பதில்: ஆபிரகாம் தன் வேலைக்காரன் எலியேசரை அனுப்பி தன் மகன் ஈசாக்குக்கு பெண் தேடிய சம்பவத்துக்கு வருவோம்.
ஆபிரகாம் தன் வீட்டின் வேலைக்காரர்களில் மூத்தவரும், தனக்குரிய அனைத்திற்கும் அதிகாரியுமானவரை (எலியேசர்) நோக்கி, “விண்ணுலகிற்கும் மண்ணுலகிற்கும் கடவுளாகிய ஆண்டவர் மேல் ஆணையிட்டுச் சொல்; நான் வாழ்ந்துவரும் இந்த கானான் நாட்டுப் பெண்களிடையே என் மகனுக்குப் பெண்கொள்ளமாட்டாய் என்றும், சொந்த நாட்டிற்குப் போய், என் உறவினரிடம் என் மகன் ஈசாக்குக்குப் பெண் கொள்வாய் என்றும் சொல்” என்றார் (தொ.நூ. 24:3,4).
அதுபோலவே, ஈசாக்கு தன் மகன் யாக்கோபு யாரைத் திருமணம் செய்யச் சொல்கிறார் என்று பார்ப்போம்.
ஈசாக்கு யாக்கோபை அழைத்து அவனுக்கு ஆசி வழங்கி கட்டளையிட்டுக் கூறியது: “நீ கானானியப் புதல்வியருள் எவளையும் மணந்து கொள்ளாதே. புறப்பட்டு, பதான் அராமுக்குப்போய், உன் தாயின் தந்தையாகிய பெத்துவேல் வீட்டிற்குச் செல். அங்கு உன் தாய்மாமன் லாபான் புதல்வியருள் ஒருத்தியை மணந்துகொள்” (தொட. 28:1,2).
இதேபோல, இஸ்ரவேலர் அல்லாத வேற்றினப் பெண்களை திருமணம் செய்யக்கூடாது என குரு எஸ்ராவும், இறைவாக்கினர் நெகேமியாவும் அறிவுறுத்துகிறார்கள்.
குரு எஸ்ரா எழுந்து அவர்களைப் பார்த்துக் கூறியது: “நீங்கள் வேற்றினப் பெண்களை மணந்ததால் நேர்மையற்றவர்களாகி, இஸ்ரயேலின் பாவத்தைப் பெருகச் செய்துள்ளீர்கள். எனவே, இப்பொழுது உங்கள் மூதாதையரின் கடவுளாகிய ஆண்டவரின் திருமுன் மன்றாடுங்கள்; அவர் திருவுளப்படி நடங்கள்; இந்நாட்டில் வாழும் மக்களிடமிருந்தும், வேற்றினப் பெண்களிடமிருந்தும் விலகி இருங்கள் (எஸ். 10:10,11).
“வேற்றினப் பெண்களை மணந்து கடவுளுக்கு எதிராக இப்பெரும் தீமை அனைத்தையும் நீங்கள் செய்து வருவதைப்போல் நாங்களும் செய்யவேண்டுமா?” (நெகே. 13:27) என்று இறைவாக்கினர் நெகேமியா கூறுகிறார்.
நீதித்தலைவர் சிம்சோன் ஒரு பெலிஸ்தியப் பெண்ணைத் திருமணம் செய்ய முயற்சி செய்தபோது, அவரது பெற்றோர் அவரை நோக்கி, “உன் உறவுப் பெண்களிடையே யாரும் இல்லையா? நம் மக்கள் அனைவரிடையே ஒரு பெண் கிடைக்கவில்லையா? நீ ஏன் *விருத்தசேதனம் செய்யப்படாத பெலிஸ்தியரிடம்* சென்று பெண் எடுக்கவேண்டும்? என்று கேட்டனர். சிம்சோன் தம் தந்தையிடம், “அவளை எனக்கு மணமுடித்து வையும். ஏனெனில் அவளை எனக்குப் பிடித்திருக்கிறது” என்றார் (நீ.த.14:3)
மேற்கண்ட எல்லா வசனங்களிலும், இஸ்ரயேலர் வேற்றினப் பெண்களை திருமணம் செய்யக்கூடாது என்று அக்கால ஆன்மீக வழிகாட்டிகள் போதித்திருப்பதைப் பார்க்கிறோம். இதற்கு காரணம் என்ன என்று ஆராய்வோம்.
