021) இயேசு சாதியை ஒழிக்கச் சொல்லவில்லையே! சாதியை ஒழியுங்கள் என்று மறைநூல் நமக்குக் கட்டளையிடவில்லையே!

பதில்: “நான்தான் கடவுள்; என்னை ஆராதனை செய்யுங்கள்” என்று கிறிஸ்து நேரடியாக கூறியதாக மறைநூலில் எங்குமே குறிப்பிடவில்லை. அதற்காக கிறிஸ்து கடவுளுக்கு சமமானவரல்ல என்று சொல்லமுடியாது. இயேசு கிறிஸ்து கடவுள் என்று மறைநூலில் கிறிஸ்துவே மறைமுகமாகக் கூறியுள்ளார். அதேபோல, “சாதியத்தை ஒழியுங்கள்” என்று கிறிஸ்து நேரடியாக பேசவில்லை. ஏனெனில், ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து ஊனுடலில் வாழ்ந்த நாட்களில் இஸ்ரயேல் நாட்டில், இந்துத்துவ சனாதன சாதிப் பிளவுகளும், பாகுபாடுகளும் இல்லை. அதனால்தான், கிறிஸ்துவோ, திருத்தூதர்களோ இந்துத்துவ சாதியம் என்ற பாதகத்துக்கு எதிராகப் போதிக்கவில்லை. சாதியம் என்பது இந்திய நாட்டில் உருவான இந்துத்துவத்தின் அடிப்படையிலான தீய தத்துவமாகும். அதேபோல, “புகைப் பிடிக்கக்கூடாது, மூக்குப்பொடி போடக்கூடாது, வெற்றிலை பாக்கு மெல்லக்கூடாது, மயக்க மருந்து ஊசி போடக்கூடாது,” என்றும் மறைநூலில் எங்குமே எழுதப்படவில்லை. அதனால் நாம் அவற்றையெல்லாம் பயன்படுத்தலாம் என்று கூறமுடியுமா? “தற்கொலை செய்யக்கூடாது” என்று புனிதநூலில் எங்குமே எழுதப்படவில்லை. ஆகவே நாம் தற்கொலை செய்யலாமா? நிச்சயமாக கூடாது.
நீங்கள் கடவுளுடைய கோவிலென்றும் கடவுளின் ஆவியார் உங்களில் குடியிருக்கிறார் என்றும் உங்களுக்குத் தெரியாதா? ஒருவர் கடவுளின் கோவிலை அழித்தால் கடவுள் அவரை அழித்துவிடுவார். ஏனெனில் கடவுளின் கோவில் தூயது; நீங்களே அக்கோவில் (1கொரி. 3:16,17), உங்கள் உடல் நீங்கள் கடவுளிடமிருந்து பெற்றுக்கொண்ட தூய ஆவி தங்கும் கோவில் என்று தெரியாதா? நீங்கள் உங்களுக்கு உரியவரல்ல. கடவுள் உங்களை விலை கொடுத்து மீட்டுள்ளார். எனவே, உங்கள் உடலால் கடவுளுக்குப் பெருமை சேருங்கள் (1கொரி. 6:19,20) என்ற இறை வார்த்தைகளின்படி நம் உடலைக் கெடுக்கும் எந்த செயலையும் நாம் செய்யக்கூடாது. “புகை பிடிக்கக்கூடாது, மூக்குப்பொடி போடக்கூடாது, வெற்றிலை பாக்கு மெல்லக்கூடாது, தற்கொலை செய்யக்கூடாது” என்று மறைநூலில் நேரடியாக எழுதப்படாவிட்டாலும், “அவை கடவுளின் கோயிலாகிய நம் உடலை கெடுக்கிறது என்பது நமக்குத் தெரியுமே! ஆகவே, அவற்றிலிருந்து விலகி உடலை பாதுகாப்பாக வைத்திருக்கவேண்டும்” என்று மறைமுகமாக கற்றுக்கொள்கிறோம்.
