022) நீங்கள் விளம்பரப் பிரியர்கள். அதனால்தான் சாதிமறுப்பைப் பற்றி போதிக்கிறீர்கள்.

பதில்: உலகில் தோன்றிய மிகப்பெரிய மாமனிதர்களில் இயேசு கிறிஸ்து மிகவும் முதன்மையானவர் என்றால் மிகையாகாது. செய்த குற்றத்துக்கு தண்டனை கொடுத்தால்தான் குற்றத்தை கட்டுப்படுத்தமுடியும் என்னும் சட்டத்தைத்தான் கிட்டத்தட்ட எல்லா மதங்களும் போதிக்கின்றன. ஆனால், அந்த கருத்தில் வேறுபட்டு, குற்றவாளிக்காக தன் உயிரையே கொடுத்து, மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்து, அவன்மீது அவர் வைத்திருக்கும் அன்பை வெளிப்படுத்தி அவனையும் தன்னைப்போல மாற்றவேண்டும் (உரோ. 8:291) என்று விரும்பியவர் மீட்பராகிய இயேசு கிறிஸ்து. அவர் பேசிய பேச்சு அன்றைய ரோம அரசாங்கத்தையே அதிரவைத்தது என்பதே உண்மை. அன்று வாழ்ந்துகொண்டிருந்த பழமைவாத ஆன்மீகவாதிகளுக்கும், அரசியல்வாதிகளுக்கும் கிறிஸ்துவின் பேச்சும் செயல்களும் தலைவலியாகவே இருந்தன. இயேசுவின் அருள் சார்ந்த பேச்சைக் கேட்டு மக்கள் வெள்ளம் அவருக்குப் பின்னால் நகரத் தொடங்கினர். யூதர்கள் போதிப்பதுபோல கிறிஸ்து பேசாமல் காரசாரமாக அதிகாரத்தோடு பேசினார் (மத். 7:29). கடவுள் அவரோடிருந்ததால் மக்களுக்கு பல அற்புதங்களைச் செய்தார் (தி.தூ. 10:38). அவர் உருவாக்கிய திருத்தூதரும் மற்ற அருட்பணியாளரும் அவரைப் போலவே வாழ்ந்தனர். அதனாலேயே ஆன்மீகப் பழமைவாதிகளுடைய எதிர்ப்புகளை சம்பாதித்தனர். கடவுளின் கண்டிப்பை மட்டுமே பார்த்து பழகிய மக்கள் கிறிஸ்துவின்மூலம் வெளிப்பட்ட அன்பைக் கண்டு வியப்பில் ஆழ்ந்தனர். அந்த அன்பை இன்று வாழும் புறமக்களால் கண்டுபிடிக்கமுடியாமல் திணறுகிறார்கள். அதற்கு காரணம் பெரும்பான்மையான கிறிஸ்தவர்கள் பிறருக்கு முன்மாதிரியாக வாழவில்லை. குறிப்பாக சொன்னால் கிறிஸ்தவர்கள் பின்பற்றும் இந்துத்துவ சாதி பாகுபாடுகளால் இறையரசின் வளர்ச்சி எவ்வளவு பாதிக்கப்படுகிறது என்பதை கிறிஸ்தவர்களில் பெரும்பான்மையானவர்கள் புரிந்துகொள்ளவில்லை. ஏனென்றால் போதகர்களே பெரும்பான்மையானவர்கள் சாதி உணர்வாளர்களாகத்தான் இருக்கிறார்களள். இதை போதித்தால் தங்கள் வருமானம் பாதிக்கப்படும் என்று மற்ற போதகர்கள் நினைக்கிறார்கள். போதகர்கள் சுயநலவாதிகளாக இருப்பதால் விசுவாசிகள் அறியாமையில் வாழ்கின்றனர். சாத்தான்தான் இந்த ஆன்மீக இருட்டடிப்புக்குப் பின்னால் செயலாற்றுகிறான். இதைப் புரிந்துகொண்ட நாங்கள் சிலர் கிறிஸ்தவ சாதிமறுப்பாளர் இயக்கம் என்ற ஒரு விழிப்புணர்வுப் பணியைச் செய்கிறோம். பலர் இதில் இணைந்து கொண்டிருக்கிறார்கள். அவசரமாக உலகெங்கும் வாழும் கிறிஸ்தவர்களிடையே செய்யப்படவேண்டிய இந்த புனிதமான பணியை செய்யும் எங்களை விளம்பரப் பிரியர்கள் என்று எப்படி குற்றம் சாட்டமுடியும்? இயேசு கிறிஸ்து தன் கொள்கையால் அன்று வாழ்ந்த யூதமக்களை வெகுவாகக் கவர்ந்ததால் அவர் ஒரு விளம்பரப் பிரியர் என்று கூறமுடியுமா?