பதில்: ஒருமுறை ஒரு நற்செய்தி அறிவிப்பாளர் என்னிடம் கேட்ட கேள்வி இது. நான் உடனே அவரிடம், “அவரவர் மதத்தை அவரவர் பின்பற்றட்டுமே! எதற்காக மதமாற்றம் செய்கிறீர்கள்? என்று கேட்டேன். “அவர்கள் இயேசுவை ஏற்றுக்கொள்ளாவிட்டால் பரலோகத்துக்கு வரமாட்டார்களே” என்று பதில் சொன்னார். “சக கிறிஸ்தவரை பிறசாதி என்று புறக்கணிக்கும் தீயகுணம் படைத்தவரையே பரலோகம் ஏற்றுக்கொள்ளுமானால், இந்துக்களை ஏற்றுக்கொள்ளாதா?” என்று இந்துக்கள் கேள்வி கேட்கமாட்டார்களா? என்று கேட்டேன்.
கிறிஸ்துவால் மீட்கப்பட்ட கிறிஸ்தவர்கள், *”என் சாதியில்”* என்று தங்களைக் குறிப்பிடுவதே தவறு. ஏனெனில், சாதியம் என்பது *கிறிஸ்தவ கொள்கை அல்ல; அது இந்துத்துவக் கொள்கை* என்பதை முதலில் நாம் புரிந்துகொள்ளவேண்டும்.
கிறிஸ்தவர்கள் இன்று பின்பற்றும் சாதி பாகுபாட்டுக் கொள்கை எங்கிருந்து வந்தது என்பதை நாம் கண்டுபிடித்தால்தான் அது கிறிஸ்தவர்களுடையது அல்ல என்பது புரியும். மனிதன் சாதி அடிப்படையில் *பிராமணர், சத்திரியர், வைசியர், சூத்திரர்* என்று நான்கு வர்ணங்களாக பிரித்துத்தான் படைக்கப்பட்டிருக்கிறான் என்று *மனு ஸ்மிருதி, ரிக்வேதம், பகவத்கீதை* என்ற இந்துத்துவ நூல்கள் கூறுகின்றன.
“மனிதனை குணகர்மத்தின் அடிப்படையில் நான்கு வர்ணங்களாக நானே பிரித்தே படைத்தேன்” என்று ‘பகவான்’ ஸ்ரீ கிருஷ்ணர் கீதையில் கூறுகிறார். _”சாதுர் வர்ண்யம் மயா சிருஷ்டம் குண கர்ம விபாகஷஹ” (கீதை 4:13)._ ஆகவே, இந்துக்கள்தான் அந்த பாகுபாட்டுக் கொள்கையை பின்பற்றவேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறார்கள். ஆனால், ஒருவர் இந்துத்துவாவிலிருந்து வெளியேறி கிறிஸ்தவராக மாறி, ஆதாம் என்ற ஒரே மனிதனிலிருந்தே எல்லா மனிதரும் தோன்றியிருக்கிறார்கள் (தி.ப. 17:26, மல். 2:15) என்ற படைப்புக் கொள்கைக்கு நகரும்போது, *இந்துத்துவ சாதி வேறுபாட்டுக் கொள்கைகளிலிருந்தும் வெளியேறுகிறார்* அல்லவா! இந்துத்துவ சாதி பிரிவுகளுக்கும் கிறிஸ்தவ வேதாகமத்துக்கும் சம்பந்தமே இல்லையே! அந்த பாகுபாட்டுத் தத்துவத்தை கிறிஸ்தவர்கள் பின்பற்றும் பைபிள் மறுக்கிறதே! *”பிராமணர், சத்திரியர், வைசியர், சூத்திரர்”* என்ற வார்த்தைகளே பைபிளில் இல்லையே!
அப்படியிருக்க அவரவர் சாதியில் எப்படி திருமணம் செய்யமுடியும்?
மீட்கப்பட்டு, பைபிளை பின்பற்ற ஒப்புக்கொண்டபின்பும், *’இறைவன் மனிதனை சாதி அடிப்படையில் பிரித்தே படைத்தான்’* என்ற பிரிவினைவாதப் பொய்யை நம்பிக்கொண்டிருந்தால், நாம் இன்னும் முழுமையாக இந்துத்துவத்தைவிட்டு வெளியேறவில்லை என்றுதானே அர்த்தம்!
