பதில்: கிறிஸ்து உயிர்த்தெழுந்தபின், தன் சீடர்களைப் பார்த்து, “நீங்கள் போய் எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள்; தந்தை, மகன், தூய ஆவியார் பெயரால் திருமுழுக்குக் கொடுங்கள். நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்களும் கடைப்பிடிக்கும்படி கற்பியுங்கள். இதோ! உலக முடிவுவரை எந்நாளும் நான் உங்களுடன் இருக்கிறேன்” என்று கூறினார் (மத். 28:20). நாம் நற்செய்தி அறிவிப்பது மட்டுமல்ல, கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டோருக்கு திருமுழுக்கு கொடுக்கவும், கிறிஸ்துவின் போதனைகளை போதிக்கவும் வேண்டும். அந்த போதனைகளில் மிக முக்கியமானது, ‘தன்னைத்தான் நேசிப்பதுபோல பிறரை நேசிக்க வேண்டும்’ என்பதாகும் (கலா. 5:14). ஒருவர் தன்னை நேசிப்பதுபோல பிறரையும் நேசித்தால், பிறரை சாதி அடிப்படையில் புறக்கணிக்கமுடியாது என்று யாரும் போதிப்பதில்லை. இந்தியாவைப் பொறுத்த வரையில் நற்செய்தி அறிவிப்பதற்கு மிகப்பெரிய தடையாக இருப்பது கிறிஸ்தவர்கள் பின்பற்றும் இந்துத்துவ சாதி பாகுபாட்டு கொள்கையாகும். ஆகவே நாங்கள் சாதியத்துக்கு எதிராக போதிக்கிறோம். சபை முழுவதும் சாதி வெறி பிடித்த கிறிஸ்தவர்களால் நிறைந்திருக்கும்போது சாதியால் பாதிக்கப்பட்ட மக்களை சபைக்கு அழைத்து வருவது ஆபத்தல்லவா. வெளிப்புறம் சுத்தமாகும்படி முதலாவது உட்புறத்தை அல்லவா சுத்தப்படுத்த வேண்டும்!
சாதி வேறுபாட்டின் அடிப்படையில் சண்டையிட்டு பிரிந்துகிடக்கும் பாஸ்டர்களிடையே, சபைகளிடையே, கிறிஸ்தவர்களிடையே நாங்கள் சமாதானம் உண்டுபண்ணுகிறோம். நீதிநிலைநாட்டும் வேட்கை கொண்டோர் பேறுபெற்றோர்; ஏனெனில் அவர்கள் நிறைவுபெறுவர். சமாதானம் பண்ணுகிறவர்கள் பாக்கியவான்கள், அவர்கள் தேவனுடைய புத்திரர் எனப்படுவார்கள் (மத்தேயு 5:6,9) என்ற வசனப்படி நாங்கள் சாதாரண தேவனுடைய ஊழியர்கள் என்னும் எல்லையைத் தாண்டி தேவனுடைய புத்திரர்களாக இருக்கிறோம். மனநிறைவு அடைகிறோம்.
நற்செய்தியை கைப்பிரதியாகக் கொடுப்பதெல்லாம் ஒரு ஊழியமா? பாடுவதெல்லாம் ஒரு ஊழியமா? இசைக்கருவி வாசிப்பதெல்லாம் ஒரு ஊழியமா? ஜெபவீட்டில் நாற்காலி போடுவதெல்லாம் ஒரு ஊழியமா? பாஸ்டருக்கு கார் ஓட்டுவதெல்லாம் ஒரு ஊழியமா? சபையாருக்கு உணவு சமையல் செய்து, பந்தி பரிமாறுவதெல்லாம் ஒரு ஊழியமா? வீடியோ கேமராவுக்கு முன் அமர்ந்து பேசி பதிவு செய்வதெல்லாம் ஒரு ஊழியமா? இறைச்செய்தி வீடியோவை எடிட்டிங் செய்து YOUTUBE-ல் பதிவேற்றம் செய்வதெல்லாம் ஊழியமா? இப்படியெல்லாம் செய்ய ஆண்டவர் சொன்னாரா? என்று ஆயிரம் கேள்விகளை நாம் அடுக்கிக்கொண்டே போகலாம்.
நீங்கள் உண்டாலும் குடித்தாலும் எதைச் செய்தாலும், எல்லாவற்றையும் *கடவுளுடைய மாட்சிக்காகவே* செய்யுங்கள் (1கொரி. 10:31), கிறிஸ்து உங்களை ஏற்றுக் கொண்டது போல நீங்களும் ஒருவரை ஒருவர் ஏற்றுக்கொள்ளுங்கள். அப்போது கடவுளைப் பெருமைப்படுத்துவீர்கள். என் கருத்து இதுவே (உரோ. 15:7) என்று திருத்தூதர் பவுல் அறிவுறுத்துகிறார்.
மேற்கண்ட வசனங்கள்படி இந்த ஊழியத்தின்மூலம் கிறிஸ்தவர்களுக்குள் ஒற்றுமையும் சகோதரத்துவமும் மலரும் என்றும், அதன்மூலம் இறையரசு வெகுவாக வளரும் என்றும், கடவுளின் திருப்பெயர் மாட்சியுறும் என்றும் எதிர்நோக்கி இந்த ஊழியத்தை செய்கிறோம். அனைத்தையும் அன்போடு செய்யுங்கள் (1கொரி. 16:14) என்ற வசனப்படி அன்பை அடிப்படையாக வைத்தே இந்த திருப்பணியைச் செய்கிறோம்.
