பதில்: அதில் என்ன சந்தேகம்? ஆபத்தில் சிக்கியவர்கள், _”காப்பாற்றுங்கள், காப்பாற்றுங்கள்”_ என்று கத்தத்தானே செய்வார்கள்! வருத்தப்பட்டு பாரம் சுமப்பவர்கள் இளைப்பாறுதலைத் தேடத்தானே செய்வார்கள்! சிலுவையில் இயேசு கிறிஸ்துவுக்கு தாகம் வந்தபோது, “நான் தாகமாயிருக்கிறேன்” என்று சொன்னாரே! அந்த தாகத்தோடே செத்துவிடுவோம் என்று கிறிஸ்து நினைக்கவில்லையே! பார்வை பாதிக்கப்பட்டிருந்த பர்திமேயு என்பவர் தன் பார்வையை திரும்ப பெற்றுக்கொள்ள இயேசுவை நோக்கி, “தாவீதின் மகனே! எனக்கு இரங்கும்” என்று கத்தியதை தவறு என்று கூறப்போகிறீர்களா? பாலைநிலத்தில் கைவிடப்பட்ட ஆகார் என்பவர் உதவிக்காக அழுததை தவறு என்று கூறமுடியுமா? பசியால் செத்துமடியாமல் உயிர் வாழவேண்டும் என்னும் அகஉணர்வை ஆகாருக்குக் கொடுத்ததும் கடவுள்தானே! நாங்கள் சுயமரியாதையோடு வாழவேண்டும் என்ற உணர்வை எங்களுக்குத் தந்ததும் கடவுள்தானே! அதனால்தான் சுயமரியாதையைத் தேடி சபையில் சமத்துவத்தை உரிமை கோருகிறோம்.
சாதியம் கிறிஸ்தவ ஊழியத்தை கடுமையாக பாதித்திருக்காவிட்டால் நாங்கள் சாதியத்தை எதிர்த்திருக்கமாட்டோமே! சாதியால் பாதிக்கப்பட்ட பல்லாயிரக்கணக்கான மக்கள் கிறிஸ்துவின் இலவச மீட்பை ஏற்றுக்கொள்வதற்கு கிறிஸ்தவர்களின் சாதியம் மிகப்பெரும் தடையாக உள்ளதே! “நாங்கள் உங்கள் அன்பின் கடவுள் இயேசு கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டாலும், எங்கள் அவசரத் தேவையாகிய உளவியல் விடுதலை எங்களுக்குக் கிடைக்கப் போவதில்லை; நாங்கள் கிறிஸ்துவால் பாவமன்னிப்பைப் பெற்றுக்கொண்டாலும் நீங்கள் எங்கள் சாதியின் பெயரில் எங்களை இழிவுபடுத்தத்தான் போகிறீர்கள் என்றால் நீங்கள் சொல்லும் மீட்பில் என்ன அர்த்தம் இருக்கிறது? அடிப்படை மனித நேயமுடையவர்கள் எங்களை சாதி அடிப்படையில் புறக்கணிக்கமுடியுமா?” என்று ஆச்சரியப்பட்டு கேட்கிறார்களே!
_”இந்துத்துவ சாதிய இழிவிலிருந்து விடுதலை அடையும் நோக்கத்தில் மதம் மாறுபவர்கள் நிச்சயமாக கிறிஸ்தவத்தைத் தேர்வு செய்யமாட்டார்கள்”_ என்று திருமாவளவன் என்ற ஒரு சமூக ஆர்வலர் சொல்கிறார். அவருடைய வார்த்தை, நற்செய்தி அறிவிக்கும் எங்களுக்கு மனவலியைக் கொடுக்கிறதே! அவர் சொல்வது மறுக்கமுடியாத உண்மைதானே! “அன்பைப் பற்றி பேசும் நீங்கள் இவ்வளவு அசிங்கமாக ஒருவரை ஒருவர் சாதி அடிப்படையில் இழிவுபடுத்தும்போது நாங்கள் உங்கள் ஆன்மீகத்தை ஏற்றுக்கொள்வதில் என்ன பயன் இருக்கிறது?” என்று அறிவார்ந்த பலர் நம்மிடம் கேட்கிறார்களே!
