பதில்: கிறிஸ்தவர்கள் பல பிரிவினர்களாக பிரிந்து வாழ்கின்றனர். அதில் எல்லா பிரிவினரும் தங்கள் பிரிவின் கொள்கைதான் சரி என்று நிரூபிக்கிறார்கள். அதற்கு மறைநூலிலிருந்து பல வசனங்களை சுட்டிக் காட்டுகின்றனர். ஆனால், கிறிஸ்து மனிதனுடைய பாவத்திலிருந்து அவனை மீட்கவந்தார் என்னும் உண்மையை கிறிஸ்தவர்கள் எல்லாரும் ஏற்றுக்கொண்டு, நம்பிக்கை வைக்கின்றனர்.
தந்தை-மகன்-தூய ஆவியார் என்ற மூவொரு தெய்வம் ஒன்றாக இணைந்து வாழ்வதுபோல கிறிஸ்தவர் எல்லாரும் ஒற்றுமையாக வாழவேண்டும் என்று கிறிஸ்து தன் தந்தையிடம் வேண்டினார் (யோவா. 17:21-23). கிறிஸ்துவின் மனநிலையுடையவர் (1கொரி. 2:16, பிலி. 2:5) நாம் அனைவரும் அதையே விரும்புகிறோம். “சகோதர சகோதரிகளே, நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் பெயரால் நான் உங்களைக் கெஞ்சிக் கேட்டுக்கொள்வது இதுவே; நீங்கள் ஒத்தக் கருத்துடையவர்களாய் இருங்கள். உங்களிடையே பிளவுகள் வேண்டாம். ஒரே மனமும் ஒரே நோக்கமும் கொண்டிருங்கள். என் அன்பர்களே, உங்களிடையே சண்டை சச்சரவுகள் இருப்பதாகக் குலோயி வீட்டார் எனக்குத் தெரிவித்துள்ளனர். நான் இதைச் சொல்லக் காரணம், உங்களுள் ஒவ்வொருவரும் “நான் பவுலைச் சார்ந்துள்ளேன்” என்றோ “நான் அப்பொல்லோவைச் சார்ந்துள்ளேன்” என்றோ “நான் கேபாவைச் சார்ந்துள்ளேன்” என்றோ, “நான் கிறிஸ்துவைச் சார்ந்துள்ளேன்” என்றோ சொல்லிக் கொள்கிறீர்களாம். கிறிஸ்து இப்படிப் பிளவுபட்டுள்ளாரா? அல்லது பவுலா உங்களுக்காகச் சிலுவையில் அறையப்பட்டான்? அல்லது பவுலின் பெயரிலா நீங்கள் திருமுழுக்குப் பெற்றுக்கொண்டீர்கள்?” (1கொரி. 1:10-13) என்று கொரிந்து சபைக்கு திருத்தூதர் பவுல் அறிவுறுத்துகிறார்.
“அவரே (இயேசு கிறிஸ்து) நமக்கு அமைதி அருள்பவர். அவரே இரண்டு இனத்தவரையும் (இஸ்ரயேலர், புறவினத்தார்) பிரித்து நின்ற பகைமை என்னும் சுவரை, தமது உடலில் ஏற்ற துன்பத்தின் வழியாய்த் தகர்த்தெறிந்து, அவர்களை ஒன்றுபடுத்தினார். பல கட்டளைகளையும் விதிகளையும் கொண்ட யூதச் சட்டத்தை அழித்தார். இரு இனத்தவரையும் தம்மோடு இணைந்திருக்கும் புதியதொரு மனித இனமாகப் படைத்து அமைதி ஏற்படுத்தவே இவ்வாறு செய்தார். தாமே துன்புற்றுப் பகைமையை அழித்தார். சிலுவையின் வழியாக இரு இனத்தவரையும் ஓருடலாக்கிக் கடவுளோடு ஒப்புரவாக்க இப்படிச் செய்தார். அவர் வந்து, தொலைவில் இருந்த உங்களுக்கும், அருகிலிருந்த அவர்களுக்கும் அமைதியை நற்செய்தியாக அறிவித்தார்” (எபே. 2:14-17) என்று எபேசு சபைக்கு திருத்தூதர் பவுல் தெரிவிக்கிறார்.