இனிமேல் நாங்கள் எவரையும் மனித முறைப்படி மதிப்பிடுவதில்லை; முன்பு நாங்கள் கிறிஸ்துவையும் மனித முறைப்படிதான் மதிப்பிட்டோம். ஆனால் இப்போது அவ்வாறு செய்வதில்லை. எனவே ஒருவர் கிறிஸ்துவோடு இணைந்திருக்கும்போது அவர் புதிதாகப் படைக்கப்பட்டவராய் இருக்கிறார். பழையன கழிந்து புதியன புகுந்தன அன்றோ! (2கொரி. 5:16-17) என்று கிறிஸ்துவின் திருத்தூதர்கள் அன்று அறிக்கை விடுத்தனர். இயேசுவை இஸ்ரயேலன், யூதா கோத்திரத்தான் என்றெல்லாம் கணக்கில்கொள்ளக்கூடாது என்று அவர்கள் போதித்தனர். அதேபோல கிறிஸ்துவைப் பின்பற்றும் அவருடைய சீடர்களும் வர்க்க பாகுபாடுகள் இல்லாமல் வாழ வேண்டும் என்று கடவுள் விரும்புகிறார் என்று இங்கே அறிகிறோம்.
மனிதன் குரங்கிலிருந்து தோன்றினான் என்ற கொள்கையை நம்பும் பரிணாமவாதிகள்கூட சாதியத்தை கடைபிடிப்பதில்லை. சாதியத்தை கடைபிடிப்பதால் கிறிஸ்துவின் சபை வளர்ச்சிக்கோ, பக்தி விருத்திக்கோ *எந்த தடையும் இல்லாவிட்டால்* சாதி ஒழியவேண்டிய தேவை இல்லை என்று விட்டுவிடலாம். சாதியால் யாருக்கும் எந்த பிரச்சனையும் இல்லையானால் அதை ஏன் ஒழிக்கவேண்டும்? ஆனால், ஒரு கிறிஸ்தவர், தான் விரும்பும் சக கிறிஸ்தவரை கடவுளின் சித்தப்படி திருமணம் செய்வதற்கும், சகோதரத்துவ வளர்ச்சிக்கும் இந்துத்துவ சாதிப் பெயர் தடையாக இருப்பதால், தீவிரமாக களமிறங்கி, அந்த அடையாளப் பெயர்களை ஒழித்தே தீரவேண்டுமல்லவா! ஒவ்வொரு மனிதரும், சக மனிதருக்கும், கடவுளுக்கும் தீங்கு இழைக்காமல் எதையும் செய்யும் தனிமனித உரிமை உடையவரல்லவா! அதை பறிப்பது எப்படி கிறிஸ்தவமாகும்?
இந்துவாக இருக்கும்போது *’இந்து செட்டியார்’* என்று குறிப்பிடப்பட்டதால், கிறிஸ்துவை மீட்பராக ஏற்றுக்கொண்டபின் *’கிறிஸ்தவ செட்டியார்’* என்று அழைக்கிறார்களாம் பலர். இந்துவாக இருக்கும்போது ஒருவர் விபச்சாரம் செய்துகொண்டிருந்தார் என்பதால், கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டபின் அவர் தன்னை *’கிறிஸ்தவ விபச்சாரி’* என்று அழைக்கமுடியுமா? விபச்சாரத்திற்கும் கிறிஸ்தவத்துக்கும் என்ன சம்பந்தம்? அதுபோல, ஒருவர் இஸ்லாமியராக இருக்கும்போது தன்னை *’மரக்காயர், லெப்பை, ராவுத்தர், பட்டாணி’* என்று அழைத்திருக்கலாம். அது இஸ்லாமியர் தங்களுக்கென்று வகுத்த கொள்கை. ஆனால், அவர் கிறிஸ்துவை தன் இரட்சகராக ஏற்றுக்கொண்டபின்பு, _”நான் *மரக்காயர் கிறிஸ்தவர்; ராவுத்தர் கிறிஸ்தவரைத்* திருமணம் செய்யமாட்டேன்”_ என்று அடம்பிடிப்பதில் என்ன அர்த்தம் இருக்கிறது. இது கிறிஸ்தவ சகோதரத்துவத்தை சிதைக்கும் சாத்தானிய சதியல்லவா!
