பதில்: கிறிஸ்து பாவமன்னிப்பையும், நிலைவாழ்வையும் பற்றி மட்டுமே பேச வந்திருந்தால் அவற்றைப் பற்றி பரப்புரை மட்டும்தானே செய்திருக்கவேண்டும்! அவர் கானாவூரில் தண்ணீரை திராட்சை ரசமாக மாற்றிய நோக்கம் என்ன? அவர் ஐந்து அப்பங்களையும் இரண்டு மீன்களையும் வைத்து ஐயாயிரம் பேருக்கு ஏன் உணவளித்தார்? பார்வையற்றோருக்கு அவர் பார்வை கொடுத்தார்; செவித்திறன் அற்றவர்களை கேட்கப்பண்ணினார்; தொழுநோயாளிகளை குணமாக்கினார்; கால் வழங்காதவரை நடக்கவைத்தார்; பிசாசை துரத்தினார்; ஊமையர்களை பேசவைத்தார்; இரவு முழுவதும் வலைவீசி மீன்பிடிக்க முயற்சி செய்தும் எதுவும் கிடைக்காமல் விரக்தியோடு கரைக்குத் திரும்பியவர்களுக்கு வலை கிழிந்து போகுமளவுக்கு மீன்பிடிக்க அருள் செய்தார்; வெட்டப்பட்ட காதை ஒட்டவைத்தார்; இறந்துபோனவர்களை உயிரோடு எழுப்பினார். இவையெல்லாம் மறுமைக்குரிய ஆசீர்வாதங்களா?
“என்னை நம்பினால் உங்களுக்கு நிலைவாழ்வு கிடைக்கும்; இல்லாவிட்டால் நரகத்துக்குப் போவீர்கள்” என்று மட்டும் பேசிவிட்டு சென்றிருக்கலாமே! அற்புதச் செயல்களை செய்திருக்கத் தேவையில்லையே!
நலம் குன்றியவர்களைக் குணமாக்குங்கள்; இறந்தோரை உயிர் பெற்றெழச் செய்யுங்கள்; தொழுநோயாளரை நலமாக்குங்கள்; பேய்களை ஓட்டுங்கள்; கொடையாகப் பெற்றீர்கள்; கொடையாகவே வழங்குங்கள் (மத். 10:8)என்று கிறிஸ்து ஏன் தன் திருத்தூதரிடம் சொன்னார்? இவையெல்லாம் ஆவிக்குரிய நன்மைகளா? இன்று கிறிஸ்தவர்கள் இயேசுவின் பெயரால் நோய்களை குணமாக்குகிறார்களே! அது எதற்காக? அது உலகியல் நன்மை இல்லையா? பேயினால் பாதிக்கப்பட்டிருந்தவர்களை ஊழியர்கள் விடுவிக்கிறார்களே! அது இந்த மண்ணுக்குரிய நன்மை இல்லையா?
அவர் கானாவூரில் செய்த அற்புதங்களைப் பார்த்துத்தான் அவருடைய திருத்தூதர்களே அவரை நம்பினார்கள் (யோவா. 2:11) என்றும் உடல் நலம் அற்றோருக்கு அவர் செய்துவந்த அரும் அடையாளங்களைக் கண்டு மக்கள் பெருந்திரளாய் அவரைப் பின் தொடர்ந்தனர் (யோவா. 6:2) என்றும் திருத்தூதர் யோவான் பதிவு செய்கிறார். உங்கள் கூற்றுப்படி இயேசு பாவ மன்னிப்பையும், நித்தியஜீவனையும் பற்றி மட்டும்தானே பேசிக்கொண்டே சென்றிருக்கவேண்டும்! ஏன் அற்புதங்களை நடத்தவேண்டும்?
“நான் உங்களிடம் அன்பு கூறுவதுபோல நீங்களும் ஒருவரில் ஒருவர் அன்பு கூறுங்கள்” என்றும் இயேசு கிறிஸ்து சொன்னாரே! (யோவா.13:34). அதை நாம் கடைபிடிக்கிறோமா! கிறிஸ்து நம்மை நேசித்ததுபோல நாமும் பிறரை நேசித்தால் பிறரை நாம் சாதி அடிப்படையில் புறக்கணிக்கமுடியுமா?
