ்வவற்றின் *இனத்தின்படி* கடவுள் படைத்தார். கடவுள் அது நல்லது என்று கண்டார். அப்பொழுது கடவுள், *”கால்நடைகள், ஊர்வன, காட்டு விலங்குகள்* ஆகியவற்றை அவ்வவற்றின் *இனத்தின்படி* நிலம் தோற்றுவிப்பதாக” என்றார் (தொட. 1:12,21,24)_ என்று கூறுகிறது.
அந்த வசனங்களை ஆங்கில பைபிளில்: _And the earth brought forth *grass,* the *herb* that yields seed *according to its kind,* and the tree that yields fruit, whose seed is in itself *according to its kind.* And God saw that it was good. Then God said, “Let the earth bring forth the living creature *according to its kind;* cattle and creeping thing and beast of the earth, each *according to its kind;”* and it was so. Gen. 1:12,21,24(NKJV)_ என்று வாசிக்கிறோம்.
ஆக, ஆறுமுக நாவலருடைய மொழிபெயர்ப்பில் வரும் _’ஜாதி’_ என்ற வார்த்தை, ஆங்கில மொழிபெயர்ப்புப்படி _வகை (kind, Variety)_ என்ற அர்த்தத்தில் வருகிறது.
கடவுள் மனிதனை படைப்பதற்குமுன் அவனுக்கு தேவையான *தாவரங்கள், பறவைகள், நீர்வாழ் உயிரினங்கள், விலங்குகள்* அனைத்தையும் பல *ரகங்களில்,* பல *குணாதிசயங்களோடு* படைத்தார் என்பது மறுக்கமுடியாத உண்மை. ஆனால், மனிதனைப் படைக்கும்போது, *பல ரகங்களில், பல ஜாதிகளாக, பல இனங்களாக, பல குணாதிசயங்களோடு, பல மனிதர்களை* அவர் *படைக்கவில்லை என்பதை நுட்பமாகப் புரிந்துகொள்ளவேண்டும்.* அதை மறைநூலிலிருந்து நாம் கண்டுபிடிக்கமுடிக்கும்.
_ஆண்டவராகிய கடவுள் நிலத்தின் மண்ணால் மனிதனை உருவாக்கி, அவன் நாசிகளில் உயிர் மூச்சை ஊத, மனிதன் உயிர் உள்ளவன் ஆனான். பின்பு ஆண்டவராகிய கடவுள், மனிதன் தனிமையாக இருப்பது நல்லதன்று; அவனுக்குத் தகுந்த துணையை உருவாக்குவேன் என்றார். ஆகவே ஆண்டவராகிய கடவுள் மனிதனுக்கு ஆழ்ந்த உறக்கம் வரச்செய்து, அவன் உறங்கும் பொழுது அவன் விலா எலும்பு ஒன்றை எடுத்துக்கொண்டு, எடுத்த இடத்தைச் சதையால் அடைத்தார். ஆண்டவராகிய கடவுள் தாம் மனிதனிடமிருந்து எடுத்த விலா எலும்பை ஒரு பெண்ணாக உருவாக்கி மனிதனிடம் அழைத்துவந்தார். அப்பொழுது மனிதன், “இதோ! இவளே என் எலும்பின் எலும்பும் சதையின் சதையும் ஆனவள்; ஆணிடமிருந்து எடுக்கப்பட்டதால், இவள் பெண் என்று அழைக்கப்படுவாள்” என்றான் (தொட. 2:7,18,21-23)_ என்று மறைநூல் கூறுகிறது. இந்த வசனங்களின்படி கடவுள் ஆதாம் என்ற ஒற்றை மனிதனையும், ஏவாள் என்ற ஒற்றை பெண்மணியையும் படைத்தார் என்று அறிகிறோம்.
