014) இஸ்ரயேலர்கள் 12 குலங்களாக பிரிந்திருந்தார்கள். ஒரு குலத்தை சார்ந்தவர் பிற குலத்தை சார்ந்தவரை திருமணம் செய்யக்கூடாது என்று கடவுள் சொன்னாரே!

பதில்: ஆபிரகாமின் மகனாகிய ஈசாக்கின் மகனாகிய யாக்கோபுக்கு 12 ஆண் பிள்ளைகளும் ஒரு பெண் பிள்ளையும் பிறந்தனர். அவர்களுடைய பெயர்கள்: ரூபன், சிமியோன், லேவி, யூதா, தாண், நப்தலி, காத், ஆசேர், இசக்கார், செபுலோன், யோசேப்பு, பென்யமின் மற்றும் தீனாள் என்பவராவர். இஸ்ரயேல் மக்களில் சொத்துரிமை ஆண் மக்களுக்கு மட்டுமே கொடுக்கப்பட்டது. யாக்கோபின் 12 ஆண் பிள்ளைகளும் 12 குலங்களாக பிரிக்கப்பட்டனர். ஆனால், பன்னிரு குலத்தில் ஒரு குலமான லேவி குலத்துக்கு சொத்துரிமை கொடுக்கப்படவில்லை. ஏனெனில், அவர்கள் மற்ற குலத்தினர் வசிக்கும் எல்லா இடங்களிலும் வாழ்ந்து கடவுளின் ஆன்மீகப் பணி செய்யவேண்டுமென்று கடவுளால் நியமிக்கப்பட்டிருந்தனர். மேலும், யோசேப்பு இஸ்ரயேலரை பஞ்சத்தில் மடிந்துபோகாமல் காப்பாற்றியதற்காக அவருடைய இரு மகன்கள் எப்ராயீம் மற்றும் மனாசே என்பவர்கள் இரண்டு குலங்களாக பிரிக்கப்பட்டு மற்ற பத்து கோத்திரங்களோடு இணைக்கப்பட்டனர். அப்படி யோசேப்புக்கு இருமடங்கு சொத்துரிமை கொடுக்கப்பட்டது. பன்னிருவருக்கும் சொத்து பகிர்ந்தளிப்பதற்காக சீட்டுப் போட்டு, சீட்டு எந்ததெந்த இடங்களில் விழுந்ததோ அந்தத்ந இடங்கள் பன்னிருவருக்கும் கொடுக்கப்பட்டது.
இஸ்ரயேலர் திருமணம் செய்யும்போது ஒவ்வொருவரும் தங்கள் குலங்களுக்கு உள்ளேயே திருமணம் செய்யவேண்டும் என்று கடவுள் கட்டளையிடவில்லை. ஆனால், ஒரு தந்தைக்கு ஆண்பிள்ளைகள் இல்லாதிருந்தால் அவருடைய சொத்து அவருடைய பெண்பிள்ளைகளுக்கு கொடுக்கப்படவேண்டும் என்றும், அந்த பெண்பிள்ளைகளுடைய சொத்து பிற குலத்தினருக்கு சென்றுவிடக்கூடாது என்றும் கடவுள் கட்டளையிட்டிருந்தார்.
ஆண்டவர் கட்டளையிடுவது இதுவே: “தாங்கள் விரும்பியோரை அவர்கள் மணம் முடிக்கட்டும்; ஆனால் தங்கள் தந்தையின் குலக்குடும்பத்திற்குள் மட்டுமே அவர்கள் மணம் முடிக்கவேண்டும். இஸ்ரயேல் மக்களின் உரிமைச் சொத்து ஒரு குலத்திலிருந்து இன்னொன்றுக்கு மாற்றப்படக்கூடாது; இஸ்ரயேல் மக்களில் ஒவ்வொருவரும் தங்கள் மூதாதையர் குல உரிமைச் சொத்தையேப் பற்றிக்கொண்டிருக்க வேண்டும்” (எண்ணிக்கை 36:6-7) என்று கடவுள் அறிவுறுத்துகிறார்.
நீதியையும் சமத்துவத்தையும் தன்னகத்தே கொண்ட நடுநிலை தவறாத, பட்சபாதமில்லாத ஏகஇறைவன் ஏன் இப்படி சொல்கிறார்? பக்தியுள்ள மக்கள் கூட்டத்தை உருவாக்குவதற்காக ஆதாம் என்னும் ஒற்றை மனிதன்மூலம் எல்லா மனிதர்களையும் படைத்த பரிசுத்த தெய்வம் ஏன் இப்படி குழப்புகிறார் என்பது முக்கியமான கேள்வியாக நம்முன் நிற்கிறது.