இயேசுவிடம் மக்கள் வந்தால் என்ன? வராவிட்டால் என்ன? என்று நினைக்கும் பெயர்க் கிறிஸ்தவர்களுக்கு எங்கள் ஆதங்க வலி புரியாது. நற்செய்தி அறிவிப்பின் அவசரம் அறிந்தவர்களுக்குத்தான் இறையரசின் விரிவாக்கத்துக்கு சாதி எவ்வளவு முட்டுக்கட்டையாக இருக்கிறது என்று புரியும். சாக்கடையில் விழுந்த பன்றிக்கு சாக்கடை அசிங்கமாகத் தெரியாது. மாறாக அதற்கு சுகமாக இருக்கும். பன்றி சாக்கடையைவிட்டு வெளியேவர விரும்பாது. அதேபோல மீட்கப்படாத பாவிகளுக்கும், மீட்கப்பட்டும் சத்தியம் தெரியாத பெயர் கிறிஸ்தவர்களுக்கும், ஆட்டுத்தோல் போர்த்திய ஓநாய்களைப் போன்ற வயிற்றுப் பிழைப்பு போதகர்களிடம் சிக்கிக்கொண்ட ஆன்மீக அடிமைகளுக்கும் சாதிச் சாக்கடை சுகமாகத்தான் இருக்கும். ஆனால், ஆட்டுக்குட்டி சாக்கடையில் விழுந்தால் கத்திக்கொண்டே வெளியேறத்தானே செய்யும்! அதேபோலத்தான் மீட்கப்பட்டு, கிறிஸ்துவின் சாயலுக்கு நிகராக வளரவேண்டும் என்ற விசுவாசிகளுக்கு சாதிச் சாக்கடை அருவருப்பாகத்தான் இருக்கும். சாதியால் இறையரசின் வளர்ச்சி எவ்வளவு பாதிக்கப்பட்டுள்ளது என்பதை போதிக்கும்போது, உடனே அந்த போதனைக்கு கீழ்படித்து அந்த சாக்கடையைவிட்டு வெளியேறுகிறார்கள். ஆண்டவருக்கே மகிமை சேரட்டும்.
வாழ்க்கையின் எந்த சுமைகளை சுமந்து சோர்ந்திருப்போரையும் தன்னிடம் அழைத்து இளைப்பாறுதல் கொடுக்கிறார் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து (மத். 11:28). *நோய், கடன்கள், அறியாமை, குற்றமனசாட்சி, வறுமை, தோல்விகள், குடிப்பழக்கம், வரதட்சணைக் கொடுமைகள், தற்கொலை எண்ணம், மனக்குழப்பம், நிம்மதியின்மை* என்று எந்த சுமைகளிலிருந்தும் விடுதலை அளிக்கிறார் என்று ஊழியர்கள் சொல்லிக் கேள்விப்படுகிறோம். அந்த வகையில் சாதிய இழிவும் ஒரு சுமைதானே! *சாதிய சுமையால் சோர்ந்துபோன மக்களுக்கு கிறிஸ்து இளைப்பாறுதல் கொடுக்கிறார்* என்று கிறிஸ்தவர்களாகிய நாம் இன்னும் உலகுக்கு நிரூபிக்கவில்லையே!
*கிறிஸ்தவ சாதி மறுப்பாளர் இயக்கத்தில்* அங்கமாய் இருக்கும் பலருடைய மூதாதையர்கள் முற்காலத்தில், *”பார்த்தாலே* தீட்டு, *தொட்டாலே* தீட்டு” என்று இந்துத்துவ ஆதிக்கவாதிகளால் பாதிக்கப்பட்டிருந்தோம். எங்கள் மூதாதையர் இடுப்புக்கு மேலும், மூட்டுக்கு கீழும் ஆடை அணியும் உரிமை மறுக்கப்பட்டிருந்தார்கள். முற்காலப் பெண்கள் மார்பகங்களை மறைக்க அவைகளின் அளவுக்குத்தக்க வரி செலுத்தினார்கள். அன்று அப்படி கொடிய துன்பங்களை அனுபவித்தோம். ஆனால், இன்று அன்பைப் பற்றி பிரச்சாரம் செய்யும் கிறிஸ்தவத்துக்கு நாங்கள் நகர்ந்தபின்பு இங்கும் சாதிய அடக்குமுறைகள் வேறு வடிவங்களில் தொடர்கிறதே! அன்று ஒடுக்கப்பட்டவர்களே இன்று பிறரை ஒடுக்குகிறார்களே! கிறிஸ்தவத்துக்கு வந்தபின்பு இங்கே சாதி வாரியாக தேவாலயங்கள் பிரித்து கட்டப்பட்டுள்ளன. *ஒரு சாதியாரின் தேவாலயத்துக்குள் மற்ற சாதியார் இன்றும் அனுமதிக்கப்படுவதில்லையே!* எங்கள் *திருமணங்களில்* சாதி அடிப்படையில் புறக்கணிக்கப்படுகிறோமே! பிள்ளைமார்கள் என்று அழைக்கப்படுவோர், நாடார்கள் என்று அழைக்கப்படுவோரை புறக்கணிக்கிறார்கள். கீழ்சாதி என்று இழிவுபடுத்துகிறார்கள். நாடார்கள் என்று அழைக்கப்படுவோர், பள்ளர்கள், பறையர், அருந்ததியர் என்று அழைக்கப்படுவோரை ஏற்றுக்கொள்வதில்லை. கேட்டால், “அவர்கள் வேறு சாதியினர்” என்று வாய் கூசாமல் கூறுகிறார்கள். இதனாலேயே கிறிஸ்துவின் சிந்தையோடு சாதியத்துக்கு எதிராக நாங்கள் பேசுகிறோம்.
