015) லேவி குலத்தார் மட்டுமே தனக்கு ஊழியம் செய்யவேண்டும் (உபா.10:8) என்று கடவுள் கட்டளையிட்டாரே!

பதில்: தற்போது புதிய உடன்படிக்கையின் நாட்களில் கடவுள் தன்னை நம்பி வரும் எந்த இன மக்களையும், எந்த மத மக்களையும் மகிழ்ச்சியோடு தன் பிள்ளைகளாக ஏற்றுக்கொள்கிறார். ஆனால், யாரையும் அவர் கட்டாயப்படுத்துவதில்லை. தனக்கு ஊழியம் செய்ய சாதி, மத, இன, மொழி பாகுபாடு இல்லாமல் எல்லோரையும் பயன்படுத்துகிறார். பழைய உடன்படிக்கையின் நாட்களிலும் அவரை நம்பி ஏற்றுக்கொண்டவர்களை தன் பிள்ளைகளாக ஏற்றுக்கொண்டார். ஆனால், திருக்கோவிலில் திருப்பணி செய்வதற்காக லேவி கோத்திரத்தாரை மட்டுமே அவர் ஏற்றுக்கொண்டார்.
_ஆண்டவரின் உடன்படிக்கைப் பேழையைச் சுமக்கவும், இந்நாள்வரை இருப்பதுபோல ஆண்டவர் திருமுன் நின்று பணிபுரியவும், அவருடைய பெயரால் ஆசி வழங்கவும், ஆண்டவர் லேவியின் குலத்தைத் தனித்து வைத்தார் (இணை. 10:8)_
இஸ்ராயேல் மக்கள் அனைவருக்கும் பொதுவான கடவுள் தனக்கு ஊழியம் செய்ய *லேவி* கோத்திரத்தை மட்டும் நியமித்த நோக்கம் என்ன என்பதை நாம் தெளிவாக தெரிந்துகொள்ளவேண்டும். இல்லாவிட்டால், பைபிள் சொல்லும் கடவுளும் சாதி, இன, கோத்திர, வம்ச பாகுபாடு கற்பிக்கிறவர் என்று சிலர் கூறும் தப்பறையான கருத்து உறுதியாகிவிடும்.
இஸ்ரவேல் மக்கள் எப்படி வாழவேண்டும், எப்படி வாழக்கூடாது என்ற வாழ்வியல் கட்டளைகளை இறைவனிடம் வாங்குவதற்காக மோசே சீனாய் மலையில் ஏறினார். கடவுள் இரண்டு கற்பலகைகளில் பத்து கட்டளைகளை எழுதி மோசேயிடம் கொடுத்தார். மோசே அவற்றை வாங்கிவிட்டு கீழே இறங்கி வரும்போது, ஆரோன் பொன்னால் ஒரு கன்றுக்குட்டியை செய்து அதை இஸ்ரவேல் மக்கள் வணங்கும்படி செய்ததை மோசே கண்டார். அப்போது அவர் சினமடைந்து இஸ்ரயேலர்களைப் பார்த்து, _”ஆண்டவரது பக்கம் உறுதியாய் இருப்போர் என்னிடம் வாருங்கள்” என்றார். லேவியர் அனைவரும் அவரிடம் வந்துகூடினர் (விடு. 32:26)_
இங்கு மோசேயின் சொல்லுக்கு லேவி கோத்திரத்தார் கீழ்படிந்ததால், கடவுள் தனக்கு திருப்பணி செய்ய லேவி கோத்திரத்தை தேர்ந்தெடுத்தார் என்று நான் உறுதியாக அவதானிக்கிறேன். ஏனெனில் ஒரு மனிதனுடைய கீழ்படிதல்மூலம் அவருடைய ஆயிரம் தலைமுறைகளை ஆசீர்வதிக்கவும், அவர் பாவம் செய்யும்போது மூன்றிலிருந்து நான்கு தலைமுறை வரை தண்டனை கொடுக்கவும் இறைவன் நீதி வழுவாத குணம் உடையவர். பழைய உடன்படிக்கையின் நாட்களில் இஸ்ராயேல் மக்கள் செய்த பாவங்களும், புண்ணியங்களும் அவர்களுடைய சந்ததிகளை பாதித்தன என்பது இதன் மூலமாகவும் உறுதியாகிறது.