பதில்: ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் சீடர்களாகிய நாங்கள் யாரிடமும் கலப்புத் திருமணம் செய்யச் சொல்லவில்லை. கலப்புத் திருமணம் என்பது சாதியத்தை நம்பும் மதத்தைச் சார்ந்தவர்கள் பயன்படுத்தும் சொல்லாடல். கலப்புத் திருமணம் என்பது ஒரு சாதியை சார்ந்தவர் *கட்டாயமாக வேறு சாதியைச் சார்ந்தவராகப் பார்த்து* திருமணம் செய்வதாகும். அதற்கு, “நீங்கள் என்ன சாதி என்று பிறரிடம் கேட்கவேண்டும்”. சாதியத்தின்மீது நம்பிக்கையே இல்லாதவர்கள், சாதியத்தின்மீது நம்பிக்கையே இல்லாத பிறரிடம் எப்படி அவர்களுடைய சாதி என்ன என்று கேட்கமுடியும்?
அப்படி கலப்புத் திருமணம் செய்தவர்கள் பெரும்பாலும் தங்களுடைய பிள்ளைகளை பள்ளியில் சேர்க்கும்போது பெற்றோர் இருவரில் யாராவது ஒருவருடைய சாதியின் பெயரை எழுதுகிறார்கள். அப்படி நாம் தலைமுறை தலைமுறையாக சாதியின் பெயரை எழுதிக்கொண்டிருப்பதுவரை சாதி ஒழியாது என்பது அறிவார்ந்தவர்கள் எல்லாருக்கும் தெளிவாக தெரியும். கலப்புத் திருமணம் செய்தவர்கள் பெரும்பாலும் திருமண வாழ்வில் ஏதாவது கருத்துவேறுபாடு வரும்போது துணைவரின் சாதியின் பெயரைச் சொல்லி இழிவுபடுத்துவார்கள். கலப்புத் திருமணம் கிறிஸ்தவர்களிடையே இருக்கும் சாதியை ஒழிப்பதற்கான தரமான தீர்வு அல்ல. கிறிஸ்தவம் சாதியம் என்ற இந்துத்துவ கோட்பாட்டை நம்பவில்லையே! இந்துத்துவ சாதிப் பெயர்களுக்கும், பைபிளுக்கும் சம்பந்தமே இல்லையே! அப்படி இருக்கும்போது ஒரு கிறிஸ்தவர் தன்னை ஒரு சாதியை சார்ந்தவர் என்று நினைப்பதும், தான் திருமணம் செய்யவிருக்கும் நபர் வேறு ஒரு சாதியை சார்ந்தவர் என்று நினைப்பதும் நிஜமான சாதி மறுப்பு இல்லையே! அது சாதி ஒழிப்புக்கு உதவாதே!
கிறிஸ்தவர்கள் *சாதி மறுப்பு திருமணம்* செய்ய வேண்டுமென்று நாங்கள் சொல்கிறோம். அதாவது ஒருவர், தான் திருமணம் செய்யப் போகும் நபர் எந்த சாதி என்று தெரிந்துகொள்ள நினைக்காமல், அதாவது, சாதியை ஒரு பொருட்டாக நினைக்காமல் அதைப் புறக்கணித்துத் திருமணம் செய்யவேண்டும் என்று போதிக்கிறோம். சாதியற்ற ஒரு கிறிஸ்தவர், வேறொரு சாதியற்ற கிறிஸ்தவரைத் திருமணம் செய்யவேண்டும். இயேசு கிறிஸ்துவை தன் சொந்த இரட்சகராக ஒருவர் ஏற்றுக் கொண்ட பிறகும், அவர் இந்துத்துவ சாதிப் பாகுபாட்டுக் கொள்கையைக் கடைப்பிடித்தால் அவர் இந்துத்துவத்தையே மறைமுகமாக கடைபிடித்துக் கொண்டிருக்கிறார் என்பதே எதார்த்த உண்மை.
நாம் யாரைத் திருமணம் செய்யவேண்டும் என்பதை கடவுளிடம் கேட்டு, அவருடைய வழிகாட்டுதல்படி செய்வது மிக உயர்ந்த வாழ்வியல்.
“உங்கள் பிள்ளைகளை அருந்ததியருக்கு திருமணம் செய்து வைப்பீர்களா?” என்று சில சாதி உணர்வு கிறிஸ்தவர்கள் கேட்டனர். அவர்கள் அருந்ததியரை கீழ்சாதி என்று நினைப்பதுபோல நானும் நினைப்பேன் என்று அவர்கள் நினைக்கிறார்கள். நிஜமான கடவுளாகிய இயேசுவுக்குமுன் மேல்ஜாதி கீழ்ஜாதி என்று வேறுபாடுகளோ பாகுபாடுகளோ இல்லை என்று நம்பும் நான் எப்படி ஒருவரை கீழ்ஜாதி என்று புறக்கணிக்கமுடியும்? தன்னை ஒரு குறிப்பிட்ட சாதியைச் சார்ந்தவர் என்று நம்பிக்கொண்டிருப்போரை அல்ல, சாதியற்றவர்களைத்தான் திருமணம் செய்யவேண்டும் என்று என் பிள்ளைகளுக்கு அறிவுறுத்தியுள்ளேன். அதையே அவர்கள் கடைபிடிப்பார்கள் என்று கிறிஸ்துவுக்குள் நம்புகிறேன்.