“பகைமை, சண்டை, சச்சரவு, பொறாமை, சீற்றம், கட்சி மனப்பான்மை, பிரிவினை, பிளவு” (கலா. 5:20) என்பவை ஊனியல்பின் வெளிப்பாடுகளாக திருத்தூதர் பவுல்மூலம் தூயஆவியார் நமக்குக் கற்றுத்தருகிறார்.
நாம் ஒற்றுமையாக இருக்கவேண்டுமென்று விரும்பினாலும், உங்களிடையே “கட்சிகள் இருக்கத்தான் செய்யும். அப்போதுதான் உங்களுள் தகுதியுள்ளவர்கள் யாரென வெளிப்படும்” (1கொரி. 11:19) என்றும் மறைநூல்மூலம் நாம் கற்றுக்கொள்கிறோம். அதாவது இந்த சபை வேறுபாடுகளின்மூலம்தான் தகுதியானவர் யாரென்று கண்டுபிடிக்கப்படும் என்கிறார்.
ஒருவர் ஒரு சபைப் பிரிவிலிருந்து, தன்மனசாட்சிக்கு சரியென்று தெரியும் வேறொரு பிரிவுக்கு நகரும் உரிமை அவருக்கு உண்டு. தான் விரும்பாத ஒரு கொள்கையை வேண்டா வெறுப்போடு கட்டாயம் பின்பற்றித்தான் ஆகவேண்டுமென்று கிறிஸ்தவத்தில் யாரும் யாரையும் கட்டாயப்படுத்தமுடியாது. தங்கள் பிரிவைச் சார்ந்தவர் பிற பிரிவினரைத் திருமணம் செய்யக்கூடாது என்று அந்தந்த பிரிவுகளின் தலைவர்கள் போதிக்கின்றனர். ஏனென்றால் அவர்கள் சொல்லும் கொள்கைதான் சரியானது என்று அவர்கள் நினைக்கிறார்கள். திருமணத்துக்குப் பிறகு இருவரும் ஒரே பிரிவில் இருந்தால், பிறக்கும் குழந்தைகளை வளர்ப்பதில் குழப்பம் இருக்காது என்பதற்காக பலர் ஒரே கொள்கைப் பிரிவிலேயே திருமணம் செய்கிறார்கள். ஆனால், அன்புதான் கிறிஸ்தவ ஆன்மீகத்தின் சாராம்சம் (கலா. 5:14, உரோ. 13:10) என்று கிறிஸ்தவர்கள் எல்லோரும் உணரும் நாள் வரும்போது இந்த வேறுபட்ட கொள்கைகள் மறைந்து ஒற்றுமை உருவாகும் என்று வலுவாக நம்புகிறேன்.
பல சபையின் ஊழியர்கள் திருமணம் செய்கின்றனர். சில சபையின் ஊழியர்கள் திருமணம் செய்வதில்லை. சில சபையார் இயேசு கிறிஸ்துவின் நினைவுப் படத்தையும், சிலைகளையும் உருவாக்கிப் பயன்படுத்துகின்றனர். சிலர் அதை தவறு என்று கருதுகின்றனர். சில சபையார் ஆரவார ஆர்பாட்டத்தோடு சத்தமாக கடவுளுக்கு ஆராதனை செய்கிறார்கள். சிலர் நடனமாடி கடவுளைத் துதிக்கிறார்கள். சில பிரிவினர் அமைதியாக ஆராதனை செய்கின்றனர்.
