006) தொழில் அடிப்படையில் ஜாதி பிரிந்திருப்பதில் என்ன தவறு இருக்கிறது?

பதில்: தொழில் அடிப்படையில் எதற்காக சாதி பிரிவினைகளை உருவாக்கவேண்டும்? அதனால் என்ன பயன்? தொழில் அடிப்படையில் சாதிப் பிரிவினைகள் இல்லாத நாடுகளெல்லாம் தொழில் துறைகளில் முன்னேறவில்லையா?
அண்மையில் ஒரு இந்து பிராமணர், “ஒரு வண்ணான் பிள்ளை வண்ணான்தான்; ஒரு ஆசாரியின் பிள்ளை ஆசாரிதான்; ஒரு சவரத் தொழிலாளியின் பிள்ளை சவரத் தொழிலாளிதான், ஒரு கொத்தனாருடைய மகன் கொத்தனார்தான்” என்று பேசிய காணொளியை கண்டேன். ஒருவர் தன் தந்தை செய்த தொழிலை செய்ய விரும்பாமல் தான் விரும்பும் தொழிலை செய்யும் உரிமை அவருக்கு இல்லை என்று சொல்ல வருகிறார். அதாவது, துணி சலவை செய்யும் ஒருவருடைய பிள்ளை அந்த தொழிலை செய்ய விரும்பாமல் படித்து ஆசிரியராக பணியாற்ற விரும்பினாலும், ஆசிரியர் வேலையை செய்யக்கூடாது என்று சொல்ல வருகிறார். இது எவ்வளவு ஓஎ அடிமைத்துவம்! ஒருவர் தான் விரும்பும் எந்த தொழிலையும் செய்யலாம் என்னும் ஜனநாயக உரிமைக்கு ஊறு விளைவிக்கும் கொடிய மூடநம்பிக்கை அல்லவா இது! பகுத்தறிவிலும் மனிதநேயத்திலும் வளர்ந்த ஒரு சமுதாயம் இப்படி கொடூரமாக தன் மக்களை அடக்கியாள முடியாதே! ஒரு தொழிலை செய்பவர் அந்த தொழில் செய்ய இயலாவிட்டாலும் வேறொரு தொழிலை தேர்வு செய்யக்கூடாது என்ற கொள்கை மிகவும் நீதியற்றதல்லவா! தந்தை செய்த தொழிலை மகன் விரும்பினாலும், விரும்பாவிட்டாலும் செய்தாகவேண்டும் என்பது அநியாயமல்லவா! இதன்படி சாதிப் பெயரை நம்புவதால் நம் தனிமனித உரிமை பறிக்கப்படுகிறதே!
இந்தியாவில் ஆசாரி வேலை செய்பவரை ‘ஆசாரி சாதி’ என்று வகுப்பதுபோல அமெரிக்காவில் *’கார்பென்டர்’* என்று ஒரு சாதி பெயரை உருவாக்கி அதற்குள் அங்குள்ள ஆசாரிகளை அடைக்கவில்லையே! *’தொழில் அடிப்படையில் சாதி’* என்ற முறை இல்லாமலேயே அமெரிக்கா போன்ற மேலை நாடுகள் தொழில் துறைகளில் முன்னேறவில்லையா? யாரும் எந்த வேலையையும் செய்யலாம் என்பதல்லவா சமூக விடுதலை!
ஒரு துப்புரவு பணியாளருடைய மகனோ அல்லது கட்டட பணியாளருடைய மகளோ ராணுவத்தில் பணியாற்ற விரும்பினாலோ இறைப்பணி செய்ய விரும்பினாலோ அதற்கு உரிமை கொடுக்கவேண்டும். அதுதானே சமூக நீதி!
இந்துத்துவ நம்பிக்கையாளர் ஒருவர், _”பிறப்பு அடிப்படையில் சாதி இல்லை. ஒருவர் ஆசாரியின் மகனாக இருந்தாலும் இராணுவத்தில் பணியாற்றினால் அவர் *சத்திரியர்* ஆகிறார்; அவர் ஆன்மீக பணி செய்தால் *பிராமணர்* ஆகிறார் எனவே எந்த சாதியிலிருந்தும் எந்த சாதிக்கும் மாறலாம்”_ என்று சொன்னார். நான் கேட்கிறேன்: இன்று அப்படி மாறியவர்கள் யாராவது உண்டா? தாழ்த்தப்பட்ட குடும்பத்தில் பிறந்த ஒருவர் ஆன்மீக பணிசெய்ய விரும்பி, ஆன்மீக புத்தகங்களை மனப்பாடமாக கற்று சாத்வீக குணமுடையவராக மாறினால் அவருக்கு பிராமணர் என்ற வருண சான்றிதழ் கொடுப்பார்களா? பிராமண தகப்பனுக்கு பிறந்து இராணுவத்தில் வேலை செய்யும் பலர் உண்டு. அவர்களுக்கு *சத்திரியர்* என்று வர்ண சான்றிதழ் கொடுத்துவிடுவார்களா? ஒரு *பிராமணருடைய* மகன் ஆசாரி வேலை செய்ய விரும்பினால் அவருக்கு சூத்திரன் என்று வருண சான்றிதழ் கொடுத்துவிடுவார்களா? அவர்கள் சக சூத்திரர்களுடன் திருமணம் செய்வார்களா? இந்துக்கள் பலர் இந்துத்துவத்தை பாதுகாக்க நினைக்கிறார்கள். அதற்காக நடைமுறையில் சாத்தியமற்ற தத்துவங்களை பக்கக்கணக்கில் பேசி என்ன பயன்?
ஆக, தொழில் அடிப்படையில் சாதி பிரிவினைகளை உருவாக்குவது மனித உரிமை மீறலாகும். அந்த கொடுமையை கிறிஸ்தவர்கள் நம்புவதும், பிறரை அந்நியப்படுத்துவதும் மிகக்கொடூர செயலாகும். எனவே, சாதியம் தொழில் அடிப்படையில் நிர்ணயிக்கப்பட்டிருந்தாலும் ஏற்புடையதல்ல.