கிறிஸ்தவ சாதி மறுப்பாளர் இயக்கத்தில் சாதியால் பாதிக்கப்படாதவர்கள் குறிப்பாக *பிராமணர்* என்று அழைக்கப்பட்டவர்களே இருக்கிறார்களே! சாதியம் ஒரு தவறான வாழ்வியல் என்று போதிக்க சாதியால் கட்டாயம் பாதிக்கப்பட்டிருக்க வேண்டும் என்று சட்டம் ஏதாவது உள்ளதா? தமிழ்நாட்டில் அருட்பணி செய்த வெளிநாட்டவர்கள் *இராபர்ட் கால்டுவெல், ஜி.யு. போப், இரேனியஸ்* போன்றவர்கள் சாதியத்துக்கு எதிராக சபைக்கு போதனை செய்துள்ளார்களே! அவர்கள் எல்லாரும் சாதியால் பாதிக்கப்பட்டவர்கள் என்று சொல்ல வருகிறீர்களா?
_சாதிகள் இல்லையடி பாப்பா; குலத் தாழ்ச்சி உயர்வு சொல்லல் பாவம்”_ என்று மக்களுக்கு போதனை செய்த *சுப்பிரமணிய பாரதியார்* என்ற புரட்சிக் கவிஞர், வருணாசிரம கோட்பாட்டின்படி உச்சத்தில் அமர்ந்திருக்கும் உயர்சாதி என்று அழைக்கப்படும் பிராமணர் என்ற சாதியில் பிறந்தவரல்லவா! பாரதியார் சாதியத்துக்கு எதிராக பாட்டுப் பாடியதால் அவரும் சாதியால் பாதிக்கப்பட்டவர் என்று கூற வருகிறீர்களா? அழுதப் பிள்ளைக்குத்தான் பால் கிடைக்கும் என்று சொல்வது உண்மைதானே!
சாதியத்துக்கு எதிராக கண்டிப்பாக சாதியால் பாதிக்கப்பட்டவர்கள்தான் பேச வேண்டும் என்று சட்டம் ஏதாவது இருக்கிறதா? சாதியால் பாதிக்கப்பட்டவர்கள்தான் சாதியத்தை எதிர்க்கவேண்டும் என்றால் கிறிஸ்தவர்கள் அன்பற்றவர்கள் என்றல்லவா அர்த்தம்! சாலையில் ஒருவர் கீழே விழுந்துவிட்டால், அவருடைய சாதிக்காரர்கள்தான் வந்து அவரைத் தூக்கி விடவேண்டும் என்று கூறமுடியுமா? அடிப்படை மனிதநேயமுடையவர்கள் அப்படி சிந்திக்கமுடியுமா? சாதியால் பாதிக்கப்பட்டவர்களை நேசிப்பவர்களும் சாதியத்துக்கு எதிராக போராடலாமே! கிறிஸ்தவர்கள் தற்போது கடைப்பிடித்துக் கொண்டிருக்கும் சாதியம் கிறிஸ்தவத்தின் வளர்ச்சிக்கு மிகப்பெரிய தடையாக இருக்கிறது என்று தெரிந்தவர்களும் சாதியத்தை எதிர்த்து நிற்கவேண்டுமே! ஆக, சாதியம் என்பது கிறிஸ்தவத்துக்கு எதிரான ஒரு சமூக விரோத கொள்கை என்று தெரிந்த எல்லாருமே இணைந்து இயக்கமாக சாதியத்திற்கு எதிராக போராடுகிறோம். நீங்களும் எங்களோடு இணையவேண்டும் என்று விரும்புகிறோம். கடவுள் உங்களுக்கு உதவி செய்வார் என்று நம்புகிறோம்.