025) சாதி ஒழிந்துவிட்டால் தமிழன் என்ற நம் அடையாளமே ஒழிந்துவிடுமே!

பதில்: தமிழன் என்ற அடையாளம் அழிந்துவிட்டால் ஒரு கிறிஸ்தவருக்கு என்ன நஷ்டம் ஏற்படும் என்று தயவு செய்து பட்டியல் போடுங்கள். தன்னைத் தமிழர் என்று அடையாளப்படுத்தினால்தான் ஒரு கிறிஸ்தவர் சாதிக்கமுடியும் என்ற நன்மையான விடயங்கள் என்னென்ன என்று வரிசைப்படுத்துங்கள்.
_”யார் தமிழன்?”_ என்ற கேள்விக்கு தமிழ் தேசியவாதிகள் கொடுக்கும் விளக்கம் மிகவும் பிற்போக்குத்தனமாக உள்ளது. இன்று தமிழ்நாட்டில் *தமிழை மிகவும் நன்றாக பேசத் தெரிந்தவர்கள்* எல்லோரும் தமிழர் இல்லையாம்; *தமிழ் நாட்டில் பிறந்து தமிழ்நாட்டிலேயே தலைமுறைகளாக வாழ்பவர்களானாலும்* அவர்கள் தமிழர் இல்லையாம். *தமிழில் பெயர் வைப்பவர்கள்கூட* தமிழர் இல்லையாம். திருக்குறள், பத்துப்பாட்டு, எட்டுத்தொகை போன்ற தமிழ் இலக்கியங்கள் கற்பிக்கும் *தமிழ் கலாச்சாரத்தை கடைபிடிப்பவர்களானாலும்* தமிழர் இல்லையாம்; தமிழில் *முனைவர் பட்டம் வாங்கிய தமிழறிஞர்கள்கூட* தமிழரில்லையாம். மாறாக தமிழில் *எழுத, படிக்கமுடியாத, தமிழ் வார்த்தைகளை ஒழுங்காக உச்சரிக்கத் தெரியாதவர்களாக* இருந்தாலும் *குறிப்பிட்ட சாதிகளை சார்ந்தவர்களாக இருந்தால் மட்டுமே* தமிழர்களாம். இவர்கள்தான் சாதி மறுப்பைப் பற்றி பேசும் தமிழ்த் தேசியவாதிகள். தற்போது வீட்டில் தமிழில் பேசினால்தான் ஒருவர் தமிழர் என்று கூறுகிறார்கள். இது எந்த தமிழ் அறிஞர் கூறிய கருத்து? இதை *நிஜமான* சாதி மறுப்பாளர்கள் மற்றும் மனிதத்தை முக்கியப்படுத்தும் சமூக ஆர்வலர்கள் எப்படி ஒரு முற்போக்கான சிந்தனையாக ஏற்றுக்கொள்ளமுடியும்? சாதிய அடிப்படைவாதத்துக்கு உரமிடும் கொடிய போக்கு அல்லவா இது! “பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்” என்ற குறளின்படி எல்லா மனிதரும் பிறக்கும்போது வேறுபாடற்றவர்கள் என்றல்லவா அறிகிறோம். ஒருவர் பேசும் மொழியின் அடிப்படையில் ஒருவரை அந்நியப்படுத்துவது பாவமல்லவா!
பெரிய கொடுமை என்னவென்றால், தமிழ் சாதியினரல்லாத மற்ற சாதியினர் *என்ன செய்தாலும்* தமிழராக *மாறமுடியாதாம்.* குறிப்பாக சாதியற்ற ஒருவர் நிச்சயமாக தமிழராக இருக்கமுடியாதாம். ஆக, தமிழம் என்னும் கட்டடம் *மனிதநேயம்* என்னும் வலிமையான, பாதுகாப்பான பாறையின்மீது அல்ல; சாதி என்னும் வலுவற்ற, ஆபத்தான மணல்மேட்டில்தான் கட்டப்பட்டுள்ளது என்பது தெளிவாகப் புரிகிறது. அதனால்தான் கிறிஸ்துவின் பிள்ளைகளுக்கு ‘*தமிழன்’* என்ற அடையாளமும் ஆபத்தாகும் என்று உறுதியாக கூறுகிறேன்.
