005) பாபேலில் பாஷைகளை பிரித்ததே கடவுள் அல்லவா! அப்படியானால் சாதிப் பிரிவுகள் தவறு என்று எப்படி சொல்கிறீர்கள்?

பதில்: உலகம் முழுவதிலும் ஒரே மொழியும் ஒரே விதமான சொற்களும் இருந்தன. பின், அவர்கள் “வாருங்கள், உலகம் முழுவதும் நாம் சிதறுண்டு போகாதபடி வானளாவிய கோபுரம் கொண்ட நகர் ஒன்றை நமக்காகக் கட்டி எழுப்பி, நமது பெயரை நிலை நாட்டுவோம்” என்றனர். மானிடர் கட்டிக்கொண்டிருந்த நகரையும் கோபுரத்தையும் காண்பதற்கு ஆண்டவர் கீழே இறங்கி வந்தார். அப்பொழுது ஆண்டவர், “இதோ! மக்கள் ஒன்றாக இருக்கின்றனர். அவர்கள் எல்லோரும் ஒரே மொழி பேசுகின்றனர். அவர்கள் செய்யவிருப்பதன் தொடக்கமே இது! அவர்கள் திட்டமிட்டுச் செய்யவிருப்பது எதையும் இனித்தடுத்து நிறுத்த முடியாது. வாருங்கள், நாம் கீழே போய் அங்கே ஒருவர் மற்றவரின் பேச்சைப் புரிந்து கொள்ள முடியாதபடி, அவர்கள் மொழியில் குழப்பத்தை உண்டாக்குவோம்” என்றார். ஆண்டவர் அவர்களை அங்கிருந்து உலகம் முழுவதிலும் சிதறுண்டுபோகச் செய்ததால் அவர்கள் நகரைத் தொடர்ந்து கட்டுவதைக் கைவிட்டனர். ஆகவே அது ‘பாபேல்’ என்று வழங்கப்பட்டது. ஏனெனில் அங்கே ஆண்டவர் உலகெங்கும் வழங்கி வந்த மொழியில் குழப்பத்தை உண்டாக்கினார். அங்கிருந்து அவர்களை ஆண்டவர் உலகம் முழுவதிலும் சிதறுண்டு போகச் செய்தார். (தொ.நூ. 11:1,4-9) என்று வேதம் கூறுகிறது.
இங்கே மக்கள் ஒரே மொழி பேசிக்கொண்டிருந்ததை கடவுள் விரும்பாமல் மொழியில் குழப்பத்தை உண்டுபண்ணியதில் அறிவார்ந்த காரணங்கள் இல்லாவிட்டால் அந்த அனந்த ஞானமூர்த்தி இப்படி செய்திருக்கமாட்டார். மனிதனை கடவுள் படைத்த நோக்கத்தை நாம் ஆய்வு செய்யும்போது, கடவுள் இங்கே செய்தது சரியென்று கண்டுபிடிக்கலாம்.
கடவுளின் மாட்சிமை
கடவுள் மனிதனுடைய மிகப்பெரிய முக்கியத்துவத்துக்கும், மாட்சிக்கும் தகுதியானவர். அதனால்தான், “எங்கள் ஆண்டவரே, எங்கள் கடவுளே, மாட்சியும் மாண்பும் வல்லமையும் பெற நீர் தகுதி பெற்றவர்; ஏனெனில் அனைத்தையும் படைத்தவர் நீரே. உமது திருவுளப்படியே அவை உண்டாயின, படைக்கப்பட்டன” என்று (வானதூதர்கள்) பாடினார்கள் (தி.வெ. 4:11) என்று மறைநூல் கூறுகிறது.
என் மாட்சிக்காக நான் படைத்த, உருவாக்கிய, உண்டாக்கிய என் பெயரால் அழைக்கப்பெற்ற அனைவரையும் கூட்டிக்கொண்டுவா! ” (எசா. 43:7) என்று கடவுள் சொல்வதாக இறைத்தூதர் எசாயா கூறுகிறார். இதிலிருந்து மனிதன்மூலம் கடவுளின் பெயருக்கு மாட்சிமை சேர்ப்பதற்காகத்தான் கடவுள் மனிதனைப் படைத்தார் என்று அறிகிறோம்.
திருத்தூதர் பவுலும் கொரிந்து சபைக்கு அவர் எழுதிய கடிதத்தில், “நீங்கள் உண்டாலும் குடித்தாலும் எதைச் செய்தாலும், எல்லாவற்றையும் கடவுளுடைய மாட்சிக்காகவே செய்யுங்கள் (1கொரி. 10:31) என்று உறுதிசெய்கிறார்.
கடவுளின் மாட்சிக்காக உருவாக்கப்பட்ட மனிதர்கள், தங்கள் பெயரை நிலைநாட்ட பாபேலில் வானளாவிய கோபுரம் கட்டத் தொடங்கியதால்தான் கடவுள் அதைத் தடுத்து நிறுத்த மொழிகளில் குழப்பத்தை ஏற்படுத்தினார்.