இந்த பிரச்சனைக்கு தெளிவு கிடைக்க கீழ்காணும் வசனங்களை வாசிப்போம்.
_என்னைப் புறக்கணிக்கும் மூதாதையரின் பாவங்களைப் பிள்ளைகள் மேல் *மூன்றாம், நான்காம்* தலைமுறைமட்டும் தண்டித்துத் தீர்ப்பேன். மாறாக என்மீது அன்புகூர்ந்து என் விதிமுறைகளைக் கடைப்பிடிப்போருக்கு *ஆயிரம்* தலைமுறைக்கும் பேரன்பு காட்டுவேன் (வி. ப. 20:5, 6, இ.ச. 5:9,10)_ என்று இஸ்ராயேல் மக்களுக்கு கடவுள் சட்டம் கொடுத்திருந்தார். அதாவது, கடவுள் தன்னை நம்பி தனக்கு கீழ்படிவோருக்கு ஆயிரம் தலைமுறைவரை இரக்கம் காட்டி ஆசீர்வதிப்பவர் என்றும், கீழ்படியாமல் குற்றம் புரிவோருக்கு மூன்றாம் நான்காம் தலைமுறைகள்வரை சாபத்தை தொடரச் செய்வார் என்றும் அறிகிறோம். பிள்ளைகள் தவறு செய்தால் அதன்மூலம் அவர்களுக்கு சாபங்கள் உருவானாலும், நன்மை செய்த முன்னோர்களால் வந்த ஆசீர்வாதங்களும் இவர்கள் வாழ்வில் தொடரும் என்பதும் உண்மையாகும்.
ஆண்டவர் சொன்ன அந்த உறுதிமொழியின்படியே தனக்கு முற்றும் கீழ்படிந்த ஆபிரகாமை சிறப்பாக ஆசீர்வதிக்க கடவுள் சித்தம் கொண்டார். எனவே ஆபிரகாமுக்கு கடவுள் வாக்குறுதி கொடுத்து பிறந்த மகன் ஈசாக்கை ஆசீர்வதித்தார். ஈசாக்கின் மூத்த மகன் ஏசா தலைமகனுக்குரிய பிறப்புரிமையை இழந்து, சிலைவழிபாட்டை பின்பற்றியதால் ஆபிரகாமின் ஆசீர்வாதத்தில் உரிமையற்றவராகிவிட்டார். மற்ற மகன் யாக்கோபு (இஸ்ரயேல்) தன் 13 பிள்ளைகளையும் ஆசீர்வதித்தார். இஸ்ரயேலின் 12 ஆண் பிள்ளைகளுடைய பண்பாட்டை அடிப்படையாக வைத்து இஸ்ரயேல் தன் பிள்ளைகளை 12 கோத்திரங்களாகப் பிரித்து ஆசீர்வதித்தார் (வாசிக்கவும்: தொடக்கநூல் 49:1-28). *அவர்களுடைய பண்பாட்டுத் தரத்திற்கு ஏற்ப அவர்களுக்கு சொத்தின் அளவும் பகிர்ந்தளிக்கப்பட்டது.* அதில் கடவுளுக்கு கீழ்படிந்து பரிசுத்தமாக வாழ்ந்த குலத் தலைவர்களின் சந்ததிகளுக்கு வரும் ஆசீர்வாதத்தையும், கடவுளுக்கு கீழ்படியாத குலத் தலைவர்களின் சந்ததிகளுக்கு வரும் சாபத்தையும் இஸ்ரயேல் மக்களுக்கு விளங்கப்பண்ணவும், தலைமுறை ஆசீர்வாதங்களானாலும், சாபங்களானாலும் அந்தந்த குலங்களுக்கு உள்ளேயே தங்க வைப்பதற்காகவுமே கடவுள் இந்த ஏற்பாட்டை செய்தார் என நான் நிதானிக்கிறேன். நல்லவனையும் கெட்டவனையும் ஒரே அளவில் ஆசீர்வதிப்பது அநியாயமல்லவா! அதனால்தான் குலங்களுக்குள்ளேயே திருமணம் செய்ய கடவுள் கட்டளையிட்டார்.
