பதில்: தன் சீடர்களை மறைப்பரப்புப் பணிக்காக அனுப்பும்போது, _”நான் உலகிற்கு அமைதி கொண்டுவர வந்தேன் என எண்ணவேண்டாம். அமைதியை அல்ல, வாளையே கொண்டுவர வந்தேன். தந்தைக்கு எதிராக மகனையும், தாய்க்கு எதிராக மகளையும், மாமியாருக்கு எதிராக மருமகளையும் நான் பிரிக்க வந்தேன்” (மத்தேயு 10: 34,35)_ என்று கிறிஸ்து கூறுகிறார். இந்த வாசகத்தை படித்துவிட்டு *’இயேசு ஒரு பிரிவினைவாதி’* என்று சிலர் தவறாக நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்.
கிறிஸ்து பிரிவினையை உண்டுபண்ண வந்திருந்தால், _”தூய தந்தையே! நாம் ஒன்றாய் இருப்பதுபோல், *அவர்களும் ஒன்றாய் இருக்கும்படி* நீர் எனக்கு அளித்த உம் பெயரின் ஆற்றலால் அவர்களைக் காத்தருளும். தந்தையே, *எல்லாரும் ஒன்றாய் இருப்பார்களாக!* நீர் என்னுள்ளும் நான் உம்முள்ளும் இருப்பதுபோல் அவர்களும் நம்முள் *ஒன்றாய் இருப்பார்களாக!* இதனால் நீரே என்னை அனுப்பினீர் என்று உலகம் நம்பும். நாம் ஒன்றாய் இருப்பதுபோல் *அவர்களும் ஒன்றாய் இருக்குமாறு* நீர் எனக்கு அருளிய மாட்சியை நான் அவர்களுக்கு அளித்தேன். இவ்வாறு, நான் அவர்களுள்ளும் நீர் என்னுள்ளும் இருப்பதால் அவர்களும் *முழுமையாய் ஒன்றித்திருப்பார்களாக!* இதனால் நீரே என்னை அனுப்பினீர் எனவும் நீர் என்மீது அன்பு கொண்டுள்ளதுபோல் அவர்கள் மீதும் அன்பு கொண்டுள்ளீர் எனவும் உலகு அறிந்து கொள்ளும்” (யோவான் 17:11,21-23)_ என்று தன் தந்தையிடம் விண்ணப்பித்திருக்க மாட்டாரே!
தன் அன்புக்கொள்கையை பின்பற்றுவோர் சகோதர ஒற்றுமையோடு இருக்கவேண்டும் என விரும்பியதால்தானே இயேசு இப்படி சொன்னார்! இன்னும் சொல்லப்போனால், தந்தை-மகன்-தூயஆவியார் என்னும் திரித்துவ வடிவில் இருக்கும் கடவுள் எப்படி ஒன்றாக ஒற்றுமையாக இருக்கிறாரோ, அப்படி *கிறிஸ்தவர்கள் ஒற்றுமையாக இருந்தால்தான் இயேசுவை இறைமைந்தன் என்று பிறமக்கள் நம்புவார்கள்* என்று இயேசு தந்தையிடம் பேசுகிறார்.
கிறிஸ்து பிரிவினையை உண்டுபண்ண வந்திருந்தால், தன் சீடர்களிடம், _”அமைதியை உங்களுக்கு விட்டுச் செல்கிறேன்; என் அமைதியையே உங்களுக்கு அளிக்கிறேன். நான் உங்களுக்குத் தரும் அமைதி உலகம் தரும் அமைதி போன்றது அல்ல. நீங்கள் உள்ளம் கலங்க வேண்டாம்; மருள வேண்டாம் (யோவா. 14:27), அமைதி ஏற்படுத்துவோர் பேறுபெற்றோர்; ஏனெனில் அவர்கள் கடவுளின் மக்கள் என அழைக்கப்படுவர் (மத். 5:9), ஒருவரோடு ஒருவர் அமைதியுடன் வாழுங்கள் (மாற். 9:50) என்று ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து கூறியிருக்கமாட்டாரே! சீடர்களைப் பார்த்து, உங்களுக்கு அமைதி உரித்தாகுக! (யோவா. 20:19,21,26) என்று அவர் வாழ்த்தியிருக்கமாட்டாரே!
கிறிஸ்து பிரிவினையை உண்டுபண்ண வந்திருந்தால், _அனைவருடனும் அமைதியாய் இருக்க முயலுங்கள் (உரோ. 12:14)_ என்று திருத்தூதர் பவுல் கூறியிருக்கமாட்டாரே!
