பதில்: சாதி பார்ப்பவர்கள் பரலோகம் போகமுடியுமா முடியாதா? என்ற கேள்விக்கான பதிலை நாங்கள் உறுதியாக அறுதியிட்டுக் கூறமுடியாது. ஏனென்றால், சனாதன சாதிப் பாகுபாடுகளைப்பற்றி மறைநூல் நேரடியாக பேசவில்லை. மேலும், பரலோகமும் நரகமும் எங்கள் கட்டுப்பாட்டுக்கு உட்பட்டவையல்ல. யாருக்கு நீதித் தீர்ப்பு சொல்வதும் எங்கள் கடமைகளுக்குள் உட்பட்டல்ல. அது கடவுளின் அதிகாரத்துக்குட்பட்டது. ஆனால், தன் சகோதரனை, “மூடனே” என்று இகழ்பவர் எரிநரகம் செல்ல தகுதியானவர் (மத்.5:22) என்று கிறிஸ்துவே சொல்கிறார். அப்படியானால், தன் சகோதரனை ‘கீழ்சாதி’, ‘புறசாதி’ என்று அவமதிப்பவர் எங்கே போகத் தகுதியானவர் என்று நீங்கள்தான் சொல்லவேண்டும். அதை உங்கள் மனசாட்சியின் முடிவுக்கே விட்டுவிடுகிறோம். கிறிஸ்துவை மீட்பராக ஏற்றுக்கொண்டவர் அனைவரும் சகோதரர்கள் (மத். 23:8) என்று கிறிஸ்து அறிவிக்கிறார்.
“தம் சகோதரர் சகோதரிகளை வெறுப்போர் (பகைப்போர்) அனைவரும் கொலையாளிகள். எந்தக் கொலையாளியிடமும் நிலைவாழ்வு இராது என்பது உங்களுக்குத் தெரியுமே” (1யோவா. 3:15) என்று திருத்தூதர் யோவான் கூறுகிறார். கொலையாளிகள் நெருப்பும் கந்தகமும் எரியும் ஏரியில் பங்கடைவார்கள் (தி.வெ. 21:8) என்று மறைநூல் கூறுகிறது. அப்படியானால், சாதி அடிப்படையில் தன் சகோதரனை ‘கீழ்சாதி, ‘புறசாதி’ என்று பகைப்பவர் எங்கே சென்றடைவார் என்று நீங்கள்தான் நிதானிக்கவேண்டும்.
சாதிப் பாகுபாடுகளால் பாதிக்கப்பட்ட அவிசுவாசிகள், கிறிஸ்துவின் அன்பை ருசிப்பதற்கு கிறிஸ்தவர்களின் சாதி துர்நாற்றம் மிகப்பெரும் இடறலாக இருக்கிறது என்பதே உண்மை.
சாதி பார்க்கும் கிறிஸ்தவர்களைப் போன்றவர்களைப் பற்றி ஆண்டவர்: “வெளிவேடக்கார மறைநூல் அறிஞரே, பரிசேயரே, ஐயோ! உங்களுக்குக் கேடு! மக்கள் நுழையாதவாறு அவர்கள் முன்பாக விண்ணக வாயிலை அடைத்துவிடுகிறீர்கள்; நீங்கள் நுழைவதில்லை, நுழைவோரையும் விடுவதில்லை (மத். 23:13,14) என்று கூறுகிறார்.
யூதருக்கோ கிரேக்கருக்கோ கடவுளின் திருச்சபைக்கோ இடையூறாய் இராதீர்கள் (1கொரி. 10:32) என்று திருத்தூதர் பவுல் கூறுகிறார். என்னிடத்தில் விசுவாசமாயிருக்கிற இந்தச் சிறியரில் (விசுவாசிகள்) ஒருவனுக்கு இடறல் உண்டாக்குகிறவன் எவனோ, அவனுடைய கழுத்தில் ஏந்திரக்கல்லைக் கட்டி, சமுத்திரத்தின் ஆழத்திலே அவனை அமிழ்த்துகிறது அவனுக்கு நலமாயிருக்கும் (மத். 18:6) என்று ஆண்டவர் கூறுகிறார். அப்படியானால், சாதியின் அடிப்படையில் சக விசுவாசிக்கு இடறல் உண்டுபண்ணும் சாதி உணர்வுடைய கிறிஸ்தவருக்கு என்ன தண்டனை கிடைக்கும் என்று நீங்கள்தான் சொல்லவேண்டும்.
இவற்றை எல்லாம் நான் சொன்னாலும், சாதி பார்க்கும் கிறிஸ்தவர்களுக்கு எதிராக நியாயத்தீர்ப்பு சொல்வதைவிடவும், சாதியம் ஒரு மகா பாதகம் என்று வேதாகமத்திலிருந்து வசனங்களை எடுத்து, பொறுமையாக விளக்கி சொல்லிக் கொடுத்து அவர்களுக்காக இறைவேண்டல் செய்வதையே கிறிஸ்தவ பண்பாடாகவும், எங்கள் சிறப்பான ஆன்மீகக் கடமையாகவும் நாங்கள் கருதுகிறோம்.
சாதி பார்த்தால் கடவுள் நம்மை நரகத்தில் போட்டுவிடுவார் என்ற பயத்தோடு கிறிஸ்துவுடன் பயணம் செய்வது கிறிஸ்துவுக்கு மகிமையல்ல. ஏனென்றால், “மீண்டும் அச்சத்திற்கு உள்ளாக்கும் மனப்பான்மையை நீங்கள் பெற்றுக்கொள்ளவில்லை; மாறாகக் கடவுளின் பிள்ளைகளுக்குரிய மனப்பான்மையையே பெற்றுக் கொண்டீர்கள். அதனால் நாம், “அப்பா, தந்தையே” என அழைக்கிறோம்” (உரோ. 8:15) என்று திருத்தூதர் பவுல் அழகுபடச் சொல்லுகிறார். அனைத்தையும் அன்போடு செய்யுங்கள் (1கொரி. 16:14) என்றே அவர் திருச்சபையை அறிவுறுத்துகிறார். அன்புள்ளவர்கள் பிறரை சாதி அடிப்படையில் புறக்கணிக்கமுடியாது என்று அடிமனதில் நம்பவேண்டும். ஆக, பயத்தினால் அல்ல, அன்பினால் இயக்கப்படுவோம். நாம் கிறிஸ்துவின்மீது கொண்டுள்ள அன்பின்பொருட்டு பிறரை அன்பு செய்து சாதியத்திலிருந்து வெளியேறுவோம். பிறரையும் வெளியேற்றுவோம்.