026) சாதி பார்ப்பது தவறல்ல என்று சொன்னால் கிறிஸ்தவ இளைஞர்கள் காதல் திருமணம் செய்ய தொடங்கிவிடுவார்களே!

பதில்: காதல் திருமணம் என்பது திருமணம் செய்யப்போகும் மணமக்கள் தங்கள் விருப்பப்படி தங்கள் இணையரைத் தேர்வு செய்து, திருமணம் செய்வதாகும். பெற்றோர் ஒழுங்கு செய்யும் திருமணம் என்பது பெற்றோர் சுட்டிக்காட்டும் நபரை மணமக்கள் தங்கள் விருப்பு வெறுப்புகளுக்கு அப்பாற்பட்டு திருமணம் செய்வதாகும். ஒரு சில பெற்றோர் தாங்கள் தேர்வு செய்த நபரை தங்கள் பிள்ளைக்கு பிடித்திருக்கிறதா என்று கேட்டு முடிவு செய்வர். ஒரு கிறிஸ்தவ விசுவாசிக்கு, தான் திருமணம் செய்ய விரும்பும் மணவாழ்க்கைத் துணையை தேர்வு செய்யும் உரிமை உண்டா? என்பது கிறிஸ்தவ வட்டாரத்தில் மிகப்பெரிய விவாதப் பொருளாகியிருக்கிறது.
பொதுவாக இந்திய நாட்டைப் பொறுத்தவரை, ஒருவருக்கு திருமணம் செய்யும் நேரம் வரும்போது, ‘அவருடைய பெற்றோர் சுட்டிக்காட்டும் நபரைத்தான் திருமணம் செய்யவேண்டும்’ என்பது எழுதப்படாத சமூகச் சட்டமாகும். பெற்றோர் தங்கள் பிள்ளைகளுக்கு வாழ்க்கைத் துணைகளைத் தேடுவதும், பிள்ளைகளுக்கு அறிமுகப்படுத்துவதும் மிகவும் வரவேற்கத்தக்க நல்ல செயலாகும். அவர்களுடைய ஆலோசனைகளுக்கு பிள்ளைகள் முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
தங்கள் பிள்ளைகள் தவறான ஒரு நபரைத் திருமணம் செய்து வாழ்க்கை முழுவதும் துன்பப்படக்கூடாது; அவர்கள் மனவேதனை இல்லாமல் வாழவேண்டும் என்றுதான் எல்லா பெற்றோரும் விரும்புவார்கள். எந்த பெற்றோரும் தங்கள் பிள்ளைகளுக்கு மனதார துரோகம் செய்யமாட்டார்கள். ஏனெனில், கடவுளுக்கு அடுத்தபடி ஒருவரை அதிகமாக நேசிப்பது அவருடைய பெற்றோர்தான் என்பதை மனதில் வைத்திருக்கவேண்டும். நாம் நம் பெற்றோரை வெறுத்தாலும் அவர்களால் நம்மை *மறக்கக்கூட முடியாது.* அந்த வடிவத்தில்தான் குறிப்பாக தாய்மை என்னும் நிலை கட்டமைக்கப்பட்டுள்ளது. பிள்ளைகள் பெற்றோருடைய ஆசிகளையும், வாழ்த்துக்களையும் வழிகாட்டுதலையும் சார்ந்து வாழ்வது மிகப்பெரிய முதிர்ச்சியின் அடையாளமாகும். ஆகவே, பத்து மாதங்கள் வயிற்றிலும், மனதிலும் சுமந்து, பெற்றெடுத்து, திருமண பருவம் வரை கண்மணிபோல பாதுகாத்து வளர்த்த பெற்றோருடைய ஆலோசனைகளையும், கண்டிப்புகளையும் புறக்கணித்து அவமதிப்பதை ஏற்றுக்கொள்ளவேமுடியாது.
பிள்ளைகளுக்கு பெற்றோர் மணமக்களை தேடுவது ஏற்புடைய கருத்தாக இருந்தாலும், பெற்றோர் சொல்வதை பிள்ளைகள் கீழ்படியவேண்டும் என்பது புதிய உடன்படிக்கைச் சட்டமாக இருந்தாலும் பிள்ளைகளை கிறிஸ்துவின் சட்டத்துக்கு புறம்பாக கீழ்படிய வற்புறுத்தக்கூடாது என்பதை பெற்றோர் நுட்பமாக கவனிக்கவேண்டும்.