ஆண்டவர் மோசேயின் தலைமையில் இஸ்ரயேல் மக்களை எகிப்து நாட்டினின்றுப் புறப்படச்செய்து, கானான் நாட்டைநோக்கி அவர்கள் பயணிக்கும்போது, திருமணம் செய்வது தொடர்பான அறிவுரைகளை அவர்களுக்கு வழங்கினார். அப்போது, கடவுள் இறைவாக்கினர் மோசேயிடம் பேசிய கீழ்க்காணும் வசனங்களைக் கவனமாக நீங்கள் வாசித்தால் அந்த காரணம் தெளிவாக விளங்கும். அது எதற்காக என்று தெளிவாக கடவுளே சொல்கிறார்.
“நீ அவர்களோடு (வேற்றினத்தாரோடு) திருமண ஒப்பந்தம் செய்து கொள்ளாதே. உன் மகளை அவர்கள் மகனுக்குக் கொடுக்காதே. உன் மகனுக்கு அவர்கள் மகளைக் கொள்ளாதே. ஏனெனில், என்னை பின்பற்றுவதிலிருந்து உன் பிள்ளைகளை அவர்கள் விலக்கி, வேற்றுத் தெய்வங்களை வணங்கும்படி செய்வார்கள். அதனால், ஆண்டவரின் சினம் உனக்கெதிராய் மூண்டு உன்னை விரைவில் அழிக்கும்” (இணை. 7:3,4) என்று கடவுள் சொல்கிறார்.
இந்த இறைச்சட்டத்தை மனதில் வைத்தே திருத்தூதர் பேதுரு கொர்நெலியுவின் வீட்டாரிடம், “ஒரு யூதன் பிற குலத்தவரிடம் (பிற ஆன்மீக நம்பிக்கை உடையவரிடம்) செல்வதும், அவர்களோடு உறவாடுவதும் முறைகேடு என்பதை நீங்கள் அறிவீர்கள்” (தி.ப. 10:28) என்கிறார்.
மேற்கண்ட வசனங்களின்படி, இஸ்ரயேல் மக்கள் உண்மையான கடவுளாகிய ஆண்டவரை வழிபடாத வேற்றினத்தாரை திருமணம் செய்தால், இஸ்ரயேலர்களை வேற்றினத்தார் உண்மையான கடவுள் வணக்கத்திலிருந்து விலக்கி, பொய்யான தெய்வங்களை (சிலைகளை) வணங்கும்படி மாற்றிவிடுவார்கள் என்ற காரணத்தால்தான் அவர்களைத் திருமணம் செய்ய வேண்டாம் என கட்டளையிட்டார் என்பதை புரிந்துகொள்ளவேண்டும். ஏனெனில், கடவுள் தன்னை பின்பற்றும் மக்கள் தன்னை மட்டும்தான் கடவுளாக வழிபடவேண்டும் என்றும், தன்னை கடவுளாக வழிபடும் மக்கள் பிற ஆன்மீக நம்பிக்கையாளர்களை திருமணம் செய்யக்கூடாது என்னும் சித்தாந்தமுடையவர்.
