027) சாதி பார்ப்பது தவறு என்று சொல்வது பிறரை குறை சொல்வது அல்லவா!

பதில்: அப்படிப் பார்த்தால், நாங்கள் குறை சொல்கிறோம் என்று எங்களை நீங்கள் இப்போது குறை சொல்கிறீர்களே!
_பாவம் செய்கிறவர்களை அனைவர் முன்னிலையிலும் கடிந்துகொள். அப்பொழுது மற்றவர்களும் அச்சம் கொள்வர் (1திமொ. 5:20)_ என்று திருத்தூதர் பவுல் தன் உடன் ஊழியர் திமொத்தேயுவை அறிவுறுத்துகிறார். அதைத்தான் நாங்கள் செய்கிறோம்.
“யாரையும் தீட்டுள்ளவர் என்றோ, தூய்மையற்றவர் என்றோ சொல்லக்கூடாது” எனக் கடவுள் எனக்குக் காட்டினார் (தி. ப. 10:28) என்று திருத்தூதர் பேதுரு கொர்நெலியு என்பவரின் வீட்டில் போதித்ததை தவறு என்று சொல்கிறீர்களா? அதைத்தான் நாங்களும் சொல்கிறோம்.
விசுவாசிகள் செய்யத்தகாத செயல்களை சுட்டிக்காட்டி, அவற்றை செய்யக்கூடாது என்று போதகர்கள் போதிப்பதை குற்றம் என்று சொல்லிவிடமுடியாது. _உங்களிடையே விபச்சாரம் உண்டெனக் கேள்விப்படுகிறேன். ஒருவன் தன் தந்தையின் மறுமனைவியை வைத்துக் கொண்டிருக்கிறானாம். இத்தகைய விபச்சாரம் பிற இனத்தாரிடையே கூடக் காணப்படவில்லை. இதை அறிந்தும் நீங்கள் இறுமாப்புடன் இருப்பது எப்படி? துயரம் அடைந்திருக்க வேண்டாமா? இப்படிச் செய்தவனை உங்கள் நடுவிலிருந்து தள்ளி வைத்திருக்க வேண்டாமா? (1கொரி. 5:1-2)_ என்று திருத்தூதர் பவுல் கூறுகிறார். இது குறைகூறுவதா இல்லையா?
இந்துத்துவத்திலிருந்து மீட்கப்பட்ட விசுவாசிகள், “எங்கள் மூதாதையர் வணங்கிய சிலைக் கடவுள்களையும் நாங்கள் வணங்குகிறோம். அவைகளும் எங்களுக்கு முக்கியம்” என்று சொல்லும்போது அவர்களிடம், “என் அன்புக்குரியவர்களே, சிலைவழிபாட்டை விட்டு விலகுங்கள் (1கொரி. 10:14), பிள்ளைகளே, நீங்கள் சிலைகளுக்கு விலகி, உங்களைக் காத்துக்கொள்ளுங்கள் (1யோவா. 5:21) என்ற புதிய ஏற்பாட்டு வசனங்களை சுட்டிக்காட்டுவது குறை சொல்வது என்று சொல்கிறீர்களா? _அவர்களுள் சிலரைப்போல நீங்களும் சிலைகளை வழிபடாதீர்கள் (1கொரி. 10:7)_ என்று திருத்தூதர் பவுல் கொரிந்து சபைக்கு கூறியது தவறு என்று நினைக்கிறீர்களா?
லிஸ்திரா என்னும் ஊரில், பிறவியிலேயே கால் வழங்காத ஒருவரை பவுல், பர்னபா என்போர்மூலம் கடவுள் அற்புதமாக குணப்படுத்தினார். அப்போது அவ்வூர் மக்கள் பவுலையும், பர்னபாவையும் கடவுளின் அவதாரங்களாக பிரகடனம் செய்தனர். அப்போது திருத்தூதர்கள் பவுலும், பர்னபாவும் அம்மக்களைப் பார்த்து, “மனிதர்களே, ஏன் இவ்வாறு செய்கிறீர்கள்? நாங்களும் உங்களைப் போன்ற மனிதர்கள்தாம்; நீங்கள் இந்தப் பயனற்ற பொருள்களை (சிலைகள்) விட்டுவிட்டு, விண்ணையும் மண்ணையும் கடலையும் அவற்றிலுள்ள அனைத்தையும் உண்டாக்கிய வாழும் கடவுளிடம் திரும்புங்கள் என்ற நற்செய்தியை உங்களுக்கு அறிவிக்கிறோம் (தி.ப. 14:15), என்று கூறினார்களே! அது தவறா?