மணமக்கள் பெற்றோரிடம் திருமணம் சம்பந்தமாக ஆலோசனை கேட்பதும், பெற்றோர் மணமக்களுக்கு ஆலோசனை கொடுப்பதும் மிகவும் ஏற்புடைய கருத்தாக இருந்தாலும், மணமக்கள் தங்களுடைய ஆன்மீக முதிர்ச்சிக்கும், கலாச்சாரத்துக்கும், பண்பாட்டுக்கும் பொருத்தமான இணையர்களை *மனதார விரும்பி* திருமணம் செய்யக்கூடாது என்றும், அவர் விரும்பாவிட்டாலும் பெற்றோர் சுட்டிக்காட்டும் நபரைத்தான் திருமணம் செய்யவேண்டும் என்றும் அவர்களைக் கட்டாயப்படுத்தக்கூடாது. ஒருவர் மனதார விரும்பாத ஒருவரை பெற்றோர் கட்டாயப்படுத்தி திருமணம் செய்துவைப்பது அவருடைய தனிமனித உரிமையைப் பறிப்பதாகும். பெற்றோர் சுட்டிக்காட்டும் நபரைத்தான் திருமணம் செய்ய வேண்டும் என்று கிறிஸ்துவின் சட்டத்தில் எங்கும் எழுதப்படவில்லை.
திருமணம் செய்ய விரும்பும் ஒருவருக்கு, அவரோடு மரணம்வரை, அல்லது கிறிஸ்துவின் வருகைவரை வாழப்போகும் ஆத்மார்த்த துணையைத் தேர்வு செய்ய அதிக உரிமை நிச்சயமாக மணமக்களுக்குத்தான் உண்டு.* ஒருவர் யாரைத் திருமணம் செய்யவேண்டும் என்று அவர்தான் இறுதியாக முடிவு செய்யவேண்டும். ஏனென்றால், அவர்கள்தான் சேர்ந்து வாழப் போகிறார்கள். இறுதி முடிவு மணமக்கள்தான் எடுக்கவேண்டும். இல்லையென்றால், “நான் திருமணம் செய்ய நினைத்த மணமகளை, மணமகனை என் பெற்றோர் தடுத்துவிட்டார்கள்” என்று வாழ்நாள் முழுவதும் மணமக்கள் பெற்றோரை குற்றம் சாட்டிக்கொண்டே இருக்கும் நிலை வந்துவிடும்.
குழந்தை பச்சை பலூன் வாங்கிக் கேட்டால், தந்தை: “இல்லை, நான் சிகப்பு பலூன்தான் வாங்கித் தருவேன்” என்று அடம்பிடிப்பதில் அர்த்தம் ஏதும் இல்லை. ஆனால், அந்த குழந்தை நிஜத் துப்பாக்கியை வாங்கிக் கேட்டால் நாம் வாங்கிக் கொடுக்கமுடியாது. ஏனெனில், அது மிகவும் ஆபத்தான பொருளாகும். அதை கையாளும் மனவலிமை அந்த குழந்தைக்கு இல்லை. ஆனால், ஒரு சராசரி இளைஞருக்கு மனிதன் என்றால் யார் என்று ஓரளவுக்குத் தெரியும். தன் வாழ்க்கைத் துணையாக, தான் யாரைத் தேர்வு செய்யவேண்டும் என்று தேர்வு செய்யும் மனவலிமை அவருக்கு உண்டு. சேர்ந்து வாழப்போவது மணமக்கள்தானேதவிர, மணமக்களின் பெற்றோரல்ல. மணமக்களின் வாழ்க்கையைப் பற்றி அவர்கள் தீர்மானிக்க அதிக முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். அந்த அடிப்படை உரிமையைக் கடவுள் மனிதனுக்குக் கொடுக்காவிட்டால் *கிறிஸ்தவம் ஒரு விடுதலையின் மார்க்கம்* என்று சொல்லமுடியாது.