பலுகிப் பெருகும் நோக்கம்
கடவுள் அவர்களுக்கு (ஆதாம் & ஏவாள்) ஆசி வழங்கி, “பலுகிப் பெருகி மண்ணுலகை நிரப்புங்கள்; அதை உங்கள் ஆற்றலுக்கு உட்படுத்துங்கள்; கடல் மீன்கள், வானத்துப் பறவைகள், நிலத்தில் ஊர்ந்து உயிர் வாழ்வன அனைத்தையும் ஆளுங்கள்” (தொ.நூ. 1:28) என்றார். பரந்த உலகைப் படைத்ததே மனிதன் அந்த உலகை நிரப்புவதற்காகத்தான். ஆனால், உலகம் முழுவதும் நாம் சிதறுண்டு போகாதபடிக்கு அந்த கோபுரத்தைக் கட்டினார்கள் என்றும் அறிகிறோம். ஆக, அவர்கள் கடவுளின் சித்தத்துக்கு எதிர்த்து நின்றதால், அவர்களுடைய திட்டத்தை கடவுள் முடக்கிவிட்டார். அப்படி கடவுள் செய்திருக்காவிட்டால், அவர்கள் உலகெங்கும் பரந்து சென்றிருக்கமாட்டார்கள்.
இப்படி ஒரு கோபுரத்தைக் கட்டக்கூடாது என்று கடவுள் ஏற்கெனவே கட்டளையிடவுமில்லை. அதனால்தான், அவர்கள் திட்டமிட்டுச் செய்யவிருப்பது எதையும், இனித் தடுத்து நிறுத்தமுடியாது என்று கூறி, கடவுள் மொழிகளில் குழப்பத்தை ஏற்படுத்துகிறார்.
இந்த மொழி குழப்பங்களை மனிதனுடைய தவறால் கடவுள் உருவாக்குகிறாரேதவிர, மனிதன் பல மொழியோடுதான் வாழவேண்டுமென்று ஆதியிலிருந்தே கடவுள் தீர்மானிக்கவில்லை.
குறித்த நாளில் ஏரோது அரச ஆடை அணிந்து மேடையில் அமர்ந்து அவர்களுக்கு உரையாற்றினான். அப்போது மக்கள், “இது மனிதக் குரல் அல்ல; கடவுளின் குரல்” என்று ஆர்ப்பரித்தனர். உடனே ஆண்டவரின் தூதர் அவனை அடித்தார். ஏனெனில் அவன் கடவுளைப் பெருமைப்படுத்தவில்லை; அவன் புழுத்துச் செத்தான் (தி.ப. 12:21-23) என்று மறைநூல் பதிவு செய்கிறது.
ஆக, கடவுளின் மகிமைக்காக வாழவேண்டிய மக்கள் அந்த நோக்கத்துக்காக வாழாமல் தங்கள் மகிமைக்கென்று வாழத் தொடங்கியபோது அதைத் தடுப்பதற்கென்று பல மொழிகளை கடவுள் புகுத்தினார். அதில் ஒரு மொழியை சார்ந்தவர் வேறொரு மொழியைக் கற்க விரும்பினால் கற்றுக்கொள்ளலாம். ஆனால், மனிதருக்குள் சாதிப் பிரிவினைகளை கடவுள் படைக்கவில்லையே! கடவுளின் போதனையைவிட்டு விலகி சிலைகளை வணங்கிய மக்களை, இஸ்ரயேலர்கள் தங்களிடமிருந்து வேறுபடுத்த அவர்களைப் ‘புறவினத்தார்’ என்று அழைத்தனர். அந்த புறவினத்தாரில் கடவுளை ஏற்றுக்கொண்டவர்களை இஸ்ராயேலர் எந்த வேறுபாடும் கருதாமல் ஏற்றுக்கொள்ளவேண்டும் என்று மறைநூல் கூறுகிறது.
அன்னியன் ஒருவன் உன்னோடு தங்கியிருக்க, அவன் ஆண்டவருக்குப் பாஸ்கா கொண்டாட விரும்பினால், அவன்வீட்டு ஆண்கள் அனைவருக்கும் விருத்தசேதனம் செய்தல் வேண்டும். அதன்பின் அவன் கொண்டாட முன்வரலாம். அவன் நாட்டுக் குடிமகன்போல் ஆவான். ஆனால், விருத்தசேதனம் செய்து கொள்ளாதவன் எவனும் இதை உண்ணாதிருப்பானாக. நாட்டுக் குடிமக்களுக்கும் உங்களோடு தங்கியிருக்கும் அன்னியருக்கும் சட்டம் ஒன்றே (விடு. 12:48-49)
அந்த சட்டப்படியே தங்கள் மார்க்கத்தை ஏற்றுக்கொண்டவர்களை இஸ்ரயேலர் ஏற்றுக்கொண்டனர்.
இந்துத்துவ சாதியைப் பின்பற்றும் கிறிஸ்தவரில் ஒரு சாதியைச் சார்ந்தவர், தன் சாதிப் பெயரில் விருப்பமில்லாமல், அது வேண்டாமென்று அந்த சாதியிலிருந்து வேறொரு சாதிக்கு மாறமுடியாதே! அதனால்தான் சாதி ஒழியவேண்டுமென்று விரும்புகிறோம்.