கிறிஸ்து பிரிவினையை உண்டுபண்ண வந்திருந்தால், கிறிஸ்து இயேசுவை, “அமைதியின் அரசர்” (எசா. 9:6) என்று இறைவாக்கினர் எசாயா கூறியிருக்கமாட்டாரே!
அப்படியெனில், _”வாளை கொண்டுவர வந்தேன்; பிரிவினையை உண்டுபண்ண வந்தேன்”_ என்று இயேசு ஏன் கூறினார்? மக்களுக்காக தன் உயிரையே கொடுக்க வந்த கருணாமூர்த்தி ஏன் இவ்வளவு கடினமான வார்த்தைகளைப் பேசினார்? நிச்சயமாக ஒரு நியாயமான காரணம் இல்லாமல் இப்படி அவர் பேசியிருக்கமுடியாது. இதற்கான தெளிவான விளக்கத்தை நாம் தெரிந்து கொள்ளவேண்டும்.
இயேசு கிறிஸ்துவின் இரட்சிப்பை ஒருவர் ஏற்றுக்கொள்ளும்போது அதை தன் உறவினர்களும், நண்பர்களும் மகிழ்ச்சியோடு ஏற்றுக்கொள்வார்கள் என்று சொல்லமுடியாது. பலர் எதிர்ப்பார்கள். பலர் இகழ்வார்கள். ஏன் கொலைகூட செய்ய வாய்ப்பு இருக்கிறது. அப்படிப்பட்ட சூழ்நிலையில் உருவாகும் பகை போன்ற நிலைகளைப் பற்றி ஆண்டவர் அவ்வாறு கூறினார்.
இந்துத்துவ சாதியத்துக்கும் தங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று புரிந்து கொள்ளும் கிறிஸ்தவர்கள் சாதி பார்க்காமல் திருமணம் செய்ய முயற்சி செய்யும்போது சாதி உணர்வுடைய அவர்கள் பெற்றோர் உட்பட குடும்ப உறவினர்கள் பலர் அந்த முயற்சியை தடை செய்வார்கள். அதுபோன்ற சூழ்நிலைகளைப் பற்றி ஆண்டவர் அவ்வாறு கூறினார்.
கிறிஸ்தவர்கள் கண்டிப்பாக சாதி பார்க்கவேண்டும் என்று போதிக்கப்பட்ட கிறிஸ்தவர்கள் என்னை புரிந்துகொள்ளமுடியாமல் என்னிடம் சண்டைக்கு வருகிறார்கள். சாதி மறுப்பைப்பற்றி நான் பேசாமல் இருந்திருந்தால், சாதி உணர்வுடைய ‘போதகர்களுக்கும்’ எனக்கும் இடையேயான உறவுக்கு சமாதானக்கேடு உருவாகியிருக்காது. கிறிஸ்தவர்கள் சாதிப்பாகுபாடு இல்லாமல் வாழவேண்டுமென நான் போதித்ததாலேயே சாதி உணர்வுடைய _’ஊழியக்காரர்கள்’_ பலருடைய எதிர்ப்பை சம்பாதிக்க வேண்டியிருந்தது. அந்தப் புரிந்து கொள்ளாமையால் வரும் சண்டையை பற்றித்தான் இயேசு அப்படி குறிப்பிடுகிறார். நான் பல சபைகளில் சாதிமறுப்பைப் பற்றி பேசி முடித்தவுடன் ஒருபுறம் சாதி உணர்வுக் கிறிஸ்தவர்களென்றும், மறுபுறம் சாதி மறுப்பு கிறிஸ்தவர்கள் என்றும் சபை இரண்டாக பிரிந்திருக்கிறது. அந்த பிரிவினையில் தவறேதும் இல்லையே! இது பயிரிலிருந்து களையைப் பிரிப்பது போன்ற, அரிசியிலிருந்து கற்களைப் பிரிப்பது போன்ற நல்ல பிரிவினையல்லவா?
பிரிவினை உண்டாகும் என்பதற்காக சாதியத்தின் கொடிய விளைவுகளை நான் மறைக்கமுடியுமா? _நெறிக்கெட்ட இந்தத் தலைமுறையிலிருந்து, உங்களைக் காப்பாற்றிக்கொள்ளுங்கள்” (தி.ப. 2:40)_ என்று திருத்தூதர் பேதுரு அறிவுறுத்தினார். அதேபோல, சாதி உணர்வு கிறிஸ்தவர்களிடமிருந்து உங்களைக் காப்பாற்றிக்கொள்ளுங்கள் என்று நாங்கள் போதிக்கிறோம்.