*’தமிழம்’* என்பது சாதி அடிப்படையில் வகுக்கப்படுவதால் அது *சாதிவெறிக்கும், மொழிவெறிக்கும், இனவெறிக்கும் அதன் அடிப்படையில் தீவிரவாதத்துக்கும், படுகொலைகளுக்கும்* வழிவகுக்கும். *கிறிஸ்தவ சாதி மறுப்பாளர் இயக்கம்* சாதியத்தை அழிப்பதற்காக தொடங்கப்பட்டுள்ளது. வேரோடு அழிக்கப்படவேண்டிய சாதி வேறுபாடுகளை அழியவிடாமல் பாதுகாக்கும் கொடிய கருவியாக தமிழன் என்னும் அடையாளம் இருப்பதால் அந்த ஆபத்தான அடையாளத்திலிருந்து கிறிஸ்துவின் சீடர்கள் வெளியேறுவதே நன்மையாகும்.
_”நான் நாடார்; நீ பறையர்; நான் உன்னை ஏற்றுக்கொள்ளமாட்டேன்”_ என்று இன்று சர்வ சாதாரணமாக கிறிஸ்தவர்கள் சொல்கிறார்கள். இது கிறிஸ்தவர்களின் சாதி வக்கிரத்தைக் காட்டுகிறது. சாதி வக்கிரம் எவ்வளவு மோசமான சமூகத் தீமையோ அதே அளவு மொழிவக்கிரமும் மோசமான சமூகத் தீமையாகும். *”தமிழ் பேசுபவன்தான் எனக்கு உறவுக்காரன்”* என்று சொல்வதற்கும், *”என் சாதிக்காரன்தான் என் உறவுக்காரன்”* என்று சொல்வதற்கும் என்ன வேறுபாடு இருக்கமுடியும்? சாதிவெறிக்கும் மொழிவெறிக்கும் நடைமுறையில் என்ன வேறுபாடு இருக்கிறது?
கிறிஸ்துவின் சீடர்களுக்குள் மொழிவெறி அதிகரிக்கும்போது, _”நீ தமிழன்; நான் தெலுங்கன்; ஆதலால், நான் உனக்கு உதவமாட்டேன்”_ என்று கிறிஸ்தவர்கள் ஒருநாள் சொல்வார்கள். அன்று நாம் மனம் நொந்து பயனில்லை. இன்றே சிந்திப்போம்.
பிரிட்டனை வெள்ளைக்காரன்தான் ஆளவேண்டும் என்று அடம்பிடிக்காமல், எந்த நாட்டு வம்சாவழியாக இருந்தாலும், நல்ல மனிதன் ஆண்டால் போதும் என்ற அந்நாட்டின் அரசியல் முதிர்ச்சியை பாராட்டுகிறேன். அதேபோல, தமிழ்நாட்டை *தமிழன் ஆளவேண்டும்* என்று நினைப்பதைவிட *நல்ல மனிதன்* ஆளவேண்டும் என்று நினைப்பதே உயர்ந்த உளவியல். தமிழ்நாட்டை ஏற்கெனவே பல ‘தமிழர்கள்’ ஆண்டு இந்த நிலப்பரப்பை மொட்டையடித்துவிட்டார்களே!
தன்னைத் தான் நேசிப்பதுபோல பிறரையும் நேசிப்பவர்கள் பிறரை சாதி, மொழி, இன அடிப்படையில் புறக்கணிக்கமுடியாது. அப்படி புறக்கணிப்பது கிறிஸ்தவ பண்பாடு அல்ல.
*தமிழன்* என்ற அடையாளத்தால் கிறிஸ்தவனுக்கு லாபத்தைவிட, நஷ்டங்களும் கஷ்டங்களும்தான் அதிகமாக இருக்கும். *நாம் தமிழர்* என்று நம்மை அடையாளப்படுத்துவதைவிட *தமிழ் பேச தெரிந்தவர், பிறர் தமிழில் பேசினால் புரியத் தெரிந்தவர்,தமிழில் எழுதத் தெரிந்தவர், தமிழை வாசிக்கத் தெரிந்தவர்,* என்று மட்டும் நாம் நம்மை அடையாளப்படுத்துவது போதுமானது.
சாதியத்தை அடிப்படையாக வைத்து கட்டமைக்கப்பட்ட மொழி அடிப்படையில் பேதம் கற்பிப்பது கிறிஸ்தவம் அல்ல. ஆதாம் ஏவாள் மூலமாகத்தான் மொத்த உலக மக்களும் வந்திருக்கிறார்கள் என்ற ஆன்மீக உண்மையை இது புறக்கணிக்கிறது. படைத்த கடவுளின் பிள்ளை என்னும் அடையாளமே நமக்கு புகழ்ச்சி. *நம் பெருமை நமக்காக தன் உயிரைக் கொடுத்த இயேசுவின் அன்பு மட்டும்தான்.*