“கிறிஸ்துவின் சீடர்கள் குளிக்கும்போது சோப்பை பயன்படுத்துவீர்களாக! விசுவாசிகள் குளித்தபின் தலை சீவக்கடவர்கள்! ஆண்டவருடைய பிள்ளைகளுக்கு கண் பார்வை மங்கும்போது கண்ணை பரிசோதித்து கண்ணாடி அணிந்துகொள்ளுங்கள்; கிறிஸ்தவர்கள் மின்சாரத்தை சிக்கனமாக செலவு செய்வீர்களாக! சபைக்கூடுகையில் ஒலிப் பெருக்கியைப் பயன்படுத்துவீர்களாக! கொசு கடிக்காமல் இருக்க கொசுவலையை உபயோகிப்பீர்களாக; நற்செய்தியை பரப்ப கைப்பிரதிகளைக் கொடுப்பீர்களாக! என்று மெய்யாகவே மெய்யாகவே நான் உங்களுக்குச் சொல்கிறேன்” என்று வேதத்தில் எங்குமே வசனங்கள் இல்லை. மறைநூலில் இவற்றைப்பற்றி எழுதப்படாததால் இவை எல்லாம் தவறு என்று கூறமுடியுமா? “பேருந்துப் படிக்கட்டில் பயணம் செய்தால் உனக்கு ஐயோ! தொடர்வண்டியின் கூரையில் பயணம் செய்தால் நீ சாகவே சாவாய்” என்று மறைநூல் கூறாததால் நாம் அந்த சட்டத்தை மீறலாமா? அதேபோல, கிறிஸ்தவர்கள் சாதி பார்க்கக்கூடாது என்ற நேரடி வார்த்தைகள் மறைநூலில் எழுதப்படவில்லை என்பதற்காக, கிறிஸ்தவ ஒற்றுமையைக் கெடுக்கும் நாசகரமான சனாதன இந்துத்துவ சாதி வேறுபாட்டுக் கொள்கையை, சகோதரத்தை விரும்பும் கிறிஸ்தவர்கள் நாம் சகிக்கமுடியுமா? நிச்சயமாக முடியாது.
கிறிஸ்து அடைந்த கொடிய மரணத்தின் மிக முக்கியமான இலட்சியங்களில் ஒன்று தன்னை நம்புவோரிடையே அவர் உருவாக்க நினைத்த ஒற்றுமையும் சகோதர அன்புமாகும். எதற்காக கிறிஸ்து மரித்தார் என்பதைப் பற்றி எபேசு சபைக்கு கடிதம் எழுதும்போது திருத்தூதர் பவுல் கீழ்கண்டவாறு குறிப்பிடுகிறார். “அவரே (கிறிஸ்து) நமக்கு அமைதி அருள்பவர். அவரே இரண்டு இனத்தவரையும் (யூதர் & யூதரல்லாதவர்) பிரித்து நின்ற பகைமை என்னும் சுவரை, தமது உடலில் ஏற்ற துன்பத்தின் (சிலுவை) வழியாய்த் தகர்த்தெறிந்து, அவர்களை ஒன்றுபடுத்தினார். பல கட்டளைகளையும் விதிகளையும் கொண்ட யூதச் சட்டத்தை அழித்தார். இரு இனத்தவரையும் தம்மோடு இணைந்திருக்கும் புதியதொரு மனித இனமாகப் படைத்து அமைதி ஏற்படுத்தவே இவ்வாறு செய்தார். தாமே துன்புற்றுப் பகைமையை அழித்தார். சிலுவையின் வழியாக இரு இனத்தவரையும் ஓருடலாக்கிக் கடவுளோடு ஒப்புரவாக்க இப்படிச் செய்தார்” (எபே. 2:14-16).