_அவர் (கடவுள்) ஒருவனையல்லவா (ஆதாம்) படைத்தார்? ஆவி அவரிடத்தில் பரிபூரணமாய் இருந்ததே! அப்படியானால், ஏன் ஒருவனைப் படைத்தார்? தேவபக்தியுள்ள சந்ததியைப் பெறும்படித் தானே! (மல். 2:15)_ என்று மல்கியா தீர்க்கதரிசி அழகுபட வெளிப்படுத்துகிறார்.
ஒரே ஆளிலிருந்து (ஆதாம்) கடவுள் மக்களினம் அனைத்தையும் படைத்து அவர்களை மண்ணுலகின் மீது குடியிருக்கச் செய்தார் (திருத்தூதர் 17:26) என்று திருத்தூதர் பவுல் அதைத் உறுதிப்படுத்துகிறார். இந்த கொள்கையை யூதர்களும், கிறிஸ்தவர்களும், இஸ்லாமியர்களும் மனிதத் தோற்றக் கொள்கையாக நம்புகிறார்கள்.
ஆக, கிறிஸ்தவ வேதாகமம் சொல்லும் படைப்பு வரலாற்றுப்படி கடவுளால் படைக்கப்பட்ட முதல் தம்பதியினரான ஆதாம் ஏவாள் மூலமே இவ்வுலகின் அனைத்து மக்களும் உருவாகி இருக்கின்றனர் என பைபிள்மூலம் நாம் தெளிவாக அறிகிறோம்.
2) ஜாதிகள்=நாடுகள்
ஆறுமுக நாவலருடைய மொழி பெயர்ப்பில் வரும் ‘ஜாதி’ என்ற வார்த்தை ‘நாடு’ என்ற அர்த்தத்திலும் பயன்படுத்தப்பட்டுள்ளது.
_நான் உன்னைப் பெரிய *ஜாதியாக்கி,* உன்னை ஆசீர்வதித்து, உன் பெயரைப் பெருமைப்படுத்துவேன். நீ ஆசீர்வாதமாய் இருப்பாய் (ஆதி. 12:2),_
_நான் உன்னோடே பண்ணுகிற என் உடன்படிக்கை என்னவென்றால், நீ திரளான *’ஜாதிகளுக்குத்* (Nations)’ தகப்பனாவாய் (ஆதி. 17:4)_ என்று கடவுள் ஆபிரகாமுக்கு உறுதிமொழி கூறுகிறார்.
_நம்முடைய தேவனாகிய கர்த்தரை நாம் தொழுது கொள்ளுகிறபோதெல்லாம் அவர் நமக்குச் சமீபமாயிருக்கிறதுபோல, தேவனை இவ்வளவு சமீபமாய்ப் பெற்றிருக்கிற வேறே பெரிய ஜாதி எது? (உபா. 4:7)_
மேற்கண்ட வசனங்களை திருவிவிலியம் என்ற (பொதுமொழிபெயர்ப்பு):
_உன்னை நான் பெரிய இனமாக்குவேன்; உனக்கு ஆசி வழங்குவேன். உன் பெயரை நான் சிறப்புறச் செய்வேன்; நீயே ஆசியாக விளங்குவாய் (தொடக்கநூல் 12:2)_
“உன்னுடன் நான் செய்துகொள்ளும் உடன்படிக்கை இதுவே; எண்ணற்ற *நாடுகளுக்கு* நீ தந்தை ஆவாய்.
தொடக்கநூல் 17:4)
_நாம் குரல் எழுப்பும் போதெல்லாம் நம் கடவுளாகிய ஆண்டவர் நம்மோடு உள்ளார். அவரைப் போல், மக்களுக்கு மிகவும் நெருங்கிய கடவுளைக் கொண்ட வேறு பேரினம் (Nation) ஏதாகிலும் உண்டா? (இணை. 4:7)_ என்று கூறுகிறது.
அதே வசனங்கள் ஆங்கிலத்தில், “I will make you a *great nation;* I will bless you; And make your name great; And you shall be a blessing”
_”As for Me, behold, My covenant is with you, and you shall be a father of many nations”_
“What other nation is so great as to have their gods near them the way the LORD our God is near us whenever we pray to him? (Deut. 4:7)” என்று மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.