ஒரு விசுவாசி, சக விசுவாசியை சாதி அடிப்படையில் புறக்கணிப்பது தவறு என்று சபைக்கு அறிவுறுத்துவது தவறானால், நீங்கள் சிலைகளை உருவாக்கக்கூடாது (வி.ப. 20:4,23, லேவி. 19:4, 26:1), சிலைகளை உருவாக்குபவர்கள் வீணர் (எசா. 44:9), நீங்கள் சிலைகளை வணங்கக்கூடாது (வி.ப. 34:14), நீங்கள் வணங்கும் சிலைகளால் உங்களை பாவங்களிலிருந்து இரட்சிக்கமுடியாது (1சாமு. 12:21, எசா. 45:20,தி.ப. 4:12), சிலைகள் கடவுளே அல்ல (வி.ப. 23:3, எசா. 45:5); இயேசு கிறிஸ்துவே உண்மையான கடவுளும் நிலைவாழ்வுமாக இருக்கிறார் (1யோவா.5:20), அவர் மட்டுமே நம் பாவங்களுக்காக மரித்தார்” என்று சொல்வதும் குறை சொல்வது அல்லவா! அது அவர்களை அதிகமாக காயப்படுத்துமே!
கத்தோலிக்க திருச்சபையில் பின்பற்றப்படும் தவறான கொள்கைகள் என்று சொல்லப்படும் 95 கொள்கைகளை எழுதி, ஜெர்மனி நாட்டின் விட்டன்பர்க் நகரிலுள்ள கத்தோலிக்க திருச்சபை கூடும் கட்டடத்தின் கதவில் ஒட்டினார் புராட்டஸ்டண்டு சபைகளின் தந்தை என்று அழைக்கப்படும் மார்ட்டின் லூதர் என்னும் ஊழியக்காரர். அப்படி அவர் கத்தோலிக்க திருச்சபையை விமர்சனம் செய்து பல்லாயிரக்கணக்கான மக்களை புராட்டஸ்டண்டு சபைக்கு இழுத்தது தவறா? சரியா? நீங்களே நிதானியுங்கள்.
பிற்காலத்தில், லூத்தரன் சபைகளின் கொள்கைகளும் சரியில்லை என்று பலர் விமர்சனம் செய்து புத்தகங்களையே எழுதினார்கள். புராட்டஸ்டண்டு சபைகள் மற்றும் கத்தோலிக்க சபைகளிலிருந்த பல்லாயிரக்கணக்கான மக்களை பெந்தெகொஸ்தே சபைகளுக்கு இழுத்தனர். இது சரியா தவறா என்பதை நீங்கள் நிதானிக்கவேண்டும்.