மேற்கண்ட வசனங்கள்மூலம் யூதர்களுக்கும் பிறருக்குமிடையே பின்பற்றப்பட்டுவந்த தலைமுறைப் பகைமையைக் கிறிஸ்து தன் மரணத்தின்மூலம் அழித்தார் என்று அறிந்துகொள்கிறோம். அதாவது, யூதர்கள் யூதர் அல்லாதவர்கள் என்று இனி எந்த வேறுபாடுகளும் இல்லை என்ற உண்மையை புதுஉடன்படிக்கை வெளிப்படுத்துகிறது. எதற்காக கிறிஸ்து பகையை அழிக்கவேண்டும்? ஏன் உலக மக்களை அவர் ஒன்றாக்கவேண்டும்? தன்னைப் பின்பற்றும் புதிய உடன்படிக்கையின் மக்கள் அனைவரும் ஒரே தந்தையின் பிள்ளைகளைப்போல ஒற்றுமையாக வாழவேண்டுமென அவர் விரும்புகிறார் என்று இதன்மூலம் அறிகிறோம். ஏனெனில், தந்தையாம் கடவுளும் இயேசுவும் ஒருவரை ஒருவர் நேசித்து, ஒன்றாக இருப்பதுபோல, கிறிஸ்தவர்களும் ஒருவரை ஒருவர் நேசித்து ஒற்றுமையாக இருக்கட்டும் என்று இயேசு கிறிஸ்து தந்தையிடம் பிரார்த்தனை செய்கிறார் (யோவா. 17:21-23). இயேசு தன் தந்தையிடம் பிரார்த்தனை செய்தால்தான் சாதிக்கமுடியும் என்னுமளவுக்கு முக்கியமான ஒரு சாதனைதான் விசுவாசிகளுக்கிடையேயான ஒற்றுமை.
இந்திய கிறிஸ்தவ மக்களைப் பொறுத்தவரையில் கடவுள் விரும்பும் ஒற்றுமைக்குத் தடையாக இருப்பது இவர்கள் இன்று பின்பற்றிக்கொண்டிருக்கும் சனாதன சாதியமாகும். சாதிய இழிவிலிருந்து விடுதலை அடைய விரும்பி வேறு மதங்களுக்கு சென்றவர்கள் பலரும் அப்படி அவர்கள் மாறிய காரணம் கிறிஸ்தவர்களும் சாதியத்தைப் பின்பற்றுவதுதான் என்று அப்பட்டமாகப் பதிவு செய்துள்ளனர். அதனாலேயே, கிறிஸ்து பாவிகளை மீட்க தன் உயிரைக் கொடுத்ததையும், மூன்றாம் நாள் உயித்தெழுந்ததையும் நம்புவோரில் பெரும்பான்மையானோர் பின்பற்றும் இந்த சாதிப் பிரிவினைகளை ஒழிக்கவேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம்; சாதி மறுப்பைப் போதிக்கிறோம். தன் மக்களின் ஒற்றுமையை சாதிக்க தன் உயிரையே தந்த அந்த இலட்சியவாதி கிறிஸ்துவின் இதயத்தின் ஏக்கத்தை உணராமல் இந்துத்துவ சாதி அடிப்படையில் நாம் பிரிந்துகிடப்பதை எப்படி சகிப்பார்? ஒரு கிறிஸ்தவர் சக கிறிஸ்தவர்களை கீழ்ஜாதி, பிறசாதி, அந்நிய நுகம் என்று இழிவுபடுத்துவது அவர்களைக் காயப்படுத்தும் நெறிகேடான ஒரு செயல் அல்லவா!
இயேசு நேசிக்கிறார், மனதுருகுகிறார், கண்ணீரைத் துடைக்கிறார், அரவணைக்கிறார், தோள்மீது தூக்கி சுமக்கிறார், கட்டிப்பிடிக்கிறார், முத்தம்கொடுக்கிறார், அழுகிறார், கண்ணீர் வடிக்கிறார் என்று மேடையில் அழகு மொழியில் நாம் உருக உருகப் பேசுகிறோம். ஆனால், மனதுக்குள்ளே இந்துத்துவ சாதி வக்கிரத்தோடுதானே வாழ்கிறோம்! அதனால்தானே சக கிறிஸ்தவர்களை, “நீங்கள் புறஜாதி, அந்நிய நுகம்” என்று இழிவுபடுத்துகிறோம். இதெல்லாம் மிகப்பெரிய ஆன்மீக அநியாயமல்லவா!