இங்கே _’ஜாதி’_ என்ற வார்த்தை ஆங்கில வேதாகமத்தில் _’Nation’_ என்று மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. இங்கே ‘நாடு’ என்ற அர்த்தத்தில் வருகிறது.
3) ஜாதி=ஆன்மீக நம்பிக்கை
சில இடங்களில் ஆன்மீக நம்பிக்கையின் அடிப்படையிலும் ஜாதி என்ற வார்த்தை பயன்படுத்தப்பட்டுள்ளது. எடுத்துக்காட்டு: அவர்கள் அவனை (யோனா) நோக்கி: யார்நிமித்தம் இந்த ஆபத்து நமக்கு நேரிட்டதென்று நீ எங்களுக்குச் சொல்லவேண்டும். உன் தொழில் என்ன? நீ எங்கேயிருந்து வருகிறாய்? உன் தேசம் எது? நீ என்ன ஜாதியான் என்று கேட்டார்கள். அதற்கு அவன்: நான் எபிரெயன். சமுத்திரத்தையும் பூமியையும் உண்டாக்கின பரலோகத்தின் தேவனாகிய கர்த்தர் இடத்தில் பயபக்தியுள்ளவன் என்றான் (யோனா 1:8,9).
இங்கே அவர்கள், “உன் தேசம் எது?” என்று கேட்டதற்கு, நான் எபிரேயன்” என்று பதில் சொல்கிறார் யோனா. அது இஸ்ரயேல் நாட்டைக் குறிக்கிறது. அவர்கள், “நீ எந்த ஜாதியான்” என்று கேட்டதற்கு “சமுத்திரத்தையும் பூமியையும் உண்டாக்கின பரலோகத்தின் தேவனாகிய கர்த்தரிடத்தில் பயபக்தியுள்ளவன்” என்று கூறுகிறார். எந்த ஜாதியான் என்று அவர்கள் கேட்ட கேள்விக்கு யோனா தன் ஆன்மீகத்தை நம்பிக்கையை வெளிப்படுத்துகிறார். அதிலிருந்து, அவர்கள், “நீ எந்த ஜாதியான்” என்று கேட்டதன் நிஜமான பொருள்: “நீ எந்த ஆன்மீக நம்பிக்கை உடையவன்?” என்பதுதானே தவிர வேறு எதுவும் இல்லை என்பதை தெளிவாக அறிகிறோம்.
4) ஜாதிகள்=புறவினத்தார்*
_’ஜாதிகள்’_ என்ற வார்த்தை சில இடங்களில் இஸ்ரவேலர் அல்லாத கூட்டத்தாரைக் குறிக்கவும் பயன்படுத்தப்பட்டுள்ளது. எடுத்துக்காட்டு: ஆறுமுக நாவலருடைய மொழி பெயர்ப்பின்படி:
_அந்நாளிலே அநேகம் *ஜாதிகள்* கர்த்தரைச் சேர்ந்து என் ஜனமாவார்கள். நான் உன் நடுவில் வாசமாயிருப்பேன். அப்பொழுது சேனைகளின் கர்த்தர் என்னை உன்னிடத்தில் அனுப்பினாரென்று அறிவாய் (சகரியா 2:11)_ என்று வரும் வசனம் திருவிவிலியத்தின்படி
_அந்நாளில், *வேற்றினத்தார்* பலர் ஆண்டவரிடம் வந்து சேர்வார்கள்; அவர்கள் அவருடைய மக்களாய் இருப்பார்கள். அவர் உன் நடுவில் தங்கியிருப்பார்; நீங்களும், படைகளின் ஆண்டவரே என்னை உங்களிடம் அனுப்பினார் என்பதை அறிந்து கொள்வீர்கள் (செக். 2:11)_ என்று மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.
*சாதியை கடவுள்தான் உண்டாக்கினார் என்று மறைநூல் நேரடியாகக் கூறுகிறதே என்று பலர் சாதிப் பாகுபாடுகளை நியாயப்படுத்துகின்றனர். அதற்கு இணைச்சட்டம் 26:19 ஐ சுட்டிக்காட்டுகிறார்கள்.
