பதில்: இல்லை. ஆனால், மறைநூலில் எழுதப்பட்டிருப்பதை மட்டுமே கடைபிடிக்கவேண்டும் என்று நீங்கள் சொன்னால், சுவிசேஷ கைப்பிரதி கொடுக்க இயேசு கிறிஸ்து சொன்னாரா? பிரசங்கம் பண்ணும்போது மைக், ஒலிப்பெருக்கி இவற்றைப் பயன்படுத்தச் சொன்னாரா? ஊழியத்திற்குப் போகும்போது ஆகாய விமானத்தில், ரயில் வண்டியில், பேருந்தில், காரில் பயணம் செய்ய சொன்னாரா? கிறிஸ்தவர்கள் மொபைலை பயன்படுத்தச் சொன்னாரா? முகநூல், வாட்சப், டுவிட்டர், YOUTUBE என்பவற்றைப் பயன்படுத்தச் சொன்னாரா? தொலைக்காட்சியில் இறைவார்த்தையைப் பேசச் சொன்னாரா? கேமராவைப் பயன்படுத்தச் சொன்னாரா? இசைக்கருவிகளை வாசித்து, பாட்டுப் பாடி, போதனை செய்து CD-யாக விற்பனை செய்ய சொன்னாரா? கிறிஸ்தவர்கள் பள்ளிக்கு சென்று கல்வி கற்கவேண்டும் என்று வேதம் எங்காவது பரிந்துரை செய்கிறதா? பள்ளிகளையும், கல்லூரிகளையும் தொடங்கவேண்டும் என்று மறைநூல் கூறுகிறதா? பைபிள் காலேஜுக்கு போய் படிக்கவேண்டும் என்று பைபிள் கூறுகிறதா? ஊழியத்தில் கணிணியை (Computer) பயன்படுத்தச் சொன்னாரா? ஜெப கோபுரம் கட்டச் சொன்னாரா? தேவாலயங்களைக் கட்டச் சொன்னாரா? இயேசுவின் வாழ்க்கை வரலாற்றைத் திரைப்படமாக உருவாக்கச் சொன்னாரா? கிறிஸ்தவ புத்தக நிலையங்களை தொடங்கச் சொன்னாரா? இப்படி ஆயிரம் கேள்விகளைக் கேட்கலாமே!
நான் இந்து சகோதரர்களின் 100 கேள்விகளுக்கு பதில்கள் என்ற புத்தகத்தை அச்சிட்டபோது கிறிஸ்தவர்கள் யாரும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. சுத்தக் கண்ணா என்ற பாடல் ஒலித்தட்டை வெளியிட்டபோது கிறிஸ்தவர்கள் யாரும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. நான் சாதி மறுப்பைப் பற்றி பேசத் தொடங்கியபின், இந்த ஊழியத்தை எப்படியாவது முடக்கிவிடவேண்டும் என்று இப்படி எல்லாம் சொல்லிக் கொண்டிருக்கிறீர்கள். எல்லா போதகர்களும் சாதிமறுப்பைப் பற்றி பேச தொடங்குவதுவரை நாங்கள் சாதிமறுப்புக்கு முக்கியத்துவம் கொடுக்கத்தான் செய்வோம்.