சமூகப் பாகுபாடுகளுக்கு எதிராக மறைநூல் தெளிவாகப் போதிக்கிறது. “கடவுள் ஆள் பார்த்துச் செயல்படுவதில்லை என்பதை நான் உண்மையாகவே உணர்கிறேன்” (தி.ப. 10:34) என்று திருத்தூதர் பேதுருவும், “கடவுள் ஆள் பார்த்துச் செயல்படுவதில்லை” (உரோ.2:11) என்று திருத்தூதர் பவுலும், “என் சகோதர சகோதரிகளே, மாட்சிமிக்க நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவினிடம் நம்பிக்கை கொண்டுள்ள நீங்கள் ஆள் பார்த்துச் செயல்படாதீர்கள் (யாக். 2:1); அப்படி ஆள் பார்த்துச் செயல்படுவோரை குற்றவாளிகள் என்று சட்டம் குற்றம்சாட்டும்” (யாக். 2:9) என்று திருத்தூதர் யாக்கோபும் சொல்கிறார்கள்.
அடுத்திருப்பாரை இகழ்தல் பாவமாகும் (நீதி. 14:21) என்று ஞானி சாலமோன் கூறுகிறார். எந்த வகையில் பிறரை இகழ்ந்தாலும் அது பாவமாகும். கடவுள் சபிக்காதவனை நான் எப்படிச் சபிப்பேன்? கடவுள் பழித்துரைக்காதவனை நான் எப்படிப் பழித்துரைப்பேன்? (எண். 23:8) என்று இறைவாக்கினர் பிலயாம் கூறுகிறார்.
“யாரையும் தீட்டுள்ளவர் என்றோ, தூய்மையற்றவர் என்றோ சொல்லக்கூடாது’ எனக் கடவுள் எனக்குக் காட்டினார்” (தி.ப. 10:28) என்று திருத்தூதர் பேதுரு கூறுகிறார்.
சமையல் மிக்ஸி கண்டுபிடிக்கப்பட்டிருப்பதால் மக்கள் ஒவ்வொருவராக அம்மியை புறக்கணித்துக்கொண்டிருக்கின்றனர். மிக்ஸியைக் கண்டுபிடித்தவுடனே உலகிலுள்ள எல்லா அம்மிகளையும் அகற்றுங்கள் என்று யாரும் சொல்லவில்லை. அதேபோல இயேசு கிறிஸ்து யூத மதத்தை ஒழிக்கவோ, அவர்களுக்கென்று கடவுள் கொடுத்த திருச்சட்டத்தை ஒழிக்கவோ வரவில்லை (மத். 5:17). நிறைவானது வரும்போது அறைகுறையானது (தானாகவே) ஒழியும் (1கொரி. 13:10). கிறிஸ்துவின் அன்பே நிறைவானது என்று மக்கள் மனப்பூர்வமாகப் புரிந்துகொள்வதுவரை யூதர்களின் திருச்சட்டம், உலக மதச் சட்டங்கள் என்ற குறைவானவை ஒழிவதில்லை. கிறிஸ்துவின் அன்பைப் புரிந்துகொள்வோர் நிச்சயமாக ஒருநாள் சாதியத்தைப் புறக்கணித்துவிடுவார்கள்.
கிறிஸ்து ஆன்மீக புத்தகங்களில் எழுத்து வடிவத்தில் இருந்த அன்பு என்ற பண்பை செயல்வடிவத்தில் வாழ்ந்துகாட்ட வந்தார். கடவுள் மனிதன்மீது எவ்வளவு அன்பு வைத்திருக்கிறார் என்பதை தன் சிலுவை மரணத்தின்மூலம் விளங்கப்பண்ணினார் (உரோ. 5:8). நான் உங்களை நேசித்ததுபோல நீங்களும் ஒருவருக்கொருவர் நேசியுங்கள் என்ற புதிய கட்டளையை கொடுத்தார் (யோவா. 13:34). இயேசு நம்மை நேசித்ததுபோல நாம் பிறரை நேசித்தால் நாம் சக விசுவாசிகளை சாதி அடிப்படையில் புறக்கணிக்கமுடியாது.