*யாக்கோபு,* தான் திருமணம் செய்ய விரும்பிய *ராகேலை* திருமணம் செய்ய கடவுள் *எதிர்த்து நிற்கவில்லை.* தன் மகன் ஈசாக்குக்கு ஆபிரகாம், தன் வேலைக்காரன் எலியேசர்மூலம் பெண் பார்த்ததை *பெருமைப்படுத்தியும்* வேதம் கூறவில்லை. ஆனால், ஒரு விசுவாசி மற்றொரு விசுவாசியைத்தான் திருமணம் செய்யவேண்டுமே ஒழிய, கடவுளை அறியாத ஒரு அவிசுவாசியைத் திருமணம் செய்வது பரிந்துரைக்கத்தக்க செயலல்ல. ஏனெனில், மீட்கப்பட்ட கிறிஸ்தவர் ஒருவர் கிறிஸ்துவை இரட்சகராக நம்பாத ஒருவரை திருமணம் செய்யும்போது, அவர் கடவுளை நம்பும் தன் துணைவரை கிறிஸ்துவுக்குள் வளர தடைசெய்யும் வாய்ப்பு உள்ளது. ஏனெனில், அவர்கள் திருமணத்துக்குப் பிறகு இருவரல்ல. ஒரே உடலாக இருக்கிறார்கள். தங்களுக்குள் உடன்பாடு இல்லாமல் இருவர் சேர்ந்து நடப்பார்களோ? (ஆமோ. 3:3) என்று மறைநூல் கேட்கிறது. ஒருவரை ஒருவர் மனப்பூர்வமாக விரும்பாமல் பெற்றோரின் வற்புறுத்தலால் திருமணம் செய்த பலர் கிறிஸ்துவின் இரட்சிப்பிலிருந்தே வெளியேறிவிட்டனர். அது குற்ற மனசாட்சியையும் அதன்மூலம் உடல்நல பாதிப்பையும் உண்டாக்கியிருக்கிறது.
விதவை மறுமணத்தைப்பற்றி வேதம் கூறும்போது:
_கணவர் உயிரோடு இருக்கும் காலம்வரை மனைவி அவரோடு இணைக்கப்பட்டிருக்கிறார். கணவர் இறந்துவிட்டால் *தாம் விரும்புபவரைத்* திருமணம் செய்து கொள்ள அவருக்கு உரிமையுண்டு. ஆனால் அவர் திருமணம் செய்து கொள்பவர் *ஆண்டவரிடம் நம்பிக்கை கொண்டவராய்* இருத்தல் வேண்டும் (1கொரி. 7:39)_ என்று பார்க்கிறோம்.
நீதிபதி சிம்சோன், *நிஜமான கடவுளை வணங்காத* ஒரு பெலிஸ்திய பெண்ணை (தெலீலா) திருமணம் செய்ய விரும்பியபோது அவருடைய தந்தையும் தாயும் அவரிடம், “உன் உறவுப் பெண்களிடையே யாரும் இல்லையா? நம் மக்கள் அனைவரிடையே ஒரு பெண் கிடைக்கவில்லையா? நீ ஏன் விருத்தசேதனம் செய்யப்படாத பெலிஸ்தியரிடம் சென்று பெண் எடுக்கவேண்டும்?” (நீ.த.14:3) என்றுதான் கேட்டனர். ஆனால், _”நீ விரும்பும் பெண்ணை திருமணம் செய்யும் உரிமை உனக்கு இல்லை. நாங்கள் சுட்டிக்காட்டும் பெண்ணைத்தான் திருமணம் செய்யவேண்டும்”_ என்று அவர்கள் கூறவில்லை.
*யேகோவா என்னும் ஒற்றை தெய்வத்தை மட்டுமே வணங்கவேண்டும்* என்ற இறை நம்பிக்கையுடைய ஒரு நபரை திருமணம் செய்யவேண்டும் என்பதே முக்கியம். மற்றபடி தாங்கள் சுட்டிக்காட்டும் நபரைத்தான் பிள்ளைகள் கண்டிப்பாகத் திருமணம் செய்தாகவேண்டும் என்று பெற்றோர் பிள்ளைகளிடம் கட்டாயப்படுத்துவது பிள்ளைகளின் தனிமனித உரிமையைப் பறிப்பதாகும். *மனிதவியல், மணவாழ்வு* பற்றி பெற்றோர் பிள்ளைகளுக்கு அறிவுரை கூற உரிமையும் கடமையும் உண்டு. ஆனால், அவர்களை *கருத்தியல் ரீதியாக அடிமைப்படுத்தக்கூடாது.* அது புதிய உடன்படிக்கைப் போதனை அல்ல.