பாவ மன்னிப்பையும், நித்திய ஜீவனையும் பற்றி அவிசுவாசிகளிடம் பேசச் சொல்கிறீர்களே, அப்படி பேசப்போனவர்கள் ஏன் புறக்கணிக்கப்படுகிறார்கள் என்று சிந்தித்தீர்களா? சக மனிதரை சாதி அடிப்படையில் புறக்கணிக்கும் சாதிவெறியர்கள் பிரச்சாரம் செய்யும் பாவ மன்னிப்பும், நித்திய ஜீவனும் (நிலை வாழ்வு) நிஜமானது என்று மக்கள் எப்படி நம்புவார்கள்? வழுக்கைத் தலையன் முடிமுளைக்க வைக்கும் தைலம் விற்றால் யார் வாங்குவார்கள்? கிறிஸ்தவர்கள் சொல்லும் பாவ மன்னிப்பையும் நித்திய ஜீவனையும் அம்பேத்கர், பெரியார் போன்ற சமூக நல விரும்பிகள் புறக்கணித்த காரணம் என்ன என்று உலகத்துக்கே தெரியுமே! இந்துத்துவ பரம்பரையில் பிறந்த அவர்கள் இந்துத்துவத்திலுள்ள சாதி பாகுபாடுகளால் இந்துத்துவத்தை புறக்கணித்தனர்! கிறிஸ்தவர்களிலும் அதே சாதிப் பாகுபாடுகளும் பிரிவினைகளும் இருப்பதால் அல்லவா அவர்கள் கிறிஸ்தவத்தையும் புறக்கணித்து பிற மதங்களுக்குச் சென்றனர்!
எப்படி சாதி வெறியுடைய பிராமணர்கள் சொல்லும் வைகுண்டத்தையும், கைலாசத்தையும் இந்துத்துவ குடும்பத்தில் பிறந்தவர்களே புறக்கணிக்கிறார்களோ, அதேபோல சாதி வெறியுடைய கிறிஸ்தவர்கள் விளம்பரப்படுத்தும் பாவ மன்னிப்பையும், நித்தியஜீவனையும், பரலோகத்தையும் கிறிஸ்தவர்களே புறக்கணிக்கத் தொடங்கிவிட்டார்களே! ஏன்? பாஸ்டர்களே! பலர் ஏற்கெனவே கிறிஸ்தவத்தை புறக்கணித்து, புத்தம், இஸ்லாம், நாத்திகம் போன்ற மதங்களுக்கு நகர்ந்துகொண்டிருப்பதை பார்க்கும்போது இதயம் வலிக்கிறதே! கேவலமான சாதிவெறியை மனதுக்குள்ளே வைத்துக்கொண்டு, ஆத்தும பாரமுடையவரைப்போல கபட நாடகம் ஆடுவதில் என்ன அர்த்தம் இருக்கிறது?
நீண்டநேரம் பயணம் செய்ய விரும்பி நாம் தேர்வு செய்யும் பேருந்தினுள் நாம் அமரப்போகும் இருக்கை நன்றாக இருக்கிறதா என்று நாம் பரிசோதிப்பது இயல்புதானே! அதேபோல சுமார் 80 ஆண்டுகள் வாழப்போகும் உலக வாழ்க்கையில் நாம் சகோதரத்துவத்தோடு, சமாதானமாக பயணிக்க முடியுமா என்று இம்மண்ணுக்குரிய தற்காலக் கிறிஸ்தவ வாழ்க்கையை மக்கள் பரிசோதிக்கமாட்டார்களா?
சாதி வக்கிர எண்ணம் கொண்டு சக கிறிஸ்தவரை புறக்கணிக்கும் ஒருவருக்கே நித்தியஜீவன் கிடைக்குமானால், யாருக்குத்தான் பரலோகமும் நித்தியஜீவனும் கிடைக்காது என்று நம்மிடம் பிறர் வாக்குவாதம் செய்யமாட்டார்களா? வெளியே இருக்கும் இந்துக்களுக்கு இரட்சிப்பைப் பற்றி பேசுவதற்குமுன் கிறிஸ்தவர்களுக்குள் இருக்கும் சாதிப் பேயைத் துரத்துவது அல்லவா முக்கியமானது! வெளியே இருக்கும் விருந்தினரை நம் வீட்டுக்கு அழைப்பதற்குமுன் நம் வீட்டை சுத்தப்படுத்துவது முக்கியமல்லவா!
பிறர் நரகத்துக்குச் சென்றுவிடுவார்களே என்று பிறர்மீது அக்கரைப்படும் அன்புள்ளம் கொண்டவர்கள்தானே பிறருக்கு பாவ மன்னிப்பை, நித்தியஜீவனை அறிமுகப்படுத்துவார்கள்! ஆனால், நீங்கள் நிஜமாகவே அன்புடையவர்களென்றால் பிறர் கிறிஸ்துவை ஏற்றுக்கொள்ள சாதியம் தடையாக இருப்பது தெரிந்தும் அதைக் கடைபிடிப்பீர்களா?
தம் சகோதரர் சகோதரிகளை வெறுப்போர் (சாதி, இன அடிப்படையில்) அனைவரும் கொலையாளிகள். எந்தக் கொலையாளியிடமும் நிலைவாழ்வு இராது என்பது உங்களுக்குத் தெரியுமே! (1யோவா. 3:15) என்று மறைநூல் கற்பிக்கிறது. நமக்குள்ளேயே பாவமன்னிப்பும், நிலைவாழ்வும் இல்லாமல் யாரிடம் போய் அதை அறிமுகப்படுத்தப் போகிறோம்? இது அப்பட்டமான பித்தலாட்டமல்லவா!