யூதர்கள் தங்களுக்கு லாபமாக இருக்கும் யூதன் என்ற இனப் பெயர், இன்ன கோத்திரம், என்ற அடையாளம், பரிசேயன் என்ற பிரிவுப் பெயர் போன்ற தற்பெருமைக்கு உரியவைகளை விட்டுக் கொடுக்கமாட்டார்கள். இயேசுவின் அன்பு இல்லாமல் அந்த மாயையான உலகியல் கிரீடங்களைத் துறப்பது சாத்தியமற்றது. ஆனால், நாங்கள் இயேசுவை மீட்பராக ஏற்றுக்கொண்டவர்களுக்கும், யூத மதத்துக்கும் சம்பந்தம் இல்லை என்றும், கிறிஸ்தவர்களுக்கும் இந்துத்துவ வருணாசிரம சாதியத்துக்கும்* உடன்பாடு ஏதும் இல்லை என்றும் புதிய உடன்படிக்கைக்குரிய கிறிஸ்தவ ஒழுங்கை போதனை செய்கிறோம். ஏனென்றால், கிறிஸ்துவின் சீடர்கள் ஒருவரிடமிருந்து ஒருவர் பிரிந்து, பிரிவினைகளோடு, பாகுபாடுகளோடு வாழாமல், ஒற்றுமையாக, ஒரே தந்தையின் பிள்ளைகளாக வாழவேண்டும் என்று கிறிஸ்து விரும்புகிறார்.
கிறிஸ்து தன் சீடர்களுக்காக மட்டும் பிரார்த்தனை செய்தாரேயன்றி பிறருக்காக அவர் வேண்டவில்லை. ஆக, மீட்கப்பட்டவர்களிடம் மட்டுமே இந்த ஒற்றுமையை எதிர்பார்க்கின்றோம். நாங்கள் இவ்வுலகிலுள்ள மீட்கப்படாத மக்களுக்குள் இருக்கும் இந்துத்துவ சாதியத்தை ஒழிக்க முயலவில்லை. சாதியம் என்பது இந்துக்களின் அதிகாரபூர்வமான ஆன்மீகச் சட்டம். அவர்கள் தங்களுக்கு லாபமாக இருக்கும் சாதீய லாபங்களை எளிதில் விட்டுக்கொடுக்கமாட்டார்கள். இந்துக்கள் பின்பற்றும் அவர்களுடைய போதனையை ஒழிப்பது எங்கள் வேலையுமல்ல. அது கிறிஸ்தவ சாதி மறுப்பாளர் இயக்கத்தின் நோக்கமுமல்ல என்பதை நீங்கள் நுட்பமாகப் புரிந்துகொள்ளவேண்டும்.
அதைத்தான் புதிய உடன்படிக்கையின் ஊழியனாகிய பவுல், “புதுப்பிக்கப்பட்ட நிலையில் கிரேக்கர் என்றும், யூதர் என்றும், விருத்தசேதனம் பெற்றவர் என்றும், விருத்தசேதனம் பெறாதவர் என்றும், நாகரிகம் அற்றோர் என்றும், சீத்தியர் என்றும், அடிமை என்றும், உரிமைக் குடிமக்கள் என்றும் வேறுபாடில்லை. கிறிஸ்துவே அனைவருள்ளும் அனைத்துமாயிருப்பார்” (கொலோ. 3:11) என்று தெளிவாக்குகிறார். அதாவது, புதுப்பிக்கப்பட்ட நிலைக்கு வந்தவர்களால் மட்டும்தான் “யூதன், பிராமணன்” என்ற தன் பெருமையை விட்டுக்கொடுக்கமுடியும்.