தேர்வில் கவனம்:
தான் விரும்பும் விசுவாசியைத் திருமணம் செய்யும் உரிமை ஒருவருக்கு இருந்தாலும், தான் திருமணம் செய்யப் போகும் இணையர் தன் பெற்றோருக்கும், உற்றாருக்கும் கொடுக்கவேண்டிய மரியாதையைக் கொடுக்கும் கண்ணியமுடையவரா? என்று தெளிவாகத் தெரிந்துகொள்ளவேண்டும். அவர் தன்னுடைய உடலியல் தேவைகளுக்காக மட்டுமே தன்னைப் பயன்படுத்திவிட்டு புறக்கணிக்கும் கொடியவரா? அல்லது மரணம்வரை கூடவே வாழும் பொறுப்புணர்வுடையவரா என்று நீங்கள்தான் உறுதி செய்துகொள்ளவேண்டும். நீங்கள் செல்வந்தராக இருப்பதால் உங்கள் செல்வங்களை அபகரிப்பதற்காக திருமணம் என்ற பெயரில் இணைந்து, தந்திரமாக மோசடி செய்ய விரும்பும் துரோகியா அல்லது அவர் நிஜமான இல்வாழ்வுப் பிணைப்போடு இணைந்து வாழத் தீர்மானித்தவரா என்பதை ஆய்வு செய்யவேண்டும். நல்லவனைப் போல் நடிப்பவனை நம்புவது கெட்டவனை நம்புவதைவிட ஆபத்தானதாகும்.
நமது மூளை அறிவு ஒரு எல்லைக்கு உட்பட்டது. நம்மிடம் நல்லவரைப்போல நடிக்கும் போலிகளை தரப்பரிசோதனை செய்யும் போதுமான மனவலிமை நமக்கு இல்லை என்று நாம் நினைத்தால் அவரைப்பற்றிய தெளிவடைய பரிசுத்த ஆவியானவருடைய உதவியை நாடுவதே சாலச் சிறந்ததாகும்.
_உங்களுக்காக நான் வகுத்திருக்கும் திட்டங்கள் எனக்குத் தெரியுமன்றோ! அவை வளமான எதிர்காலத்தையும் நம்பிக்கையும் உங்களுக்கு அளிப்பதற்கான நல்வாழ்வின் திட்டங்களே அன்றி, கேடு விளைவிப்பதற்கான திட்டங்கள் அல்ல (எரே. 29:11), என்னிடம் மன்றாடு; உனக்கு நான் செவிசாய்ப்பேன்; நீ அறிந்திராத மாபெரும் செயல்களையும் மறைபொருள்களையும் உனக்கு நான் விளக்கிக் கூறுவேன் (எரே. 33:3)_ என்று படைத்தவர் கூறுகிறார்.
_ஆண்டவரிலேயே மகிழ்ச்சி கொள்; உன் உள்ளத்து விருப்பங்களை அவர் நிறைவேற்றுவார். உன் வழியை ஆண்டவரிடம் ஒப்படைத்துவிடு; அவரையே நம்பியிரு; அவரே உன் சார்பில் செயலாற்றுவார் (தி.பா. 37:4-5, 32:8)_ என்று இறைவாக்கினராக இருந்த அரசர் தாவீது அறிவுறுத்துகிறார்.
_முழு மனத்தோடு ஆண்டவரை நம்பு; *உன் சொந்த அறிவாற்றலைச் சார்ந்து நில்லாதே.* நீ எதைச் செய்தாலும் ஆண்டவரை மனத்தில் வைத்துச் செய்; அப்பொழுது அவர் உன் பாதைகளைச் செம்மையாக்குவார் (நீதி. 3:5-6), மனிதருடைய நடத்தையெல்லாம் அவர் பார்வையில் களங்கமற்றதாய்த் தோன்றலாம்; ஆனால், ஆண்டவர் அவர் உள்ளெண்ணத்தைச் சீர்தூக்கிப் பார்க்கிறார். உன் செயல்களை ஆண்டவரிடம் ஒப்படை; அவற்றை வெற்றியுடன் நிறைவேற்றுவாய் (நீதி. 16:2-3)_ என்று ஞானமுள்ள அரசர் சாலமோன் அறிவுறுத்துகிறார்.