புதிய உடன்படிக்கையிலும் இதையே திருத்தூதர் பவுல், “கணவர் உயிரோடு இருக்கும் காலம்வரை மனைவி அவரோடு இணைக்கப்பட்டிருக்கிறார். கணவர் இறந்துவிட்டால் தாம் விரும்புபவரைத் திருமணம் செய்துகொள்ள அவருக்கு உரிமையுண்டு. ஆனால் அவர் திருமணம் செய்து கொள்பவர் ஆண்டவரிடம் நம்பிக்கை கொண்டவராய் இருக்க வேண்டும்”(1கொரி. 7:39) என்று உறுதி செய்கிறார்.
நம்பிக்கை கொண்டிராதவரோடு உங்களைப் பிணைத்துக் கொள்ள வேண்டாம். இறைவனுக்கு ஏற்புடைய நெறிக்கு, நெறிகேட்டோடு என்ன உறவு? ஒளிக்கு இருளோடு என்ன பங்கு? கிறிஸ்துவுக்கும் சாத்தானுக்கும் என்ன உடன்பாடு? நம்பிக்கை கொண்டோர்க்கு நம்பிக்கை கொண்டிராதவரோடு என்ன தொடர்பு? கடவுளின் கோவிலுக்கும் சிலைவழிபாட்டுக் கோவிலுக்கும் என்ன இணக்கம்? வாழும் கடவுளின் கோவில் நாமே. “என் உறைவிடத்தை அவர்கள் நடுவில் நிறுவுவேன். அவர்கள் நடுவே நான் உலவுவேன். நானே அவர்கள் கடவுள்! அவர்கள் என் மக்கள்!” என்று கடவுளே சொல்லியிருக்கிறார் அன்றோ! (2கொரி. 6:16) என்று திருத்தூதர் பவுல் தெளிவுபடுத்துகிறார்.
கடவுளிடம் இப்படி ஒரு கொள்கை இருப்பதை தெரிந்திருந்த இறையடியார்கள், கடவுளின் வழிகாட்டுதலின்படி தங்கள் பிள்ளைகளுக்கு தங்கள் இறைநம்பிக்கையை தழுவிய மணமக்களையே திருமணம் செய்தனர். அந்த வகையில்தான் ஆபிரகாம் தன் மகனுக்கு ஆண்டவரைக் கடவுளாக கொண்ட ஒரு பெண்ணை தன் மகனுக்கு தேர்வுசெய்யவேண்டும் என்று தன் மூத்த வேலைக்காரன் எலியேசரிடம் கூறினார். இதை மனதில் வைத்துத்தான் குரு எஸ்ரா, இறைவாக்கினர் நெகேமியா போன்றவர்களும் அப்படி போதித்தனர். ஆக, இஸ்ரயேலர் புறவினத்தாரை திருமணம் செய்யக்கூடாது என்று கடவுள் சொன்ன காரணம், புறவினத்தார், இஸ்ரயேலரை வேற்றுக் கடவுளை வணங்கச் செய்துவிடுவார்கள் என்ற எச்சரிக்கை உணர்வு மட்டுமே. மற்றபடி வருணாசிரமம் சொல்வதுபோல உயர்சாதி கீழ்சாதி என கடவுள் பாகுபடுத்துவதற்காக அல்ல. இந்த உயர்தர ஆன்மீக கொள்கைக்கும் இந்துத்துவ சாதியத்துக்கும் சம்பந்தமில்லை என்பதை நுட்பமாக அறிகிறோம்.
ஆண்டவர், உண்மை கடவுளாகிய தன்னைத் தவிர வேறு யாரையும் மக்கள் வணங்கக்கூடாது என்ற கொள்கை உடையவர். அதனால்தான், “என்னைத் தவிர வேறு தெய்வங்கள் உனக்கு இருத்தல் ஆகாது. மேலே விண்வெளியில், கீழே மண்ணுலகில், பூமிக்கடியே நீர்த்திரளில் உள்ள யாதொன்றின் சிலையையோ ஓவியத்தையோ நீ உருவாக்க வேண்டாம். நீ அவைகளை வழிபடவோ அவற்றிற்குப் பணிவிடை புரியவோவேண்டாம். ஏனெனில், உன் கடவுளும் ஆண்டவருமாகிய நான் இதைச் சகித்துக்கொள்ளமாட்டேன். என்னைப் புறக்கணிக்கும் மூதாதையரின் பாவங்களைப் பிள்ளைகள்மேல் மூன்றாம் நான்காம் தலைமுறைவரை தண்டித்துத் தீர்ப்பேன்” (விடு. 20:3-5) என்று கடவுள் எச்சரிக்கிறார்.