நான் பிறந்த எட்டாம் நாள் விருத்தசேதனம் பெற்றவன்; இஸ்ரயேல் இனத்தவன்; பென்யமின் குலத்தவன்; எபிரேயப் பெற்றோருக்குப் பிறந்த எபிரேயன்; திருச்சட்டத்தைக் கடைப்பிடிப்பதில் பரிசேயன். திருச்சட்டத்தில் எனக்கிருந்த ஆர்வத்தால் திருச்சபையைத் துன்புறுத்தினேன். திருச்சட்டத்தின் அடிப்படையிலான நீதிநெறியைப் பொறுத்தமட்டில் குற்றமற்றவனாய் இருந்தேன். ஆனால் எனக்கு ஆதாயமான இவை அனைத்தும் கிறிஸ்துவின்பொருட்டு இழப்பு எனக் கருதினேன். உண்மையில், என்னைப் பொறுத்தமட்டில் என் ஆண்டவராம் கிறிஸ்து இயேசுவைப் பற்றிய அறிவே நான் பெறும் ஒப்பற்றச் செல்வம். இதன் பொருட்டு மற்ற எல்லாவற்றையும் இழப்பாகக் கருதுகிறேன். அவர் பொருட்டு நான் அனைத்தையும் இழந்துவிட்டேன். கிறிஸ்துவை ஆதாயமாக்கிக்கொள்ள எல்லாவற்றையும் குப்பையாகக் கருதுகிறேன் (பிலி. 3:5-8) என்று பவுல் சொல்கிறார். ஆக, பவுல் கிறிஸ்துவுக்காக தன்னுடைய உலகியல் அடையாளங்களை மனப்பூர்வமாக விட்டுவிட்டார் என்று அறிகிறோம்.
“இனிமேல் நாங்கள் எவரையும் மனித முறைப்படி (சாதி, இன) மதிப்பிடுவதில்லை; முன்பு நாங்கள் கிறிஸ்துவையும் மனித முறைப்படிதான் மதிப்பிட்டோம். ஆனால் இப்போது அவ்வாறு செய்வதில்லை. எனவே ஒருவர் கிறிஸ்துவோடு இணைந்திருக்கும்போது அவர் புதிதாகப் படைக்கப்பட்டவராய் இருக்கிறார். பழையன கழிந்து புதியன புகுந்தன அன்றோ! (2கொரி. 5:16, 17) என்று திருத்தூதர் பவுல் அறிவுறுத்துகிறார். இயேசு கிறிஸ்துவை யூதர் என்றும் யூதா குலம் என்றும் அவர்கள் முன்பு எண்ணினார்கள் என்றும், தற்போது அப்படி மதிப்பிடுவதில்லை என்றும் அவர் அழகுபடக் கூறுகிறார்.
அதேபோல, புதுப்பிக்கப்பட்ட அதாவது மீட்கப்பட்ட கிறிஸ்தவர்கள், கிறிஸ்து நம்மீது வைத்த அன்பின் பொருட்டு நம் இந்துத்துவ சாதி அடையாளங்களை விட்டுவிடவேண்டும் என்று மட்டுமே போதிக்கிறோம்.
நாங்கள் இவ்வுலகிலுள்ள ஒட்டுமொத்த சாதிப் பிரிவினைகளையும் ஒழிக்கவரவில்லை.
மீட்கப்படாதவர்களிடம் சாதி பார்க்கக்கூடாது என்று சொல்ல ஆண்டவருடைய ஊழியக்காரர்களுக்கு என்ன உரிமை இருக்கிறது? திருச்சபைக்கு வெளியே இருப்பவர்கள் குற்றவாளிகள் என நான் ஏன் தீர்ப்பளிக்க வேண்டும்? கடவுளே அவர்களுக்குத் தீர்ப்பளிப்பார். உள்ளே இருப்பவர்களுக்கு நீங்கள்தானே தீர்ப்பளிக்க வேண்டும். (1கொரி. 5:12) என்று திருத்தூதர் பவுல் கூறுகிறார்.
மீட்கப்படாதவர்கள் அவர்களுக்கு லாபமாக இருக்கும் சாதி அடையாளத்தை தங்கள் பொக்கிஷங்களாகப் பார்ப்பார்கள். சிலுவை பற்றியச் செய்தி அழிந்து போகிறவர்களுக்கு மடமையே. ஆனால், மீட்புப் பெறும் நமக்கோ அது கடவுளின் வல்லமை (1கொரி. 1:18)
ஆக, புதுப்பிக்கப்பட்டவர்களுக்கு (மீட்கப்பட்டவர்கள்) மட்டுமே நாங்கள் சொல்வது புரியும். மீட்கப்படாதவர்களுக்கு நாங்கள் சொல்வது புரியாது. அவர்களால் இந்த உபதேசத்தை ஏற்றுக்கொள்ளவும் முடியாது.