031) சாதி பாகுபாடுகள் இல்லாத சபையைக் காட்டுங்கள். அந்த சபைக்கு செல்கிறேன். எல்லா சபையிலும் சாதியம் இருக்கிறதே!

பதில்: எல்லா சபையிலும் சாதிய வேறுபாடுகளும், பாகுபாடுகளும் இருக்கின்றன என்றே வைத்துக்கொள்வோம். அதற்காக நாம் கண்டிப்பாக சாதி பார்க்கவேண்டும் என்று சொல்ல வருகிறீர்களா? களவு செய்யாத சபையைக் காட்டுங்கள். அந்த சபைக்குச் செல்கிறோம் என்று கூறிக்கொண்டு நாம் களவு செய்யலாமா? எல்லா சபையினரும் பொய் சொல்கிறார்கள் என்பதற்காக, பொய் சொல்வது பாவம் இல்லை என்றாகிவிடுமா? நம் பிள்ளை விபச்சாரத்துக்கும், போதைக்கும் அடிமையாகிவிட்டால், “போதையில்லாத, விபச்சாரம் இல்லாத ஊரைக் காட்டுங்கள்; அந்த ஊருக்கு நாங்கள் நகர்ந்துவிடுகிறோம்; பிள்ளைகள் என்றால் விபச்சாரமும், போதைப் பழக்கமும் இருக்கத்தான் செய்யும்” என்று மெத்தனமாகக் கூறுவோமா? பாதிக்கப்பட்ட மற்றவர்களை காப்பாற்ற நினைப்பதைவிட நம் பிள்ளையைக் காப்பாற்ற அதிகபட்ச முயற்சி எடுப்போமல்லவா? அதேபோல, நீங்கள் கலந்துகொள்ளும் சபையில் எல்லோருமே சாதி பார்த்தாலும், அவர்கள் திருந்துகிறார்களோ இல்லையோ, சாதியம் தவறு என்று தெரிந்த நீங்கள் அந்த பாவத்திலிருந்து கண்டிப்பாக விலகவேண்டுமல்லவா!
ஒரு சிந்தை அல்லது செயல் பாவம் என்று நமக்குத் தெரிந்தபின்பு அதை நாம் செய்வது பெரிய பாவமல்லவா! _”தலைவருடைய விருப்பத்தை அறியாமல் அடிவாங்கவேண்டிய முறையில் செயல்படுபவன், அவரது விருப்பத்தை அறியாமல் செயல்படுவதால் சிறிதே அடிபடுவான். *மிகுதியாகக் கொடுக்கப்பட்டவரிடம் மிகுதியாகவே எதிர்பார்க்கப்படும். மிகுதியாக ஒப்படைக்கப்படுபவரிடம் இன்னும் மிகுதியாகக் கேட்கப்படும்”* (லூக். 12:48)_ என்று மறைநூல் கூறுகிறது. மேற்கண்ட வசனத்திலிருந்து சாதி பார்ப்பது தவறு என்று தெரியாமல் கடைப்பிடிப்பவரிடம் கடவுள் கணக்கு கேட்பதைவிட, சாதியம் தவறு என்று தெரிந்த பின்பும் கடைபிடிக்கும் நம்மிடம் கடவுள் அதிகமாகக் கணக்கு கேட்பாரே!
உங்கள் சபையின் போதகரே சாதி பார்த்தாலும், அந்த பாவத்தை நீங்கள் செய்யக்கூடாது. _உங்களுக்குக் கடவுளின் வார்த்தையை எடுத்துச்சொன்ன உங்கள் தலைவர்களை நினைவுகூருங்கள். *அவர்களது வாழ்வின் நிறைவை எண்ணிப் பார்த்து,* நீங்களும் அவர்களைப்போல நம்பிக்கையுடையவர்களாய் இருங்கள் (எபி. 13:7)_ என்று இறை வார்த்தை நம்மை எச்சரிக்கிறது. அதாவது, நம்மை நடத்தும் தலைவர்களுடைய வாழ்க்கையை நாம் ஆராய்ந்து, அவர்கள் செய்வது தவறு என்று நம் மனசாட்சிக்குத் தெரிந்தால் நாம் அந்த விடயத்தில் அவரைப் பின்பற்றக் கூடாது என்று அறிகிறோம்.
_”இதோ! நான் விரைவில் வருகிறேன். *அவரவர் செயலுக்கு ஏற்ப அவரவருக்கு* நான் அளிக்கவிருக்கின்ற கைம்மாறு என்னிடம் உள்ளது (தி.வெ. 22:12)_ என்று கடவுள் சொல்கிறார்.
கடவுள் ஒட்டுமொத்த சபைக்கென்று *மொத்தமாக* நியாயத் தீர்ப்பு சொல்லமாட்டார். ஒவ்வொரு மனிதனுக்கும் *தனிப்பட்ட முறையில்* அவரவருடைய செயல்களுக்கு தக்க விதத்தில் இறுதித் தீர்ப்பு கொடுக்கப்படும் என்று மேற்கண்ட வசனத்தின் மூலம் தெரிந்து கொள்கிறோம்.
சபையின் மக்களைப் பார்த்து ஏமாந்து போகாதீர்கள். நமது ஆன்மாவுக்கு நம்மை நடத்துபவர்களுக்கு பொறுப்பு உண்டு (எபி. 13:17). ஆனால் அவர் செய்வது தவறு என்று நம் மனசாட்சிக்கு தெரிந்த பின்பும் அதைப் பின்பற்றினால் அந்த செயலுக்கு நாம்தான் பொறுப்பு.