கோடிக்கணக்கான பகுத்தறிவாளர்களும், ஒடுக்கப்பட்டோரும் கிறிஸ்துவின் மீட்பை பெற்றுக்கொள்ள பெருந்தடையாக இருக்கும் கிறிஸ்தவ சாதி பாகுபாடுகளை சபையைவிட்டு அகற்றும் அர்த்தமுள்ள பணியை இறைஊழியமாக மகிழ்ச்சியோடு செய்கிறோம். எங்கள் ஊழியத்தின் மூலமாக பலர் சாதியத்திலிருந்து விடுதலை அடைவதைப் பார்க்கும்போது பேரானந்தம் அடைகிறோம்.
“சகோதர அன்பையும், சமத்துவத்தையும் தேடும் புறமக்கள் அதை அடைவதற்காக இயேசுவிடம் வரவில்லையே! அவர்கள் சமத்துவத்தைத் தேடி பாவ மன்னிப்பு இல்லாத மதங்களுக்கு நகர்கிறார்களே!” என்று உங்களுக்கு குறைந்தபட்ச அக்கரையாவது இருந்தால் இப்படி கேட்பீர்களா? இயேசு தம்மிடம் வரும் எல்லோரையும் ஏற்றுக்கொண்டாலும், சாதி உணர்வுடைய திருச்சபைத் தலைவர்கள் புதிதாக மார்க்கத்துக்குள் நுழைபவர்களுக்கும், ஏற்கெனவே விசுவாசிகளாக இணைந்திருப்போருக்கும் இடறலாக இருக்கிறார்களே என்று கரிசனத்தோடு சிந்திக்க உங்களுக்கு அறிவில்லாமல்போன காரணம் என்ன?
இந்த கேள்விகளுக்கு விடை கண்டுபிடிப்பது மிகவும் கடினமல்ல. உங்களுக்குள் அந்த பொல்லாத சாதி உணர்வுகள் இருப்பதால்தான் இந்த கேள்விகளைக் கேட்கிறீர்கள். இந்துத்துவ சாதி வேறுபாடுகள் அழியாமல் பாதுகாக்கப்படவேண்டும் என்று நீங்கள் நினைப்பதால்தான் இப்படி கேட்கிறீர்கள்.
தனக்கு தெரியாத ஒரு கொள்கையை ஒருவர் எப்படி கடைபிடிப்பார்? சாதியம் தவறு என்று யாரும் போதிக்காமல் கிறிஸ்தவர்கள் எப்படி கேள்விப்படுவார்கள்? ஆதலால்தான் ஒரு தகப்பன் தன் பிள்ளைக்கு அன்போடும், கண்டிப்போடும் கற்பிப்பதுபோல, நாங்கள் பொறுப்புணர்வோடு சாதி மறுப்பு கொள்கையை கிறிஸ்தவர்களுக்கு போதிக்கிறோம். மிகப்பெரிய தீர்க்கதரிசிகளை, போதகர்களை, பாதிரியார்களையே வஞ்சித்துக்கொண்டிருக்கும் இந்த ஆபத்தான சாதிப் பிசாசை சும்மா விடமுடியுமா?
_மனம் மாறிய *ஒரு* பாவியைப் பற்றியே விண்ணுலகில் மிகுந்த மகிழ்ச்சி உண்டாகுமானால் (லூக். 15:7),_ மீட்கப்படாத கோடிக்கணக்கான மக்கள் கிறிஸ்தவர்களுடைய சாதிவெறியால் கிறிஸ்துவை ஏற்றுக்கொள்ளமுடியாமல் இடறி நிற்பதைப் பற்றி கடவுள் எவ்வளவு வருத்தப்படுவார்?
இயேசு கிறிஸ்து என் நோயிலிருந்து, கடன் தொல்லையிலிருந்து, குடிப் பழக்கத்திலிருந்து, குடும்ப பிரிவினைகளிலிருந்து, தூக்கமின்மையிலிருந்து, ஆபத்துகளிலிருந்து, தோல்விகளிலிருந்து, பயத்திலிருந்து, கெட்ட கனவுகளிலிருந்து, பிசாசின் பிடியிலிருந்து என்னை விடுவிக்கமுடியுமா? என்று யார் கேட்டாலும் நாம், “முடியும்” என்று தைரியமாகப் பதில் சொல்வோம். ஆனால், எனக்குள் இருக்கும் சாதி வெறியிலிருந்து, சாதித் தாழ்வு மனப்பான்மையிலிருந்து என்னை விடுவிக்கமுடியுமா? என்று யாராவது கேட்டால் இன்று வரை என்ன பதில் சொன்னோம்? விடுவிக்கமுடியும் என்று நம்மால் தைரியமாக சொல்ல முடியாமல்போன காரணம் என்ன? சாதியம் ஒரு தவறான கொள்கை என்று யாரும் போதிப்பதில்லை. ஏனென்றால் பெரும்பான்மையான போதகர்களே சாதி உணர்வாளர்களாக இருக்கிறார்கள் என்பதல்லவா உண்மை! “பெருஞ்சுமை சுமந்து சோர்ந்திருப்பவர்களே, எல்லாரும் என்னிடம் வாருங்கள், நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன் (மத். 11:28) என்று இயேசு கூறினாரே! யுகங்களாக இந்த மனுக்குலம் சுமந்து நிற்கும் சாதிப் பெருஞ்சுமையிலிருந்து கிறிஸ்துவால் விடுதலை கொடுக்கமுடியும் என்று என்றாவது யாராவது பிரசங்கித்து பார்த்திருக்கிறீர்களா?