அன்று கடவுள் அப்படி நிர்வகித்தாலும் கிறிஸ்துவின் மரணத்தின்மூலமாக பாவங்களும், அவற்றால் உருவான சாபங்களும் முறியடிக்கப்பட்டதால் புதிய உடன்படிக்கையில் குலங்கள், வம்சங்கள் என்னும் முறைமைகள் அகன்று விடுதலை அடைந்துவிட்டோம். இஸ்ரயேலர், புறவினத்தார் என்ற வேறு பாடுகளையே கிறிஸ்துவின் மரணத்தின்மூலம் அகற்றி கடவுள் அனைவரையும் ஒன்றாக்கி இணைத்திருக்கிறார்.
அவரே (இயேசு கிறிஸ்து) நமக்கு அமைதி அருள்பவர். அவரே இரண்டு இனத்தவரையும் (இஸ்ராயேலர் மற்றும் இஸ்ராயேலர் அல்லாதார்) பிரித்து நின்ற பகைமை என்னும் சுவரை, தமது உடலில் ஏற்ற துன்பத்தின் வழியாய்த் தகர்த்தெறிந்து, அவர்களை ஒன்றுபடுத்தினார். பல கட்டளைகளையும் விதிகளையும் கொண்ட யூதச் சட்டத்தை அழித்தார். இரு இனத்தவரையும் தம்மோடு இணைந்திருக்கும் புதியதொரு மனித இனமாகப் படைத்து அமைதி ஏற்படுத்தவே இவ்வாறு செய்தார். தாமே துன்புற்றுப் பகைமையை அழித்தார். சிலுவையின் வழியாக இரு இனத்தவரையும் ஓருடலாக்கிக் கடவுளோடு ஒப்புரவாக்க இப்படிச் செய்தார் (எபேசியர் 2:14-16)
எனவே, அகில உலக சபையை ஒரே தந்தையின் குடும்பமாக கருதுகிறோம். இனி நான் இன்ன சாதியான், இன்ன கோத்திரத்தான், இன்ன வம்சத்தான், இன்ன இனத்தான், இன்ன தேசத்தான் என பெருமை பேசிக் கொண்டிருப்பது புதிய ஏற்பாட்டு அன்புச் சட்டப்படி செல்லுபடியாகாது.
இன்று புதிய உடன்படிக்கையின் நாட்களில் எந்த பேதமும் இல்லாமல் இவ்வுலகில் வாழ அழைக்கப்படுகிறோம். ஆனால், மனசாட்சியின் யுகத்தில் வாழ்ந்தவர்களுக்கும், நியாயப்பிரமாண யுகத்தில் வாழ்ந்தவர்களுக்கும், கிருபை யுகத்தில் வாழ்பவர்களுக்கும் அவர்களுக்கென்று கொடுக்கப்பட்ட பிரமாணங்களை அடிப்படையாக வைத்தே பரலோகத்தில் கைம்மாறு கொடுக்கப்படும் என்பதே யதார்த்த உண்மை. குறிப்பாக யாக்கோபின் 12 கோத்திரத்தார், இயேசு கிறிஸ்துவின் 12 திருத்தூதர்கள் பரலோகத்தில் சிறப்பாக மாட்சிப்படுத்தப்படுவார்கள் என்று மறைநூல் பதிவு செய்கிறது. (வாசிக்கவும்: தி.வெ. 7:1-8, 21:13-14). ஏனெனில் வேலையாள் தன் கூலிக்கு உரிமை உடையவர்தானே!
பரலோகம் என்பது யூதர்களுக்கு மட்டும் உரியதல்ல; அது சாதி, மதம், மொழி, நாடு, இனம், குலம் என்னும் எல்லா வேறுபாடுகளையும் கடந்து அனைத்து மக்களுக்கும் உரியது என்பதை வெளிப்படுத்த திருத்தூதர் யோவான் கீழ்கண்டவாறு சொல்கிறார். இதன்பின் யாராலும் எண்ணிக்கையிட முடியாத பெரும் திரளான மக்களைக் கண்டேன். அவர்கள் எல்லா நாட்டையும், குலத்தையும் மக்களினத்தையும் மொழியையும் சார்ந்தவர்கள்; அரியணைக்கும் ஆட்டுக்குட்டிக்கும் முன்பாக நின்றுகொண்டிருந்தனர்; வெண்மையான தொங்கலாடை அணிந்தவர்களாய்க் கையில் குருத்தோலைகளைப் பிடித்திருந்தார்கள் (தி.வெ. 7:9). இந்த வசனத்தைப் படித்துவிட்டு பரலோகத்திலும் இந்துத்துவ சாதி வேறுபாடுகள் உண்டு என்னும் குறுகிய கண்ணோட்டத்துக்கு நகர்ந்துவிடக்கூடாது.