008) ஆணென்றும் பெண்ணென்றுமில்லை’ (கலா. 3:28) என்று பவுல் சொல்வதால், விசுவாசிகளுக்குள் ஆணென்றும் பெண்ணென்றும் வேறுபாடே இல்லை என்று கூற முடியுமா?

பதில்: _இனி உங்களிடையே யூதர் என்றும் கிரேக்கர் என்றும், அடிமைகள் என்றும் உரிமைக் குடிமக்கள் என்றும் இல்லை; *ஆண் என்றும் பெண் என்றும் வேறுபாடு இல்லை;* கிறிஸ்து இயேசுவோடு இணைந்துள்ள நீங்கள் யாவரும் ஒன்றாய் இருக்கிறீர்கள் (கலா. 3:28)_ என்று திருத்தூதர் பவுல் குறிப்பிடுகிறார்.
மேற்கண்ட வசனத்தில் “ஆண் என்றும் பெண் என்றும் வேறுபாடு இல்லை” என்று திருத்தூதர் பவுல் குறிப்பிடுவதால், விசுவாசிகளுக்குள் ஆண், பெண் என்ற பாலின வேறுபாடே இல்லை என்று சொல்கிறார் என்று கூறமுடியாது. ஆணுக்கும், பெண்ணுக்கும் உள்ள உடலியல் மற்றும் வாழ்வியல் வேறுபாடுகளை மனித உடல் பற்றிய அடிப்படை அறிவுடையவர் அனைவரும் அறிவர். கடவுளே அவர்களை வெவ்வேறாகத்தான் படைத்திருக்கிறார். ஏவாள் கடவுள் விலக்கிய கனியை உட்கொண்டு, ஆதாமுக்கும் கொடுத்ததால், _கடவுள் பெண்ணிடம், “உன் மகப்பேற்றின் வேதனையை மிகுதியாக்குவேன்; வேதனையில் நீ குழந்தைகள் பெறுவாய். ஆயினும் உன் கணவன் மேல் நீ வேட்கை கொள்வாய்; அவனோ உன்னை ஆள்வான்” (தொ.நூ. 3:16)_ என்றார். அதனாலேயே, _திருமணமான ஆண்களே, உங்கள் மனைவியர் *வலுக்குறைந்தவர்கள்* என்பதை நீங்கள் உணர்ந்து, அவர்களோடு இணைந்து வாழுங்கள். வாழ்வுதரும் அருளுக்கு உடன் உரிமையாளராக இருப்பதால் அவர்களுக்கு மதிப்புக் கொடுங்கள். அப்போதுதான் நீங்கள் தடையின்றி இறைவேண்டல் செய்யமுடியும் (1பேது. 3:7)_ என்று திருத்தூதர் பேதுரு குறிப்பிடுகிறார். ஆனாலும், திருச்சபையில் ஆணுக்கு ஒரு நீதி என்றும் பெண்ணுக்கு ஒரு நீதி என்றும் பாகுபடுத்துவதை கண்டித்து அப்போஸ்தலர் பவுல் இங்கே _”ஆணென்றும் பெண்ணென்றுமில்லை”_ என்று குறிப்பிடுகிறார். இதை நுட்பமாக புரிந்துகொள்ளவேண்டும்.
இயேசு கிறிஸ்துவை இரட்சகராக ஏற்றுக்கொள்ளாத நிலையில் யூதர்கள் யூதர்களாகவும், கிரேக்கர்கள் கிரேக்கர்களாகவும்தான் இருப்பார்கள். அதை திருத்தூதர் பவுல் கண்டித்து பேசவில்லை. மாறாக, கிறிஸ்துவின் உடலாகிய சபையில் யூதனுக்கு ஒரு நீதி, கிரேக்கனுக்கு வேறு நீதி என்று இல்லை என்பதை அறிவுறுத்த “யூதனென்றும் கிரேக்கனென்றும் இல்லை” என்று கூறுகிறார். இனி அந்த பெயர்களே விசுவாசிகளுக்கு தேவையும் இல்லை. ஏனெனில் இயேசு கிறிஸ்து தன் மரணத்தின்மூலம் ‘யூதர்கள்’, ‘புறவினத்தார்’ என்ற இரு தரப்பினருக்கும் நடுவே நின்ற இணைத்து புதியதொரு மனித இனமாகப் படைத்தார் என்று மறைநூல் நம்மைக் கற்பிக்கிறதே! (எபே. 2:15). இங்கு இன வேறுபாடுகளையும் பாகுபாடுகளையும் பவுல் மறுக்கிறாரே!