_*நான் உண்டுபண்ணின எல்லா ஜாதிகளைப்பார்க்கிலும்,* புகழ்ச்சியிலும் கீர்த்தியிலும் மகிமையிலும் உன்னைச் சிறந்திருக்கும்படி செய்வேன் என்றும், நான் சொன்னபடியே, நீ உன் தேவனாகிய கர்த்தரான எனக்குப் பரிசுத்த ஜனமாயிருப்பாய் என்றும், அவர் இன்று உனக்குச் சொல்லுகிறார் என்றான் (உபா. 26:19)_ என்று அந்த மொழிபெயர்ப்பு சொல்கிறது. இங்கே ஜாதிகளை உருவாக்கியதே கடவுள் என்பதுபோல் தோன்றுகிறது. ஆனால், திருவிவிலியம் என்ற பொது மொழிபெயர்ப்பின்படி:
_*அவர் உருவாக்கிய எல்லா மக்களினங்களிலும்,* புகழிலும், பெயரிலும், மாட்சியிலும் உன்னையே உயர்த்துவார் என்றும், அதனால் உன் கடவுளாகிய ஆண்டவரின் தூய மக்களினமாய் நீ இருப்பாய் என்றும் ஆண்டவர் இன்று உனக்கு வாக்களித்துள்ளார் (இணை. 26:19)_ என்று வாசிக்கிறோம்.
இங்கே *’ஜாதி’* அல்லது *’மக்களினம்’* என்ற பதம் ஆங்கில வேதாகமத்தில் *’Nation’* என்று எழுதப்பட்டுள்ளது.
_”He will set you high above all nations which He has made, in praise, in name, and in honor, and that you may be a [a]holy people to the Lord your God, just as He has spoken” (Deut. 26:19)
‘Nation’ என்ற வார்த்தையின் தூய தமிழ் வார்த்தை *’நாடு’* என்பதாகும். நாடு என்பது இன்று ஒரு நிலப்பரப்பைக் குறித்தாலும் அன்று மக்களைத்தான் குறித்தது. இஸ்ரயேலர் மட்டுமல்ல. மற்ற மனிதர்களையும் படைத்தவர் கடவுள்தான். எப்படியென்றால், ஆதாம் என்ற ஒற்றை ஆதி மனிதன்மூலம்தான் இவ்வுலகிலுள்ள அனைவரும் உருவாகியுள்ளனர். இஸ்ரயேலர்களை மட்டும் கடவுள் படைத்தார் என்றும் பிறரை சாத்தான் படைத்தான் என்றும் சொல்லமுடியாது. அதனால்தான், “அவர் உருவாக்கிய எல்லா மக்களினங்களிலும்” என்று இறைத்தூதர் மோசே குறிப்பிடுகிறார்.
“நான் உலகிற்கு அமைதி கொணர வந்தேன் என எண்ண வேண்டாம். அமைதியை அல்ல, வாளையே கொணர வந்தேன். தந்தைக்கு எதிராக மகனையும் தாய்க்கு எதிராக மகளையும் மாமியாருக்கு எதிராக மருமகளையும் நான் பிரிக்க வந்தேன் (மத். 10:35) என்று இயேசு கிறிஸ்து கூறுவதிலிருந்து இயேசு கிறிஸ்து இந்த உலகிற்கு வந்த நோக்கமே சமாதானத்தை அழித்து பிரிவினையை உண்டுபண்ணுவதாகும் என்று பொருள் கொள்ளக்கூடாது. அவருடைய ஆன்மீகப் பணியின்மூலம் பல பிரிவினைகளும் சண்டைகளும் உருவாகி அமைதி குலையும் என்று சொல்லவருகிறார்.