_மானிடா! நான் உன்னை இஸ்ரயேல் வீட்டாருக்குக் காவலனாக நியமித்துள்ளேன். என் வாயின் சொற்களைக் கேட்டு அவர்களை என் பெயரால் எச்சரிக்கை செய். தீயோரிடம் “நீங்கள் சாவது உறுதி” என்று நான் சொல்ல, நீ அவர்களை எச்சரிக்காவிடில் அத்தீயோர் தம் தீயவழியினின்று விலகாவிட்டால், தம் உயிரை அவர்களால் காத்துக்கொள்ள இயலாது என்று அவர்களை எச்சரிக்காவிட்டால் அவர்கள் தம் குற்றப்பழியோடு சாவர். ஆனால் அவர்களது இரத்தப் பழியை உன் மேலேயே சுமத்துவேன். மாறாக, நீ தீயோரை எச்சரித்திருத்தும், அவர்கள் தம் தீச்செயலினின்றும் தம் தீய வழியினின்றும் விலகாமல் இருந்தால், அவர்கள் தம் குற்றப் பழியோடு சாவர். நீயோ உன் உயிரைக் காத்துக் கொள்வாய். நேர்மையாளர் தம் நேர்மையினின்று விலகி, அநீதி செய்கையில் நான் அவர்கள்முன் இடறலை வைக்க, அவர்கள் சாவர். நீ அவர்களை எச்சரிக்காதிருந்தால் அவர்கள் தம் பாவத்திலேயே சாவர்; அவர்களுடைய நற்செயல்கள் நினைக்கப்படமாட்டா. ஆனால் அவர்களது இரத்தப்பழியை உன் மேலேயே சுமத்துவேன். மாறாக, நேர்மையாளர் பாவம் செய்யாதபடி நீ அவர்களை எச்சரித்ததால் அவர்கள் பாவம் செய்யாவிடில், அவர்கள் வாழ்வது உறுதி. நீயும் உன் உயிரைக் காத்துக்கொள்வாய் (எசே. 3:21)_ என்று கடவுள் அறிவுறுத்துகிறார்.
மேற்கண்ட அதே ஆவியோடு, “இறைவார்த்தையை அறிவி. வாய்ப்புக் கிடைத்தாலும் கிடைக்காவிட்டாலும் இதைச் செய்வதில் நீ கருத்தாயிரு. கண்டித்துப் பேசு; கடிந்துகொள்; அறிவுரை கூறு; மிகுந்த பொறுமையோடு கற்றுக்கொடு” (2திமொ. 4:2) என்று திருத்தூதர் பவுல் ஊழியர் திமொத்தேயுவுக்கு அறிவுரை கூறுகிறார்.
ஓய்வுநாளில் இயேசு தொழுகைக்கூடம் ஒன்றில் கற்பித்துக்கொண்டிருந்தார் (லூக். 13:10) என்று பைபிள் பதிவு செய்கிறது.
மத்தேயு 23-ம் அதிகாரத்தை வாசித்தால், இயேசு கிறிஸ்து பரிசேயர்களை, மறைநூல் அறிஞர்களை, வெளிவேடக்கார மறைநூல் அறிஞரே (23:15), குருட்டு வழிகாட்டிகளே (23:16), குருட்டு மடையரே (23:17), குருட்டு பரிசேயரே (23:26), சர்ப்பங்களே, விரியன் பாம்புக் குட்டிகளே (23:33), என்று பொதுவெளியில் எவ்வளவு கடுமையாக விமர்சனம் செய்தார் என்று நாம் அறிந்துகொள்ளலாம். ஒரு சூழ்நிலையில் ஆண்டவர் திருத்தூதர் பேதுருவைப் பார்த்து, _”என் கண் முன் நில்லாதே சாத்தானே!” (மத்.16:23)_ என்று திட்டினார். நாங்கள் அப்படியெல்லாம் யாரையும் திட்டவில்லை. ஆனால், சாதிவெறியரை சாதிவெறியர் என்று உண்மையைச் சொல்கிறோம்.
_நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்களும் கடைப்பிடிக்கும்படி கற்பியுங்கள். இதோ! உலக முடிவுவரை எந்நாளும் நான் உங்களுடன் இருக்கிறேன்” (மத். 28:20)_ என்று இயேசு கிறிஸ்து தன் திருத்தூதர்களுக்கு கட்டளையிடுகிறார். நீயோ நலந்தரும் போதனைக்கேற்பப் பேசு (தீத். 2:1) என்று திருத்தூதர் பவுல் ஊழியர் தீத்துவுக்கு அறிவுரை கூறுகிறார். அதைத்தான் நாங்கள் செய்கிறோம். சாதியம் கிறிஸ்தவத்தின் வளர்ச்சிக்கு மிகப் பெரிய தடையாக இருப்பதால் நாங்கள் சாதியத்துக்கு எதிராக தீவிரமாக போதிக்கிறோம்.