007) ஏழை-பணக்காரர், படித்தவர்-பாமரர் என்ற பாகுபாடுகள் சபையிலுண்டே!

பதில்: ஏழைக்கு ஒரு நீதி; பணக்காரருக்கு ஒரு நீதி என்ற பாகுபாடும் தவறுதான். படித்தவருக்கு ஒரு நீதி; பாமரருக்கு ஒரு நீதி என்ற பாகுபாடும் தவறுதான். _ஏழையை ஏளனம் செய்கிறவர் அவரை உண்டாக்கினவரையே இகழுகிறார்; பிறருடைய இக்கட்டைப் பார்த்து மகிழ்கிறவர் தண்டனைக்குத் தப்பமாட்டார் (நீதி. 17:5); ஏழையை ஒடுக்கிறவர் அவரை உண்டாக்கினவரை இகழ்கிறார்; வறியவருக்கு இரங்குகிறவர் அவரைப் போற்றுகிறார் (நீதி. 14:31), ஏழைக்கு இரங்கி உதவிசெய்கிறவர் ஆண்டவருக்குக் கடன் கொடுக்கிறார்; அவர் கொடுத்ததை ஆண்டவரே திருப்பித் தந்துவிடுவார் (நீதி. 19:17)_ என்று சாலொமோன் ஞானி சொல்கிறார்.
வேலை செய்யமுடியாதவர்களுக்கு கிறிஸ்துவின் சபையார் உணவளிக்கவேண்டும். யாருமே இல்லாத அனாதைகளுக்கு கடவுளே தந்தை (தி.பா. 68:5) என்பதை அதன்மூலம் நிரூபிக்கவேண்டும். நான் உங்களுக்காக ஜெபித்துக்கொள்கிறேன் சகோதரரே! என்று சொல்லி கடந்து செல்வதில் அர்த்தமில்லை. ஏழைகளை புறக்கணிக்கக்கூடாது என்பது முக்கியமான கொள்கையாகும்.
ஒரு சகோதரன் அல்லது ஒரு சகோதரி போதிய உடையும் அன்றாட உணவும் இல்லாதிருக்கும்போது, அவர்கள் உடலுக்குத் தேவையானவை எவற்றையும் கொடாமல் உங்களுள் ஒருவர் அவர்களைப் பார்த்து, “நலமே சென்று வாருங்கள்; குளிர் காய்ந்து கொள்ளுங்கள்; பசியாற்றிக் கொள்ளுங்கள்;” என்பாரென்றால் அதனால் பயன் என்ன? (யாக். 2:15-16) என்று திருத்தூதர் யாக்கோபு கூறுகிறார். ஆக ஏழைகளை, படிக்காதவரை, திறமையற்றவரை நாம் ஏற்றுக்கொள்ளவேண்டும்.
கிறிஸ்து உங்களை ஏற்றுக் கொண்டதுபோல நீங்களும் ஒருவரை ஒருவர் ஏற்றுக்கொள்ளுங்கள். அப்போது கடவுளைப் பெருமைப்படுத்துவீர்கள் (உரோ. 15:7) என்று திருத்தூதர் பவுல் கூறுகிறார். அதாவது, எல்லோரையும் கிறிஸ்துவின் அன்பை முன்னிட்டு நாம் ஏற்றுக்கொள்வதே கடவுளுக்கு மகிமையைக் கொண்டுவரும் என்று அவர் சொல்கிறார்.
ஏழைகளை படிக்காதவரை நாம் ஏற்றுக்கொள்ளவேண்டும். அதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. சந்தேகமே இல்லை. ஆனால், ஒரு படிக்காதவர் முயற்சி செய்தால் படிப்பைப் பெற்றுக்கொள்ளலாம். அவர் முயன்றால் மேல்படிப்பு படித்து அதிக சம்பளம் கிடைக்கும் வேலையில் அமர்ந்து, தனக்குத் தேவையான வீடு, வாகனம் போன்ற எல்லாவற்றையும் வாங்கிவிடலாம். அதற்கு யாரும் தடையாக நிற்கமுடியாது. இசைக் கருவி வாசிக்கத் தெரியாதவர் அதை வாசிக்கக் கற்றுக் கொள்ளலாம்.
இன்று பெரும்பான்மையான ஏழை விசுவாசிகள் ஏழைகளாகவே இருப்பதற்குக் காரணம் முயலாமையாகும். பலர் வேலை செய்ய மனமற்ற சோம்பேறிகளாக இருக்கிறார்கள். பலர் வேலை செய்து கிடைத்த சொற்ப பணத்தையும் கெட்ட வழிகளில் செலவுசெய்து வீணாக்கிவிடுகின்றனர். கிடைத்த வேலையில் உண்மையில்லாததால் பலர் வேலையை இழந்து வறுமையில் வாடுகின்றனர். தன்னைப் பற்றிய அக்கரையே இல்லாத ஒருவர் எப்படி தன் வாழ்க்கைத் துணையைப் பற்றியும், அவருக்குப் பிறக்கப்போகும் பிள்ளைகளைப் பற்றியும் அக்கரைப்படுவார்?
வேலை செய்ய மனமில்லாமல் சோம்பேறியாக இருப்பவரைப் பார்த்து, “உழைக்க மனமில்லாத எவரும் உண்ணலாகாது” என்று நாங்கள் உங்களிடையே இருந்தபோதே உங்களுக்குக் கட்டளை கொடுத்திருந்தோம். உங்களுள் சிலர் எந்த வேலையும் செய்யாமல் சோம்பேறிகளாகச் சுற்றித்திரிந்து, பிறர் வேலையில் தலையிடுவதாகக் கேள்விப்படுகிறோம். இத்தகையோர் ஒழுங்காகத் தங்கள் வேலையைச் செய்து, தாங்கள் உண்ணும் உணவுக்காக உழைக்க வேண்டும் என ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் பெயரால் கட்டளையிட்டு அறிவுறுத்துகிறோம் (2தெச. 3:10-12) என்று திருத்தூதர் பவுல் கூறுகிறார். அதாவது, “உழைத்து சம்பாதிக்க வலிமையும் திறமையும் இருந்தும் உழைக்க மனமில்லாத சோம்பேறிகளுக்கு உணவு கொடுங்கள்” என்று இறைவார்த்தை நம்மை கற்பிக்கவில்லை. அவரை உழைத்து உண்ணச் சொல்கிறது.
ஒருவருக்கு தன்னை மனஉளைச்சலுக்கு உள்ளாக்கும் தன் சாதியின் பெயர் பிடிக்கவில்லை என்று அவர் விரும்பும் வேறொரு சாதிக்கு சட்டப்படி நகரமுடியாதே! அதேபோல அவர் கறுப்பு நிறம் உடையவரென்றால், அந்த நிறம் அவருக்குப் பிடிக்காமல் வெள்ளை நிறத்துக்கு மாறமுடியுமா? சரி செய்யமுடியாத அளவுக்கு ஊனமுற்ற ஒருவரை நாம் எப்படி புறக்கணிக்கமுடியும்? அதனால்தான் எல்லா பாகுபாடுகளைவிடவும், சாதி, இன, நிற பாகுபாடுகளுக்கு எதிராக தீவிரமாக செயலாற்றுகிறோம். இதையெல்லாம் நான் சொன்னாலும் நம்மை சுற்றியுள்ள எந்த மனிதனையும் நாம் ஏற்றுக்கொள்ளும் முதிர்ச்சி நமக்குள் இருக்கும் அன்பின் அளவைப் பொறுத்தே அமைகிறது.