இஸ்ரயேலருக்கு கானான் நாட்டை கொடுத்த கடவுள், முதன்மை கடவுள் வணக்கத்திலிருந்து பிரிந்துபோன புறவினத்தார் வாழ்வதற்காக அவர்களுடைய எண்ணிக்கைக்கு ஏற்ப சொத்துக்களின் பரப்பளவைப் கணக்கிட்டு கொடுத்தார் (வாசிக்க: இணை. 32:8) என்றும் மறைநூல் பதிவு செய்கிறது. ஆனால், இவ்வுலகிலுள்ள நாட்டு மக்களை இனம் இனமாக (Nation) பிரித்தது கடவுள்தான் என்று வேதத்தில் எந்த ஆதாரமும் இல்லை. அதாவது பிரிவுகளை உருவாக்கியது மக்கள். பிரிந்துபோனவர்களுக்கு வாழ நிலப்பரப்புகளை பகுத்து கொடுத்தது கடவுள்தான். அதை மறைநூல் தெளிவாக்குகிறது.
மேற்கண்ட வசனத்தின்படி, *கடவுளால் படைக்கப்பட்ட எல்லா நாட்டு மக்களிலும் இஸ்ரயேல் மக்களை கடவுள் புகழிலும், பெயரிலும், மாட்சியிலும் சிறந்திருக்கப்பண்ணுவார்* என்று புரிந்துகொள்ளவேண்டும். மாறாக, கடவுள்தான் சாதி பிளவுகளை உருவாக்கினார் என்று தவறாக அர்த்தம் கொள்ளக்கூடாது.
அப்படியானால், இஸ்ரயேலர் அல்லாத *’புறவினத்தார்’* என்று அழைக்கப்படும் மக்கள் இஸ்ரயேலரிடமிருந்து பிரிந்ததற்கு யார் காரணம் என்பதையும் நாம் ஆராய்ந்து உறுதி செய்யவேண்டும்.
யேகோவா கடவுளை வணங்கிக் கொண்டிருந்தோரில் பலர் உண்மையான கடவுள் அருளிச் செய்த ஆன்மீக ஒழுக்க நெறியிலிருந்து விலகிச் சென்றனர். அப்படி நிஜகடவுள் வணக்கத்திலிருந்து வெளியேறி கடவுள் அல்லாதவற்றை வணங்கியவர்களை இஸ்ரயேலர் *’புறவினத்தார்’* என்று அழைத்தனர். ஆறுமுக நாவலருடைய மொழிபெயர்ப்பில் அந்த வார்த்தை *’புறஜாதியார்’* என்று எழுதப்பட்டுள்ளது. இங்கே அவர்களாகவே கடவுளிடமிருந்து பிரிந்து சிலை வணக்கத்துக்குப் போனார்கள். உண்மையான கடவுளைப் பின்பற்ற தங்களை அற்பணித்தவர்களுக்கும், அவரைப் பின்பற்றாமல் விலகிச் சென்றவர்களுக்கும் ஒரு வேறுபாட்டு அடையாளப் பெயரை வைத்திருப்பதும் தவறல்ல. பிறவினத்தார் கடவுளைவிட்டு விலகிச் செல்ல விரும்பியபோது கடவுள் அவர்களைத் தடை செய்யாமல் அனுமதித்தார். இங்கே, அவர்களாகவே பிரிந்து போனார்களே தவிர, கடவுள் அவர்களைக் தன் மார்க்கத்திலிருந்து புறக்கணித்துத் துரத்தவில்லை என்பதை நாம் புரிந்துகொள்ளவேண்டும்.
ஈசாக்கின் மனைவி கர்ப்பமாயிருக்கும்போது ஆண்டவர் அவரை நோக்கி, _”உன் கருப்பையில் இரு இனங்கள் உள்ளன; உன் வயிற்றிலிருந்தே ஈரினத்தார் பிரிந்திருப்பர். ஓர் இனம் மற்றதைவிட வலிமை மிக்கதாய் இருக்கும் மூத்தவன் இளயவனுக்குப் பணிந்திருப்பான் என்றார் (தொட. 25:23)_ என்ற வசனத்தை வைத்துக்கொண்டு, ஒரு குழந்தை பிறப்பதற்குமுன்பே கடவுள் அந்த குழந்தையை ஒரு குறிப்பிட்ட சாதியை (இனத்தை) சார்ந்தவராகவே பிறப்பிக்கிறார், ஆகவே, சாதி என்பது உண்டு என்று வாதாடுகிறார்கள்.
