பதில்: மொழியை சாதியோடு ஒப்பிட முடியாது. மொழியில்லாமல் மனிதன் சக மனிதனோடு தெளிவாகத் தொடர்புகொள்ளமுடியாது. ஒருவர் தன் மனதில் இருக்கும் கருத்தை பிற மனிதருக்கு மிகக் கூர்மையாக, தெளிவாக பகிர்ந்துகொள்ள மொழி முக்கியமானதாகும். இதுநம் அனைவருக்கும் தெரியும். ஆனால், சாதியை பின்பற்றாமல் இருந்தாலும் எந்த பிரச்சனையும் இல்லாமல் வாழலாமே!
நமக்கு தெரிந்த மொழியில் நம்மிடம் ஒருவர் பேசினால்தான் நம்மால் புரிந்துகொள்ளமுடியும். எடுத்துக்காட்டாக, நமக்கு தமிழ் மட்டும்தான் தெரியும் என்ற நிலையில் நம்மிடம் தமிழில் யாராவது பேசினால்தான் நமக்குப் புரியும். வேறு மொழியில் பேசினால் நமக்கு புரியாது; பல மொழியினர் கிறிஸ்துவால் மீட்கப்பட்டுள்ளனர். எனவே, உலகெங்கும் கிறிஸ்துவை ஆராதிப்பதற்கு பல மொழியினர் அவரவர் மொழியில் சபை கூடுகைகளை நடத்துகின்றனர். அதில் தவறேதும் இல்லை. புரியாத மொழியில் ஆராதனை நடத்துவது, போதனை செய்வது, தீர்க்கதரிசனம் சொல்வது பயனற்றது. ஆக, ஒவ்வொரு மொழிக்கும் தனித்தனி சபைகள் இருப்பது நடைமுறையில் ஏற்புடையதே. ஆனால், நாசகரமான, பிற்போக்குத்தனமான இந்துத்துவ சாதியத்துக்கும், கிறிஸ்தவத்துக்கும் சம்பந்தம் இல்லையே!
ஒரு மொழி நமக்கு தெரியாவிட்டால் அந்த மொழியை கற்று, அந்த மொழி பேசுபவரை திருமணமே செய்யலாம். அது கடினமான விடயமல்ல. இந்தியர்கள் பிழைப்புக்காக மேலை நாடுகளுக்குச் சென்று, அந்த நாட்டின் மொழியைக் கற்று, அந்நாட்டுப் பிரஜைகளையே திருமணம் செய்கிறார்களே! ஆனால், ஒரு சாதியை சார்ந்தவர் அந்த சாதியின் பெயர் பிடிக்காததால் சட்டப்படி வேறொரு சாதிக்கு மாறமுடியாதே! அவர் ஒரு குறிப்பிட்ட மேல்படிப்பு படித்துவிட்டாலோ, அதிக சம்பளம் கிடைக்கும் ஒரு குறிப்பிட்ட வேலைக்கு நகர்ந்துவிட்டாலோ, ஒரு குறிப்பிட்ட ஊரில் மாடி வீடு கட்டிவிட்டாலோ அவர் விரும்பும் சாதிக்கு நகர்ந்துவிடலாம் என்று சட்டப்படி எந்த வாய்ப்பும் இல்லையே! அதேபோல, கறுப்பான தோலுடையவரை என்ன செய்தாலும் வெள்ளை தோலுக்கு மாற்றமுடியாதே! அதனால்தான் சபையிலுள்ள சாதிவெறியையும், நிறவெறியையும் ஒழிப்பதில் நாங்கள் அதிக கவனம் செலுத்துகிறோம். ஆகவே, இந்துத்துவ சாதி வேறுபாட்டு அடிப்படையில் கிறிஸ்தவ சபைகளை அமைப்பது ஏற்புடையதல்ல என்பதே நியாயமான கருத்து. இதை சிந்தனை ஆற்றலுடைய எவரும் ஒப்புக்கொள்வர்.