இரண்டு நூற்றாண்டுகளுக்குமுன் வெளிநாட்டிலிருந்து வந்த மிஷனரிகள், இந்துக்களாக இருந்து சாதிய ஒடுக்குமுறையால் துன்பப்பட்டுகொண்டிருந்ந திருவாங்கூர் சமஸ்தானத்திலுள்ள சாணார்கள் என்ற நாடார்களை சாதிய கொடுமையிலிருந்து விடுவித்தார்களே! அதனால்தானே இந்துக்களாக இருந்த அம்மக்கள் நூற்றாண்டுகளாகப் பின்பற்றிய இந்துத்துவ ஆன்மீகத்தைப் புறக்கணித்து கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டார்கள்! அன்றைய வெளிநாட்டு ஊழியர்கள் வெள்ளைக்காரன் என்ற தற்பெருமையோடு வாழ்ந்து, பாவ மன்னிப்பையும், நித்திய ஜீவனையும் பற்றி மட்டும் பேசியிருந்தால் அவர்களுடைய மார்க்கத்தை அம்மக்கள் ஏற்றுக்கொண்டிருக்கமாட்டார்களே! தங்கள் நிலபுலன்கள் எல்லாவற்றையும் விற்று, இந்திய மண்ணில் ஆன்மீகப் பணிக்கென்று செலவிட்ட, தியாகிகளான வெளிநாட்டு அருட்பணியாளர்கள், இன்று வாழும் பாஸ்டர்களைவிட அறிவிலும் அர்ப்பணிப்பிலும் குறைந்தவர்களா?
தொழுநோயாளிகளுடைய நல வாழ்வுக்காக தன் வாழ்க்கை முழுவதையும் அர்ப்பணித்த அன்னைத் தெரேசா அம்மையாருக்கு பெருமதிப்பு கொடுக்கும் உலக மக்கள், பாவமன்னிப்பு, நித்தியஜீவன் என்ற பொந்துக்குள் ஒளிந்திருக்கும் சாதிவெறிபிடித்த மதவெறிப் பெருச்சாளிகளுக்கு அம்மதிப்பைக் கொடுக்காத காரணம் என்ன? உடன்கட்டை ஏறும் பழக்கத்திலிருந்து இந்தியர்களை விடுவித்த வில்லியம் கேரி என்ற மாமனிதன் இம்மண்ணுக்கு ஆற்றிய தொண்டுகளை இந்திய மக்களால் மறக்கமுடியுமா? திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் எழுதிய இராபர்ட் கால்டுவெல் அவர்களை தமிழ்மண் மறக்குமா? சாதிக்கொடுமைகளுக்கு எதிர்த்து குரல் கொடுத்த இரேனியஸ் அவர்களை வரலாறு மறக்குமா? திருக்குறள், நாலடியார், திருவாசகம் என்னும் ஒழுக்க நெறி நூல்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த ஜி.யூ.போப் அவர்களை தமிழ் நாட்டு மக்களால் மறக்கமுடியுமா? இந்துத்துவ சனாதனத்தால் கல்வி மறுக்கப்பட்ட மக்களுக்கு கல்வி கொடுப்பதற்காக வெளிநாட்டு அருட்பணியாளர்கள் ஊரெங்கும் பள்ளிகளை கட்டினார்கள். மருத்துவம் இல்லாமல் இந்திய மக்கள் மடிந்துகொண்டிருந்தபோது அவர்கள் மருத்துவமனைகளைக் கட்டினார்கள். தமிழ்நாட்டில் முதன்முதலில் அச்சு இயந்திரத்தையும், காகிதத் தொழிற்சாலையையும் நிறுவியது மிஷனரிகள்தான். அவர்கள் செய்த சேவைகள் எல்லாம் தேவையற்றது என்று கூறுகிறீர்களா? அவர்கள் அறிவில்லாமல் இதெல்லாம் செய்துவிட்டார்களோ!
கிறிஸ்தவர்கள் ஒற்றுமையாக வாழ்ந்தால்தான் இயேசு மட்டும்தான் கடவுளிடமிருந்து வந்த மீட்பர் என்று மக்கள் நம்புவார் (யோவா. 17:21-23) என்று இயேசு கிறிஸ்துவே சொல்லிவிட்டார். அப்படியானால், சாதி அடிப்படையில் பிரிந்து கிடக்கும் நாம் பரப்புரை செய்யும் ஆன்மீகத்தை யார் ஏற்றுக்கொள்வார்கள்?
செய்தியை கொண்டு வருபவனையே நம்பாத மக்கள் செய்தியை எப்படி நம்புவார்கள்? நம்மை ஏற்றுக்கொள்பவர்கள்தான் நம் ஆன்மீகத்தை ஏற்றுக்கொள்வார்கள் என்னனு கிறிஸ்துவே சொல்லிவிட்டாரே! ஆக, கிறிஸ்துவின் சீடர்கள் சக சீடர்களுடன் சாதி பேதங்கள் இல்லாமல் ஒருதாய் பிள்ளைகளாக ஒற்றுமையாக வாழ்வது மிகவும் முக்கியமானது என்று தயவு செய்து உணருங்கள்.