_இறுதி நாள்களில் கொடிய காலங்கள் வரவிருக்கின்றன என அறிந்து கொள். தன்னலம் நாடுவோர், பண ஆசையுடையோர், வீம்புடையோர், செருக்குடையோர், பழித்துரைப்போர், பெற்றோருக்குக் கீழ்ப்படியாதோர், நன்றியற்றோர், தூய்மையற்றோர், அன்புணர்வு அற்றோர், ஒத்துப் போகாதோர், புறங்கூறுவோர், தன்னடக்கமற்றோர், வன்முறையாளர், நன்மையை விரும்பாதோர், துரோகம் செய்வோர், கண்மூடித்தனமாகச் செயல்படுவோர், தற்பெருமை கொள்வோர், கடவுளை விரும்புவதை விட சிற்றின்பத்தை அதிகம் விரும்புவோர் ஆகியோர் தோன்றுவர் (2திமொ. 3:1-4)_ என்று திருத்தூதர் பவுல் கூறுகிறார். கடைசி நாட்களில் இப்படிப்பட்டவர்கள் தோன்றுவார்கள் என்று பவுல் கூறுவதால் கடவுள்தான் அவர்களைத் தோற்றுவிக்கிறார் என்று கூறமுடியாது அல்லவா! வானிலை அறிக்கை வாசிப்பவர், *_”இன்று இடியுடன் கூடிய மழை பெய்யும்”_* என்று கூறியதால் அவர்தான் இடியையும் மழையையும் உருவாக்குகிறார் என்று கூறமுடியுமா?
அதேபோல ரெபேக்காவின் கருவில் இரு இனத்தார் (நாட்டினர்) தோன்றுவார்கள் என்று கடவுள் நடக்கப்போகும் சம்பவங்களை முன்கூட்டியே அவரிடம் சொல்கிறார். அதனால், கடவுள்தான் அந்த இனங்களை (நாடுகளை) பிரித்தே தோற்றுவிக்கிறார் என்று நாம் தவறாகப் புரிந்துகொள்ளக்கூடாது. இருவரும் வெவ்வேறான வாழ்க்கை அமைப்பை உடையவர்களாக இருப்பார்கள் என்று கடவுள் முன்னறிந்து அப்படி சொன்னார் என்று பொருள்கொள்ளவேண்டும்.
மேற்கண்ட விளக்கங்களிலிருந்து ஆறுமுக நாவலருடைய மொழிபெயர்ப்பு வேதாகமத்தில் வரும் _’ஜாதி’_ என்ற வார்த்தைக்கும், இந்துத்துவ வருணாசிரம சாதி வேறுபாடுகளுக்கும் சற்றும் சம்பந்தம் இல்லை என்பதை அறிகிறோம்.
ஒரு நாட்டைச் (Nation) சார்ந்தவர் விரும்பினால் வேறு நாட்டின் குடியுரிமையை வாங்கலாம். பிற நாட்டில் வாழும் நபரைத் திருமணம் செய்யலாம். ஒரு மதத்தைச் சார்ந்தவர் வேறொரு மதத்திற்கு மாறலாம். ஆனால், கிறிஸ்தவர்கள் பின்பற்றும் ஒரு சாதியை சார்ந்தவர் தன் சாதியின் பெயர் பிடிக்கவில்லை என்று வேறொரு சாதிக்கு நகர முடியாது. ஆகவே, கிறிஸ்தவர்கள் பின்பற்றிக்கொண்டிருக்கும் இந்துத்துவ சாதி வேறுபாடுகளும், பாகுபாடுகளும் ஒழிக்கப்படவேண்டும்.