_இனிமேல் நாங்கள் எவரையும் மனித முறைப்படி மதிப்பிடுவதில்லை; முன்பு நாங்கள் கிறிஸ்துவையும் மனித முறைப்படிதான் மதிப்பிட்டோம். ஆனால் இப்போது அவ்வாறு செய்வதில்லை. எனவே ஒருவர் கிறிஸ்துவோடு இணைந்திருக்கும்போது அவர் புதிதாகப் படைக்கப்பட்டவராய் இருக்கிறார். பழையன கழிந்து புதியன புகுந்தன அன்றோ! (2கொரி. 5:16-17)_ என்று திருத்தூதர் பவுல் கூறுகிறார். அதாவது இனிமேல் யாரும் தங்களை யூதன் என்ற மனித முறை மதிப்பீட்டை பயன்படுத்தி கிரேக்கர்களையோ, கிரேக்கர் என்ற மனித முறை மதிப்பீட்டை பயன்படுத்தி யூதர்களையோ வேறுபடுத்தவோ பாகுபடுத்தவோ கூடாது என்று அவர் சொல்ல வருகிறார். திருத்தூதர் பவுல் கிறிஸ்துவைப் பிறருக்கு அறிமுகப்படுத்தும்போது அவர் *யூதராக இருந்தார்* என்பதற்கு ஆதாரமாக, “நான் யூதன்” என்று குறிப்பிடுகிறார். அது பிறரைவிட தன்னை உயர்ந்தவர் என்று காட்டுவதற்காக அல்ல. கிறிஸ்துவின் மாட்சிமைக்காகச் சொன்னார்.
திருத்தூதர் பவுல் தன்னைப் பற்றி பேசும்போது, *”பாவிகளுள் முதன்மையான பாவி நான்” (திமொ. 1:15)* என்று சொல்கிறார். அவர் அப்படி சொல்வதால், மீட்கப்பட்டபின்பும் அவர் பாவியாகத்தான் இருந்தார் என்று எடுத்துக்கொள்ளக்கூடாது. அவர் வாழ்ந்த நாட்களில் திருச்சபைகளுக்கு கடிதம் எழுதும்போது, *”பரிசுத்தவான்களுக்கு எழுதுகிறதாவது”* என்று எழுதுகிறார். ஒரு பாவி எப்படி பரிசுத்தவான்களுக்கு போதனை செய்யமுடியும்? அதேபோல, “நான் யூதன்” என்று அவர் கூறியபோது, அவர் யூத குலத்தில் பிறந்தார் என்று குறிப்பிடுகிறாரே தவிர, அவர் இயேசுவை ஏற்றுக்கொண்டபின்பும் யூதன் என்று உரிமை கொண்டாடுகிறார் என்று எடுத்துக்கொள்ளக்கூடாது.
ஆனால், “பிராமணர், சத்திரியர், வைஷ்யர், சூத்திரர்” என்ற நால்வருண பிரிவினைக் கோட்பாடாகிய சாதியம் என்பது கிறிஸ்தவர்கள் கடைபிடிக்கவேண்டிய கிறிஸ்தவ கொள்கையல்ல. அது இந்துத்துவ பாகுபாட்டுக் கொள்கை. அது சமூக சகோதரத்துவக் கோட்பாட்டுக்கு முரணானதாகும். ‘நாடார், செட்டியார், கோனார், வன்னியர், பள்ளர், பறையர் ….’ போன்ற இன்றைய சாதி பெயர்கள் வருணாசிரம நால்வருண கோட்பாட்டால் நேரடியாக உருவாகாவிட்டலும், ‘வருணம்’ என்னும் தாய்க்கு பிறந்த பிள்ளைகள்தான் ‘சாதி’ என்பது மறுக்கமுடியாத பேருண்மையாகும். ஆக, இந்துத்துவ சாதி அடையாளங்களுக்கும் இரட்சிக்கப்பட்ட கிறிஸ்தவர்களுக்கும் சம்பந்தம் இல்லையே! எனவே, கீழ்சாதி, மேல்சாதி, புறஜாதி என்ற வேறுபாட்டுக் கொள்கையை அறிவார்ந்த, அன்பார்ந்த கிறிஸ்தவர்கள் திருச்சபைக்குள் சகிக்கமுடியாது.