“நான் வாய் பேசமுடியாத ஊமையன்” என்று ஒருவர் அவர் வாயாலேயே சொன்னால் அவர் சொல்வது பொய்யல்லவா! அது சுயமுரண்பாடல்லவா! அதுபோலத்தான் கிறிஸ்தவர்கள் இந்துத்துவ சாதியத்தைக் கடைபிடிப்பதும். இந்துக்கள் தங்களை, *’இந்து பிராமணர், இந்து பிள்ளைமார், இந்து நாடார், இந்து பறையர்’* என்று அழைக்கலாம். அது அம்மதத்தின் கொள்கை. அப்படி அழைக்க அவர்களுக்கு உரிமை உண்டு. அந்த கொள்கையால் வரும் லாப நஷ்டங்கள் அனைத்தும் அவர்களுக்கே உரியது. ஆனால், ஒரு இந்து கிறிஸ்தவராக மாறிய பின்பு *’கிறிஸ்தவ பிராமணர், கிறிஸ்தவ பிள்ளைமார், கிறிஸ்தவ நாடார், கிறிஸ்தவ பறையர்’* என்று அழைப்பது அறியாமையின் அடையாளமும், கிறிஸ்துவின் அன்புச் சட்டத்துக்கு எதிரானதுமாகும்.
சாதி அடிப்படையில் பெருமைப்படும் உரிமையை நாம் கல்வாரியிலேயே இழந்துவிட்டோமல்லவா! _பெருமை உள்ளவனுக்கு கடவுள் எதிர்த்து நிற்கிறார் (1பேது. 5:5)_ என்றல்லவா வேதம் அறிவிக்கிறது! அப்படியானால், சாதிப் பெருமை உள்ளவனையும் கடவுள் எதிர்க்கிறார் என்றுதானே அர்த்தம்! கடவுளே நம்மை எதிர்த்தால் நமது முடிவு என்ன என்று சிந்தியுங்கள்.
“நான் யாரையும் கீழ்சாதியாக பார்க்கவில்லை; தீண்டாமையைக் கடைபிடிக்கவில்லை” என்று நீங்கள் உதட்டளவில் சொன்னாலும், உங்கள் *மனதுக்குள்* நீங்கள் பலரை *கீழ்சாதி, பிறசாதி* என்று நினைப்பதால்தான் அவர்களை திருமணம் செய்ய உங்களால் முடியவில்லை என்பதுதானே நிதர்சனமான உண்மை! ஆனால், உங்களால் அதை வெளிப்படையாக ஒத்துக்கொள்ளமுடியவில்லை. அதுதான் உலகறிந்த இரகசியம். கிறிஸ்தவர்கள் ஒருவரை ஒருவர் *கீழ்சாதி, அந்நியசாதி* என்று இழிவுபடுத்தி, காயப்படுத்துவதே தவறில்லையானால், கிறிஸ்தவர்கள் *களவு செய்வது, கொலை செய்வது, பொய் சொல்வது, சாராயம் குடிப்பது, விபச்சாரம் செய்வதில்* என்ன தவறு இருக்கிறது?
_கண்ணுக்குத் தெரிந்த சகோதரனிடம் அன்புகாட்ட முடியாதவர் கண்ணுக்குத் தெரியாத கடவுளிடம் எப்படி அன்புகாட்டமுடியும்? (1யோவா. 4:20)_ என்று வேதம் நம்மைப் பார்த்து கேள்வி கேட்கிறது. *கண்ணுக்குத் தெரிந்த சகோதரனை கீழ்சாதி, பிறசாதி என்று புறக்கணித்துவிட்டு கண்ணுக்குத் தெரியாத கடவுளிடம், _”அன்பு கூருவேன், இன்னும் அதிகமாய்…”_ என்று பாடுவதில் என்ன அர்த்தம் இருக்கிறது?*
தன் சகோதரனை *மூடனே* என அழைப்பவர் எரிநரகத்திற்கு செல்ல தகுதியானவரானால் (மத். 5:22), சகோதரனை *கீழ்ஜாதி, பிறசாதி* என அவமதிப்பவர் எங்கே போக தகுதியானவர்? நீங்களே பதில் சொல்லுங்கள்.
_சிறுமைப்பட்டவன்மேல் சிந்தையுள்ளவன் பாக்கியவான் (சங். 41:1)_ என்று வேதம் கற்பிக்கிறது. சிறுமைப்பட்டவர்மேல் சிந்தையுள்ளவர் பிறரை *கீழ்சாதி, பிறசாதி* என்று புறக்கணிக்கமுடியுமா?* சிறுமைப்பட்டவன்மேல் சிந்தையில்லாமல் இருந்தால்கூட பரவாயில்லை. அவர்களைக் கீழ்சாதி என்று காயப்படுத்தக்கூடாதே!