“நீ வேறொரு தெய்வத்தை வழிபடலாகாது, ஏனெனில் ‘வேற்றுத் தெய்வ வழிபாட்டை சகிக்காதவர்’ என்பதே ஆண்டவர் பெயர். ஆம், அவர் வேற்று தெய்வ வழிபாட்டைச் சகிக்காத இறைவன்” (விடு. 34:14) என்றும் “வேற்று தெய்வங்களைப் பின்பற்றி, அவற்றுக்கு ஊழியம் செய்து வழிபடாமலும், உங்கள் கைவேலைப்பாடுகளால் எனக்குச் சினமூட்டாமலும் இருந்தால், நான் உங்களுக்குத் தீங்கிழைக்கமாட்டேன்” (எரே. 25:6) என்றும் கடவுள் கூறுகிறார்.
அரசர் சாலமோனின்
சோகமுடிவுக்கு காரணம்
தாவீது அரசருடைய மகன் சாலமோனுடைய வாழ்வில் அவர் கடவுளின் வழிகாட்டுதலுக்குக் கீழ்ப்படியாமல் யூதரல்லாத பலரை திருமணம் செய்ததால், அவரது வாழ்வின் பாதைமாறி சீர்கெட்டுப் போன வரலாற்றை ஆராய்வோம்.
அரசர் சாலமோன் அயல்நாட்டுப் பெண்கள் பலர்மேல் மோகம் கொண்டார். பார்வோனின் மகளை மணந்ததுமின்றி மோவாபியர், அம்மோனியர், ஏதோமியர், சீதோனியர், இத்தியர் ஆகிய பல நாட்டுப் பெண்களையும் மணந்தார். அவ்வேற்றினத்தாரைக் குறித்து ஆண்டவர் இஸ்ரயேல் மக்களிடம், “நீங்கள் அயல் நாடுகளிலிருந்து பெண் கொள்ளவும்வேண்டாம்; கொடுக்கவும் வேண்டாம்; ஏனெனில் அவர்கள் தம் தெய்வங்களை வணங்கும்படி உங்கள் உள்ளங்களை மயக்கிவிடுவார்கள் என்று கூறியிருந்தார். அப்படிக் கூறியிருந்தும் அந்நாட்டுப் பெண்கள்மேல் சாலமோன் காதல் கொண்டிருந்தார். சாலமோனுக்கு எழுநூறு அரசகுலப் பெண்கள் மனைவியராகவும், முந்நூறு பெண்கள் வைப்பாட்டிகளாகவும் இருந்தார்கள். அப்பெண்கள் அவரது இதயத்தைத் தவறான வழியில் திருப்பிவிட்டார்கள். சாலமோன் முதுமை அடைந்தபோது, அவருடைய மனைவியர் அவர் இதயத்தை வேற்றுத் தெய்வங்களைப் பின்பற்றும்படி மாற்றிவிட்டனர். அதனால் அவர் உள்ளம் தம் தந்தை தாவீதின் உள்ளத்தைப்போல் கடவுளாகிய ஆண்டவருக்கு முற்றிலும் பணிந்திருக்கவில்லை.