_உன் கடவுளாகிய ஆண்டவர் நானே! பயனுள்ளவற்றை உனக்குக் கற்பிப்பவரும் செல்லவேண்டிய வழியில் உன்னை நடத்துபவரும் நானே! (எசா. 48:17)_ என்று கடவுள் கூறுகிறார்.
ஒருவர் தன் பெற்றோர், நண்பர்கள், உறவினர் யாருடைய ஆலோசனைகளையும் பெற்றுக்கொள்ளலாம். கடைசியாக தான் விரும்பும் நபரையே திருமணமும் செய்யலாம். ஆனால், எல்லாம் அறிந்த இறைவன் சுட்டிக்காட்டும் நபரை திருமணம் செய்வதே மேன்மையான கிறிஸ்தவ மணவாழ்வாகும். அதன்மூலம் கடவுள் மகிமையடைவார்.
சில கிறிஸ்தவக் குடும்பங்களில் சாதி பார்க்கும் பெற்றோர், பணஆசை உடைய பெற்றோர் சுட்டிக்காட்டிய மணமக்களை திருமணம் செய்யாததால் குடும்ப சொத்தில் பங்கு இல்லை என்று மணமக்கள் புறக்கணிக்கப்பட்ட சம்பவங்களெல்லாம் வரலாற்றில் இடம் பெற்றுள்ளன. ஒரு கிறிஸ்தவர் கிறிஸ்தவத்தோடு சற்றும் சம்பந்தமில்லாத, இந்துத்துவ சாதியின் அடிப்படையில் சக கிறிஸ்தவரை புறக்கணிப்பதும் ஏழை என்று ஒருவரை நிராகரிப்பதும் மிகப்பெரிய தவறுகளாகும். கண்டிப்பாக சாதி பார்க்கவேண்டும், பணக்கார வீட்டில்தான் திருமணம் செய்யவேண்டும் என்று பெற்றோர் கட்டாயப்படுத்தி கர்த்தருடைய சித்தத்தை அவமதிப்பது பிள்ளைகளின் வாழ்க்கையைப் பாழாக்குவதாகும். கடவுளைவிட சாதிக்கும் பணத்துக்கும் அழகுக்கும் அதிக முக்கியத்துவம் கொடுக்கும் கிறிஸ்தவர்களும் உண்டு. அவர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு தங்கள் சாதியில் பணக்கார கிறிஸ்தவ மருமக்கள் கிடைக்காமல் கடைசியாக தங்கள் சாதியிலுள்ள அவிசுவாசிகளோடு திருமணம் செய்து இந்த விசுவாசப் பிள்ளைகள் கடவுளைவிட்டே பின்வாங்கி போய்விட்டார்கள்.
_பிள்ளைகளே, உங்கள் பெற்றோருக்கு ஆண்டவருக்குள் கீழ்ப்படியுங்கள். “உன் தந்தையையும் தாயையும் மதித்து நட” என்பதே வாக்குறுதியை உள்ளடக்கிய முதலாவது கட்டளை. “இதனால் நீ நலம் பெறுவாய்; மண்ணுலகில் நீடூழி வாழ்வாய்” என்பதே அவ்வாக்குறுதி (எபே. 6:1-3)_ என்று பிள்ளைகளுக்கு மறைநூல் கட்டளையிடுகிறது. அதாவது பிள்ளைகள் ஆண்டவருக்குள் கீழ்ப்படியவேண்டுமே தவிர பெற்றோர் சொல்பவை எல்லாவற்றையும் கீழ்ப்படியவேண்டும் என்று மறைநூல் கூறவில்லை.
தந்தையரே, உங்கள் பிள்ளைகளுக்கு எரிச்சல் மூட்டாதீர்கள். மாறாக அவர்களை ஆண்டவருக்கேற்ற முறையில் கண்டித்துத் திருத்தி, அறிவு புகட்டி வளர்த்துவாருங்கள் (எபே. 6:4) என்று பிள்ளைகளை வளர்ப்பதுபற்றி மறைநூல் பெற்றோருக்கு கட்டளையிடுகிறது.