பலர் கடவுளை ஞாயிற்றுக்கிழமை தொழுகிறார்கள். அது தவறு என்று கருதி சிலர் கடவுளை சனிக்கிழமை தொழுகிறார்கள். கடவுள் திரித்துவமாக இருக்கிறார் என்று சிலர் நம்புகின்றனர். சிலர் ஒருத்துவமாக இருக்கிறார் என்று நம்புகிறார்கள். ஒரு சிலர் குணமளிப்பு, தீர்க்கதரிசனங்கள் போன்ற வரங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். சில சபையார் அன்போடு வாழ்ந்தாலே போதுமென்று கூறுகிறார்கள். சில சபையார் நற்செய்தியை அறிவிக்க முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். சில சபையார் அதற்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை. ஒருசிலர் ஆழமான இறைவார்த்தை வெளிப்பாடுகளுக்கும் மறைநூல் ஆராய்ச்சிக்கும் முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். சில சபையார் மறைநூல் ஆராய்ச்சிக்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை. ஒருசிலர் சமூக அறப்பணிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். சில சபையார் அதற்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை. சில சபைப் பிரிவினர் எளிமையின் அடையாளமாக நகை, பூ, பொட்டு போன்றவற்றை பயன்படுத்துவதில்லை. நகை அணிந்தால் பரலோகத்திற்குப் போகமுடியாது என்று பயந்து சில கிறிஸ்தவர்கள் நகை அணிவதில்லை. சில சபையார் தாங்கள் கடவுளால் ஆசீர்வதிக்கப்பட்டதன் அடையாளமாக பகட்டான உடை அணிகிறார்கள். ஒருசிலர் தங்களுடைய ஆன்மீக முதிர்ச்சியை பிறருக்கு வெளிப்படுத்தும்படி வெண்ணுடை அணிவர். ஒருசிலர் கர்நாடக இசையில் பாடல்களைப் பாடுவதில் முனைப்பாக இருக்கின்றனர். வேறுபலர் ஆங்கிலேய மொழிநடையில் பாடுகிறார்கள். ஒரு சபையின் ஊழியர் அங்கி அணிகிறார். ஒருசிலர் ஜிப்பா, வேட்டி அணிகின்றனர். வேறொரு சபையின் ஊழியர் கோட், சபாரி சூட் அணிகிறார். ஒருசிலர் ஜெபவீட்டுக் கட்டடம் பார்ப்பதற்கு அழகாக இருக்க வேண்டும் என்பதற்காக அந்த கட்டடத்திற்காக கோடிக்கணக்கில் செலவு செய்கிறார்கள். வேறுசிலர், ஒரு ஜெபவீடு கட்டும் பணத்தில் அலங்காரமில்லாமல் பல ஜெபவீடுகளைக் கட்டி விடுகிறார்கள். கடிகாரம் கண்டுபிடிக்கப்படாத நாட்களில் எல்லோரும் ஒரே நேரத்தில் சபைக் கூடுகைக்கு வருவதற்காக அழைப்பு மணியைப் பயன்படுத்தினார்கள். ஆனால், கடிகாரம் கண்டுபிடிக்கப்பட்ட பின்பும் அது எதற்காகக் கட்டப்பட்டது என்று சிந்திக்காமல் பழைய சபைப் பிரிவினர் பலர் இன்றும் மணிக் கோபுரம் கட்டுகிறார்கள்.
பிராமணர்கள் போன்ற சைவ உணவு உண்போரை, சாதி ஆச்சாரங்களைக் கடைபிடிப்போரை இடறல் இல்லாமல் கிறிஸ்துவுக்குள் நடத்த சில சபைகள் சைவ உணவு சபைகளாக உள்ளன. அது தவறல்ல. கண்டிப்பாக அசைவம் உண்ணவேண்டும் என்று மறைநூலில் எங்குமே எழுதப்படவில்லை. வயிற்றுக்குள்ளே போகும் உணவில் இருக்கும் பிரச்சனையைவிட மனதுக்குள்ளேயிருந்து வருவனதான் மிகக் கேடானவை என்று இறைவன் அறிவுறுத்துகிறார். பிராமணர்களில் இயேசுவை ஏற்றுக்கொண்டவர்கள் ஒரு சிலர் சாதி உணர்விலிருந்து வெளியேறி சாதி மறுப்புத் திருமணம் செய்திருக்கிறார்கள். எந்த கடின மனிதனையும் அன்பார்ந்த போதனையும், நற்சாட்சியுடையோரின் நட்புறவும் பக்குவப்படுத்திவிடும்.