சாலமோன் சீதோனியரின் தேவதையான அஸ்தரோத்தையும் அம்மோனியரின் அருவருப்பான மில்க்கோவையும் வழிபடலானார். இவ்வாறு சாலமோன், ஆண்டவர் பார்வையில் தீயதெனப் பட்டதைச் செய்தார். தம் தந்தை தாவீது ஆண்டவரை முழுமையாகப் பின்பற்றியதுபோன்று அவர் செய்யவில்லை. சாலமோன் எருசலேமுக்கு எதிரில் இருந்த மலையில் மோவாபியரின் அருவருப்பான கெமோசுக்கும், அம்மோனியரின் அருவருப்பான மோலேக்குக்கும் தொழுகைமேடுகளைக் கட்டினார். இப்படியே தங்கள் தெய்வங்களுக்குத் தூபம் காட்டிப் பலியிடுவதற்காக, வேற்றினத்தாரான தம் மனைவியர் எல்லோருக்கும் சாலமோன் இவ்வாறு செய்து கொடுத்தார். ஆண்டவர் சாலமோன்மீது சினமுற்றார். ஏனெனில், தமக்கு இருமுறை காட்சியளித்திருந்த இஸ்ரயேலின் கடவுளாகிய ஆண்டவரிடமிருந்து அவர் இதயம் விலகிச்சென்றது. வேற்றுத் தெய்வங்களைப் பின்பற்ற வேண்டாமென்று ஆண்டவர் அவருக்குக் கட்டளையிட்டிருந்தும், அக்கட்டளையை அவர் கடைப்பிடிக்கவில்லை. ஆகையால் ஆண்டவர் சாலமோனை நோக்கி, “நான் உன்னோடு செய்த உடன்படிக்கை யையும், நான் உனக்கு விதித்த நியமங்களையும் மீறி, நீ இவ்வாறு நடந்துகொண்டதால் உன் அரசை உன்னிடமிருந்து பறித்து அதை உன் பணியாளனுக்குக் கொடுக்கப்போவது உறுதி” என்றார் (1அரசர்கள் 11:1-11).
மேற்கண்ட இறைவார்த்தைகளின்படி உண்மையான கடவுளை நம்பாதவர்களை கிறிஸ்தவர்கள் வாழ்க்கைத் துணையாக தேர்வு செய்வது ஆன்மீக வாழ்வின் முன்னேற்றத்துக்கு மிகவும் இடைஞ்சலானது என்பதால்தான் அவர்களை வாழ்க்கைத் துணையாக தேர்வு செய்யக்கூடாது என்று அறிகிறோம். இதற்கும் கிறிஸ்தவர்கள் தங்களுக்குள் இந்துத்துவ, இஸ்லாமிய சாதிப் பிரிவினைகளை பின்பற்றுவதற்கும் சம்பந்தமில்லை.
பறையர் சாதியிலிருந்து கிறிஸ்துவை ஏற்றுக்கொண்ட ஒரு கிறிஸ்தவர், நாடார் சாதியிலிருந்து கிறிஸ்துவை ஏற்றுக்கொண்ட கிறிஸ்தவரை வேற்றுக் கடவுளை வணங்கச் செய்துவிடுவார் என்பதில் எந்த அர்த்தமும் இல்லை. இருவரும் ஆண்டவரை வணங்கும்போது அது எப்படி சாத்தியமாகும்? ஆகவே, இன்று கிறிஸ்தவர்கள் தங்களுக்குள் சொல்லிக்கொள்ளும் “நான் நாடார் கிறிஸ்தவர், நீ முதலியார் கிறிஸ்தவர், அவர் பறையர் கிறிஸ்தவர்” என்று கூறுவதில் அணுவளவும் அர்த்தமில்லை. கிறிஸ்துவை ஏற்றுக்கொண்ட இஸ்லாமியர்கள், “நான் மரக்காயர் கிறிஸ்தவர், நீ ராவுத்தர் கிறிஸ்தவர், அவர் பட்டாணி கிறிஸ்தவர்” என்று பிரிந்து நிற்பதில் அர்த்தமில்லை.