013) விவிலிய கடவுள் யூதர் அல்லாதவரை வெறுத்தவர் அல்லவா!

பதில்: பழைய உடன்படிக்கையின்படி, யூதர் அல்லாதவரை யூதர்கள் திருமணம் செய்யக்கூடாது என்று கடவுள் சொன்னார். அதற்கு ஒரு நியாயமான காரணமுண்டு. ஒரு யூதர் யூதரல்லாத சிலைவழிபாட்டினர் ஒருவரைத் திருமணம் செய்தால், அவர் இவருடைய இறைவணக்க நம்பிக்கையிலிருந்து அவரைப் பிரித்துவிடுவார் என்ற ஒற்றை காரணமாகும். _நீ அவர்களோடு திருமண ஒப்பந்தம் செய்து கொள்ளாதே. உன் மகளை அவர்கள் மகனுக்குக் கொடுக்காதே. உன் மகனுக்கு அவர்கள் மகளைக் கொள்ளாதே. ஏனெனில், என்னைப் பின்பற்றுவதிலிருந்து உன் பிள்ளைகளை அவர்கள் விலக்கி, வேற்றுத் தெய்வங்களை வணங்கும்படி செய்வார்கள். அதனால், ஆண்டவரின் சினம் உனக்கெதிராய் மூண்டு உன்னை விரைவில் அழிக்கும் (இணை. 7:3-4)._
அதாவது தவறான ஆன்மீகத்தைப் பின்பற்றும் யூதரல்லாதவர்களுக்கு யூதர்களைத் திருமணம் செய்தால் நிஜக்கடவுள் வணக்கத்திலிருந்து பொய்யான ஆன்மீகத்துக்கு மாற்றிவிட வாய்ப்பு உள்ளதால் ஆண்டவர் புறவினத்தாரை திருமணம் செய்யவேண்டாம் என்று கூறினர். ஏனெனில், திருமணம் செய்த தம்பதியரைப் பற்றிய ஆண்டவர் பேசும்போது, “கணவன் தன் தாய் தந்தையை விட்டுவிட்டுத் தன் மனைவியுடன் ஒன்றித்திருப்பான்; இருவரும் ஒரே உடலாய் இருப்பர் (தொட. 2:24) என்கிறார். கணவன் மனைவிக்கும் மனைவி கணவனுக்கும் அன்போடு கீழ்ப்படிய வேண்டும் என்று கடவுள் எதிர்பார்க்கிறார் என்று கண்டுபிடிக்கிறோம். நான் வணங்கும் கடவுளை நீயும் வணங்காவிட்டால், நான் உன்னிடம் அன்பு கூர்ந்து கீழ்ப்படியமாட்டேன் என்று ஒருவரை ஒருவர் மிரட்டினால், அது தரமான இல்வாழ்வாக இருக்காது அல்லவா! அதனால்தான் யூதர்கள் யூதர் அல்லாதவரை திருமணம் செய்யக்கூடாது என்று இறைவன் அறிவுறுத்துகிறார்.
அதற்காக கடவுள் யூதரல்லாதவரை வெறுத்துவிட்டார் என்று பொருள்கொள்ளமுடியாது. ஏனென்றால், அவர்களை படைத்ததும் இந்த ஒற்றை தெய்வம்தான் அல்லவா! _*உங்கள் கடவுளாகிய ஆண்டவரே, தெய்வங்களுக்கெல்லாம் கடவுள்; இறைவருக்கெல்லாம் இறைவன்; மாட்சியும் ஆற்றலும் உள்ள அஞ்சுதற்குரிய கடவுள் அவரே.* அவர் ஓர வஞ்சனை செய்வதில்லை; கையூட்டு (லஞ்சம்) வாங்குவதும் இல்லை (இணை. 10:17)_ என்று மறைநூல் கூறுகிறது.
ஒரு தந்தையின் இரு பிள்ளைகளில் ஒருவன் கெட்ட நடத்தை உடையவனாக இருந்தால், மற்ற மகனை கெட்டவனோடு பழகக்கூடாது என்று பெற்றோரே சொல்வார்கள். ஆனால், அதற்காக அந்த கெட்ட மகனை பெற்றோர் வெறுத்து விடுவார்கள் என்று கூற முடியுமா?
யூதர்களல்லாத எல்லாரையும் யூதர்கள் பகைக்கவேண்டும் என்று கடவுள் சொல்லவில்லை. மாறாக அவர்களிடம் அன்பு செலுத்தச் சொன்னார். அதற்கு சான்றாக சில வசனங்களைப் பார்ப்போம்.