அண்மையில் ஒரு சகோதரன் என்னிடம், “பாத்திமாவில் மாதா காட்சியளித்ததை நம்புகிறீர்களா?” என்று அன்போடு கேட்டார். “இது பைபிளில் எழுதப்பட்டுள்ளதா?” என்று அவரிடம் கேட்டேன். “இல்லை” என்றார். “ஐயா! வேதத்தில் உள்ளதையே முழுமையாக கடைபிடிக்க முடியாமல் இருக்கிறேன்; வேதத்தில் இல்லாததை நான் எப்படி நம்பி கடைபிடிக்கமுடியும்?” என்றேன். உடனே அவர் சிரித்துக்கொண்டே, “நீங்கள் சொல்வதும் சரிதான்” என்றார். இப்படிப் பல்வேறு வித்தியாசங்கள் இருந்தாலும், இயேசு கிறிஸ்துதான் உலக இரட்சகர் என்பதை எல்லோரும் ஒருமனமாக நம்புகிறார்கள்.
இந்த எல்லா சபைகளும் இயேசு கிறிஸ்துவை உலக இரட்சகர் என்று நம்புகின்றன. உலகில் அன்பை உருவாக்குவதற்காகவே இயேசு கிறிஸ்து இந்த உலகத்துக்கு வந்து கொடிய மரணத்தை அனுபவித்தார் என்பதை இன்று பலரும் புரிந்துகொள்கின்றனர். சபைப் பெயர்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பதிலிருந்து வெளியேறி ஆன்மீக சட்டங்களின் சாராம்சமே அன்புதான் என்று கிறிஸ்தவர்கள் பலர் அறிந்துகொண்டிருக்கிறார்கள்.
அதேபோல, ஒரு ஊரைச் சார்ந்தவர் அந்த ஊர் பிடிக்கவில்லை என்று வேறொரு ஊருக்கு நகரலாம். எடுத்துக்காட்டாக, தாழ்த்தப்பட்டோர் குடியிருப்பு என்று அழைக்கப்படும் இடத்திலிருந்து நகர்புறத்துக்கு இடம் பெயரலாம். நாகர்கோயிலில் பிறந்து வளர்ந்த ஒருவர் சென்னைக்கு நகரலாம். அமெரிக்காவுக்கே சென்று குடியேறலாம். யாரும் அதைத் தடுக்கமுடியாது. ஆனால், சாதியம் என்பது முற்றிலும் மாறுபட்ட பிரச்சனை. அதில் முக்கியமான விடயம் என்னவென்றால், ஒரு சாதியைச் சார்ந்தவர், தன் சாதியின் பெயரும், இனத்தின் பெயரும் பிடிக்கவில்லை என்று வேறொரு சாதிக்கு, இனத்துக்கு சட்டப்படி நகரமுடியாது. ஒரு குறிப்பிட்ட வேலை செய்வதாலோ, குறிப்பிட்ட அளவு செல்வம் சேர்ப்பதாலோ வேறு சாதிக்கோ, இனத்துக்கோ நகரமுடியாது. அதேபோல, தன் நிறம் பிடிக்காமல் வேறு நிறத்துக்கு அவர் மாறவும் முடியாது. அதனால், சாதி, இன மற்றும் நிற அடிப்படையில் மனிதநேயமற்ற சக கிறிஸ்தவர்களால் புறக்கணிக்கப்படுகிறார். அதனால்தான் எல்லா பாகுபாடுகளைவிடவும் சாதி, இன, நிற பாகுபாடுகளுக்கு எதிராக தீவிரமாக செயலாற்றுகிறோம்.
மறைநூலை பலரும் பல கோணங்களின் பார்த்து, புரிந்துகொண்டதால்தான் பல சபைப் பிரிவுகள் உருவாகியுள்ளன. ஆனால், இந்துத்துவ சாதியத்தால் உருவான பாகுபாடுகளுக்கும் கிறிஸ்தவ மறைநூலுக்கும் சம்பந்தமே இல்லையே!