_பிறரை அவமதிப்பது *பாவம்* (நீதி. 14:21)_ என்றல்லவா வேதம் கூறுகிறது! அப்படியானால், பிறரை *கீழ்சாதி, பிறசாதி* என்று அவமதிப்பதும் பாவம்தானே!
_தன்னைத்தான் நேசிப்பதுபோல பிறரையும் நேசிக்கவேண்டும்_ என்னும் கொள்கையை வலியுறுத்தும் நாம் பிறரை *கீழ்சாதி, பிறசாதி* என்று புறக்கணிக்கமுடியாதே!
_யாரையும் *தீட்டுள்ளவர்* என்றோ *தீண்டத்தகாதவர்* என்றோ சொல்லக்கூடாது (அப். 10:28)_ என்று வேதம் கூறுகிறதே!
சாதியால் பாதிக்கப்பட்டவர்களின் பக்கம் நின்று இந்த கொடுமையை பார்க்கவேண்டும். அப்போதுதான் நாம் செய்யும் தவறு எவ்வளவு கொடுமையானது என்று தெரியும்.
நாங்கள் கிறிஸ்தவர்களுக்கிடையே இருக்கும் சாதியத்துக்கு எதிர்த்து நிற்பதன் முக்கியமான காரணம், *ஆதிக்க சாதி கிறிஸ்தவர்களால் தாழ்த்தப்பட்ட கிறிஸ்தவர்கள் இழிவுபடுத்தப்படுவது மட்டுமல்ல.* பெரும்பான்மையான ஒடுக்கப்பட்ட கிறிஸ்தவர்கள் தாங்கள் சக கிறிஸ்தவர்களால் இழிவுபடுத்தப்படுவதையும், கொடுமைப்படுத்தப்படுவதையும் கர்த்தரை முன்னிட்டு சகித்துக்கொள்கிறார்களே! நாங்கள் சாதியத்துக்கு எதிர்த்து நிற்பதன் *முக்கியமான காரணம்,* கிறிஸ்தவர்களுக்கிடையே நிலவும் சாதிப்பாகுபாடுகளால் *கிறிஸ்தவர் அல்லாதவர் கிறிஸ்து கொடுக்கும் இலவச மீட்பை பெற்றுக்கொள்வது தடைபட்டுள்ளதே* ஆகும்.
*நான் கிறிஸ்தவ பிராமணர்* என்று ஒருவர் தன்னை அறிமுகப்படுத்தும்போது நடைமுறையில் அவர் ஒரு பெருங்கூட்டம் மக்களை தானாகவே தன்னுடன் சம்பந்தமில்லாத பிற சாதியாக்குகிறாரே! அவர்களுக்குள் அந்நியப்படுதல் உருவாக அது காரணமாகிறதே! ஒருதாய்ப் பிள்ளைகளைப் போல ஒற்றுமையாக வாழவேண்டிய விசுவாசிகளை *பிறசாதி* என்று பாகுபடுத்தும் வக்கிர கொடுமையை கிறிஸ்து சகிப்பாரா? சிந்தியுங்கள். ஆக, அவரவர் சாதியில் அவரவர் திருமணம் செய்தல் என்ற கொள்கைக்கும், அடிப்படை கிறிஸ்தவ சகோதரத்துவத்துக்கும் சம்பந்தம் ஏதும் இல்லை என்பதே உண்மை.
ஒருவர் ஒரு பாவத்தை பாவம் என்று தெரிந்தே செய்வது பெரிய பாவமாகும். அது பாவம் என்று தெரிந்தும், அதை செய்யவிடாமல் தடுக்கும் வலிமை இருந்தும், அதை தடுக்க முயற்சி செய்யாமல் கடந்துசெல்வது மிகப்பெரிய பாவமாகும். அதேபோல, சாதிப் பாகுபாடுகள் பாவம் என்று தெரிந்தும் கடைபிடிப்பது பெரிய பாவமாகும். அது தவறு என்று தெரிந்தும், அதை தடுத்து நிறுத்தும் வலிமை இருந்தும்,தடுத்து நிறுத்த முயற்சி செய்யாமல் கடந்து செல்வது மிகப்பெரிய பாவமல்லவா! அதனால்தான் சாதிய பாகுபாடுகளுக்கு எதிராக போதிக்கிறோம்.