_”உங்களிடம் தங்கும் அன்னியர் (யூதர் அல்லாதவர்) உங்கள் நாட்டில் பிறந்தவரைப் போல் இருக்க வேண்டும். *உங்கள்மீது நீங்கள் அன்புகூர்வதுபோல் அவர்கள்மீதும் அன்புகூருங்கள்.* ஏனெனில், எகிப்தில் நீங்களும் அன்னியர்களாய் இருந்தீர்கள். நானே உங்கள் கடவுளாகிய ஆண்டவர்! (லேவி. 19:34)._
_அனாதைகளுக்கும் கைம் பெண்களுக்கும் நீதி வழங்குபவர் அவரே. அன்னியர்மேல் அன்பு கூர்ந்து அவர்களுக்கு உணவும் உடையும் கொடுப்பவர் அவரே. அன்னியருக்கு அன்பு காட்டுங்கள். ஏனெனில் எகிப்தில் நீங்களும் அன்னியராய் இருந்தீர்கள்” (இணை. 10:18,19),_ என்று இஸ்ரயேலர் தங்களை தாங்கள் நேசிப்பதுபோல் இஸ்ரயேலர் அல்லாதவர்களையும் நேசிக்கவேண்டும் என்று அருமையான வாழ்வியலை கற்றுக் கொடுத்துள்ளார் கடவுள்.
யுதர் அல்லாதவர், யூதர் வழிபட்ட நிஜக் கடவுளோடு இணைய விரும்பினால், அவர்களிலுள்ள ஆண்கள் விருத்தசேதனம் மட்டும் செய்தால் போதுமானது என்று கூறுகிறார்.
_”அன்னியன் ஒருவன் உன்னோடு தங்கியிருக்க, அவன் ஆண்டவருக்குப் பாஸ்கா கொண்டாட விரும்பினால், அவன்வீட்டு ஆண்கள் அனைவருக்கும் *விருத்தசேதனம்* செய்தல் வேண்டும். அதன்பின் அவன் கொண்டாட முன்வரலாம். அவன் நாட்டுக் குடிமகன்போல் ஆவான். ஆனால், விருத்தசேதனம் செய்துகொள்ளாதவன் எவனும் இதை உண்ணாதிருப்பானாக” (விடு. 12:48)_ என்று தன்னிடம் வருவோரை கடவுள் ஒரு நிபந்தனையோடு ஏற்றுக்கொள்கிறார்.
_ஆண்டவருக்குத் திருப்பணி செய்வதற்கும், அவரது பெயர்மீது அன்புகூர்வதற்கும், அவர்தம் ஊழியராய் இருப்பதற்கும், தங்களை ஆண்டவரோடு இணைத்துக் கொண்டு, ஓய்வுநாளைத் தீட்டுப்படுத்தாது கடைப்பிடித்து, தம் உடன்படிக்கையை உறுதியாய்ப் பற்றிக்கொள்ளும் பிறஇன மக்களைக் குறித்து ஆண்டவர் கூறுவது: “அவர்களை நான் என் திருமலைக்கு அழைத்து வருவேன். இறைவேண்டல் செய்யப்படும் *என் இல்லத்தில் அவர்களை மகிழச்செய்வேன்.* அவர்கள் படைக்கும் எரிபலிகளும் மற்றப்பலிகளும் என் பீடத்தின்மேல் *ஏற்றுக் கொள்ளப்படும்.* ஏனெனில், என் இல்லம் மக்களினங்கள் *அனைத்திற்கும்* உரிய ‘இறைமன்றாட்டின் வீடு’ என அழைக்கப்படும் (எசாயா 56:6-8)._
_உலகம் உமது வழியை அறிந்துகொள்ளும். *பிற இனத்தார் (யூதர் அல்லாதவர்) அனைவரும்* நீர் அருளும் மீட்பை உணர்ந்து கொள்வர் (தி.பா. 67:2)_ என்று பழைய உடன்படிக்கையில் கடவுள் தெளிவுபடுத்துகிறார்.
பரலோகம் யூதர்களுக்கு மட்டும் உரியதல்ல. அது முழு உலக மக்களுக்கும் பொதுவானது. எல்லா இனமக்களும் பரலோகத்தில் பங்கடைவார்கள் என்பதே உண்மை. அதனால் தான் பரலோக காட்சியை பார்த்த திருத்தூதர் யோவான் கீழ்க்கண்டவாறு விளக்குகிறார்.
_இதன்பின் யாராலும் எண்ணிக்கையிட முடியாத பெரும் திரளான மக்களைக் கண்டேன். அவர்கள் *எல்லா நாட்டையும், குலத்தையும் மக்களினத்தையும் மொழியையும் சார்ந்தவர்கள்;* அரியணைக்கும் ஆட்டுக்குட்டிக்கும் முன்பாக நின்றுகொண்டிருந்தார்கள்; வெண்மையான தொங்கலாடை அணிந்தவர்களாய்க் கையில் குருத்தோலைகளைப் பிடித்திருந்தார்கள் (தி.வெ. 7:9).
பூவுலகில் இறையரசில் சாதி வேறுபாடுகள், மொழி பாகுபாடுகள் இல்லாததுபோல, பரலோகத்திலும் பாகுபாடுகள் இல்லை. எல்லோரும் கிறிஸ்துவின் சிந்தையோடு, அவருடைய சாயலில் இருப்பதால் பரலோகில் பாகுபாடுகள் இருப்பதில்லை.
*யூதரல்லாதவரை திருமணம் செய்த யூதர்கள்*
உண்மையான கடவுளாகிய தன்னை வணங்காதவர்களை, தன்னை வணங்கும் மக்கள் திருமணம் செய்யக்கூடாது என்று கடவுள் ஒரு அர்த்தமுள்ள நோக்கத்தோடுத் தடைவிதித்திருந்தாலும், ஆண்டவரை தங்கள் கடவுளாக ஏற்றுக்கொண்ட யூதரல்லாதவர்களை யூதர்கள் திருமணம் செய்திருக்கிறார்கள் என்னும் சான்றுகளை நாம் பார்ப்போம்.
சல்மோன் இராகாபு திருமணம்
இவ்வசனத்தில் வரும் *இராகாபு* என்பவர் *கானானிய* பட்டணம் எரிகோவில் வாழ்ந்த ஒரு பெண்மணி. அவர் இஸ்ரயேல் மக்களுக்கு கடவுள் செய்த அற்புதங்களைப் பற்றி கேள்விப்பட்டு, உண்மையான கடவுளை வணங்கத் தொடங்கினார் (யோசுவா 2:10,11). *இதனால்* சல்மோன் இராகாபைத் திருமணம் செய்தார். இராகாபின் மனமாற்றத்தைப் பற்றி திருத்தூதர் யாக்கோபு சொல்லும்போது: _இராகாபு என்ற விலைமகள் தூதர்களை வரவேற்று வேறு வழியாக அனுப்பியபோது, செயல்களால் அல்லவா *கடவுளுக்கு ஏற்புடையவர் ஆனார்!* (யாக். 2:25)_ என்று உறுதிப்படுத்துகிறார்.
போவாஸ்-ரூத் திருமணம்
_போவாசுக்கும் ரூத்துக்கும் பிறந்த மகன் ஓபேது (மத். 1:5)._ இந்த வசனத்தில் வரும் *ரூத்து* என்பவர் ஒரு *மோவாபியப்* பெண்மணி. அவர் தன் மாமியார் நகோமி என்னும் யூதப் பெண்மணியின் பண்பாட்டால் கவரப்பட்டு, நிஜமான கடவுளை ஏற்றுக்கொண்டார். அதை அவருடைய வார்த்தையாலேயே அறியலாம்.
_ரூத்து (நகோமியை நோக்கி), “உம்மோடு வராமல் உம்மை விட்டுப் பிரிந்து போகும்படி என்னை நீர் வற்புறுத்த வேண்டாம். நீர் செல்லும் இடத்திற்கே நானும் வருவேன். உமது இல்லமே எனது இல்லம். உம்முடைய இனமே எனது இனம். *உம்முடைய தெய்வமே எனக்கும் தெய்வம்”* என்றார் (ரூத். 1:16). நகோமியும் அவர் தம் மருமகளான மோவாபியப் பெண் ரூத்தும் அந்நாட்டை விட்டுத்திரும்பி வந்தனர். போவாசு தாம் சொன்னபடியே ரூத்தைத் தம் வீட்டுக்கு அழைத்துச் சென்று, அவரை மணந்துகொண்டார் (ரூத். 1:22, 4:13)._
*யோசேப்பின் திருமணம்*
_யோசேப்பிற்கு எகிப்து நாட்டில் புதல்வர் பிறந்தனர். ஓன் நகர் (எகிப்து) அர்ச்சகர் போற்றிபெராவின் மகளான *அசினத்து* அவர்களை அவருக்குப் பெற்றெடுத்தாள். அவர்கள் மனாசே, எப்ராயீம் ஆவர் (தொ.நூ. 46:20)._
*மோசேயின் திருமணம்*
_மோசே எத்தியோப்பியப் பெண்ணை மணந்திருந்தார். அவர் மணந்திருந்த *எத்தியோப்பியப்* பெண்ணை முன்னிட்டு மிரியாமும் ஆரோனும் அவருக்கு எதிராகப் பேசினர் (எண். 12:1)._
பிற இனத்தவரைத் திருமணம் செய்யக்கூடாது என்று கடவுள் ஏன் சொன்னார் என்பதன் அர்த்தத்தைப் புரிந்துகொள்ளாமல்தான் மிரியாமும், ஆரோனும் மோசேக்கு எதிராகப் பேசியிருப்பார்கள் என்று நான் நினைக்கிறேன். மோசேயின் மனைவியும், யோசேப்பின் மனைவியும் நிஜமான கடவுளைக் கண்டடைந்த வரலாற்றைப் பற்றி வேதாகமத்தில் குறிப்பிடப்படாவிட்டாலும் கடவுளின் பிரமாணப்படித்தான் மோசேயும், யோசேப்பும் திருமணம் செய்திருக்கவேண்டும் என்று நான் நம்புகிறேன். ஆக, உலகைப் படைத்த நிஜமான ஏக கடவுளிடம் இனபேதங்களோ, ஜாதிபேதங்களோ, மொழிபேதங்களோ, மத வெறியோ, வேறு பட்சபாதங்களோ இல்லை என்பதே நிதர்சனமான உண்மை. _மனிதர் முகத்தை பார்க்கின்றனர்; ஆண்டவரோ அகத்தைப் பார்க்கின்றார் (1சாமு. 15:7).